நூல் அறிமுகம்: “இடதுசாரி” கம்யூனிசம்- இளம்பருவக்கோளாறு

அ.கா.ஈஸ்வரன்

நூல் அறிமுகம்: “இடதுசாரி” கம்யூனிசம்- இளம்பருவக்கோளாறு

(அண்மையில் வெளிவந்துள்ள லெனின் தேர்வு நூல்களின் 12 தொகுதிகள் பற்றிய அறிமுகம், MELS இணைய வழிப் பயிலரங்கில் தொடர் வகுப்பாக எடுக்கப்படுகிறது. அதில் பன்னிரண்டாம் வகுப்பு இது.)

இந்த வகுப்பில் லெனின் எழுதிய “இடதுசாரி” கம்யூனிசம்- இளம்பருவக்கோளாறு” என்கிற நூலைப் பார்க்கப் போகிறோம். லெனின் எழுதிய முக்கிய நூல்களில் இதுவும் ஒன்று.

இந்நூல் எழுதுவதற்கான பின்புலத்தை முதலில் தெரிந்து கொள்வோம்.

முதல் உலகப் போர் ஏற்பட்ட போது, இரண்டாம் அகிலத்தில் உள்ள பெரும் தலைவர்கள் தமது சொந்த நாட்டு முதலாளித்துவ அரசாங்கத்தின் ஏகாதிபத்திய கொள்கையை வெளிப்படையாக ஆதரித்தனர். இத்தகைய சந்தர்ப்பவாதப் போக்கால் இரண்டாம் அகிலம் கலைக்கப்பட்டது.

ருஷ்யாவில் நடைபெற்ற சோஷலிசப் புரட்சிக்குப் பிறகு 1919ஆம் ஆண்டு மூன்றாம் அகிலம் நிறுவப்பட்டது.

இந்த மூன்றாம் அகிலத்தின் இரண்டாவது காங்கிரஸ் 1920ஆம் ஆண்டு நடைபெற்றது. இந்தக் காங்கிரஸ் தொடங்குவதற்கு முன் “இடதுசாரி” கம்யூனிசம்- இளம்பருவக்கோளாறு” என்கிற நூலை லெனின் எழுதினார்.

அகிலத்தில் கலந்து கொள்ளும் பிரதிநிதிகளுக்கு, இந்த நூலை கொடுக்க வேண்டும் என்பதற்காக அகிலம் தொடங்குவதற்கு முன் வெளியிட வேண்டும் என்று திட்டமிட்டிருந்தார். அதன்படி தயாரித்து பிரெஞ்சு, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் உடனடியாக மொழியாக்கம் செய்யப்பட்டு வெளிவந்தது.

“இடதுசாரி” கம்யூனிசம்- இளம்பருவக்கோளாறு” என்கிற நூலை லெனின் பத்து அத்தியாயங்களாக எழுதியுள்ளார். அனைத்து அத்தியாயங்களையும் சுருக்கமாகவும் சாரமாகவும் இங்கே பார்க்கலாம். 

1. ருஷ்யப் புரட்சியின் சர்வதேச முக்கியத்துவத்தைப் பற்றி நாம் எந்தப் பொருளில் பேச முடியும்

இந்த அத்தியாயத்தின் தலைப்பே இந்நூல் எழுதுவதற்கான காரணத்தைக் கூறிவிட்டது. ருஷ்யாவில் 1917ஆம் ஆண்டு நடைபெற்ற புரட்சி, சர்வதேசத்துக்கு எந்த வகையில் முக்கியமானது என்பது அனைத்து நாடுகளிலும் உள்ள கம்யூனிஸ்டுகள் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்றாகும்.

ருஷ்யப் புரட்சியின் குறிப்பிட்ட சில அடிப்படை இயல்புகள் ஒரு தனித்தொரு நாட்டுக்கோ, ருஷ்யாவுக்கு மட்டுமானதோ அல்ல. இந்தப் புரட்சி சர்வதேசியத்துக்கு முக்கியமானது ஆகும். சர்வதேசிய முக்கியத்துவம் என்று இங்கே கூறுவது விரிந்த பொருளில் அல்ல, குறுகிய பொருளில்தான் எனகிறார் லெனின்.

அந்தக் குறுகியப் பொருள் என்னவென்றால், ருஷ்யாவில் நடந்த புரட்சியானது சர்வதேச அளவில் திரும்பத் திரும்ப நடைபெறுவதாகவும், வரலாற்று வழியில் தவிர்க்க முடியாதது புரட்சி என்பதே ஆகும். இதுவே ருஷ்யப் புரட்சியின் முக்கியமான சில அடிப்படைத் தன்மைகள். அதாவது புரட்சி என்பது அனைத்து நாட்டிலும் நடைபெறக் கூடியதே என்பதையும், இந்தச் சமூக மாற்றத்துக்கான புரட்சி வரலாற்றில் தவிர்க்க முடியாது என்பதையும் ருஷ்யாவில் நடைபெற்ற அக்டோபர் புரட்சி (புதிய நாட்காட்டியின்படி நவம்பர் புரட்சி) உறுதிபடுத்துகிறது. இதுவரை கோட்பாட்டளவில் பேசியது நடைமுறையில் நிகழ்த்தப்பட்டுள்ளது.

அக்டோபரில் நடைபெற்ற ருஷ்யப் புரட்சியின் அனுபவம் இந்த வகையில் சர்வதேசத்துக்குப் பயன்படக்கூடியதாக இருக்கிறது. இந்த உண்மையை மிகைப்படுத்தி, இந்த அடிப்படை இயல்புகளுக்கு அப்பால் எடுத்துச் செல்வது மிகப்பெரும் பிழை என்று லெனின் எச்சரிக்கவும் செய்கிறார்.

ருஷ்யா ஒரு பின்தங்கிய நாடாக இருந்தாலும் அக்டோபர் புரட்சி சர்வதேசத்துக்குப் படிப்பினைகளைத் தந்திருக்கிறது என்பது உண்மையே, வளர்ச்சி அடைந்த நாடுகளில் ஏதேனும் ஒன்றில் பாட்டாளி வர்க்கப் புரட்சி, அடுத்து ஏற்படுமாயின் அந்தப் புரட்சி சர்வதேச முக்கியத்துவத்தைப் பெறக்கூடியதாக ஆகிவிடும். ருஷ்யா முன்மாதிரியாக இருக்கும் நிலை முடிவுக்கு வருவதுடன், அப்போது சோஷலிசப் பொருளில் ருஷ்யா பிற்பட்ட நாடாகிவிடும் என்கிற உண்மையைக் காணத் தவறுவதும் பிழையே ஆகும் என்கிறார் லெனின்.

லெனின் இங்கே மிகத் தெளிவாக தமது கருத்தை வெளிப்படுத்தி உள்ளார். ருஷ்யா பின்தங்கிய நாடாக இருந்தாலும் இந்த நாட்டில்தான் இப்போது புரட்சி நடைபெற்றுள்ளது, இந்தப் புரட்சி அனைத்து நாடுகளுக்கும் பாடம் புகட்டுவதாக இருக்கும். அடுத்து வளர்ச்சி அடைந்த நாட்டில் ஒரு புரட்சி ஏற்படுமாயின், இந்தப் புரட்சி அனைத்து நாடுகளுக்கும் புதியப் படிப்பினையை தரும், ருஷ்யப் புரட்சி பற்றிய கருத்து பழையதாகிவிடும் என்று லெனின் கூறுகிறார்.

இதனைச் சற்று விரிவாக்கி அடுத்து கூறுகிறார், அதனை லெனின் சொற்களிலேயே பார்ப்போம்.

“வரலாற்றின் தற்போதைய தருணத்தில் ருஷ்யாவின் முன்மாதிரியே, அனைத்து நாடுகளுக்கும் அவர்களின் தவிர்க்க முடியாத, நெருங்கிய எதிர்காலத்தைப் பற்றிய ஒன்றை - மிகவும் குறிப்பிடத்தக்க ஒன்றை - வெளிப்படுத்துகிறது. அனைத்து நாடுகளிலும் உள்ள முன்னேறிய தொழிலாளர்கள் இதை முன்பே உணர்ந்து கொண்டு விட்டனர். பெரும்பாலும், அவர்கள் அதை உணர்ந்து கொண்டனர் என்பதற்குப் பதிலாகத் தமது புரட்சிகர வர்க்க உள்ளுணர்வின் துணைகொண்டு புரிந்துகொண்டுள்ளனர். சோவியத் ஆட்சியதிகார அமைப்பின் சர்வதேச "முக்கியத்துவம்" (இச்சொல்லின் குறுகிய பொருளில்), மற்றும் போல்ஷிவிக் கோட்பாடு, செயல்தந்திரம் இதில்தான் அடங்கியிருக்கிறது.”

முன்னொரு காலத்தில் காவுத்ஸ்கி மார்க்சிய துரோகியாக இல்லாமல் மார்க்சியவாதியாகவே இருந்தபோது ருஷ்யப் பாட்டாளி வர்க்கத்தின் புரட்சித் தன்மை மேலை ஐரோப்பாவுக்கு முன்மாதிரியாக விளங்கும் ஒரு சூழ்நிலை எழுவதன் சாத்தியப்பாட்டை முன்னறிந்து கூறியதை லெனின் சுட்டிக்காட்டுகிறார். இஸ்க்ரா பத்திரிகையில் காவுத்ஸ்கி எழுதியதின் அடிப்படையில் லெனின் இவ்வாறு கூறுகிறார்.

ஆக மார்க்சிய அணுகுமுறையைப் பின்பற்றும்போது தெளிவாக இருந்த காவுத்ஸ்கி, மார்க்சியத்தைவிட்டு விலகிய பிறகு சந்தர்ப்பவாதியாக மாறிவிடுகிறார். மார்க்சிய அடிப்படையில் இருந்து நாம் விலகாதவரைதான் நாம் கம்யூனிஸ்ட்டாகச் செயற்படமுடியும் என்பது இதன் மூலம் நன்றாகத் தெரிகிறது.

காவுத்ஸ்கி மார்க்சியவாதியாக இருந்தபோது எழுதியதை அவரது சொற்களிலேயே பார்ப்போம்.

“புரட்சிகர மையம் மேற்றிசையிலிருந்து கீழ்த்திசைக்கு இடம் பெயர்ந்து செல்கிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் முதற்பாதியில் அது பிரான்சில் அமைந்திருந்தது, சிற்சில சமயங்களில் இங்கிலாந்திலும் இருந்தது. 1848ல் ஜெர்மனியும் புரட்சிகரத் தேசங்களது அணிவரிசையில் சேர்ந்து கொண்டது....

புரட்சிகர மையம் மேலும் இடம் பெயர்வதை, அதாவது ருஷ்யாவுக்கு இடம் பெயர்வதை, நாம் நெருங்கிக் கொண்டிருக்கிறோம் என்ற கருத்தைச் சுட்டும் நிகழ்ச்சிகளுடன் புதிய நூற்றாண்டு தொடங்கியுள்ளது…

மேற்கிலிருந்து அவ்வளவு பெரிய அளவில் புரட்சிகர முன்முயற்சியை ஈர்த்துக்கொண்ட ருஷ்யாவானது, இப்பொழுது புரட்சிகர ஆற்றலுக்குரிய ஊற்றாக மேற்கிற்குப் பணிபுரிய ஆயத்தமாயுள்ளது என்பதாகத் தெரிகிறது. நம்மிடையே மலிந்து வரும் ஊதிப்பருத்த குட்டி முதலாளித்துவ அற்பத்தனத்துக்கும் உணர்ச்சி வேகமில்லா அரசியலுக்கும் முடிவு கட்டவல்ல சக்தி மிக்கச் சாதனமாக, தற்போது மூண்டெழுந்து வரும் ருஷ்யப் புரட்சி இயக்கம் செயல்படக்கூடும்.”

இந்த மேற்கோளை லெனின் எடுத்துக்காட்டும் போது, பதினெட்டு ஆண்டுகளுக்கு முன்பு காவுத்ஸ்கி எவ்வளவு நன்றாக எழுதியிருக்கிறார் என்று பதிவுசெய்துள்ளார்.

2. போல்ஷிவிக்குகளுடைய வெற்றிக்கு இன்றியமையாத ஒரு நிபந்தனை

ருஷ்யாவில் நிகழ்த்தப்பட்ட அக்டோபர் புரட்சி (புதிய நாட்காட்டியின் படி நவம்பர் புரட்சி) என்பது இதுவரை உழைக்கும் வர்க்கம் சாதிக்காத, ஒரு முழுமையானப் புரட்சியாகும்.

பிற்காலத்தில் சோவியத் ஆட்சி வீழ்ச்சி அடைந்ததை நாம் கண்டிருந்தாலும், அதன் வெற்றி என்பது எந்த வகையிலும் தனது சிறப்பை இழந்துவிடவில்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். பாரிஸ் கம்யூன் வீழ்ச்சி அடைந்தாலும் மார்க்ஸ் அதனை எப்படி அணுகினாரோ அப்படிதான், வீழ்ச்சி அடைந்த ருஷ்ய சோவியத்தையும் நாம் பார்க்க வேண்டும்.

ருஷ்யாவில் 1917ஆம் ஆண்டு நடைபெற்ற புரட்சிக்கு ஒரு முன்நிபந்தனையாக லெனின் கூறுவதைப் பார்ப்போம்.

“பாட்டாளி வர்க்கத்திடம் முழுமையான மத்தியத்துவமும் கடுமையான கட்டுப்பாடும் இருக்க வேண்டியது முதலாளித்துவ வர்க்கத்தின் மீது வெற்றி பெறுவதற்கான இன்றியமையாத ஒரு நிபந்தனையாகும் என்பதை ருஷ்யாவில் வெற்றி கண்ட பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரத்தின் அனுபவம், சிந்தனை ஆற்றல் இல்லாதோருக்குங்கூட, அல்லது இதில் சிந்தனை செலுத்த வாய்ப்பு இல்லாமல் போனவர்களுக்குங்கூடத் தெளிவாகக் காட்டியுள்ளது.

அது அடிக்கடி எடுத்துரைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இதன் பொருள் என்ன, எந்நிலைமைகளில் இது சாத்தியம் என்பதில் போதிய அளவு சிந்தனை செலுத்தப்படவில்லை. சோவியத்துக்களுக்கும் போல்ஷிவிக்குகளுக்கும் வாழ்த்துக்கள் தெரிவிப்பதோடுகூட, இன்னும் அடிக்கடி புரட்சிகரப் பாட்டாளி வர்க்கத்துக்கு வேண்டிய கட்டுப்பாட்டைப் போல்ஷிவிக்குகளால் எப்படி நிறுவி கொள்ள முடிந்தது என்பதன் காரணங்கள் பற்றிய ஆழ்ந்த பகுத்தாராய்வு செய்யப்படுமானால் எவ்வளவு நன்றாய் இருக்கும்?”

என்று லெனின் ஆதங்கத்தோடு கூறியுள்ளார்.

ருஷ்யாவில் புரட்சி நிகழ்ந்து நூறு ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது, ஒவ்வொரு ஆண்டும் நாம் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். தற்போது லெனின் மறைந்த நூறாவது ஆண்டைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். கொண்டாட்டம் தேவையான ஒன்றுதான், ஆனால் புரட்சியைக் கொண்டாடும் போது அந்தப் புரட்சி எவ்வாறு நிகழ்த்தப்பட்டது என்பதையும் சேர்த்து நினைவு கூறுவது அவசியமானது ஆகும்.

லெனின் கூறியதை மீண்டும் நினைவு படுத்திக் கொள்வோம், “பாட்டாளி வர்க்கத்திடம் முழுமையான மத்தியத்துவமும் கடுமையான கட்டுப்பாடும் இருக்க வேண்டியது முதலாளித்துவ வர்க்கத்தின் மீது வெற்றி பெறுவதற்கான இன்றியமையாத ஒரு நிபந்தனையாகும்.”

கடுமையான மத்தியத்துவமும் கட்டுப்பாடும் உள்ள கம்யூனிஸ்ட் கட்சியினால்தான் வெற்றி பெற முடியும். வெற்றிக்கு மட்டுமல்ல, அதன் செயல்பாடு அனைத்துக்கும் இரண்டும் முக்கியமானதாகும். கம்யூனிஸ்ட் கட்சி எப்படி முன்னணிப் படையாக இருக்க வேண்டும் என்பது பற்றி லெனின் நிறைய எழுதியிருக்கிறார், அவை அனைத்தையும் நாம் பின்பற்ற வேண்டும். அத்துடன் நமது நாட்டு நிலைமைகளையும் கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும்.

கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிய சித்தாந்தத்தை உறுதியாகப் பின்பற்ற வேண்டும், இதற்கு மாறாகத் தாரளவாதத்தைக் கடைபிடித்தால், அது கட்சியை அழித்துவிடும். மார்க்சிய சித்தாந்தத்தில் உறுதியில்லை என்றால் கட்டுப்பாட்டிலும் உறுதி குலைந்துவிடும். உறுதி குலைந்தால் கட்சி பலவீனமாகிவிடும் என்பது லெனின் கருத்துக்களைக் கொண்டு அறிந்து கொள்ள முடிகிறது.

பாட்டாளி வர்க்கத்தினுடைய புரட்சிகரக் கட்சியின் கட்டுப்பாட்டைக் கட்டிக்காப்பது எப்படி?

அது சோதிக்கப்படுவது எப்படி?

அது எவ்வாறு வலுப்படுத்தப்படுகிறது?

-என்கிற கேள்வியை எழுப்பிப் பதிலும் தருகிறார் லெனின்.

இந்தப் பதிலை லெனினது சொற்களிலேயே பார்ப்போம். இதற்கு எந்த விளக்கமும் தேவைப்படாது, இந்த லெனினது எழுத்துக்கள் அனைவரும் எளிமையாகப் படித்துப் புரிந்துகொள்ளும்படியாக இருக்கிறது.

"முதலாவதாக, பாட்டாளிகளின் முன்னணிப் படையின் வர்க்க உணர்வாலும்; புரட்சியின்பால் அதற்குள்ள பற்றுறுதியாலும், தன்னலங்கருதாத் தியாக உணர்வாலும், வீரத்தாலும்.

இரண்டாவதாக, உழைப்பாளி மக்கள்திரளின் மிகவும் விரிவான பகுதிகளுடனும், முக்கியமாய்ப் பாட்டாளி வர்க்கத்துடனும், மற்றும் உழைப்பாளி மக்களின் பாட்டாளி வர்க்கமல்லாத பகுதிகளுடனும் இணைப்புக் கொள்ளவும், மிக நெருங்கிய தொடர்பைக் கட்டிக்காக்கவும், ஓரளவுக்கு ஒன்றுகலக்கவும் என்றுகூடச் சொல்லலாம், அதற்குள்ள ஆற்றலால். 

மூன்றாவதாக, இந்த முன்னணிப் படையால் வகிக்கப்படும் அரசியல் தலைமையின் பிழையற்ற தன்மையால், அதன் அரசியல் இறுதிகுறிக்கோள், செயல்தந்திரம் (strategy and tactics) இவற்றின் பிழையற்ற தன்மையால் – பொதுமக்களின் பகுதிகள் தமது சொந்த அனுபவத்தின் வாயிலாகவே இவை சரியானவை என்பதைக் கண்டு கொண்டாக வேண்டும்.

முதலாளித்துவ வர்க்கத்தை வீழ்த்தி, சமூகம் அனைத்தையும் மாற்றியமைத்திடுவதைப் பணியாகக் கொண்ட முன்னேற்றகரமான வர்க்கத்தின் கட்சியாக இருக்கும் மெய்யான தகுதியும் திறனும் கொண்ட புரட்சிகரக் கட்சியில், இந்நிலைமைகள் இல்லையேல், கட்டுப்பாட்டைச் சாதிக்க முடியாது. இந்த நிலைமைகள் இல்லையேல், கட்டுப்பாட்டை நிறுவுவதற்கான எல்லா முயற்சிகளும் தவிர்க்க முடியாதவாறு விரயமாகி வெறும் வாய்வீச்சாகவும் கேலிக்கூத்தாகவுமே முடிவுறும்.

அதேபோதில் இந்த நிலைமைகள் யாவும் திடுதிப்பென்று தோன்றிவிடுவதில்லை. நீடித்த முயற்சியாலும் அரும்பாடுபட்டுப் பெறும் அனுபவத்தாலும்தான் தோற்றுவிக்கப்படுகின்றன. பிழையற்ற புரட்சிகரக் கோட்பாடு இருக்குமாயின் இந்நிலைமைகள் தோற்றுவிக்கப்படுவதற்கு அது துணை புரிகிறது. இந்தப் புரட்சிகரக் கோட்பாடு வறட்டுச் சூத்திரமாக அமைந்து விடாமல், மெய்யாகவே பொதுமக்கள் தன்மையதான, மெய்யாகவே புரட்சிகரமான இயக்கத்தின் நடைமுறையுடன் நெருங்கிய தொடர்பு கொண்டே இறுதி வடிவம் பெறுகிறது."

லெனின் கூறியது போலக் கம்யூனிசம் என்பதை வாய்வீச்சாகப் பேசி கேலிகூத்தாக்காமல் முன்னேறிய வர்க்கத்தின் கட்சியாகச் செயல்படவேண்டும். அதற்கு மார்க்சியக் கோட்பாட்டை உறுதியாகப் பின்பற்ற வேண்டும்.

போல்ஷிவிசம் என்பது மார்க்சியக் கோட்பாட்டின் மிகவும் உறுதியான அடித்தளத்தில் இருந்து எழுந்தது என்று லெனின் இங்கே கூறியிருப்பதை மனதில் கொள்ள வேண்டும். மார்க்சியக் கோட்பாட்டில் உறுதியாக நிற்காமலும் அதனை முழுமையாகப் பின்பற்றாமலும் இருந்தால் பின்னடைவு நிச்சயம் ஏற்படும். இடதுசாரிகளின் பின்னடைவுக்குப் பல்வேறு காரணங்கள் இருக்கின்றன, அதில் மார்க்சியக் கோட்பாடை உறுதியுடன் பின்பற்றாமை ஒரு காரணம் ஆகும்.

அடுத்து லெனின் போல்ஷிவிக் கட்சி கையாண்ட செயல்தந்திரங்களைத் தொகுத்துத் தந்துள்ளார்.

சட்ட வழியிலானது- சட்டவழியற்றது,

அமைதியானது-புயல் வேகம் கொண்டது,

தலைமறைவானது – வெளிப்படையானது,

உள்ளூர் அளவிலானது –மக்கள்திரள் இயக்கமானது,

நாடாளுமன்ற வடிவிலானது – வன்முறை வடிவிலானது

-ஆகிய முறைகளில் போல்ஷிவிக் கட்சி செயல்பட்டது.

சூழ்நிலைமைக்கு ஏற்ற அனைத்து வடிவங்களையும் எடுக்கும் வகையில் கம்யூனிஸ்ட் கட்சி இருக்க வேண்டும் என்பதைப் போல்ஷிவிக் அனுபவம் நமக்குப் போதிக்கிறது. இதற்கு மார்க்சியக் கோட்பாட்டில் உறுதியாக நின்றால் மட்டுமே பல்வேறு வடிவங்களைத் தேர்ந்தெடுக்க முடியும் என்பதையும் போல்ஷிவிக்குகளின் அனுபவத்தால் நாம் அறிந்து கொள்ள முடிகிறது.

ருஷ்யப் புரட்சியைப் புகழ்வதுடன் நிற்காமல் அதன் அனுபவங்களைப் பின்பற்ற வேண்டும். சர்வதேச அனுபவங்களைக் கணக்கில் கொள்ளாது, எந்த நாட்டுக் கம்யூனிஸ்ட் கட்சியும் வெற்றியை அடைய முடியாது. அனைத்து நாடுகளும் சர்வதேச மூலதனதத்தின் ஆதிக்கத்தில்தான் இருக்கிறது. எந்த நாடும் தமது நாட்டைச் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும் என்றால், தமது நாட்டைச் சர்வதேசத்துடன் இணைத்துப் பார்க்க வேண்டும். சர்வதேச அனுபவங்களைக் கணக்கில் கொள்ள வேண்டியது அவசியமான ஒன்றாகும்.

3. போல்ஷிவிக் வரலாற்றின் முக்கியக் கட்டங்கள்

போல்ஷிவிக் கட்சி 1903ஆம் ஆண்டுத் தோன்றியது முதல் 1917ஆம் ஆண்டு நடைபெற்ற அக்டோபர் புரட்சி வரையிலான வரலாற்றைச் சுருக்கமாக லெனின் இந்த அத்தியாயத்தில் கூறியுள்ளார். அதனை ஐந்து கட்டங்களாகப் பிரித்து விளக்குகிறார்.

1. புரட்சியின் தயாரிப்புக்குரிய ஆண்டுகள் (1903-05)

2. புரட்சி ஆண்டுகள் (1905-07)

3. எதிர்வினையின் ஆண்டுகள் (1907-10)

4. புத்தெழுச்சி ஆண்டுகள் (1910-14)

5. முதல் ஏகாதிபத்திய உலகப் போர் (1914-17)

1. புரட்சியின் தயாரிப்புக்குரிய ஆண்டுகள் (1903-05)

1903ஆம் ஆண்டு ருஷ்ய கம்யூனிஸ்ட் கட்சியின் இரண்டாவது காங்கிரஸ் நடைபெற்றது. அந்தக் காங்கிரசின் போதுதான் போல்ஷிவிக் என்கிற பிரிவு ஏற்பட்டது. போல்ஷிவிக்குக்கு எதிரான பிரிவு மென்ஷிவிக். 

அப்போது தாராளவாத முதலாளித்துவம், குட்டி முதலாளித்துவம், பாட்டாளி வர்க்கம் ஆகிய மூன்றும் நெருங்கிவரும் போர்களுக்குத் தேவையான அரசியல், சித்தாந்த ஆயுதங்களைத் தயாரித்துக் கொண்டிருந்தது.

2. புரட்சி ஆண்டுகள் (1905-07)

இது ருஷ்யாவில் நடைபெற்ற முதல் புரட்சிக்கான ஆண்டைக் குறிக்கிறது. பொருளாதார வேலை நிறுத்தம் அரசியல் வேலை நிறுத்தமாகவும், அரசியல் வேலை நிறுத்தம் ஆயுதமேந்திய எழுச்சியாகவும் இந்தக் காலகட்டத்தில் வளர்ச்சி அடைந்தன.

போல்ஷிவிக் கட்சி தமது போராட்டத்தில் சூழ்நிலைமைக்கு ஏற்ப போராட்ட வடிவங்களை மாற்றிக் கொண்டே இருந்தது.

நாடாளுமன்றப் போராட்ட முறைகளும் நாடாளுமன்றத்துக்குப் புறம்பான போராட்ட முறைகளும், நாடாளுமன்றத்தைப் புறக்கணிப்பு செய்யும் செயல்தந்திரமும் நாடாளுமன்றத்தில் பங்கு பெறும் செயல்தந்திரமும், சட்ட வழியிலான போராட்டமும் சட்ட வழியற்றப் போராட்டமும் எனப் போல்ஷிவிக் கட்சி தமது போராட்டத்தைத் தேவைக்கு ஏற்ப மாறி மாறிக் கையாண்டது.

1905ஆம் ஆண்டில் ஏற்பட்ட புரட்சியில் போல்ஷிவிக் கட்சி தோல்வி கண்டிருக்கலாம், ஆனால் 1905ஆம் ஆண்டின் போர் “ஒத்திகை” நடந்திருக்காவிட்டால் 1917ஆம் ஆண்டில் நடைபெற்ற அக்டோபர் புரட்சி சாத்தியமாய் இருந்திருக்காது என்று லெனின் கூறியதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

கடந்து வந்த அனைத்து அனுபவங்களையும் கம்யூனிஸ்ட் கட்சி பாடமாகக் கொள்ள வேண்டும், தோல்வி என்பதை வெற்றியை நோக்கியதாக மாற்ற வேண்டும். கண்டிப்பாக ஒவ்வொரு அனுபவமும் வெற்றிக்கு உதவிடவே செய்யும்.

3. எதிர்வினையின் ஆண்டுகள் (1907-10)

1905ஆம் ஆண்டுத் தொடங்கிய ருஷ்யாவின் முதல் புரட்சியில் ஜார் ஆட்சி வெற்றிப் பெற்றுவிட்டது. புரட்சிகரக் கட்சிகள், எதிர் கட்சிகள் தோல்வி கண்டன. இத்தகைய தோல்விகரச் சூழ்நிலையால், மனச்சோர்வு, பிளவுகள், பூசல்கள், கட்சியில் இருந்து விலகல்கள் இவைகளே அரசியல் நிலைமைகளாக மாறின. பொருள்முதல்வாததைக் கைவிட்டுக் கருத்துமுதல்வாதத்தை நோக்கி தத்துவம் சரிந்தது.

அதேநேரத்தில் இந்தப் பெரும்தோல்வி புரட்சிகரக் கட்சிகளுக்கும் புரட்சிகர வர்க்கத்துக்கும் மிகவும் பயனுள்ள வகையில் பாடம் புகட்டியது. வரலாற்று இயக்கவியலிலும் அரசியல் போராட்டத்தைப் புரிந்து கொள்வதிலும் போராட்டம் நடத்துவதற்கான கலையில் பாடம் கற்பித்தது. நெருக்கடி நேரத்தில் நண்பன் யார்? பகைவன் யார்? என்பதை அறிந்து கொள்ள முடிந்தது, தோல்வியுற்ற படைகள் நன்கு படிப்பினை பெற்றன என்று லெனின் கூறுகிறார்.

புரட்சியின் தோல்வி இதை மட்டும் கற்பிக்கவில்லை, புரட்சிகரக் கட்சிகள் இதுவரை எப்படித் தாக்குவது என்பதைத் தெரிந்து கொண்டிருந்தது போலவே இப்போது ஒழுங்கு குலையாமல் எப்படிப் பின்வாங்குவது என்பதை அறிந்து கொண்டது. பின்வாங்கும் நடைமுறை மூலம், மிகக் குறைவான மனச்சோர்வுடன், விரைவாகவும் பிழையற்ற முறையிலும் மீண்டும் பணியினைச் சிறந்த முறையில் தொடங்க முடிந்தது.

இதனை எவ்வாறு செய்து முடிக்கப்பட்டது என்பதை லெனின் அடுத்துக் கூறுகிறார்.

மிகவும் பிற்போக்கான நாடாளுமன்றங்களில் மிகவும் பிற்போக்கான தொழிற்சங்கங்கள், கூட்டுறவு, காப்பீட்டுச் சங்கங்களில் சட்டவழியில் வேலை செய்யத் தெரிந்திருக்க வேண்டும் என்பதைப் புரிந்து கொள்ள விரும்பாத புரட்சிகர வாய்வீச்சாளர்களைப் போல்ஷிவிக்குகள் ஈவிரக்கமின்றி அம்பலப்படுத்தி விலக்கியதால்தான் இதைச் செய்திட முடிந்தது என்கிறார் லெனின்.

அதாவது புரட்சிகரச் சூழ்நிலை இல்லாத போது, புரட்சிகர வாய்வீச்சாளர்களின் கருத்துக்கு மாறாக, சட்டவழிப்பட்ட போராட்டங்களில் ஈடுபட்டதன் மூலம் நிலைமைகள் சரிசெய்யப்பட்டது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

4. புத்தெழுச்சி ஆண்டுகள் (1910-14)

தொடக்கத்தில் எழுச்சிக்கான முன்னேற்றம் நம்ப முடியாத அளவுக்கு மெதுவாக இருந்தது. அதன் பிறகு 1912ஆம் ஆண்டுச் சைபீரியாவில் லேனா தங்க வயல்களில் நிராயுதபாணிகளான தொழிலாளர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இந்த நிகழ்வுக்குப் பிறகு ஓரளவுக்கு எழுச்சி விரைவு பெற்றது என்கிறார் லெனின்.

தொழிலாளி வர்க்க இயக்கத்தில் மென்ஷிவிக்குகள் முதலாளித்துவத்தின் முகவர்களாகச் செயல்பட்டது 1905ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு தெளிவாக வெளிப்பட்டது. இப்படிப்பட்ட மென்ஷிவிக்குகளை வீழ்த்தி போல்ஷிவிக்குகள் முன்னேறினர், இதனை எவ்வாறு செய்தனர் என்பதை லெனின் கூறிய சொற்களிலேயே பார்ப்போம்.

"போல்ஷிவிக்குகள் சட்டவழியற்ற வேலைகளைச் செய்வதுடன் “சட்டவழியிலான வாய்ப்புகளைத்" தவறாமல் பயன்படுத்திக் கொள்வதையும், இரண்டையும் இணைத்திடுவதென்ற பிழையற்ற செயல்தந்திரத்தைப் பின்பற்றியிராவிடில், மென்ஷிவிக்குகளைப் பின்னுக்குத் தள்ளுவதில் அவர்களால் வெற்றிப் பெற்றிருக்க முடியாது. மிகவும் பிற்போக்கான டூமாவுக்கு நடந்த தேர்தல்களில் போல்ஷிவிக்குகள், தொழிலாளர் தொகுதியின் முழு ஆதரவையும் வென்று கொண்டனர்."

 

மென்ஷிவிக்குகளை ஒழிப்பதற்கு மட்டுமல்ல போல்ஷிவிக்குகள் தங்களை வளர்த்துக் கொள்ளவும் இத்தகைய செயல்தந்திரத்தை பின்பற்றினர். மென்ஷிவிக்குகள் போன்ற முதலாளித்துவக் கையாட்களை ஒழிக்க வேண்டும் என்றால் போல்ஷிவிக்குகளைப் போன்று சட்டவழியற்றதும் சட்டவழியிலானதுமான இரண்டு போராட்டங்களை இணைத்துப் பயன்படுத்த வேண்டும்.

5. முதல் ஏகாதிபத்திய உலகப் போர் (1914-17)

மிகவும் பிற்போக்கான நாடாளுமன்றத்தில் சட்டவழியிலான செயல்பாடானது புரட்சிகரப் பாட்டாளி வர்க்கக் கட்சியான போல்ஷிவிக்குகளுக்கு மிகவும் பயனுள்ள பணியினை வழங்கியது என்கிறார் லெனின்.

மேலும், மிகவும் பிற்போக்கான நாடாளுமன்றம் என்றாலும் அதில் எதிர்கட்சி ஒன்றின் தலைவராய் ஒருவர் இருந்தார் என்கிற நிலையானது, பிற்பாடு புரட்சியில் அவர் பங்காற்றுவதற்கு வசதியாக இருந்தது என்றும் லெனின் கூறுகிறார்.

நீண்ட தயாரிப்பு இல்லாமல் போல்ஷிவிக்குகளால் 1917ஆம் ஆண்டு அக்டோபரில் நடைபெற்ற புரட்சியில் வெற்றிப் பெற்றிருக்க முடியாது என்று லெனின் கூறியதை நாம் மனதில் கொள்ள வேண்டும்.

புரட்சிக்கான புறநிலைமை ஏற்பட்டால் மட்டும் போதாது அதற்கான அகநிலைத் தயாரிப்புகளைக் கம்யூனிஸ்ட் கட்சி செய்திருக்க வேண்டும். புறநிலையும் அகநிலையும் இணையும் போதே புரட்சி வெற்றிப் பெறுகிறது.

4. தொழிலாளி வர்க்க இயக்கத்தினுள் எந்தெந்தப் பகைகளுக்கு எதிரான போராட்டம் போல்ஷிவிசம் வளர்ந்து வலிமை பெறவும் உறுதி பெறவும் உதவியது

பகைகளை எதிர்கொள்ளாமல் கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி பெற முடியாது. போல்ஷிவிக் கட்சி சந்தர்ப்பவாதத்துக்கு எதிராகப் போராடியது. அதாவது சமூக தேசியவெறியான சந்தர்ப்பவாதத்துடன் போராடியது. அடுத்து குட்டி முதலாளித்துவப் புரட்சிவாதத்துடன் கடுமையாகப் போராடியது.

அதிதீவிர நிலைகளுக்குச் செல்லும் அராஜகவாத சாயல் கொண்ட குட்டி முதலாளித்துவவாதிகள், விடாமுயற்சியுடன் போராடுவதற்கும், ஒழுங்கமைப்புப் பெறுவதற்கும், கட்டுப்பாடு, உறுதிப்பாடு கொள்வதற்கும் திராணியற்றவர்கள் என்பதை மார்க்சியவாதிகளுக்குக் கோட்பாட்டு வாயிலாக நிலைநாட்டப்பட்டிருக்கிறது என்று லெனின் கூறுகிறார்.

தொழிலாளர் வர்க்க இயக்கத்தில் காணப்படும் சந்தர்ப்பவாத தவறுகளுக்கு ஒரு தண்டனையாக அராஜகவாதம் தலைதூக்கி விடுவதை அடிக்கடி காணமுடிகிறது என்று லெனின் கூறுவதை நாம் கவனமாகப் புரிந்து கொள்ள வேண்டும். வலது போக்கை எதிர்கொள்ள முடியாமை என்பது இடது தவறுக்கு வழிவகைச் செய்கிறது. அதே போல இடது தீவிரவாதத்தை எதிர்கொள்ள முடியாமை என்பது வலது தவறுக்கு வழிவகைச் செய்கிறது. வலது-இடது ஆகிய தவறில் இருந்து விடுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியே கம்யூனிச வழியில் சிறப்பாகச் செயல்பட முடியும்.

தொழிற்சங்கம், நாடாளுமன்றம் ஆகிய இடங்களில் காணப்படும் சந்தர்ப்பவாத தவறுகள் அராஜகவாதிகளைச் சட்டவழியிலான போராட்டத்தைக் கைகொள்வதைக் கைவிடச் செய்கிறது. ஆனால் லெனின் போல்ஷிவிக்குகளின் போராட்ட முறையினைத் தொகுத்துக் காட்டுவதைப் பார்க்கும் போது அராஜகவாதிகள் போல்ஷிவிக்குகளின் அனுபவங்களைக் கவனத்தில் கொள்ளவில்லை என்பது தெரிகிறது.

"1905ல் போல்ஷிவிக்குகளின் நாடாளுமன்றத்தைப் புறக்கணிப்பானது, புரட்சிகரப் பாட்டாளி வர்க்கத்துக்கு மதிப்பிடற்கரிய அரசியல் அனுபவத்தை அளித்துச் செழுமைப்படுத்திற்று. சட்டவழியிலான, சட்டவழியற்ற போராட்ட வடிவங்களும், நாடாளுமன்ற, நாடாளுமன்றத்துக்குப் புறம்பான போராட்ட வடிவங்களும் ஒன்றிணைக்கப்படுகையில், சில நேரங்களில் நாடாளுமன்ற வடிவங்களைக் கைவிடுவது பயனளிப்பதாக இருப்பதுடன் அவசியமும் ஆகிவிடுகிறது என்பதை அது தெளிவு படுத்திற்று. ஆனால் இந்த அனுபவத்தைக் கண்ணை மூடிக்கொண்டு அப்படியே காப்பியடிப்பதும், விமர்சனப் பார்வையின்றிப் பிற நிலைமைகளிலும் பிற சூழல்களிலும் அனுசரிப்பதும் பெரும் தவறாகிவிடும்.

1906ல் போல்ஷிவிக்குகள் டூமாவைப் புறக்கணித்தது சிறிய பிழையே, எளிதில் நிவர்த்திச் செய்து கொள்ளத் தக்கதே என்றாலும் பிழையே ஆகும். 1907லும் 1908லும் அடுத்து வந்த ஆண்டுகளிலும் டூமாவின் புறக்கணிப்பு மிகவும் கடுமையான, நிவர்த்திச் செய்வது கடினமான தவறாகிவிட்டது. ஏனெனில் ஒரு புறத்தில், புரட்சி அலை வேகமாக உயர்ந்தெழுந்து, எழுச்சியாக மாறிவிடுமென்று எதிர்பார்க்க முடியாமல் இருந்தது. மறு புறத்தில், முதலாளித்துவ முடியாட்சி புதுப்பிக்கப்பட்டபோது உருவான வரலாற்று நிலைமை சட்டவழியிலான செயற்பாடுகளையும் சட்டவழியற்ற செயற்பாடுகளையும் ஒன்றிணைத்துக் கொள்வதை அவசியமாக்கிவிட்டது."

போல்ஷிவிக்குகளினுடைய அனுபவங்களைக் கணக்கில் கொள்ளாமல் நம்நாட்டு இடதுசாரி இயக்கங்களில் காணப்படும் சந்தர்ப்பவாதத்தையும் அராஜக சாயல் கொண்ட குட்டி முதலாளித்துவப் போக்கையும் வெற்றிக் கொள்ள முடியாது. சர்வதேச அனுபவங்களைக் கணக்கில் எடுத்துக் கொள்ள முடியாத கம்யூனிஸ்ட் கட்சி, தமது அனுபவங்களையும் சுயவிமர்சனம் செய்து கொள்ளும் திறத்தையை இழந்துவிடும்.

ஒரு கம்யூனிஸ்ட் கட்சி உலகில் தனித்துச் செயல்பட முடியாது, அது சர்வதேச அனுபவங்களை உள்வாங்காமல் இருக்க முடியாது. உலக அனைத்திலும் நடைபெறும் அனுபவங்களில் இருந்து பாடம் கற்காமல் கம்யூனிஸ்ட் கட்சி தமது பயணத்தில் வெற்றி பெற முடியாது.

5. ஜெர்மனியில் “இடதுசாரி” கம்யூனிசம். தலைவர்கள், கட்சி, வர்க்கம், மக்கள்திரள்

ஜெர்மன் கம்யூனிஸ்டுகள் தம்மை இடது போக்குடைய கம்யூனிஸ்டுகள் என்று அழைத்துக்கொள்ளவில்லை. ஆனால் அவர்களின் கருத்துக்களில் இடதுசாரிவாதத்தின் இளம்பருவக் கோளாறுகளுக்கு உரிய அனைத்து அறிகுறிகளும் தென்படுவதாக லெனின் கூறுகிறார்.

அத்தகைய ஜெர்மன் கம்யூனிஸ்களின் கருத்தை, லெனின் மேற்கோளாகக் கொடுத்துள்ளார், அதில் ஒரு பகுதியை மட்டும் பார்ப்போம்.

“பிற கட்சிகளுடனான அனைத்துவித சமரசத்தையும், வரலாற்று வழியிலும் அரசியல் வழியிலும் காலாவதியாகிவிட்ட நாடாளுமன்றப் போராட்ட வடிவங்களுக்குச் சரிந்து செல்லும் எவ்வகையான பின்னடைவையும், வளைந்து கொடுப்பதற்கும் இணக்கத்துக்கும் உரிய எந்தக் கொள்கையையும் தீர்மானமாய் நிராகரித்தே ஆக வேண்டும்.”

ஜெர்மன் கம்யூனிஸ்டுகளின் இத்தகைய கூற்று போல்ஷிவிக்குகள் ஏற்கெனவே அறிந்த, அதே இடதுசாரிச் சிறுபிள்ளைத்தனம் இது என்று லெனின் கூறுகிறார்.

“1903 முதலாய் போல்ஷிவிசத்தின் வளர்ச்சியில் உணர்வுநிலையாகப் பங்குகொண்டுள்ள, அல்லது நெருங்கி நின்று அந்த வளர்ச்சியைக் கவனித்து வந்துள்ள எந்தப் போல்ஷிவிக்கும், இந்த வாதங்களைப் படித்ததும், "இது நாம் நன்கு அறிந்த அதே பழங் குப்பைதான்! அதே இடதுசாரிச் சிறுபிள்ளைத் தனம்தான்!'' என்று உடனே கூறி விடுவார்.”

அளவுக்கு மீறிச் சட்டவழிப்பட்ட போராட்டத்தில் பழக்கப்படுத்திக் கொள்ளும் போது ஏற்படும் சிக்கலை லெனின் அடுத்துச் சொல்கிறார்.

சட்டவழிப் போராட்டத்தில் மட்டுமே பழக்கப்படுத்திக் கொண்டுவிட்ட கட்சி, திடீரெனச் சட்டவழிக்கான வாய்ப்பு மூடப்பட்டதும், சட்டவழியற்ற போராட்டத்துக்கு மாறிட முடியாமல் குழப்பிபோய், தடைபட்டு, முட்டுச் சந்தில் மாட்டிக் கொண்டது போல் அனைத்து செயல்பாடும் முடங்கி நின்று விடுகிறது.

லெனின் இந்த நூலில் இடதுசாரி தவறுகளை முன்வைத்தே எழுதியுள்ளார், இருந்தாலும் சில இடங்களில் வலது தவறையும் சுட்டிக்காட்டி உள்ளார்.

சட்டவழி நிலையிலிருந்து சட்டவழியற்ற நிலைக்கு விரைவாக மாறிச் சென்று, இரண்டையும் ஒன்றிணைத்துக் கொண்டு, வசதியற்ற, ஜனநாயகமற்ற முறைகளைக் கையாள வேண்டி வந்ததும் தலைவர்கள் நிலை தடுமாறி வீழ்கின்றனர் என்கிறார் லெனின்.

“ஒரு புறத்தில், கட்சியானது திடுதிப்பென்று சட்டவழியிலான நிலையிலிருந்து சட்டவிரோத நிலைக்கு மாற்றப்பட்டு அதனால் தலைவர்களுக்கும் கட்சிகளுக்கும் வர்க்கங்களுக்கும் உள்ள வழக்கமான, முறையான, எளிய உறவுகள் குலைக்கப்பட்டுவிட்ட சூழ்நிலைக்குத் தாம் வந்துவிட்டதைக் கண்டதும், இவர்கள் குழம்பி விட்டதாகத் தெரிகிறது. ஏனைய ஐரோப்பிய நாடுகளைப் போலவே ஜெர்மனியிலும் சட்டவழியிலான நிலைக்கு மக்கள் தம்மை மட்டு மீறிப் பழக்கப்படுத்திக் கொண்டு விட்டனர்.

முறைப்படி நடைபெறும் கட்சிக் காங்கிரஸ்களில் “தலைவர்கள்" தங்கு தடையின்றி ஒழுங்கான முறையில் தேர்ந்தெடுக்கப்படுவதற்கும், நாடாளுமன்றத் தேர்தல்கள், பொதுக் கூட்டங்கள், பத்திரிகைகள், தொழிற் சங்கங்கள் மூலமாகவும், பிற நிறுவனங்கள் மூலமாகவும் வெளிப்படும் உணர்ச்சிகள் வாயிலாகக் கட்சிகளின் வர்க்க இயைபைச் சோதித்துப் பார்க்கும் வசதியான முறைக்கும், இன்ன பிறவற்றுக்கும் மட்டுமீறி மக்கள் தம்மைப் பழக்கப்படுத்திக் கொண்டு விட்டனர்.

இவர்களது இந்த வழக்கமான செயல்முறைக்குப் பதிலாய், புரட்சிப் புயலின் வளர்ச்சி காரணமாகவும், உள்நாட்டுப் போரின் வளர்ச்சி காரணமாகவும் சட்டவழியிலான நிலையிலிருந்து சட்டவிரோதமான நிலைக்கு விரைவாய் மாறிச் சென்று, இரண்டையும் ஒன்றிணைத்துக் கொண்டு, “தலைவர்களது குழுக்களைத்” தேர்வு செய்ய வேண்டிய அல்லது அமைக்க வேண்டிய அல்லது பாதுகாத்துக் கொள்ள வேண்டிய 'வசதியற்ற', 'ஜனநாயகமல்லாத" முறைகளைக் கையாள வேண்டி வந்ததும் இவர்கள் நிலை தடுமாறி, கலப்பற்ற அபத்தக் கற்பனையில் இறங்கத் தலைப்பட்டு விட்டனர்.”

நெருக்கடி நேரத்தில் அரசாங்கத்தால் கட்சி தடைசெய்யப்படும், சட்டவழியற்ற நிலைக்குத் தம்மை மாற்றிக் கொள்ள வேண்டிய நிலை ஏற்படும். இதை அறியாத நிலையில், திடிரென்று நெருக்கடி ஏற்படும் போது கட்சி திகைத்து, நிலைதடுமாறி, செயலற்ற நிலைக்குத் தள்ளப்படும்.

ஆளும் வர்க்கம் தொழிலாளர்களைச் சட்டவழியில் மட்டும் ஒடுக்குவதில்லை என்பது தெரிந்ததே. அதனால் சூழ்நிலைக்கு ஏற்ப தம்மை மாற்றிக் கொண்டு போராட்டத்தில் ஈடுபடும் திறத்தை கம்யூனிஸ்ட் கட்சி பெற்றிருக்க வேண்டும். அதுவும் பாசிச ஆபத்தில் இருக்கும் நம் நாட்டில், அனைத்து நிலைமைகளிலும் செயல்படக் கற்றிருக்க வேண்டும். எதிர் காலம் எப்படிப்பட்டதாய் இருக்கும் என்று இப்போது கணிக்க முடியாது, அதனால்தான், கம்யூனிஸ்ட் கட்சி அனைத்து சூழ்நிலைமைகளிலும் செயல்படும் திறத்தை பெற்றதாக இருக்க வேண்டும்.

நிலைமைகளைப் புரிந்து கொண்டு தமது போராட்ட முறைகளை மாற்றிக் கொள்ளும் திறம் கம்யூனிஸ்ட் கட்சி பெற்றிருக்கவில்லை என்றால் வெற்றி அடைவது அப்புறம் இருக்கட்டும், அது தமது இருப்பைக் காப்பாற்றிக் கொள்ள முடியாமல் அழிந்து விடும்.

லெனின் தமது வெற்றியின் அனுபவங்களை மனதில் கொண்டு கூறுவதை, அவரது சொற்களிலேயே பார்ப்போம்.

“போராட்டத்தில் புடம் போடப்பட்டு, உருக்கு உறுதி கொண்ட ஒரு கட்சி இல்லையேல், குறிப்பிட்ட அந்த வர்க்கத்திலுள்ள நேர்மையானோர் அனைவரின் நம்பிக்கைக்குப் பாத்திரமான ஒரு கட்சி இல்லையேல், பொதுமக்களது மனப்பாங்கைக் கவனித்து வருவதற்கும் வயப்படுத்துவதற்குமான திறன் கொண்ட ஒரு கட்சி இல்லையேல், இத்தகைய ஒரு போராட்டத்தை வெற்றிகரமாய் நடத்த முடியாது.”

முன்பே கூறியது போல, ருஷ்யப் புரட்சியை மிகையாகப் புகழ்வதைவிடுத்து, அதன் அனுபவங்களை நாம் கணக்கில் கொள்ள வேண்டும்.

இந்த அத்தியாயத்தை லெனின் ஒர் எச்சரிக்கையோடு முடிக்கிறார். சுரண்டும் வர்க்கமும் அதற்குச் சார்பாக ஆளும் வர்க்கமும் கம்யூனிஸ்ட் கட்சிக்குள் உளவாளிகளை நுழைக்கிறது. இதிலிருந்து விடுபடுவதற்கு லெனின் சட்டவழியான போராட்டத்துடன் சட்டவழியற்றப் போராட்டத்தை இணைக்க வேண்டும் என்று பல்வேறு காரணங்களில் ஒன்றாக வலியுறுத்துகிறார்.

“மிகவும் முன்னேறிய நாடுகள் அடங்கலாய்ப் பல நாடுகளில், முதலாளித்துவ வர்க்கம், கம்யூனிஸ்டுக் கட்சிகளுக்குள் தனது உளவாளிகளை அனுப்பி வருகிறது என்பதில் ஐயமில்லை. இனியும் அது அவ்வாறே அனுப்பி வரும். இந்த அபாயத்தை எதிர்த்துப் போராடுவதற்கான முறைகளில் ஒன்று, சட்டவிரோதமான பணிகளையும், சட்டவழிலான பணிகளையும் சாமர்த்தியமாய் இணைத்துச் செல்வதாகும்.”

போல்ஷிவிக் கட்சியின் அனுபவமான, சட்டவழிப் போராட்டம் சட்டவழியற்றப் போராட்டம் ஆகியவற்றின் இணைப்பைப் பற்றித் திரும்பத்திரும்பக் இந்த நூலில் லெனின் கூறுகிறார். இது கூறியது கூறலாகக் கொள்ளாமல் வலியுறுத்திக் கூறுவதாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

6. புரட்சியாளர்கள் பிற்போக்குத் தொழிற் சங்கங்களில் வேலை செய்யலாமா?

புரட்சியாளர்கள் பிற்போக்குத் தொழிற் சங்கங்களில் வேலை செய்யலாமா? என்கிற கேள்விக்கு, ஜெர்மன் இடதுபோக்கினர் “வேலை செய்யத் தேவையில்லை” என்று எதிர்மறையான பதிலைத் தருகின்றனர். இந்தப் பதில் எவ்வளவுதான் திட நம்பிக்கையோடு கூறியதாக இருந்தாலும், உண்மையில் இது அடிப்படையிலேயே தவறானது, வெற்றுச் சொல்லடுக்குகளைத் தவிர வேறு எதுவும் இதில் இல்லை என்று லெனின் கூறுகிறார்.

ஜெர்மன் இடதுபோக்கினரின் கருத்துக்கள் எப்படி அபத்தமாக இருக்கிறது என்று லெனின் கூறுவதை அவரது சொற்களிலேயே பார்ப்போம்.

“கம்யூனிஸ்டுகள் பிற்போக்குத் தொழிற்சங்கங்களில் வேலை செய்ய முடியாது, வேலை செய்யக் கூடாதென்றும், இது போன்ற வேலையைக் கைவிட்டுவிடலாம் என்றும், தொழிற்சங்கங்களை விட்டு வெளியேறி மிக அருமையான (பெருமளவுக்கு மிக இளம் பருவத்தினராகவே இருக்கக்கூடிய) கம்யூனிஸ்டுகளால் கண்டு பிடிக்கப்பட்ட புத்தம் புதிய வகைப்பட்ட அப்பழுக்கற்ற "தொழிலாளர் சங்கத்தை'' உருவாக்குவது அவசியம் என்றும், மற்றும் பலவாறாகவும் கூறும் ஜெர்மன் இடது சாரிகளின் ஆடம்பரமான, மெத்தப் படித்த மேதாவித்தனமான, பயங்கரப் புரட்சிகரமான பல பேச்சுக்களையும் நாங்கள் நகைக்கத்தக்க, சிறுபிள்ளைத்தனமான அபத்தமாகவே கருத வேண்டியிருக்கிறது.”

மேலும் லெனின், கம்யூனிஸ்ட் கட்சியின் வேலைகள் நேரடியாகத் தொழிற்சங்கங்களையே ஆதாரமாகக் கொண்டு இயங்குகிறது என்றும் கூறியுள்ளார்.

வர்க்க முரணில் வாழ்ந்துவரும் பாட்டாளிகளிடம் அரசியல் செய்யாமல், வர்க்கப் போராட்டத்தை எவ்வாறு நிகழ்த்துவது. இளைஞர் அணியினை மட்டும் வைத்துக் கொண்டு வர்க்கப் போராட்டத்தை நிகழ்த்த முடியாது. புரட்சிகரக் கம்யூனிசக் கட்சி என்றால் தொழிற் சங்கங்களை அமைத்து, கருவடிவிலான வர்க்கப் போராட்டத்தை முழுமையான வர்க்கப் போராட்டமாக, வர்க்கப் போராக வளர்த்தெடுக்க வேண்டும். கூலி உயர்வு போராட்டத்தில் இருந்தே கூலி அமைப்பு முறையினைத் தூக்கி எறியும் போராட்டமாக வளர்த்திட வேண்டும்.

இருக்கின்றதை விடுத்து இல்லாததைச் செயற்கையாகப் படைப்பது பற்றியே இடதுபோக்கினர் சிந்திக்கின்றனர். ஒர் ஆசிரியர் என்றால் அவர் மாணவர்களின் அறிதல் தளத்தில் இருந்து தமது கல்வியைத் தொடங்கவேண்டும், ஒரு அரசியல்வாதி என்றால் இருக்கின்ற நிலைமைகளை, அதாவது சமூகப் பொளாதாரம், வர்க்க நிலைப்பாடு அகிவற்றைப் புரிந்து கொண்டு அதனடிப்படையில் தமது செயல்பாட்டை அமைத்துக் கொள்ள வேண்டும். தனக்கு ஏற்ற மாணவனை ஆசிரியர் தேடுவது எதார்தத்தில் கிடைக்காதது போல, இருக்கின்ற நிலைமையைவிடுத்து தமக்கு ஏற்ற நிலைமையைப் படைப்பது பற்றி நினைப்பது அபத்தமாகும். லெனின் எழுத்துகளைப் படிக்கும் போது இப்படிச் சிந்தனை வெளிப்படுகிறது.

அடுத்து ஜெர்மன் இடதுபோக்குடைய கம்யூனிஸ்ட்டுகளைப் பற்றி லெனின் கூறுவது மிகவும் முக்கியமானதாகும்.

தொழிற் சங்கங்களில் செயல்படும் தலைவர்கள் பிற்போக்காகவும், எதிர்ப்புரட்சித் தன்மை கொண்டோராகவும் இருப்பதைக் காரணமாகக் காட்டி, தொழிற்சங்கங்களைத் துறந்துவிட்டு வெளிவந்திட வேண்டும். அவற்றில் வேலை செய்ய மறுக்க வேண்டும், தொழிலாளர்களுடைய நிறுவன ஒழுங்கமைப்புக்கான செயற்கையான புதிய வடிவங்களைத் தோற்றுவிக்க வேண்டும். இத்தகைய கருத்துக்களை லெனின் அபத்தமானது என்கிறார். ஜெர்மன் இடது போக்குடைய கம்யூனிஸ்டுகள் இதே அபத்தத்தைத்தான் செய்கிறார்கள். மேலும் இத்தகைய கம்யூனிஸ்டுகளின் செயல் முதலாளித்துவ வர்க்கத்துக்குப் பெரும் சேவை செய்யும் அளவுக்கு இது மன்னிக்க முடியாத மடமையாகும் என்கிறார்.



விவேகமில்லாத இடதுபோக்குடைய கம்யூனிஸ்டுகள் தொழிற் சங்கங்களில் வேலை செய்ய மறுத்துவிட்டு, மக்கள் காணப்படும் இடங்களில் இருந்து விலகி நின்று “மக்கள்திரள்” “மக்கள்திரள்” என்று கூக்குரலிடுகின்றனர் என்கிறார் லெனின்.

எதார்த்தத்தில் இருக்கின்ற தொழிற் சங்கங்களை ஒதுக்கிவிட்டு, கற்பனையான அப்பழுக்கற்ற தொழிற் சங்கத்தைக் கண்டுபிடிக்க முயற்சிக்கிறார்கள். இத்தகைய இடதுபோக்குடைய கம்யூனிஸ்டுகளால், புரட்சிக்கு பெரும் கேடு ஏற்படும் என்கிறார் லெனின்.

கம்யூனிஸ்டுகள் முன்னுள்ள பணி, பிற்பட்ட பகுதியோரின் நம்பிக்கையைப் பெறுவதும், அவர்களுக்கிடையே வேலை செய்வதுமே அன்றி, செயற்கைத் தன்மை வாய்ந்த சிறுபிள்ளைத்தனமான இடதுபோக்குடைய முழக்கங்களைக் கொண்டு அவர்களிடம் இருந்து தம்மைப் பிரித்து விலக்கி வேலி கட்டிக் கொள்வதல்ல என்று லெனின் கூறுகிறார்.

இடதுபோக்குடைய புரட்சிகர வெற்று முழக்கத்தை விடுத்து, மக்களிடம் நேரடியாகச் சென்று வேலை செய்ய வேண்டும். மக்களிடம் இருந்து விலகி இருப்பதும் மக்களைக் குறை சொல்வதும் புரட்சிகரமான செயல் அல்ல. மக்கள்திரள் காணப்படும் இடங்களில் எல்லாம் வேலை செய்தாக வேண்டும் என்று லெனின் கூறுவதை நாம் புரிந்து செயல்பட வேண்டும்.

மக்களின் அறிதல் தளத்தில் இருந்துதான் கம்யூனிஸ்டுகளின் வேலை செய்ய வேண்டும். கம்யூனிஸ்டுகள் தங்களுடைய அறிவு மட்டத்தில் இருந்து அரசியலை செய்ய முடியாது என்பதைப் போல்ஷிவிக்குகளின் அனுபவங்கள் நமக்குக் காட்டுகிறது.

கம்யூனிஸ்டுகள் எவ்வளவு அறிவு பெற்றவராக இருந்தாலும் அது உழைக்கு மக்களை, அவர்கள் இருக்கும் நிலையில் இருந்து மேம்படுத்துவதற்கே ஆகும். மக்களைக் குறை கூறுவதற்கு அல்ல, அப்படிக் குறைகூறுகிற அறிவு எதற்கும் பயன்படாது. பயன்படாத அறிவை, அறிவாகக் கொள்ள முடியாது.

7. முதலாளித்துவ நாடாளுமன்றங்களில் பங்கெடுத்துக் கொள்ளலாமா?

முதலாளித்துவ நாடாளுமன்றங்களில் பங்கெடுத்துக் கொள்ளலாமா? என்கிற கேள்விக்கு, மிகவும் அலட்சியமாகவும், சிறிதும் பொறுப்புணர்ச்சி இல்லாமல் ஜெர்மன் இடதுபோக்குடைய கம்யூனிஸ்டுகள் இக்கேள்விக்கு “பங்கெடுத்துக் கொள்ளக் கூடாது” என்று எதிர்மறையாகப் பதிலளிக்கிறார்கள்.

நாடாளுமன்ற முறை வரலாற்று வழியில் காலாவதியாகிவிட்டது. முதலாளித்துவ நாடாளுமன்ற முறையின் ஊழிக்காலம் முடிந்துவிட்டது, பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரத்தின் ஊழிக்காலம் தொடங்கிவிட்டது என்பது உண்மைதான். ஆனால் நடைமுறையில் அதனை வெற்றிக் கொள்ளும் நிலையை வந்தடைய இன்னும் நெடும் தொலைக்குச் செல்ல வேண்டும் என்பது அனைவரும் அறிந்ததே என்பதை லெனின் தெளிவு படுத்துகிறார்.

அதனால்தான் நாடாளுமன்றம் வரலாற்று வழியில் காலாவதியாகிவிட்டது, ஆனால் அரசியல் வழியில் இன்னும் காலாவதியாகி விடவில்லை என்று கூறப்படுகிறது.

ஒரு கட்சி தவறு செய்தது என்றால் அது பொறுப்புணர்ச்சியோடு அந்தத் தவறை திருத்திக் கொள்ள வேண்டும். அப்படித் தவறை திருத்திக் கொள்ளாது போனால், அது ஒரு சிறு குழுவாக செயல்படுவதாகக் கொள்ள முடியுமே அன்றி, ஒரு வர்க்கத்தின் சார்பான கட்சியாக அதைக் கூறிடமுடியாது என்கிறார் லெனின். இதனை அவரது சொற்களிலேயே பார்ப்போம்.

“ஓர் அரசியல் கட்சி தன்னுடைய தவறுகள் குறித்து அனுசரிக்கும் போக்கு, அக்கட்சி எந்த அளவுக்குப் பொறுப்புணர்ச்சி கொண்டுள்ளது என்பதையும், அதன் வர்க்கத்துக்கும் உழைப்பாளி மக்கள்திரளுக்கும் அதற்குள்ள கடமைகளை நடைமுறையில் எந்த அளவுக்கு அது நிறைவேற்றுகிறது என்பதையும் மதிப்பிட்டு முடிவு செய்வதற்கான மிக முக்கியமான, நம்பகமான வழிகளில் ஒன்றாகும்.

தவறை ஒளிவுமறைவின்றி ஒப்புக் கொள்ளுதல், அத்தவறுக்குரிய காரணங்களை நிச்சயித்துக் கொள்ளுதல், அதனை நோக்கி இட்டுச் சென்ற நிலைமைகளைப் பகுத்தாய்தல், அதைச் சரிசெய்வதற்குரிய வழிகளை ஆராய்ந்தறிந்து வகுத்துக் கொள்ளுதல்- இவையே பொறுப்புணர்ச்சி கொண்ட ஒரு கட்சிக்குரிய அடையாளம்; இவ்வாறுதான் அது தனது பணிகளைச் செய்து முடிக்க வேண்டும்; இவ்வாறுதான் அது தனது வர்க்கத்துக்கும் பிறகு மக்கள்திரளுக்கும் போதமளித்துப் பயிற்றுவிக்க வேண்டும். 

ஜெர்மனியிலும் (ஹாலந்திலும்) உள்ள “இடதுசாரிகள்” இந்தக் கடமையை நிறைவேற்றவும், கண்கூடான தமது தவறை ஆராய்வதில் முக்கியக் கருத்தும் கவனமும் செலுத்தவும் தவறியதன் மூலம், தாம் ஒரு சிறு குழுவே அன்றி ஒரு வர்க்கத்தின் கட்சி அல்ல என்பதையும், அறிவுத்துறையினரையும் அறிவுத்துறைவாதத்தின் மோசமான இயல்புகளைக் காப்பியடிக்கும் ஒருசில தொழிலாளர்களையும் கொண்ட சிறு குழுவேயன்றி மக்கள்திரள் கட்சி அல்ல என்பதையும் நிரூபித்துக் கொண்டு விட்டனர்.”

ஜெர்மனியில் உள்ள கம்யூனிஸ்டுகளைப் பார்த்து லெனின் கூறுகிறார், நாடாளுமன்றம் நமக்குக் காலாவதியாகிவிட்டதால், அது பொதுமக்களுக்கும் காலாவதியாகிவிட்டதாகக் கருதக்கூடாது.

இடதுபோக்குடைய கம்யூனிஸ்டுகளைப் பார்த்து லெனின் கூறுகிறார், தங்களைப் புகழ்வதைச் சிறிது குறைத்துக் கொண்டு, போல்ஷிவிக்குகளுடைய செயல்தந்திரத்தை நன்கு தெரிந்து கொள்ள முயற்சியுங்கள்.

அடுத்து போல்ஷிவிக்குகளின் அனுபவமாக லெனின் கூறியதை அவரது சொற்களிலேயே பார்ப்போம்.

“சோவியத் குடியரசின் வெற்றிக்குச் சில வாரங்கள் முன்னதாகவும், இந்த வெற்றிக்குப் பிற்பாடுங்கூட, முதலாளித்துவ-ஜனநாயக நாடாளுமன்றம் ஒன்றில் பங்கெடுத்துக் கொள்வதானது புரட்சிகரப் பாட்டாளி வர்க்கத்துக்குத் தீங்கிழைப்பதற்குப் பதிலாய், இது போன்ற நாடாளுமன்றங்கள் கலைக்கப்பட வேண்டியது எப்படி அவசியமென்பதைப் பிற்பட்ட நிலையிலுள்ள வெகுஜனப் பகுதியோருக்கு நிரூபிப்பதற்கு நடைமுறையில் உதவுகிறது என்பதும், இந்நாடாளுமன்றங்கள் வெற்றிகரமாய்க் கலைக்கப்படுவதற்கு வகைச் செய்கிறது என்பதும், முதலாளித்துவ நாடாளுமன்ற முறையை “அரசியல் வழியில் காலாவதியாக்குவதற்குத்” துணை புரிகிறது என்பதும் மெய்ப்பிக்கப் பட்டுள்ளன.

இந்த அனுபவத்தை உதாசீனம் செய்துவிட்டு, அதே நேரத்தில் கம்யூனிஸ்டு அகிலத்துடன் – தனது செயல்தந்திரத்தைச் சர்வதேசவழியில் (குறுகலான, அல்லது தனிப்பட்டதான எந்தவொரு தேசத்துக்குமான செயல்தந்திரமாயிராது, சர்வதேசப் செயல்தந்திரமாய்) வகுத்துக் கொள்ள வேண்டிய கம்யூனிஸ்டு அகிலத்துடன் — இணைப்புரிமை கொண்டாடுவதானது மிகக்கொடும் தவறிழைப்பதாகவும், சர்வதேசியத்தைச் சொல்லளவில் ஏற்றுக் கொண்டு செயலில் கைவிடுவதாகவுமே அமைகிறது.”

பொதுமக்களிடம் புரட்சிகர மனப்பான்மை இல்லாத போது, அதற்கான நிலைமை தோன்றாத போது புரட்சிகரச் செயல்தந்திரத்தை மட்டும் வைத்துக் கொண்டு செயல்பாட்டுக்கு வரமுடியாது. புறநிலையைக் கணக்கில் கொள்ளாது அகநிலையாக எடுக்கும் இத்தகைய செயல்தந்திரம் நடைமுறையில் சாத்தியப்படாமல் தோல்வி கண்டுவிடும்.

நாடாளுமன்றத்தில் சந்தர்ப்பவாதமாகச் செயல்படுவதைத் தூற்றுவதாலும் நாடாளுமன்றங்களில் பங்கெடுத்துக் கொள்வதை நிராகரிப்பதாலும் தமது புரட்சிகரமான நிலையை வெளிப்படுத்துவது மிகமிகச் சுலபம், ஆனால் இந்தச் சுலபத்தின் காரணமாய், இது மிகமிகக் கடினமான ஒரு பிரச்சினைக்கு உரிய தீர்வாகிவிடுவதில்லை என்கிறார் லெனின்.

பிற்பட்ட தொழிலாளர்களும், சிறு விவசாயிகளும், முதலாளித்துவ-ஜனநாயகத் தப்பெண்ணங்களிலும் நாடாளுமன்றவாதத் தப்பெண்ணங்களிலும் ஊறியிருக்கிறார்கள். இவர்கள் இதிலிருந்து வெளிவருவதற்கு, முதலாளித்துவ நாடாளுமன்றங்களைப் போன்ற அமைப்புகளுக்கு உள்ளிருந்துதான் கம்யூனிஸ்டுகள் எவ்விதமான இடையூறுகளில்லாமல் இந்தத் தப்பெண்ணங்களை அம்பலப்படுத்தவும் முறியடிப்பதற்கும், விடாப்பிடியானா நீண்ட போராட்டம் நடத்த வேண்டும் என்கிறார் லெனின்.

கம்யூனிஸ்ட் கட்சியும் அதன் தலைவர்களும் மற்ற முதலாளித்துவக் கட்சிகளின் தலைவர்கள் ஆகியோரைவிட வேறுபட்டவர்கள். அந்த வேறுபாட்டுத் தகுதியினைப் பெற்றுக் கொள்ளும் திறம் இல்லாதவர்கள் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களாக இருப்பதற்குத் தகுதி இழந்தவர்களே ஆவர். லெனின் கருத்துக்களின் அடிப்படையில் இவ்வாறு நாம் புரிந்து கொள்ள முடிகிறது. லெனின் வழியில் சென்றால்தான் மார்க்சிய வழியில் சமூக மாற்றத்தைக் கொண்டுவர முடியும்.

ஒரு நீண்ட லெனினது எழுத்தைப் பார்ப்போம்.

"சட்டவழியிலான வேலைகளையும் சட்டவழியற்ற வேலைகளையும் ஒன்றிணைத்துக் கொள்ளாமல், வேறு பல வழிகளோடு நாடாளுமன்றங்களிலும் “தலைவர்களைச்” சோதித்துப் பார்க்காமல் இதிலுள்ள சிரமங்களை வெற்றிகரமாய்ச் சமாளிக்க முடியாது.

குற்றவிமர்சனம் - மிகவும் கடுமையான, தாட்சண்யமற்ற, சமரசத்துக்கு இடமில்லாத குற்றவிமர்சனம் - நாடாளுமன்றவாதம் அல்லது நாடாளுமன்றச் செயற்பாடுகளுக்கு எதிராய் அல்லாமல், நாடாளுமன்றத் தேர்தல்களையும் நாடாளுமன்ற அரங்கையும் புரட்சிகரமான, கம்யூனிஸ்டு முறையில் பயன்படுத்திக் கொள்ள முடியாத தலைவர்களுக்கு எதிராய்- இன்னும் அதிகமாய் அவற்றைப் பயன்படுத்திக் கொள்ள விரும்பாதவர்களுக்கு எதிராய் - திருப்பி விடப்பட வேண்டும்.

இத்தகைய குற்றவிமர்சனம்தான்—இதோடுகூடத் தகுதியற்ற தலைவர்களை நீக்கித் தகுதியுடையோரை அவர்களிடத்தில் அமர்த்த வேண்டுமென்பதைக் கூறத் தேவையில்லை— "தலைவர்களுக்குத்' தொழிலாளி வர்க்கத்துக்கும் உழைப்பாளி மக்கள் அனைவருக்கும் லாயக்கானவர்களாக இருக்கும்படி போதமளித்துப் பயிற்றுவித்து, அதேபோதில் பொதுமக்களுக்கும் அரசியல் நிலைமையையும் அந்நிலைமையிலிருந்து எழும் பல சந்தர்ப்பங்களில் மிகவும் குளறுபடியான, சிக்கலான பணிகளைச் சரிவரப் புரிந்து கொள்ளும்படி போதமளித்துப் பயிற்றுவிக்கக் கூடியதான பயனுள்ள செழுமை வாய்ந்த புரட்சிகரச் செயற்பாடாய் அமைய முடியும்."

இந்த நூலின் இந்த அத்தியாயம் தனித்த சிறப்புடையதாகும், வரலாற்று வழியில் காலாவதியான நாடாளுமன்றத்தை அரசியல் வழியிலும் காலாவதியாகிவிட்டதாகக் கருதும் இடதுபோக்குடைய கம்யூனிஸ்டுகளுக்குச் சிறப்பான அறிவுறுத்தலை லெனின் வழங்கியுள்ளார்.

இந்த நூலில் லெனின் இடதுபோக்குடையவர்களின் இளம்பருவக் கோளாற்றையே அதிகம் கூறியுள்ளார். அடுத்த அத்தியாயத்தில் லெனின் ஜெர்மன் இடதுபோக்குடையவர்களின் தவறை வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார் அதை அவரது சொற்களிலேயே இங்கே பார்ப்போம்.

“கண்கூடான காரணங்களில் ஒன்று ஜெர்மன் கம்யூனிஸ்டுகளுடைய தவறான செயல்தந்திரமாகும். இவர்கள் அச்சமின்றியும் நேர்மையுடனும் இந்தப் பிழையை ஏற்றுக் கொண்டு இதனைத் திருத்திக் கொள்ளக் கற்றுக் கொண்டாக வேண்டும். பிற்போக்கான முதலாளித்துவ நாடாளுமன்றத்திலும் பிற்போக்கான தொழிற்சங்கங்களிலும் பங்கெடுத்துக் கொள்வதன் அவசியத்தை இவர்கள் மறுத்ததில் இந்தத் தவறு அடங்கியிருந்தது; “இடதுசாரி” இளம் பருவக் கோளாறின் எண்ணற்ற வெளிப்பாடுகளில் இது அடங்கியிருந்தது. இந்த “இடதுசாரி" இளம் பருவக் கோளாறு இப்பொழுது வெளியே தெரியும்படி வெளிப்பட்டுவிட்டது; இதனால் இது முன்னிலும் தீர்க்கமாகவும் விரைவாகவும் உடலுக்கு இன்னும் கூடுதலான அனுகூலம் உண்டாகும் முறையிலும் குணப்படுத்தப்படும்.”

தனிநபரைப் போன்று கம்யூனிஸ்ட் கட்சியும் தவறு செய்வதற்கு வாய்ப்பு இருக்கிறது, கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களைக் கொண்டே இயங்குகிறது, அதனால் தவறு ஏற்படுவது இயல்பானது. செய்தத் தவறில் இருந்து எந்தக் கட்சி விரைவில் வெளிவருகிறதோ அதுவே சிறந்த கம்யூனிஸ்ட் கட்சியாகத் திகழும்.

அடுத்து. நாடாளுமன்றத்தில் பங்கேற்பதை முற்றமுழுக்கத் துறந்தவர்களை எதிர்த்து லெனின் எழுதுகிறார், அப்படித் தெரிவிக்கிற போது இடையில் கூறிய ஒன்றை இங்கே மனதில் கொள்ள வேண்டியது அவசியமாகும்.

“காலத்துக்கு ஒவ்வாத கருத்தை யாராவது உரைத்தால் அல்லது முதலாளித்துவ நாடாளுமன்றங்களில் பங்கு கொள்வதை எல்லா நிலைமைகளிலும் நிராகரிக்கலாகாது என்று பொதுவாகவே யாராவது கருதினால், அது தவறே ஆகுமென்பதில் சந்தேகமில்லை. புறக்கணிப்புப் பயனுள்ளதாயிருக்கும் நிலைமைகளை வரையறுக்க இங்கு நான் முயற்சிப்பதற்கில்லை. ஏனெனில் இந்தக் கட்டுரையின் நோக்கம் அவ்வளவு விரிவானதல்ல…."

லெனின் இந்தக் கருத்தை ஏன் இங்கே கூறவேண்டியிருக்கிறது என்றால் நம்நாட்டில் நாடாளுமன்றத்தில் மட்டுமீறி பழக்கப்படுத்திக் கொண்டவர்கள் லெனினது நாடாளுமன்ற பங்கேற்பு பற்றிய கருத்தை மட்டும் தூக்கிப் பிடித்துக் கொள்கின்றனர், நாடாளுமன்றப் புறக்கணிப்பு பற்றிய கருத்தை ஒதுக்கிவிடுகின்றனர். ஆனால் இடதுதிரிபை எதிர்ப்பதோடு இந்த நூலிலேயே லெனின் நாடாளுமன்றத்தை மட்டுமீறிப் பழக்கப்படுத்திக் கொள்வதையும் விமர்சித்துள்ளார், அதை அத்தகையவர்கள் மறந்துவிடுகின்றனர்.

லெனின் சட்டவழியிலான போராட்டத்தையும் சட்டவழியற்றப் போராட்டத்தையும் இணைத்து வெற்றி பெற்றதையே போல்ஷிவிக்குகளின் அனுபவமாக அனைவருக்கும் வழங்கியுள்ளார்.

8. சமரசம் கூடவே கூடாதா?

சந்தர்ப்பவாத சமரசத்துக்கும் அவசியமான சமரசத்துக்கும் இடையே வேறுபாடு இருக்கிறது. சமரசம் கூடவே கூடாது என்பதைப் பொதுவான விதியாக வகுத்திடுவது அறிவுடைமையாகாது என்கிறார் லெனின்.

“அரசியலில் சில நேரங்களில் வர்க்கங்களுக்கும் கட்சிகளுக்கும் இடையிலான அளவு கடந்த சிக்கல் வாய்ந்த உறவுகள்— தேசிய, சர்வதேசிய உறவுகள்-தொடர்பான விவகாரங்கள் எழுவதால், வேலைநிறுத்தத்தில் செய்து கொள்ளப்படும் நியாயமான "சமரசமா”, அல்லது கருங்காலியாலோ, துரோகத் தலைவராலோ, இன்னோரன்ன பிறராலோ செய்யப்படும் துரோகமான "சமரசமா" என்கிற பிரச்சினையைக் காட்டிலும் மிகவும் கடினமான சந்தர்ப்பங்கள் பலவும் ஏற்படும் என்பது தெளிவு.

எல்லாச் சந்தர்ப்பங்களுக்கும் பொருந்த கூடிய ஒரு சூத்திரத்தையோ, பொது விதியையோ ("சமரசம் கூடவே கூடாது!'') வகுத்திடுவது அறிவுடைமையாகாது. அவரவரும் தமது சொந்த அறிவைப் பயன்படுத்திக் கொண்டு, அந்தந்தச் சந்தர்ப்பத்திலும் தமக்குரிய நிலையை வகுத்துக் கொள்ளும் ஆற்றலுடையவராய் இருத்தல் வேண்டும்.”

சமரசம் கொள்ள வேண்டிய இடங்களில் சமரசம் செய்யாது போனால் பெரும் அழிவை அது ஏற்படுத்திவிடும்.

லெனின் இந்த நூலில் வேறொரு அத்தியாயத்தில் சமரசம் செய்து கொள்ளக்கூடிய ஒரு சூழ்நிலையைக் குறிப்பிடுவார் அதனை இங்கே பார்ப்பது பொருத்தமாக இருக்கும்.

ஆயுதங்களை வைத்துக் கொண்டுள்ள ஒரு கொள்ளைக் கூட்டத்தினர் காரை வழிமறிக்கும் போது, பணம், பாஸ்போர்ட், கார் ஆகிய அனைத்தையும் கொள்ளைக் கூட்டத்தினரிடம் கொடுத்து, தங்களைக் காப்பாற்றிக் கொள்வது ஒரு சமரசம் என்பதில் சந்தேகமில்லை. இந்த நிகழ்வில் சமரசம் செய்து கொண்டவர் கொள்ளைக் கூட்டத்தினருக்கு உடந்தையாக இருந்தார் என்று அறிவுடையோர் எவரும் குறைகூறமாட்டார்கள். இதுபோன்றே அரசியலிலும் அழிந்து போகாமல் தற்காத்துக் கொள்ளச் சமரசம் செய்து கொள்ள வேண்டிய நிலை ஏற்படும். அப்படிப்பட்ட இடத்தில் சமரசம் செய்துகொள்ளக்கூடாது என்று பொதுவிதியாகக் கூறமுடியாது. ஆனால் சமரசமாகப் போவதே தமது கோட்பாடாகக் கொண்டவர்கள் என்பது வேறு, அதனை விமர்சிக்காமல் இருக்க முடியாது.

சந்தர்ப்பவாத சமரசத்துக்கும் அவசியமான சமரசத்துக்கும் இடையே வேறுபாடு இருக்கிறது.

9. பிரிட்டனில் “இடதுசாரி” கம்யூனிசம்

லெனின் அன்றைய இங்கிலாந்தின் நிலைமையாகக் கூறுவதைப் பார்ப்போம். பிரிட்டனில் இன்னமும் கம்யூனிஸ்ட் கட்சி தோன்றவில்லை, ஆனால் அங்குத் தொழிலாளர்களுடைய சக்தி வாய்ந்த, விரைவாய் வளர்ந்து வரும் கம்யூனிஸ்ட் இயக்கம் இருக்கிறது.

அடுத்துப் புரட்சி நடைபெறுவதற்கான அடிப்படை விதியாக லெனின் கூறுவதைப் பார்ப்போம்.

புரட்சி நடைபெற வேண்டுமானால், ஒடுக்கத்துக்கு ஆளான பொதுமக்கள் பழைய வழியில் வாழ்வது சாத்தியமில்லை என்பதை உணர்ந்து மாற்றங்கள் கோர வேண்டும். புரட்சிக்கு இது மட்டும் போதாது, இதனுடன் சுரண்டுபவர்கள் பழைய வழியில் வாழவும் ஆட்சி நடத்தவும் முடியாமல் போகின்ற நிலையும், புரட்சிக்கு அவசியமானதாகும். அதாவது அடிமட்டத்து வர்க்கங்கள் பழைய வழியில் வாழமுடியாத, வாழவிரும்பாத நிலை உருவாகி இருக்க வேண்டும், சுரண்டும் மேல் வர்க்கத்தினர் பழைய வழியில் செல்ல முடியாத நிலை உருவாக வேண்டும் அப்போது மட்டுமே புரட்சி வெற்றி அடைய முடியும்.

வெற்றிகரமான பாட்டாளி வர்க்கப் புரட்சிக்குரிய இரு நிலைமைகளும் பிரட்டனில் தெளிவாக முதிர்ச்சி அடைந்து வருகிறது என்று லெனின் அன்றைய நிலைமையாகக் கூறுகிறார்.

இந்நிலையில் இடதுசாரி கம்யூனிஸ்டுகள் புரியும் தவறுகள் மிகவும் அபாயகரமானவை. ஏனெனில் புரட்சியாளர்களில் சிலர் மேற்கூறிய இரு நிலைமைகளில் ஒவ்வொன்றும் குறித்துப் போதுமான அளவுக்குச் சிந்தனையோடு செயல்படவில்லை.

அடுத்து லெனின் போல்ஷிவிக்குகளின் செயல்பாட்டால் ருஷ்ய மக்கள் தெளிவு பெற்று இருப்பதைப் பற்றிக் கூறுகிறார்.

ருஷ்யாவில் உள்ள பொதுமக்கள் பிரிட்டனில் உள்ள பொதுமக்களைவிடக் கல்விக் கேள்வியில் சிறந்தவர்கள் அல்ல என்பது தெளிவு, அதுமட்டுமல்லாது அவர்களைக் காட்டிலும் பிற்பட்டவர்கள் என்பதே உண்மை ஆகும். ஆனால் ருஷ்ய பொதுமக்கள் போல்ஷிவிக்குகளைப் புரிந்து வைத்திருந்தனர். அதாவது ருஷ்ய உழைக்கும் மக்கள் ருஷ்ய கம்யூனிஸ்ட்டுகளைப் புரிந்து வைத்திருந்தனர்.

சோவியத் புரட்சிக்கு சிறிது காலத்துக்கு முன்னதாய் 1917ஆம் ஆண்டுச் செப்டம்பரில் போல்ஷிவிக்குகள் முதலாளித்துவ நாடாளுமன்றத்துக்குத் தமது வேட்பாளர்களை நிறுத்தினர். 1917ல் நவம்பரில் சோவியத் புரட்சிக்கு மறுநாள் இந்த அரசியல் நிர்ணய சபையின் தேர்தல்களில் பங்கு கொண்டனர், 1918ஆம் ஆண்டுச் சனவரி 5ல் இந்த அரசியல் நிர்ணய சபையைக் கலைத்தனர் என்பது போல்ஷிவிக்குகளுக்குத் தடங்கலாகிவிடவில்லை அதற்கு மாறாக அவர்களுக்கு உதவியே செய்தது என்கிறார் லெனின்.

ஆகவே நாடாளுமன்றத்தில் பங்கு பெறுவது புரட்சிகர நடவடிக்கைகளுக்கு உண்மையில் துணைபுரியவே செய்திருக்கிறது என்பதே போல்ஷிவிக்குகளின் வரலாற்று அனுபவமாக இருக்கிறது.

“இடதுசாரி” கம்யூனிசம்- இளம்பருவக்கோளாறு” என்கிற நூலில், ருஷ்யாவில் நடைபெற்ற சோஷலிசப் புரட்சியின் அனுபவங்களை, லெனின் தொகுத்தளித்துள்ளார். அப்படித் தொகுத்ததில் மிகவும் முதன்மையானது எதுவென்றால் அனைத்து கம்யூனிஸ்டுகளின் பணியாக அவர் கூறுவதாகும். அதனை அவரது சொற்களிலேயே பார்ப்போம்.

“கம்யூனிசத்தின் பொதுவான, அடிப்படையான கோட்பாடுகளை வர்க்கங்களுக்கும், கட்சிகளுக்கும் இடையிலான குறிப்பிட்ட உறவுகளுக்கு, கம்யூனிசத்தை நோக்கிய புறநிலை வளர்ச்சியில் உள்ள கூறுகளுக்கு, பொருத்தமாய்ப் பயன்படுத்த கற்றுக்கொள்வதே பணி என்பதில் சந்தேகமில்லை. இந்தப் பிரத்தியேக (தனிப்பட்ட) உறவுகளும் கூறுகளும் ஒவ்வொரு நாட்டிலும் வெவ்வேறாய் இருக்கின்றன; இவற்றைக் கண்டறிந்து கொள்ளவும், பரிசீலிக்கவும், வருவது அறிந்து முன் கூட்டியே கூறவும் நாம் ஆற்றலுடையோராய் இருத்தல் வேண்டும்”

லெனின் கூறுவது என்னவென்றால், ஒவ்வொரு நாட்டிலும் உள்ள கம்யூனிஸ்ட் கட்சி, கம்யூனிசத்தின் பொதுவான அடிப்படைக் கோட்பாடுகளையும், வேறுபட்டு காணப்படுகிற அந்தந்த நாட்டின் தனிப்பட்ட உறவுகளையும் கண்டறிந்து பரிசீலிக்க வேண்டும், சமூக வளர்ச்சியில் அடுத்து வருவது என்னவென்பதை முன்கூட்டியே கண்டிறிந்து கூறுவதில் திறம் பெற்றதாக இருக்க வேண்டும். 

அப்படித் திறம் பெற்ற கம்யூனிஸ்ட் கட்சியே சரியாகக் கட்சித்திட்டத்தை வகுக்கவும், அதன்படி செயல்படவும் முடியும் என்பதை லெனின் கூற்றால் புரிந்து கொள்ள முடிகிறது.

10. பல முடிவுகள்

அனைத்து நாட்டில் உள்ள தொழிலாளர் இயக்கத்தின் பணிகளாக லெனின் கூறுவதைப் பார்ப்போம்.

“தொழிலாளி வர்க்க இயக்கத்தினுள் சந்தர்ப்பவாதத்தையும் இடதுசாரி வறட்டுச் சூத்திரவாதத்தையும் வெற்றி கொள்ளுதல், முதலாளித்துவ வர்க்கத்தைக் கவிழ்த்தல், சோவியத் குடியரசையும் பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரத்தையும் நிறுவுதல் என்னும் ஒருமித்த சர்வதேசப் பணியை அந்தந்த நாடும் நிறைவேற்றிட வேண்டிய தூலமான முறையில் தேசிய வழியில் பிரத்தியேகமானவற்றையும் தேசிய வழியில் தனிச்சிறப்பானவற்றையும் அலசி ஆராய வேண்டும், தேடிப் பிடித்தாக வேண்டும், வருவது அறிந்து கூற வேண்டும், உணர்ந்து கொண்டாக வேண்டும்- இதுவே வளர்ச்சி பெற்ற எல்லா நாடுகளும் கடந்து சென்று கொண்டிருக்கும் இந்த வரலாற்றுக் கட்டத்தின் அடிப்படையான பணியாகும்.”

தொழிலாளர்கள் வர்க்க உணர்வு அளிப்பதற்கும் வர்க்க அரசியலை வளர்ப்பதற்கும் உதவிடுகிற முன்னணிப்படை என்று கூறப்படுகிற கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையின் ஆற்றலைப் பற்றி லெனின் அடுத்துக் கூறுகிறார்.

“சர்வதேசத் தொழிலாளர் இயக்கத்தின் வர்க்க உணர்வு கொண்ட முன்னணிப் படையின், அதாவது கம்யூனிஸ்டுக் கட்சிகள், குழுக்கள், போக்குகளின் உடனடியான பணி, விரிவான பொதுமக்களுக்கு (பெருமளவுக்கு இவர்கள் இன்னமும் உறக்க நிலையிலும் மந்த நிலையிலும் செயலற்றும், மரபால் கட்டுண்டும்தான் இருக்கிறார்கள்) தலைமை தாங்கி அவர்களுடைய புதிய நிலைக்கு அழைத்துச் செல்லும் ஆற்றல் பெற வேண்டுமென்பதுதான்; அல்லது இன்னும் துல்லியமாய்ச் சொல்வதெனில் தமது சொந்தக் கட்சி மட்டுமின்றி இந்தப் பொதுமக்களும் புதிய நிலையை வந்தடைவதற்கான அவர்களது முன்னேற்றத்துக்கும் வளர்ச்சிக்கும் தலைமை தாங்கும் ஆற்றல் பெற வேண்டும்.”

மேலும் லெனின் கூறுகிறார், பொதுமக்களைத் தலைமை தாங்கி, புரட்சியில் முன்னணிப் படையின் வெற்றியை உறுதி செய்யக் கூடிய புதிய நிலைக்கு அவர்களை அழைத்துச் செல்வதென்ற உடனடியான பணியைச் செய்ய வேண்டும். இதற்கு இடதுசாரி வறட்டுச் சூத்திரவாதத்தை ஒழிக்க வேண்டும், அதன் தவறுகளை முழுமையாகக் களைந்தெறிய வேண்டும் என்கிறார்.

சட்டவழியற்ற போராட்ட முறையே புரட்சிகரமானது என்று இடதுபோக்கினர் கூறுவதை லெனின் மறுத்துரைக்கிறார்.

அனுபவமில்லாத புரட்சியாளர்கள், சட்டவழியிலான போராட்ட முறைகள் சந்தர்ப்பவாத முறைகளாகும் என்கின்றனர், ஏனென்றால் முதலாளித்துவ வர்க்கம் தொழிலாளர்களை எண்ணற்ற முறையில் ஏய்த்தும் ஏமாற்றியும் விட்டது, முக்கியமாய்ப் புரட்சிகரமல்லாத அமைதி காலங்களில் ஏமாற்றிவிட்டது என்று கூறி, சட்டவழியற்ற போராட்ட முறைகளே புரட்சிகரமானவை என்று அடிக்கடி நினைக்கிறார்கள். ஆனால் இது சரியல்ல என்கிறார் லெனின்.

சட்டவழியற்ற போராட்ட முறைகளைக் கையாளத் திராணியில்லாத, விருப்பமில்லாத கட்சிகளும் தலைவர்களும்தான் சந்தர்ப்பவாதிகள், தொழிலாளி வர்க்கத்துக்குத் துரோகம் செய்கிறார்கள். ஆனால் சட்டவழியற்ற போராட்ட வடிவங்களைச் சட்டவழியிலான போராட்டத்துடன் இணைத்துக் கொள்ளும் திறனில்லாத இடதுபோக்குடைய புரட்சியாளர்கள் உண்மையில் மட்டரகமான புரட்சியாளர்களே!! ஆவர் என்கிறார் லெனின்.

சட்டவழிப் போராட்டத்தில் சந்தர்ப்பவாதம் ஏற்படுகிறது என்பதால்தான் அதனை இடதுபோக்குடையவர்கள் ஈடுபடாமல் இருக்கின்றனர். இது அவர்களது இயலாமையினையைக் காட்டுகிறது.

லெனின் வலது-இடது என்கிற இரண்டு போக்கினரையும் விமர்சிக்கிறார்.

பிரிட்டனில் கம்யூனிஸ்டுகள் நாடாளுமன்றத் தேர்தல்களைப் பயன்படுத்திக் கொண்டாக வேண்டும் என்று லெனின் ஆலோசனை கூறுகிறார்.

வலது போக்கினர் புதிய நிலைமைக்கு ஏற்ப மாறாமல் பழைய முறைகளையே விடாப்பிடியாகப் பின்பற்றுகின்றனர், இடதுபோக்கினர் பழைய முறைகளைக் கண்ணை மூடிக்கொண்டு பிடிவாதமாய் நிராகரிக்கின்றனர் என்று வலது – இடது போக்குகள் செய்கிற தவறுகளை லெனின் சுட்டிக்காட்டுகிறார், அதில் இருந்து விடுபடுவதற்கான வழியினையும் கூறுகிறார்.

“வலதுசாரி வறட்டுச் சூத்திரவாதம் பழைய வடிவங்களை மட்டுமே அங்கீகரிப்பேன் என்று விடாப்பிடியாக நின்று, முற்றிலும் கையாலாகாததாகி விட்டது; புதிய உள்ளடக்கத்தை அது காணத் தவறியதே இதற்குக் காரணம். இடதுசாரி வறட்டுச் சூத்திரவாதம் கண்ணை மூடிக் கொண்டு சில பழைய வடிவங்களைப் பிடிவாதமாய் நிராகரிக்கிறது; புதிய உள்ளடக்கம் எல்லா வகையான வடிவங்கள் மூலமாகவும் வலுக்கட்டாயமாக வெளிப்படுகிறது என்பதையும், கம்யூனிஸ்டுகளாகிய நாம் எல்லா வடிவங்களிலும் தேர்ச்சி பெறுவதும், மிகவும் கூடுதலான வேகத்தில் ஒரு வடிவத்துக்குத் துணையாக மற்றொன்றை இணைத்துக் கொள்வதும், ஒன்றுக்குப் பதிலாய் இன்னொன்றை பயன்படுத்திக் கொள்வதும், நம்முடைய வர்க்கத்திடமிருந்தோ, நம்முடைய முயற்சிகளின் வாயிலாகவோ ஏற்படாத எந்த மாறுதலுக்கும் பொருத்தமாய் நம்முடைய செயல்தந்திரத்தை மாற்றியமைத்துக் கொள்வதும் நமது கடமையாகும் என்பதையும் அது பார்க்கத் தவறிவிடுகிறது.”

இந்த நூலை லெனின் இடதுபோக்கின் தவறுகளைச் சுட்டிக்காட்டுவதற்கே எழுதியுள்ளார், நூலின் தலைப்பே அதனை வெளிப்படுத்துகிறது, இருந்தாலும் பல இடங்களில் வலதுபோக்கின் தவறுகளையும் சுட்டிக்காட்டியுள்ளார். ஒரு கம்யூனிஸ்ட் கட்சி திறமையாவும், சிறப்பாகவும் செயல்பட வேண்டுமானால் வலது-இடது திரிபுகளில் இருந்து விடுபட வேண்டும்.

சர்வதேச கம்யூனிஸ்டு இயக்கம் அதாவது அனைத்து நாட்டுக் கம்யூனிஸ்டுகள் இயக்கம் விரைவாகவும் முழுமையாகவும் இடதுபோக்கில் இருந்து விடுபட்டுவிடுமென முழு நம்பிக்கையுடன் கூறலாம் என்று லெனின் இந்த நூலை முடிக்கிறார்.

லெனின் நம்பிக்கையை நிறைவேற்றும் முகமாக நம் நாட்டில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகளிலும் இயக்கங்களிலும் உள்ள வலது-இடது போக்கில் இருந்து விடுபட்டு சரியான பாதையில் பயணிப்போம், அதனடிப்படையில் உழைப்பாளர்களுக்கு விடுதலையைப் பெற்றுவோம்.

அ.கா.ஈஸ்வரன்

9884092972

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு