எப்போது நிம்மதியா வாழப்போறீங்க நேரு?
ஷானு
லால்குடி பக்கத்தில் கானக்ளியநல்லூர் என்கிற எளிமையான கிராமத்தில் பிறந்த விவசாயி...
அதைத் தாண்டி அரியலூர் மிளகாய் மண்டிக்கு வியாபாரத்துக்கு போனதே பெருசு.
அதன் பின்னர் புள்ளம்பாடி சேர்மன் ஆகி, லால்குடி எம்எல்ஏ ஆகி அமைச்சரும் ஆகி, திருச்சிக்கு இடம்பெயர்ந்து திமுகவின் அசைக்க முடியாத சக்தி ஆயிட்டீங்க.
இன்றைக்கு உங்களுக்கு சொந்தமாக எத்தனை ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம் இருக்கு என்று ஆவணங்களை பார்க்காமல் உங்களால் சொல்ல முடியுமா?
எத்தனை ஆயிரம் கோடி எந்தெந்த நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்டிருக்கு என்று உங்க ஆடிட்டரை கேட்காமல் சொல்ல முடியுமா ?
True Value Home (TVH) உள்ளிட்ட கட்டிடங்கள் பிரம்மாண்டமாய் ஊரெங்கும் வியாபித்து நிற்பது வியாபார திறமையால் மட்டுமா ?
உங்கள் அதிகாரத்தை பயன்படுத்தி உங்களின் தம்பிகள் ரவிச்சந்திரன், மணிவண்ணன் மற்றும் உங்கள் உறவினர்கள் எத்தனை தலைமுறைக்கு சொத்து சேர்த்து விட்டார்கள் ?
ஆனால் நீங்கள் நிம்மதியாக வாழவில்லை என்று என்னால் நிச்சயமாக சொல்ல முடியும்.
என்றைக்காவது உங்களுக்கு தலைவலிக்கிற நேரம் உங்கள் மனைவி மாத்திரை எடுத்துக் கொடுத்திருப்பாரா? என்றைக்காவது "எனக்கு தலை வலிக்குது கொஞ்சம் சுடுதண்ணி போட்டு குடுங்க" என்று சொல்லும்போது உங்கள் மனைவிக்கு அதை செய்து கொடுத்திருப்பீர்களா?
உங்கள் பணத்தை, வசதியை, செல்வாக்கை தாண்டி நீங்கள் பக்கத்தில் இருக்க வேண்டும் என்று அவர்கள் நினைக்கும் போது இருந்திருக்கிறீர்களா ?
ஒரு சாதாரண மாதசம்பளக்காரர் வீட்டில் கூட இந்த அன்னியோன்யம் இருக்குமே...
மகன் மருமகள்
மகள் மருமகன்
ஜோடியாக கிளம்பி வெளியே போவதை பார்த்து ரசித்திருக்கிறீர்களா?
பேரக்குழந்தைகளை தூக்கி வைத்து கொஞ்சுவதற்கு விளையாடுவதற்கு உங்களுக்கு நேரம் இருக்கிறதா ? இதெல்லாம் இருக்கிறது என்று ஏதாவது ஒரு பேட்டியில் நீங்கள் சொன்னாலும் அது உண்மை இல்லை என்று உங்களுக்கும் தெரியும்.
உங்களுக்குப் பிடித்ததை செய்து பிடித்ததை ரசித்து உங்களுக்காக எப்போது வாழப்போகிறீர்கள் ?
மனித வாழ்வு 60, 65 வருடங்கள் இருக்கலாம். உங்களுக்கு அதையும் தாண்டி விட்டது. நீங்கள் கும்பிடுகிற கடவுளின் அருளால், உங்கள் பெற்றோரின் புண்ணியத்தால் நல்ல உடல் நலத்துடனே வாழ்கிறீர்கள்.
அதிகாலை 5 மணிக்கு காரில் கிளம்பி திருநெல்வேலி போய், அன்றே சேலத்துக்கு ஓடி, இரவு திருச்சிக்கு பயணம் செய்யும் அளவுக்கு உங்களுக்கு உடல் நலம் இருக்கிறது.
திருச்சியில் இருக்கும் நாட்களில் காலையிலேயே வயலுக்குப் போய் வந்து கேர் கல்லூரியில் போய் நிர்வாகத்தை கவனித்து விட்டு ஆசியாவிலேயே பெரியதான உங்கள் அரிசி ஆலையில் கணக்கு வழக்கு பார்த்து நீங்கள் ஓடுவதும் உழைப்பதும் யாருக்காக ?
உலகத்தில் நீங்கள் நினைத்தால் உங்களுக்கு கிடைக்காதது எதுவும் இல்லை என்கிற அளவுக்கு பணமும் அதிகாரமும் இருக்கிறது.
ஆனால் நிம்மதி இருக்கிறதா ?
எப்போதுமே "அடுத்தவர் பதவியை பிடித்தாக வேண்டும், அதற்கு என்ன செய்ய வேண்டும், யாரை காலி பண்ண வேண்டும்" என்று சிந்தித்துக் கொண்டிருக்கிறீர்கள்.
உங்கள் இடத்தை காலி செய்துவிட்டு அங்கே வருவதற்கு இன்னொருவர் முயற்சி செய்து கொண்டே இருக்கிறார்.
உங்கள் கையில் இருக்கும் கத்தியால் நீங்கள் ஒருவரை குத்த முயற்சித்துக் கொண்டிருக்கும் போதே உங்கள் முதுகுக்கு பின்னால் பத்து கத்திகள் உங்களை குத்துவதற்கு காத்துக் கொண்டிருக்கின்றன.
நாம் என்ன, 'மிருகங்களால் எப்போதும் தாக்கப்படுவோம்' என்று அஞ்சி வாழும் காட்டுமிராண்டி காலத்தில் வாழ்கிறோமா,
நாம் நாகரிகம் அடைந்த சமூகம் இல்லையா ?
நாலரை வருடங்களுக்கு முன் உங்களிடம் கும்பிடு போட்டு எம்எல்ஏ சீட்டு வாங்கியவர்கள்,
உங்கள் கட்சியின் மாவட்டச் செயலாளர் பொறுப்புக்கு வந்தவர்கள், எத்தனை பேர் உங்களுக்கு விசுவாசமாக இருக்கிறார்கள் ?
அவர்களே உங்களுக்கு எதிரிகளாக மாறிப் போனதற்கு என்ன காரணம் ?
எத்தனை பேர் நேரடியாகவும் மறைமுகமாகவும் உங்களுக்கு எதிராக வேலை செய்து கொண்டிருக்கிறார்கள்.
சுமார் 25 வருடங்களுக்கு முன்னால் திருச்சி தில்லை நகர் 5வது கிராசில் ஒரு பழைய வீட்டின் மாடியில் பெரிய ஹால் இருந்தது. படியேறி எட்டிப் பார்த்தால் பெ ர் ர் ர் ரி ய ஹாலின் எதிர்ப்புற சுவரோரமாய் ஒற்றை டியூப்லைட் வெளிச்சத்தில், ஒற்றை ஃபேனுக்கு கீழே நீங்கள் உட்கார்ந்து ஒரு பெரிய மேஜையில் அன்றைய தினசரிகளை விரித்து வைத்து படித்துக் கொண்டிருந்த காட்சி என் நினைவுக்கு வருகிறது. படியில் ஏறி எட்டிப் பார்த்தால் சத்தம் கேட்டு உங்கள் வெள்ளெழுத்து கண்ணாடிக்கு மேலே கண்களை உயர்த்தி "யாரு ?" என்பீர்கள்...
பெயரை சொன்னதும் "வாங்க நிருபரே..." என்று மரியாதையாக அழைத்து அமர வைத்து பேசுவீர்கள். அன்று உங்களைச் சுற்றி 10 பேர் நிற்கவில்லை. உங்கள் பின்னால் கத்தியுடன் 10 பேர் அலையவில்லை.
அந்த நிம்மதியும் மரியாதையும் அகன்றுபோய், யாரை வேண்டுமானாலும் எவ்வளவு கேவலமான வார்த்தைகளை வேண்டுமானாலும் பேசலாம் என்று அந்த கிராமத்து விவசாயி நேரு எப்போது மாறினார் ?
உங்கள் கட்சித் தலைவர்களையும்
உங்களிடம் அதிகாரிகளாக பணிபுரிந்தவர்களையும்
உங்கள் கட்சியின் தொண்டர்களையும்
ஆண்களையும் பெண்களையும்
நீங்கள் பேசிய கொச்சையான வார்த்தைகள் காற்றில் கலந்து உங்களை சுற்றி கேட்டுக் கொண்டே இருக்கவில்லையா ? எதற்கான போராட்டம் இது ?
தமிழகத்தின் விரல் விட்டு எண்ணக்கூடிய பணக்காரர்கள் வரிசையில் தானே இருக்கிறீர்கள் ?
இன்னும் எதை நோக்கி இந்த ஓட்டம் ?
இன்னும் ஓரிரு வருடங்களில் மருத்துவர் "இரண்டு இட்லிக்கு மேல் சாப்பிடக்கூடாது, மாடிப்படி ஏறக்கூடாது, வேகமாக நடக்கக்கூடாது, சத்தமாக பேசக்கூடாது" என்றெல்லாம் சொல்லப் போகிறார்.
நீங்கள் சேர்த்து வைத்திருக்கும் பணத்தை ஒரு தடவை எண்ணிப் பார்க்க உங்களுக்கு வாய்ப்பு கிடைக்குமா ?
நீங்கள் வாங்கி போட்டிருக்கும் மொத்த நிலத்தையும் ஒரு தடவை நடந்து சுற்றிப் பார்த்துவிட்டு வர முடியுமா என்பது கேள்விக்குறிய விஷயம் தானே ...
இதற்கு பதிலாக நீங்கள் அந்த மரியாதை மிகுந்த விவசாயியாகவே இருந்திருக்கலாம்...
நீங்கள் பெற்ற பிள்ளைகள் எல்லோரும் திறமையாக படித்து நன்றாகத்தானே இருக்கிறார்கள் ?
தங்களுக்கு தேவையானதை அவர்கள் சம்பாதித்துக் கொள்ள மாட்டார்களா ?
அல்லது இருப்பதை உருப்படியாக கட்டிக் காக்கும் திறமையற்றவர்களாக போய் விட்டார்களா?
ஏன் இந்த ஓட்டம் ?
"அரசியலுக்கு வந்து மக்களுக்கு நன்மை செய்ய போகிறேன்" என்று மட்டும் சொல்லாதீர்கள். உங்கள் தெருமுனையில் இளநீர் விற்றுக் கொண்டிருக்கும் அந்தப் பெண் கூட அதை நம்பப் போவதில்லை.
உங்களால் வளர்க்கப்பட்டு உங்களால் அரசியலுக்கு கொண்டுவரப்பட்ட நெப்போலியனை, உங்கள் ரத்த சொந்தத்தை எப்படி விரட்டி அடித்தீர்கள் ?
எந்த அரசியல்வாதிக்கும் நேராத நேரக்கூடாத துன்பமாக திருச்சியில் அதிகாரிகளையும் அரசியல்வாதிகளையும் கட்டி அரசாங்கமே நடத்திய உங்கள் தம்பியின் மரணம் உங்களுக்கு சொல்லித் தந்த பாடம்தான் என்ன ?
அவரை சிதையில் ஏற்றி எரித்தபோது ஒரு சுடுகாட்டு வைராக்கியம் உங்களுக்கு ஏற்படவில்லையா ?
ஆட்சி மாற்றம் நடந்து உங்கள் பிள்ளைகளின் திருமண நிச்சயதார்த்தத்திற்கு கூட ஜெயிலில் இருந்து பரோலில் வந்த உங்களுக்கு புத்தி வரவில்லை என்றால் இந்த தமிழகத்தில் எந்த அரசியல்வாதிக்கும் புத்தி வரப்போவதில்லை என்றுதான் அர்த்தம். அதற்குப் பிறகும் இப்படி அசிங்கப்பட்டு பணம் சம்பாதிக்க வேண்டிய ஏழ்மை நிலையிலா இருக்கிறீர்கள் ?
காலத்துக்கும் யாராலும் உறுதியாக கண்டுபிடித்து சொல்ல முடியாத பல தகிடுதத்தங்களை செய்துதான் பணம் சேர்த்தீர்கள் என்றாலும் இதுவரை போடப்பட்ட எல்லா வழக்குகளையும் உங்கள் பணத்தாலும் செல்வாக்காலும் அரசியலாலும் உடைத்து வெளியே வந்தீர்களே... ?
இப்போது இப்படி மாட்டிக் கொண்டு முழிக்க வேண்டுமா ?
அல்லது ED சொல்லி இருக்கும் குற்றச்சாட்டு எல்லாம் முழுக்க முழுக்க பொய் என்று உங்கள் மனசாட்சி சொல்லுமா ?
"இந்த பணி நியமனங்கள் எல்லாமே பணத்தை மையமாக வைத்து தான் நடந்தது என்பது பொய்" என்று சொல்லப் போகிறீர்களா ?
அப்படி நீங்கள் சொன்னாலும் அது நிற்க போவதில்லை. சிக்க வேண்டிய ஆதாரங்கள் தெளிவாக சிக்கி இருக்கின்றன.
நீங்கள் ஜெயிலுக்குப்போவதையும் போகாமல் இருக்கப்போவதையும் அடுத்து வரக்கூடிய அரசியல் மாற்றங்கள்தான் முடிவு செய்யப் போகின்றன.
ஏற்கனவே உங்கள் வீட்டுக்கு மத்திய அரசின் விசாரணை அமைப்புகள் சோதனைக்கு வந்த போதும் இப்போது மீண்டும் உங்கள் மீது மத்திய அரசின் பிடி இறுகும்போதும் உங்களை தினமும் பார்த்து வணக்கம் வைக்கும் எத்தனை கட்சிக்காரர்கள் சந்தோஷப்படுகிறார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா?
"கட்சிக்காரனா சம்பாதிச்சான்...
சொந்தக்காரன் தானே சம்பாதிச்சான்.
இப்போ அனுபவிக்கட்டும்" என்று என் காதுபட எத்தனை பேர் பேசுகிறார்கள் தெரியுமா ?
உயரமாக வளரும் மரங்கள் மண்ணுக்கு கீழே தன்னுடைய வேரையும் அழுத்தமாக படர வைக்காமல் போனால் அந்த உயரமே ஆபத்தாகி அந்த மரத்தை மொத்தமாக சாய்த்து விடும் என்பது விவசாயியான உங்களுக்கு தெரியாதா ?
திமுகவில் உங்களுக்கு சீனியரான செல்வராஜை எப்படி ஓரங்கட்டினீர்கள்?
திருச்சி சிவா மனைவி சாவுக்கு கூட கட்சிக்காரர்கள் போக பயந்தது எதனால் ?
அன்பில் தர்மலிங்கத்தால் வளர்ந்து
அவரையும் தாண்டி வளர்ந்து
அவர் மகனுடனும் போட்டி போட்டு வளர்ந்து
இன்று அவர் பேரன் மகேஷ் பொய்யாமொழியுடனும் போட்டி போட்டு கொண்டே இருக்கிறீர்களே ...
இவர்கள் எல்லாம் உங்களை அழித்து விடுவார்கள் என்று அச்சப்படுகிறீர்களா ?
அல்லது உங்களுக்கு மட்டும் எல்லாம் சாஸ்வதம் என்று நினைக்கிறீர்களா ?
மத்தியில் ஆள்கிற பாஜக அரசு உங்களைப் போன்ற மாற்றுக் கட்சி அரசியல்வாதிகளை கண்கொத்திப் பாம்பாக கவனித்துக் கொண்டிருக்கிறது, அனைத்து எலக்ட்ரானிக் ஆதாரங்களையும் சேகரித்துக் கொண்டிருக்கிறது, உங்களின் அனைத்து நடவடிக்கைகளும் அனைத்து பணபரிமாற்றங்களும் அவர்களின் விரல் நுனியில் இருக்கிறது, நீங்கள் இதில் சிக்கிக் கொள்ள போகிறீர்கள் என்பதை உணர முடியாத வண்ணம் எது உங்கள் கண்களை மறைத்தது ?
உங்கள் பணத்தாசை தானே... ?
இதில் இன்னொரு மிகப்பெரிய கொடுமையை மறந்து விட்டீர்கள். உண்மையிலேயே தகுதி இருந்தும் படித்து தேர்வு எழுதி, அரசாங்க வேலை கிடைக்காமல் போன அப்பாவிகளின் சாபம், பாவம் உங்களை சும்மா விடுமா ?
சனாதனமறுப்பு, கடவுள்மறுப்பு கொள்கையை கொண்ட கட்சியின் முக்கிய பொறுப்பில் முதன்மைச் செயலாளராக இருந்தாலும் கூட, தினந்தோறும் காலையில் உங்கள் அலுவலகத்தில் சாமி கும்பிட்டு விட்டு வந்து நேராக மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையாரை நோக்கி சூட தட்டை காட்டி தீபமேற்றி சாமி கும்பிடும் பக்தி உள்ளவர்தானே நீங்கள்... உங்களை காப்பாற்ற வேண்டும் என்று நீங்கள் வேண்டிக் கொள்ளும் அந்த இறைவன், நீங்கள் செய்யும் பாவங்களுக்கு தண்டனை தரமாட்டார் என்று முடிவு செய்து விட்டீர்களா ?
அல்லது அவரது உண்டியலிலும் பணக்கட்டுகளை போட்டு, ஊரில் எந்த கோயில் கும்பாபிஷேகம் என்று யார் வந்து நின்றாலும் லட்சக்கணக்கில் பணத்தை அள்ளிக் கொடுத்து இறைவனையும் விலைக்கு வாங்கி விட முடிவு செய்து விட்டீர்களா ?
இப்படிக்கு...
உங்களிடம் எந்த பள்ளி, கல்லூரி சீட்டுக்கோ
பணி நியமனத்துக்கோ
யாருடைய இடமாற்றத்திற்கோ
எந்த கண்டக்டர், டிரைவர் வேலைக்கோ
எந்த தீபாவளிபண்டிகை, பொங்கல்பண்டிகை இனாம் வாங்கவோ இதுவரை வந்து நிற்காத,
லால்குடி சட்டமன்றத் தேர்தலில் "டீக்கடை பாலனிடம் நீங்கள் தோற்று விடுவீர்கள்" என்று உங்கள் முகத்துக்கு நேராக சொல்லிவிட்டு கிளம்பிய போது நீங்கள் கொடுத்த பணத்தை மறுத்து, உங்களுடன் காபி மட்டும் குடித்துவிட்டு கிளம்பிய, அந்தக் கட்டுரையிலும் அதை நேர்மையாக எழுதிய,
ஷானு ஆகிய நான் உங்களிடம் இதை சொல்ல துணிச்சலும் நேர்மையும் நியாயமும் தேவையும் இருக்கிறது.
குறிப்பு 01 :
இதில் சொல்லப்பட்டிருக்கும் பெயர்கள், சம்பவங்கள், கட்சி பெயர் மட்டும்தான் மாறுமே தவிர, தமிழகத்தின் பெரும்பாலான அரசியல்வாதிகளுக்கு இந்த பதிவு அப்படியே பொருந்தும்.
குறிப்பு 02 :
உங்கள் கவனத்திற்கு வரவோ நீங்கள் படிக்கவோ வாய்ப்பில்லை என்பதை தெரிந்து கொண்டும் (சரியான விஷயங்களை உங்கள் கவனத்திற்கு கொண்டுவர உங்களை சுற்றி யாரும் இல்லை. அப்படி யாரும் உங்களுக்கு பிடிக்காத விஷயத்தை உங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தாலும் அடுத்த நாள் அவர் உங்களுடன் இருக்க முடியாது) அப்படியே படித்தாலும் எனது ஏழு தலைமுறைகளை உங்கள் செந்தமிழால் அர்ச்சனை செய்யப் போகிறீர்கள் என்பது தெரிந்தும் இந்த பதிவை செய்கிறேன்...
ஷானு, செய்தியாளர், திருச்சி.
9842455580.
(குமுதம் ரிப்போர்ட்டர்)
https://www.facebook.com/100077043920731/posts/846106087967514/?rdid=xOCyAQ6eEncEJNZN
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு