அமெரிக்க அழுத்தமும், உலகின் மிகப் பெரிய வர்த்தக கூட்டணியில் மீண்டும் இந்தியா இணைவதற்கான வாய்ப்பும்
செந்தாரகை (தமிழில்)

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியாவின் மீது கடுமையான வரி விதித்தார்; இதில் ரஷ்ய எண்ணெய் கொள்முதல் செய்ததற்கான கூடுதல் 25% அபராதமும் சேர்க்கப்பட்டுள்ளது (ராய்ட்டர்ஸ்)
வெளிநாட்டு சந்தைகளில் நிலவும் கட்டுப்பாடுகள், அதிகரித்து வரும் வர்த்தக பற்றாக்குறை, மட்டுமல்லாது விவசாயிகள் நலன்கள் , உள்நாட்டு உற்பத்தியாளர்கள் மற்றும் சிறு தொழில்கள் சந்தித்து வரும் பிரச்சனைகள் போன்ற குறிப்பிட்ட முக்கிய காரணங்களுக்காக, 2019ஆம் ஆண்டில், உலகின் மிகப் பெரிய வர்த்தக கூட்டணியில் இணைவதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட பேச்சுவார்த்தைகளை இந்தியா திடீரென கைவிட்டது.
ஆனால், அமெரிக்காவுடன் கசப்பான, நீண்ட வரத்தக பேச்சு வார்த்தைகளுக்குப் பிறகு, தற்போது நிலைமைகள் மாறத் தொடங்கியுள்ளன.
புதுதில்லி: இந்தியா–அமெரிக்கா வர்த்தக உறவுகள் கடுமையான உரசல்களை எதிர்கொள்ளும் நிலையில், சீனாவுடனான உறவுகள் மெதுவாக முன்னேற்றமடைந்துள்ளன. இந்நிலையில், ,இந்தியா, ஆசியாவின் மிகப்பெரிய வர்த்தகக் கூட்டமைப்பான “பிராந்திய விரிவான பொருளாதார கூட்டணியிலிருந்து” (RCEP) விலகி இன்றைக்கு சுமார் ஐந்து ஆண்டுகளுக்குப பிறகு மீண்டும் சேர்வதை தீவிரமாக பரிசீலித்து வருகிறது.
“உலகளாவிய வழங்கல் சங்கிலித் தொடர்கள் மாற்றமடைந்து வரும் நிலையில், நாடுகளுக்கிடையேயான வரி போர்கள் அதிகரித்து வருகின்றன. இதனால், இந்தியா தனது ஏற்றுமதிக்கான புதிய சந்தைகளைத் தேட வேண்டிய தேவை அவசியமாகிறது. இதை கருத்தில் கொண்டு, RCEP-இல் மீண்டும் இணைவதினால் ஏற்படும் செலவுகள் மற்றும் பலன்களை பற்றி உள்நாட்டிலேயே விரிவாக ஆய்வு செய்யத் தொடங்கியுள்ளது
“அமெரிக்காவுடன் ஏற்பட்ட கெடுபிடியான பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, அண்டை நாடுகளுடனான வர்த்தக உறவுகளை வலுப்படுத்தும் விரிவான திட்டத்தின் ஒரு பகுதியாகவே இதனை பரிசீலித்து வருகிறது.
சமீபத்தில், சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி மற்றும் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் சந்தித்ததைத் தொடர்ந்து, அரிய நிலக்கனிம காந்தங்கள், உரங்கள், சுரங்கத் துளையிடும் இயந்திரங்கள் உள்ளிட்ட சில முக்கிய பொருட்களுக்கு விதிக்கப்பட்டிருந்த ஏற்றுமதி தடைகளை இந்தியாவிற்கு நீக்கப்படுவதாக சீனா அறிவித்துள்ளது. அமெரிக்காவின் அதிக வரிகளை மீறியும், இந்தியா–சீனா வர்த்தக உறவுகள் முன்னேற்றம் காண்கின்றன என்பதை இது காட்டுகிறது.
மேலும், சில முக்கிய துறைகளில் சீன முதலீடுகளுக்கான கட்டுப்பாடுகளை தளர்த்தும் முயற்சியிலும் இந்தியா ஈடுபட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி, சீனாவில் நடைபெறவுள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்கு முன், சீனாவுடனான உறவை மேம்படுத்தும் முன்னெடுப்பாக இதை கருதுகின்றனர் .
வெளியுறவு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் கட்சி சார்பற்ற சிந்தனைக் குழுவான “வளரும் நாடுகளுக்கான ஆராய்ச்சி மற்றும் தகவல் அமைப்பிடம்” (RIS), இந்தியா மீண்டும் RCEP-இல் இணையும்போது ஏற்படும் விளைவுகளை ஆய்வு செய்து வழங்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது. “அமெரிக்காவின் உயர்ந்த வரிகள் நீண்ட காலம் நீடிக்கும் நிலையில், இந்த ஆய்வு மிகவும் அவசியமானதாக கருதப்படுகிறது.
இந்தியப் பொருட்களுக்கு அதிக சந்தை வாய்ப்புகளை உறுதிப்படுத்தும் நோக்கில், சீனா மற்றும் ASEAN நாடுகளிடமிருந்து எழுத்துப்பூர்வமாக உறுதிமொழிகளைப் பெற இந்தியா விரும்புகிறது. “ஒப்பந்தத்தை சமநிலைப்படுத்த இதுவே முக்கியமான அடிப்படை,” என கருதப்படுகிறது.
RIS இயக்குநர் சச்சின் சதுர்வேதி கூறுகையில், “இப்போதைய சூழலில், ஒரு சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் எவ்வாறு நன்மை தரும் என்பதை ஆழமாக ஆராய்வதே முக்கியம். இந்தியாவும் சில முக்கிய மாற்றங்களைச் செய்துள்ளது. முன்னர் இரண்டு அல்லது மூன்று நிலையிலான வரி அமைப்புகளையே கணக்கில் வைத்திருந்தோம்; ஆனால் இப்போது இந்திய–சீன வர்த்தக உறவுகள் மேம்படுவதால், தொகுத்து பார்க்க வேண்டிய கட்டாயம் உள்ளது. தெளிவான மதிப்பீட்டு வடிவமைப்பு வழிமுறையை உருவாக்க வேண்டும்,” என்றார்.
பிரதமர் அலுவலகத்தின் செய்தித்தொடர்பாளர், புதுதில்லியிலுள்ள சீன தூதரகம், வர்த்தக அமைச்சகம், வெளியுறவுத் துறை அமைச்சகங்களுக்கு இதுகுறித்து அனுப்பப்பட்ட கேள்விகளுக்கு பத்திரிகை செய்தி வெளிவரும் வரையிலான காலத்திற்குள் பதில் ஏதும் கிடைக்கவில்லை.
RCEP பற்றி: RCEP உலகின் மிகப்பெரிய சுதந்திர வர்த்தக ஒப்பந்தமாகக் கருதப்படுகிறது. இங்கிலாந்தில் அமைந்துள்ள World Economics என்ற தரவு மற்றும் பகுப்பாய்வு நிறுவனம் தெரிவித்தபடி, 2025ஆம் ஆண்டில் உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 32.6% RCEP நாடுகளின் பங்களிப்பாக இருந்தது; இந்நாடுகளின் மக்கள் தொகை 235 கோடியை கடந்துள்ளதது.
இந்த கூட்டணியில் 15 நாடுகள் உள்ளன: அனைத்து ASEAN நாடுகள் — புரூனே, கம்போடியா, இந்தோனேசியா, லாவோஸ், மலேசியா, மியான்மார், பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து, வியட்நாம் — மேலும் சீனா, ஜப்பான், தென் கொரியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகியவையும் உள்ளன. ஜப்பான் மற்றும் சிங்கப்பூர், இந்தியாவிற்கு எப்போதும் மீண்டும் இணையும் வாய்ப்பை திறந்துவைத்துள்ளன.
அமெரிக்க அழுத்தம்:
நிபுணர்கள் கூறுகையில், அமெரிக்காவின் அதிகரித்த வரிகள், கிழக்கு ஆசிய நாடுகளை RCEP-ஐ வலுப்படுத்த வேண்டிய அவசியத்திற்கு தள்ளுகின்றன.
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் சீன ஆய்வுப் பேராசிரியர் ஸ்ரீகாந்த் கொண்டப்பள்ளி கூறுகையில், “டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அமெரிக்கா, பல ASEAN நாடுகளுக்கு 15–20% வரிகள் விதித்துள்ளது; குறிப்பாக லாவோஸுக்கு 40%, கம்போடியாவுக்கு 19% வரை உயர்த்தியுள்ளது. இத்தகைய கடும் வரிகள் ஏற்றுமதிகளைச் நஷ்டமானதாக மாற்றியுள்ளதால், அந்த நாடுகள் RCEP-இல் தங்களது நிலைப்பாட்டை மறுபரிசீலினை செய்து வருகின்றன,” என்றார்.
டிரம்ப், இந்தியாவிற்கும் மிக உயர்ந்த அளவில் 50% வரிகளை விதித்துள்ளார்; இதில் ரஷ்ய எண்ணெய் கொள்முதல் செய்ததற்கான கூடுதல் 25% அபராதமும் அடங்கும். முதல் கட்ட வரிகள் ஆகஸ்ட் 7 முதல் அமலில் வந்துள்ளன; மேலும் 25% ஆகஸ்ட் 27 முதல் அமல்படுத்தப்படும்.
கோவா பல்கலைக்கழகத்தின் சர்வதேச உறவுகள் உதவி பேராசிரியர் டத்தேஷ் பாருலேகர் கூறுகையில், “சீனாவும் இந்தியாவும் இந்தப் பிராந்தியத்தின் மிகப்பெரிய சந்தைகள். RCEP-ஐ பயனுள்ள ஒன்றாக மாற்ற, இருவரும் இணைந்து செயல்படுவது முக்கியம். இணக்கமான ஒத்துழைப்பு இல்லையெனில், இத்தகைய பெரும் வர்த்தக ஒப்பந்தத்தின் முழுப் பயன்கள் பெறப்படாது,” என்றார்.
2019இல் இந்தியா ஏன் விலகியது:
நிபுணர்கள் கூறுகையில், இந்தியா முன்பு எடுத்த பின்வாங்கல் முடிவுக்கான காரணங்கள்:
சீனாவுடனான எதிர்மறை வர்த்தகச் சமநிலை.சீனப் பொருட்கள் பிற நாடுகள் வழியாக இந்திய சந்தையில் பெருமளவில் நுழையும் அபாயம்.நியூசிலாந்தின் பால் மற்றும் பால் சார்ந்த பொருட்கள் இந்தியாவிற்கு வருவதால் சிறு விவசாயிகள் மற்றும் கூட்டுறவுகளுக்கு ஏற்படும் பாதிப்பு.
கொண்டப்பள்ளி மேலும் கூறுகையில், “கம்போடியா, லாவோஸ், வியட்நாம் மற்றும் பிற ASEAN நாடுகளைப் பயன்படுத்தி பழைய வர்த்தக ஒப்பந்தங்களின் கீழ் பொருட்களை இந்தியாவிற்கு சீனா அனுப்பியது; இதனால் பாரபட்சமான வர்த்தக நடைமுறைகள் பின்பற்றப்படுவது குறித்த புகார்கள் எழுந்தன. இந்தியா சீனாவிற்கு திறந்து வைத்திருந்த சுமார் 14,000 வரி விதிக்கப்பட்ட பொருட்கள் வாயிலாக இந்தியாவில் இறக்குமதி செய்வதற்கு பதிலாக, பீஜிங் மறைமுக வழிகளைப் பயன்படுத்தியது; இது இந்தியாவுக்கு முக்கிய சவாலாக இருந்தது,” என்றார்.
தற்போது, மருந்துகள் மற்றும் தகவல் தொழில்நுட்ப சேவைகள் போன்ற இந்தியாவின் முக்கிய ஏற்றுமதி துறைகள் சீன சந்தையில் இன்னும் கடுமையான தடைகளைச் சந்திக்கின்றன; விற்பனை குறைந்து காணப்படுகிறது.
சீனாவுடனான வர்த்தகத்தை மறுபரிசீலனை செய்வது குறித்து:
இந்தியா–சீனா உறவுகள் மேம்படும் சூழலில், இந்திய சர்வதேச பொருளாதார ஆய்வு கவுன்சில் (Icrier) மேற்கொண்ட சமீபத்திய ஆய்வு, சீனாவுடனான இந்திய வர்த்தகக் கொள்கையை மறுபரிசீலிக்க பரிந்துரைக்கிறது. ஆய்வின் படி, 2024–25ம் நிதியாண்டில் இந்தியாவின் வர்த்தக பற்றாக்குறை $99.2 பில்லியன் என்ற சாதனையை எட்டியுள்ளது.
வர்த்தக அமைச்சகத்தின் புள்ளி விவரங்கள் காட்டுகையில், 2022ம் நிதியாண்டில் சீனாவிலிருந்து $94.57 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான பொருட்களை இறக்குமதி செய்த இந்தியா, 2025ம் நிதியாண்டில் $113.45 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது; அதே நேரத்தில், சீனாவிற்கு ஏற்றுமதி $21.26 பில்லியனிலிருந்து $14.25 பில்லியனாகக் குறைந்துள்ளது.
தற்போதைய நிதியாண்டின் ஏப்ரல்–ஜூலை காலத்தில், இந்தியா சீனாவிலிருந்து $40.66 பில்லியன் மதிப்பிலான பொருட்களை இறக்குமதி செய்துள்ளது; இது கடந்த ஆண்டைவிட 13.1% அதிகம். அதே காலத்தில், சீனாவிற்கு ஏற்றுமதி 20% அதிகரித்து $5.76 பில்லியனாக உள்ளது.
கடந்த பத்து ஆண்டுகளில் சீனாவிலிருந்து இந்தியாவிற்கு வந்த அந்நிய நேரடி முதலீடு (FDI) மிகவும் குறைவானது — $886 மில்லியன் மட்டுமே. ஆனால், பேராசிரியர் நிஷா தானேஜா தலைமையிலான Icrier ஆய்வு கூறுகையில், இந்தியா சீனாவிற்கு ஏற்றுமதி செய்யும் திறன் $161 பில்லியன் வரை உள்ளது — இது தற்போதைய அளவை விட சுமார் பத்து மடங்கு அதிகமாகும்.
சுமார் 74% நடுத்தர மற்றும் உயர் தொழில்நுட்ப துறைகளில்தான் இந்த ஏற்றுமதி அதிகரிப்புகான வாய்ப்புள்ளது. தற்போதைய நிலையில், இந்தியா பெரும்பாலும் மூலப்பொருட்கள் மற்றும் இயற்கை வளப் பொருட்களையே ஏற்றுமதி செய்கிறது.
ஆய்வு குறிப்பிடுகையில், அதிக வரிகள் மற்றும் பிற வர்த்தக விதிமுறைகள் காரணமாக, இந்தியப் பொருட்கள் சீன சந்தையில் நுழைய முடியாமல் தடைபடுகின்றன. இதை சரிசெய்ய, இந்தியா–சீனா இணைந்த குழுவை அமைத்து, சோதனை மற்றும் தர நிலைகளை மேம்படுத்தி, உலக வர்த்தக அமைப்பு (WTO) விதிகளுக்கு ஏற்ப செயல்பட பரிந்துரைக்கப்படுகிறது.
மேலும், தொலைபேசி கருவிகள், விமானப் பாகங்கள், ஜெட் இன்ஜின்கள், வாகன பாகங்கள், போட்டோ செமி கன்டெக்டர் சாதனங்கள் போன்ற உயர்தர மற்றும் உயர்மதிப்புள்ள பொருட்களை ஏற்றுமதி செய்வதில் இந்தியா கவனம் செலுத்த வேண்டும் என ஆய்வு வலியுறுத்துகிறது.
இறக்குமதியில், சீனாவிடமிருந்து முழுமையாக பிரிய முடியாது; ஏனெனில் சீனா உலகளாவிய விநியோக சங்கிலிகளில் ஆழமாக பிணைந்துள்ளது. ஆனால், சுமார் $30 பில்லியன் மதிப்புள்ள தரம் குறைந்த, அதிக விலைபெற்ற சீன இறக்குமதிகளை — குறிப்பாக இயந்திரங்கள், மின்னணு சாதனங்கள், இரசாயனங்கள் — குறைத்துக்கொண்டு, வியட்நாம், தென் கொரியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போன்ற மாற்று வழிகளில் இருந்து பெற முடியும் என அறிக்கை பரிந்துரைக்கிறது.
செந்தாரகை (தமிழில்)
மூலக்கட்டுரை: https://www.livemint.com/economy/pushed-by-us-india-may-return-to-the-worlds-largest-trading-bloc-rcep-11755692970534.html
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு