புத்தக மதிப்புரை : பொருள்முதல்வாத பார்வையில் ஆதிசங்கரரின் அத்வைதம்

G.மஞ்சுளா

புத்தக மதிப்புரை : பொருள்முதல்வாத பார்வையில் ஆதிசங்கரரின் அத்வைதம்

நூல்:- பொருள்முதல்வாத பார்வையில் ஆதிசங்கரரின் அத்வைதம்

நூலாசிரியர்:- அ.கா.ஈஸ்வரன்

வெளியீடு:- தமிழ் மரபு அறக்கட்டளை பதிப்பகம்

விலை:- ரூ.180/-

பொதுவில் தத்துவ நூல்களை படித்து புரிந்துக் கொள்வது கடினமான ஒன்றுதான். அதை மற்றவருக்கு புரியும்படி எளிமையாக எடுத்துரைப்பது அதனினும் கடினம். இருப்பினும் தத்துவத்தின் மீதான அளப்பறிய ஈடுபாடு காரணமாக தனது கடின உழைப்பு, சலியாத முயற்சியின் மூலம் இந்திய தத்துவத்தை எளிமையாக விளக்கி எழுதியும் பேசியும் வருபவர் தோழர் அ.கா.ஈஸ்வரன். ‘பொருள்முதல்வாத பார்வையில் ஆதிசங்கரரின் அத்வைதம்’ என்ற தலைப்பில் அவர் எழுதியுள்ள நூல் தற்போது தமிழ் மரபு அறக்கட்டளை பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.

அதென்ன பொருள்முதல்வாத பார்வையில்? என நமக்கு கேள்வி எழலாம். அதேபோல் கடவுள், ஆன்மா, முக்தி என்றெல்லாம் பேசும் கருத்துமுதல்வாத தத்துவங்களை நாம் ஏன் படிக்க வேண்டும் எனவும் நமக்கு தோன்றலாம், ஆத்மா, ஜீவாத்மா என இத்தத்துவங்கள் பேசுவது நமக்கு மடத்தனமாக படலாம், அதனால் இவற்றை புறந்தள்ளி போக நினைக்கலாம். ஆனால்  எந்தவொரு தத்துவத்தையும் அது கூறும் கருத்துகளை மேலோட்டமாக படித்து அதை வைத்து மட்டும் மதிப்பிடமால் அத்தத்துவத்தை ஆழமாக பார்க்க வேண்டிய கடமை நமக்கு உள்ளது என்பதை விளக்கும் விதமாக இந்நூல் எழுதப்பட்டுள்ளது.

கடவுள், ஆத்மா என பேசும் இத்தத்துவங்கள் மக்களின் மனதில் மூடத்தனமான கருத்துகளை மதத்தின் வழியே விதைப்பதால் மதநம்பிக்கை, மதவெறி எதிர்ப்பு மற்றும் கடவுள் மறுப்பு என்ற கண்ணோட்டத்தில் மட்டும் இத்தத்துவங்களை எதிர்க்க வேண்டும் என்பதாக சிலர் நினைக்கின்றனர். கருத்தியல் பிரச்சாரங்கள் செய்து இந்த மூடநம்பிக்கைகளை அகற்ற வேண்டும் எனவும் கூறுகின்றனர். தத்துவங்கள் குறித்த அவர்களின் பார்வை இந்த எல்லையோடு நின்று விடுகிறது.

ஆனால் எந்த ஒரு தத்துவமும் ஏதாவது ஒரு வர்க்கத்தின் நலனை முன்னிறுத்துவதாகவே பொருள்முதல்வாதம் கூறுகிறது. பாட்டாளி வர்க்கத்தின் நலனை முன்னிறுத்தும் தத்துவமாக ‘மார்க்சியம்’ அமைகிறது. அப்படியானால் அத்வைத தத்துவம் எந்த வர்க்கத்தின் நலனை முன்னிறுத்தும் தத்துவமாக அமைகிறது?  அதைத்தான் இந்நூல் விளக்குகிறது.

எல்லா கருத்துமுதல்வாத தத்துவங்களை போல் அத்வைதமும் மனிதன் முக்தி பெற வேண்டும் என போதிக்கிறது. 

முக்தி என்பது என்ன?

முக்தி என்றால் விடுதலை.

எதிலிருந்து விடுதலை?

இந்த மாய உலகில் இருந்து விடுதலை.

மாய உலகில் என்ன சிக்கல்? ஏன் விடுதலை பெற வேண்டும்?

சம்சாரம் என்பது துன்பகரமான தொடர்ச்சி. பிறப்பு, இறப்பு, மீண்டும் பிறப்பு என்ற துன்பமயமான தொடர்ச்சியில் இருந்து விடுதலை பெற வேண்டும்.

விடுதலை பெற என்ன செய்ய வேண்டும்?

இந்த உடலை 'தான்' என நினைக்கும் போக்கில் இருந்து விடுபட்டு ஆத்மாவே தான் என்பதையும் அந்த ஆத்மாவே பரமாத்மா என்பதையும் உணர வேண்டும். இந்த உணர்தலே முக்தி.

ஆத்மா என்பது மனிதனாகப் பிறப்பதற்கு முன்பும் இருந்தது மறைந்த பின்பும் இருக்க போகிறது என்று ஆத்மாவை ஏற்றுக் கொண்ட தத்துவங்கள் கூறுவதாகவும், ஆத்மாவிற்கு அழிவு கிடையாது என்பது அவற்றின் கருத்து என்றும் குறிப்பிடும் நூலாசிரியர் ஆத்மா குறித்து கருத்துமுதல்வாத தத்துவங்கள் இடையே வேறுபாடுகள் நிலவுவதையும் சிறப்பாக எடுத்துரைத்து அத்வைத தத்துவத்தை விளக்கியுள்ளார்.

துவைதம் என்ற தத்துவம் ஜீவாத்மா, பரமாத்மா என்ற இரண்டு இருப்பதாக கூறுகிறது. ஆனால் அத்வைதம் பரமாத்மாவை மட்டுமே ஏற்றுக் கொள்கிறது. இந்த பிரபஞ்சத்தை படைத்தது தான் பரமாத்மா. அது பிரம்மம் என்றும் அழைக்கபடுகிறது. இந்த பிரம்மம் மட்டுமே உண்மையானது. மற்ற அனைத்தும் மாயையானது. ஏனென்றால் பிரம்மம் மட்டுமே நித்தியமானது. அதாவது பிரம்மத்திற்கு தோற்றமோ அழிவோ கிடையாது. ஆனால் மனிதனும் பிரபஞ்சமும் மாறும் பொருள். எனவே இவை அழியும் பொருள். அதனால் மாயையானவை என்கிறது அத்வைதம்.

எனவே நிலையற்ற மாயையான இந்த பொருட்களினால் ஆத்மாவிற்கு கிடைக்கும் ஆனந்தம் நிலையானதல்ல. இதை உணர்ந்து உலகின் மீதுள்ள பற்றை விடவேண்டும். அதற்கு உலகை வெறுக்க வேண்டும். உலகை வெறுக்க ‘நான்’ என்ற நினைப்பை முதலில் விட வேண்டும். ‘நான்’ என்கிற அகங்காரத்தின் பிடியில் இருந்து விடுதலை பெற்றவன் உண்மை உருவமான ஆன்மாவை மீண்டும் அடைகிறான். இவ்வாறு அத்வைத தத்துவம் விளக்கப்படுகிறது. 

ஆத்மாவும் கிடையாது. பரமாத்மாவும் கிடையாது. அவையனைத்தும் சுத்த அபத்தம் என்பதை ஒரு பொருள்முதல்வாதி நன்கறிவார். ‘நான்’ என்ற நிலை மறந்த மனிதனை கோமா நிலையில் உள்ளவர் அல்லது மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பதாக மட்டுமே நாம் கருதமுடியும். ஆனால் சாமான்ய மக்கள் இத்தகைய கருத்துகளால் ஏமாற்றப்படுகின்றனர் என்பதை ஒரு பொருள்முதல்வாதி கடந்து சென்றுவிட முடியாது. கூடாது. இந்த ஏமாற்றுத்தனங்களை அறிவியல்பூர்வமாக நாம் அம்பலப்படுத்த வேண்டும். 

அத்வைத தத்துவம் முக்தி அடைய வேண்டும் என்பதை வலியுறுத்துவதாக தோன்றினாலும் உண்மையில் முக்தி அடைவதில் கவனம் செலுத்துவதைவிட சுயதர்மத்தை பின்பற்ற வைக்க வேண்டும் என்பதையே வலியுறுத்துகிறது. மேலும், முக்தியை அடைவீர்கள் என்ற பெயரில் இத்தத்துவம் மக்களுக்கு கூறும் வழிமுறைகள் அனைத்தும் மக்களை சுரண்டுவதற்கான, அவர்களை இருக்கும் நிலையிலேயே வைத்திருப்பதற்கான சுரண்டும் வர்க்கத்தை பாதுகாப்பதற்கான கருத்துகள்தான் என்பதை தோழர் அ.கா.ஈஸ்வரன் மிகச் சிறப்பாக இந்நூலில் அம்பலப்படுத்தியுள்ளார்.

இந்த உலகில் மீண்டும் மீண்டும் பிறந்து துன்பங்களை அனுபவிக்காமல் இருக்க வேண்டும் என்றால் சுயதர்மத்தை கடைபிடிக்க வேண்டும் என அத்வைத தத்துவம் கூறுகிறது. சுயதர்மம் என்பது என்ன? பிறப்பால் உருவான கடமையை பலன் எதிர்பார்க்காமல் செய்ய வேண்டும். அப்படி செய்தால் மனத்தூய்மை ஏற்படும். அதன் மூலம் மறுபிறப்பு தடுக்கலாம் என்கிறது அத்வைதம்.

கர்மயோகம், ஞானயோகம், சுயதர்மம் என இவைனைத்தும் வலியுறுத்துவது ஏற்றத்தாழ்வான நிலைமையை எதிர்த்து போராடாமல் அவரவர்களுக்கு விதிக்கப்பட்ட பணிகளை அடங்கி ஒடுங்கி செய்ய வேண்டும். இதுதான் அத்வைதத்தின் உள்ளார்ந்த நோக்கம்.  உடலுழைப்பை கீழானதாகவும் மூளை உழைப்பை மேலானதாகவும் கூறி சுரண்டல்முறையை பாதுகாப்பதற்கான ஒரு தத்துவம்தான் அத்வைதம் என்பதை இந்நூல் - அத்வைத நூல்களில் உள்ளவற்றை எடுத்து வைத்தே - சிறப்பாக விளக்கிவிடுகிறது.

மேலும், இயக்கவியல் பொருள்முதல்வாதம் என்ற அத்தியாயத்தில் வாழ்நிலைக்கும் சிந்தனைக்கும் இடையே உள்ள தொடர்பை பொருள்முதல்வாதம் எவ்வாறு விளக்குகிறது என்பதையும் நூலாசிரியர் சிறப்பாக எடுத்துரைத்துள்ளார். மனிதனின் அறிதல் செயல்பாடு புலனுணர்ச்சி, புலனறிவு என்ற இரண்டு நிலைகளில் புறஉலகை எவ்வாறு அறிகிறது என்பதையும் உணர்தல் கட்டத்தில் இருந்து அடுத்த நிலைகளுக்கு அறிவானது எவ்வாறு வளர்ச்சி அடைகிறது என்பதையும், சமூக-பொருளாதார நிலைகளே புறநிலை என்பதையும் விரிவாக விளக்கியுள்ளார்.

உண்மையில் கருத்துமுதல்வாத தத்துவத்தில் மிக அபாயகரமானது அத்வைதம்தான் என தோன்றுகிறது. தனக்கு தேவையானதை ஜீவாத்மா பரமாத்மாவிடம் வேண்டிக் கொள்ளும் வாய்ப்பையாவது மனிதனுக்கு துவைதம் தருகிறது. ஆனால் தத்துவார்த்தரீதியில் ‘அது நீயே’  அதாவது ‘நானே கடவுள்’ எனக் கூறும் அத்வைதம் நடைமுறையில்  சுயதர்மத்தை(சாதிய) பாகுபாட்டின் அடிப்படையிலான சுரண்டலை போதிக்கும் போலித்தனத்தை கொண்டுள்ளது.

மார்க்சியத்திற்கு நேர் எதிரான, சுரண்டலை நீடித்து வைப்பதற்கான கருத்தியல் கொண்ட அத்வைத தத்துவத்தை மார்க்சியத்தோடு இணைக்க வேண்டும் என்று கூட இன்றைக்கு கருத்துகள் சொல்லப்படுகின்றன. அதேபோல் அத்வைதியான விவேகானந்தர் ஒரு புரட்சியாளராக காட்டப்படுவதையும் பார்க்கிறோம். இத்தகையதொரு சூழலில், அத்வைதக் கருத்துகளை முழுமையாக அமல்படுத்த முனையும் ஒரு ஆட்சி அதிகாரத்தில் உள்ள நிலையில், இந்நூல் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தாக உள்ளது.

தமிழகத்தில் அத்வைத கருத்துகளின் தோற்றம், அக்கருத்துக்களின் தாக்கம் குறித்து ஒரு அத்தியாயம் சேர்த்தால் இன்னும் பயனுள்ளதாக இருக்கும் என்ற கோரிக்கையோடு, சிறப்பான நூலை நமக்களித்த தோழர் அ.கா.ஈஸ்வரன் அவர்களுக்கு நன்றி!

- G. மஞ்சுளா

Disclaimer: கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு