உக்ரைன் ஆதரவு விவகாரத்தில் நேட்டோ மீது போர் பிரகடனம் செய்த ரஷ்யா
தமிழில்: வெண்பா

மூன்றாம் உலகப் போர் அச்சம் நீடித்து வரும் வேளையில், நேட்டோ நாடுகள் 'ரஷ்யாவுடன் போரில் ஈடுபட்டுள்ளன' என்று புடின் அரசு திகிலூட்டும் அச்சுறுத்தலை விடுத்துள்ளது. நேட்டோ நாடுகள் தங்களை ரஷ்யாவுடன் போரில் இருப்பதாகக் கருதிக்கொள்ளலாம் என ரஷ்ய அதிகாரிகள் கூறியுள்ளனர். உக்ரைனுக்கு ஆதரவளித்து போலந்தைப் பாதுகாத்ததன் பின்னர், நேட்டோ நாடுகள் இப்போது தங்களுடன் போரில் ஈடுபட்டுள்ளதாக ரஷ்யா கூறியுள்ளது. மூன்றாம் உலகப் போர் குறித்த கவலைகள் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், ரஷ்யத் தலைவர் விளாடிமிர் புடின் 'லண்டன் அல்லது பாரிஸைத் தாக்கக்கூடும்' என்ற அபாயம் குறித்து நேட்டோ (வட அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு) சமீபத்தில் எச்சரிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவிலிருந்து வரும் கருத்துக்கள் பெரும்பாலான மக்கள் கேட்க விரும்பாதவையாகவே உள்ளன.
ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான மோதல் சில ஆண்டுகளாகத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும் சேதம் ஏற்படுவதைத் தடுக்க டிரம்ப் ஒரு சமாதான ஒப்பந்தத்தை ஏற்படுத்த முயன்றார். ஆனால், புடினும் அவரது சகாக்களும் போரை விரைவில் முடிவுக்குக் கொண்டுவருவதில் ஆர்வம் காட்டவில்லை என்பது போல் தெரிகிறது. நேட்டோ நாடுகளின் சமீபத்திய நடவடிக்கைகளுக்குப் பிறகு, ரஷ்யா இப்போது அனைத்து நேட்டோ நாடுகளுடனும் போரில் ஈடுபட்டுள்ளதாக அவரது பல ஆலோசகர்கள் கூறியுள்ளனர். டிரம்ப், சமாதான ஒப்பந்தத்தை எட்டும் முயற்சியாக கடந்த மாதம் புடினை சந்தித்தார்.
கடந்த வாரம், போலந்து தனது வான் எல்லையில் காணப்பட்ட ரஷ்ய ஆளில்லா விமானங்களைச் சுட்டு வீழ்த்தியதை உறுதி செய்தது. இதன் மூலம், ஒரு நேட்டோ உறுப்பினர் தனது பிராந்தியத்தில் ரஷ்ய இராணுவ விமானத்தை சுட்டு வீழ்த்திய முதல் அறியப்பட்ட நிகழ்வாக இது ஆனது. ரஷ்யா போலந்தின் வான்வெளியை 'மீறியதாக' டிரம்ப் கூட குற்றம் சாட்டினார். ஆனால் இந்த நடவடிக்கை ரஷ்யாவில் உள்ள பல அதிகாரிகளுக்கு எரிச்சலூட்டியுள்ளது, குறிப்பாக போலந்து பிரதமர் டொனால்ட் டஸ்க், தங்கள் வான்வெளி தவறாகப் பயன்படுத்தப்பட்டதாகவும், எதிர்காலத்தில் 'பல்வேறு சூழ்நிலைகளுக்கு' தயாராக இருக்க வேண்டும் என்றும் கூறிய பிறகு இது நிகழ்ந்துள்ளது.
"நேட்டோ ரஷ்யாவுடன் போரில் உள்ளது; இது வெளிப்படையானது, இதற்கு எந்த ஆதாரமும் தேவையில்லை. நேட்டோ, உக்ரைன் அரசுக்கு நேரடி மற்றும் மறைமுக ஆதரவை வழங்குகிறது," என்று ரஷ்ய செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் திங்களன்று (செப்டம்பர் 15) பத்திரிகையாளர்களிடம் கூறினார். ”உக்ரைனுக்கு ஆதரவளிப்பது என்பது போரில் பங்கேற்பதைக் குறிக்கும்” என்ற செய்தியை இது மீண்டும் வலியுறுத்துகிறது.
அந்த ஆளில்லா விமானங்கள் உக்ரேனிய இலக்குகளுக்காக மட்டுமே அனுப்பப்பட்டன என்றும், போலந்தைத் தாக்கும் திட்டம் எதுவும் இல்லை என்றும் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் கூறியது. பின்னர், ரஷ்யாவின் பாதுகாப்பு கவுன்சிலின் துணைத் தலைவர் டிமிட்ரி டெலிகிராமில், கிழக்கு எல்லையில் உள்ள நட்பு நாடுகளைப் பாதுகாக்கும் 'ஈஸ்டர்ன் சென்ட்ரி' என்ற புதிய நேட்டோ திட்டத்தால் அதிர்ச்சியடைந்ததாக குறிப்பிட்டார். ”ஆனால் சரியாகச் சொல்வதானால், உக்ரைன் மீது பறக்கத் தடை விதிக்கப்பட்ட பகுதி'யை உருவாக்கும் திட்டத்தைச் செயல்படுத்துவதும், நமது ஆளில்லா விமானங்களை (UAVs) நேட்டோ நாடுகள் சுட்டு வீழ்த்தும் திறனும் ஒரே ஒரு விஷயத்தை மட்டுமே குறிக்கிறது - அது நேட்டோவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான போர்” என்று டிமிட்ரி திகிலூட்டும் வகையில் கூறினார்.
போலந்து வான்வெளி மீறலைத் தொடர்ந்து, நேட்டோ ஒரு அறிக்கையில், "வரும் நாட்களில் தொடங்கி, காலத்திற்குத் தொடரும் இந்த பன்முனை நடவடிக்கை, செப்டம்பர் 10 அன்று போலந்து வான் பரப்பின் மீதான ரஷ்யாவின் மீறல்கள் உள்ளிட்ட அனைத்து வான்வெளி மீறல்களுக்கும் பதிலடியாக மேற்கொள்ளப்படுகிறது" என்று கூறியது
உக்ரைன் மீதான தாக்குதல்களின் போது கிட்டத்தட்ட 20 ஆளில்லா விமானங்கள் போலந்திற்குள் நுழைந்ததைத் தொடர்ந்து, உக்ரைன் மீது பறக்கத் தடை விதிக்கப்பட்ட பகுதியைச் பயன்படுத்த அமெரிக்கா தலைமையிலான கூட்டணிக்கு போலந்து அழைப்பு விடுத்துள்ளது. இதில் மூன்று விமானங்கள் நேட்டோ நட்பு நாடுகளின் நடவடிக்கைகளில் அழிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
பிரிட்டிஷ் போர் விமானங்கள் போலந்துக்கு ஆதரவாக நேட்டோ பாதுகாப்புப் பணிகளில் சேரும் என்று இங்கிலாந்து அறிவித்திருந்தது. இங்கிலாந்து பிரதமர் கீர் ஸ்டார்மர் வரும் நாட்களில் இந்தப் பணிகள் தொடங்கும் என்பதை உறுதிப்படுத்தினார்.
"ரஷ்யாவின் பொறுப்பற்ற நடத்தை ஐரோப்பியப் பாதுகாப்பிற்கு நேரடி அச்சுறுத்தலாகும், இது சர்வதேசச் சட்ட மீறல் ஆகும்," என்று ஸ்டார்மர் குறிப்பிட்டார்.
ஜெலென்ஸ்கி, செப்டம்பர் மாதத்தில் மட்டும் ரஷ்யா உக்ரைனுக்கு மீது 3,500 க்கும் மேற்பட்ட ஆளில்லா விமானங்களையும், 190 ஏவுகணைகளையும் ஏவியுள்ளதாகக் கூறுகிறார். மேலும் அவர் X தளத்தில், "இதுபோன்ற வான்வழிப் பயங்கரவாதத்திற்கு எதிராகத்தான் உக்ரைன் கூட்டுப் பாதுகாப்புக்கு அழைப்பு விடுக்கிறது - இதன் மூலம் யாரும் அவசரமாகப் போர் விமானங்களை இயக்க வேண்டிய அவசியமில்லை; தங்கள் எல்லைகளில் ரஷ்யாவின் அச்சுறுத்தலை உணர வேண்டியதில்லை," என்றும் பேசியுள்ளார்.
வெண்பா (தமிழில்)
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு