புதிய தேசிய கல்விக் கொள்கை: திமுக அரசின் இரட்டைக் கதாபாத்திரம்
ஸ்டாலின் .தி
"தேசிய கல்விக் கொள்கைக்கு எதிராக, எழுத்துப்பூர்வமான எந்தவொரு கருத்தையும் தமிழ்நாடு அரசு சமர்ப்பிக்கவில்லை; இக்கல்வி கொள்கையின் அம்சங்களை தமிழ்நாடரசு புரிந்துகொள்ளத் துவங்கியுள்ளது" என்று மத்திய கல்வித் துறை அமைச்சர் சுபாஷ் சர்க்கார் கூறியிருப்பதாக, செய்திகள் கூறுகின்றன. திமுகவின் வரலாற்றை அறிந்தவர்களுக்கு இதில் அதிர்ச்சியடைய ஒன்றுமில்லை என்பதுதான் உண்மை. சுபாஷ் சர்க்கர் கூறுவதைப் போல, புதிய தேசியக் கல்விக் கொள்கையை இன்றுதான் திமுக அரசு புரிந்துகொண்டது என்று கூற முடியாது. பதவியேற்ற சமயத்திலேயே திமுக அரசு புதிய கல்விக் கொள்கைக்கு சாமரம் வீசிவிட்டது என்பதே உண்மை.
'புதிய தேசிய கல்விக் கொள்கை-2020' என்னும் இந்துமய கல்விக் கொள்கையை ஜனநாயக சக்திகளும், முற்போக்கு கல்வியாளர்களும் தொடர்ந்து எதிர்த்து வருகின்றனர். எதிர்க்கட்சியாக இருந்தபோது திமுகவும் எதிர்த்தது. அதன் மூலம், வாக்குகளை அறுவடையும் செய்துகொண்டது. திமுக ஆட்சிக்கு வந்தவுடன், புதிய தேசியக் கல்விக் கொள்கையை எதிர்த்தவர்கள் பலரும், 'இனி திமுக பார்த்துக்கொள்ளும்' என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டனர். ஆனால், திமுக ஆட்சி ஏறிய பத்தாவது நாளிலேயே ஆதரவாளர்களின் நிம்மதிக் குளத்தில் கல்லைத் தூக்கிப் போட்டார் தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ்.
திமுக கடந்த 2021 மே 7 ஆம் நாளில் ஆட்சிப் பதவியேற்றது. சரியாக பத்தாம் நாளான மே 17-ம் தேதி, அப்போதைய மத்திய கல்வித்துறை அமைச்சரான ரமேஷ் பொக்ரியால் தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் கலந்து கொண்டு, புதிய கல்விக் கொள்கைக்கு எதிரான நிலைபாட்டை முன்வைக்க வேண்டிய திமுக அரசு, கலந்துகொள்ளாமல் தவிர்த்தது. இதுக்குறித்து கூறிய தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சரான அன்பில் மகேஷோ, 'கலந்துகொள்ளாமைதானேத் தவிர, புறக்கணிப்பதல்ல' என்று விளக்கமும் கொடுத்தார். மேலும், புதிய கல்விக் கொள்கையில் திருத்தம் வேண்டும் என்றும் கூறினார். முற்றிலுமாக நீக்கப்பட வேண்டிய கொள்கையில் திருத்தம் வேண்டும் என்று திமுக அமைச்சர் கூறியபோதே திமுகவில் திருத்தத்திற்கு வேலை இல்லை என்று அதன் ஆதரவாளர்கள் புரிந்துகொண்டிருக்க வேண்டும். ஆனாலும் நம்பினார்கள். அந்த நம்பிக்கையில் தீயள்ளிப் போட்டதைப் போல அடுத்ததாக ஒன்றை செய்தது திமுக அரசின் பள்ளிக் கல்வித் துறை.
ஆர்.எஸ்.எஸ். பின்புலம் உடையவரான ராம்ஜி ராகவன் என்பவர் ஒன்றிய மோடி அரசின் கல்விக்குழு உறுப்பினராகவும், பிரதமரின் அறிவியல் ஆணையத்தின் உறுப்பினராகவும் இருந்தவர். இவர நிறுவியதுதான் 'அகஸ்தியா பண்ணாட்டு தொண்டு நிறுவனம்.' கல்விப் பணிகளில் தொண்டு நிறுவனங்களை ஈடுபடுத்த வேண்டும் என்கிற புதிய கல்விக் கொள்கையின் திட்டத்தின்படி, கடந்த அ.தி.மு.க. ஆட்சியில், 12 மாவட்டங்களில் கற்பித்தல் பணிகளை மேற்கொள்ள அனுமதியளிக்கப்பட்டது. இதற்கு அப்போது கடும் எதிர்ப்புகள் கிளம்பின. அப்போது எதிர்க்கட்சியாக இருந்த தி.மு.க-வும் இதை எதிர்க்கத்தான் செய்தது.
ஆனால், அதே தி.மு.க ஆட்சிக்கு வந்தவ பிறகு, முன்பு திமுகவால் எதிர்க்கப்பட்ட அகஸ்தியா தொண்டு நிறுவனத்திற்கு 6-ஆம் வகுப்பு முதல் 9-ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு கணிதம், அறிவியல் பாடங்களை இணையவழியில் பாடம் நடத்த அனுமதி வழங்கியுள்ளதோடு, 18 மாவட்டங்களில் அறிவியல் ஆய்வு மையங்களை அமைக்கவும் அந்நிறுவனத்திற்கு அனுமதியளித்துள்ளது திமுக அரசு. இதுக்குறித்து, 'பள்ளி மாணவர்களின் கற்றல், கற்பித்தல் பணிகள் மற்றும் பாதுகாப்பு பாதிக்காதவாறு அகஸ்தியா அறக்கட்டளைக்குத் தேவையான ஒத்துழைப்பை, மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் வழங்க வேண்டும்.மேலும், அகஸ்தியா நிறுவனத்தின் அறிவியல் சார்ந்த கற்றல் செயல்பாடுகள், அரசின் கல்வித் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்படும்" என்று பள்ளிக் கல்வி ஆணையர் க.நந்தகுமார், மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையும் அனுப்பினார். இதைப்பற்றி கடந்த 26/8/2021 அன்று தமிழக சட்டப்பேரவையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் உறுப்பினர் ஆளூர் ஷநவாஸ் அவர்கள் கேள்வி எழுப்பிய போது, "இந்தத் தொண்டு நிறுவனம் 20 மாநிலங்களில் `corporate social responsibility' என்ற அடிப்படையில் சேவையாற்றுகிறது. இந்த அரசு எந்தவொரு காரணத்துக்காகவும் கொள்கையிலிருந்து விலகாது. எனவே, யாரும் கவலைப்படத் தேவையில்லை. நானும் இரண்டு பள்ளிகளுக்குச் சென்று பார்வையிட்டேன். இந்தத் தொண்டு நிறுவனம் லேப் ஸ்பான்ஸர் செய்திருக்கின்றனர். அந்த விதத்தில்தான் இந்த நிறுவனம் பயன்படுத்தப்படுமே தவிர, அவர்களுடைய கொள்கையை நுழைப்பதற்கு நாங்கள் எந்த விதத்திலும் அனுமதிக்க மாட்டோம்" என்று பதிலளித்தார் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ். ஆர்.எஸ்.எஸ். பின்புலம் உள்ள ஒரு தொண்டு நிறுவனத்திற்கு, அதிலும் எதிர்க்கட்சியாக இருந்த போது திமுகவே எதிர்த்த அந்த அகஸ்தியா நிறுவனத்திற்கு திமுகவின் பள்ளிக் கல்வி அமைச்சரே இப்படி நற்சான்று அளித்து சட்டமன்றத்தில் விளக்கம் அளித்தார். அவர், ஏற்கனவே "புதிய கல்விக் கொள்கையை வைத்து நாங்கள் அரசியல் செய்யவும் விரும்பவில்லை, மத்திய அரசுடன் சண்டைபோடவும் விரும்பவில்லை" என்று பட்டவர்த்தமாக கூறிவிட்டார் என்பதை கவனத்தில் கொண்டால், திமுக அரசு புதிய கல்விக் கொள்கையை ஆதரிப்பதை புரிந்துகொள்ள முடியும். அதன் காரணமாக்த்தான் கடந்த(2022) ஜூலை 1 மற்றும் 2 ஆம் தேதிகளில், தற்போதைய தேசிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தலைமையில் குஜராத்தில் நடைப்பெற்ற கல்வி அமைச்சர்கள் மாநாட்டை திமுக அரசு புறக்கணித்தது. அதாவது, புதியக் கல்விக் கொள்கையைப் பற்றிய வாதங்களை முன்வைப்பதிலிருந்து திமுக அரசு தம்மை விலக்கிக் கொண்டது. அதனால்தான்,
"தேசிய கல்விக் கொள்கைக்கு எதிராக, எழுத்துப்பூர்வமான எந்தவொரு கருத்தையும் தமிழ்நாடு அரசு சமர்ப்பிக்கவில்லை" என்று மத்திய கல்வித் துறை அமைச்சர் சுபாஷ் சர்க்கார் தற்போது கூறியிருக்கிறார்.
கடந்த அதிமுக ஆட்சிகாலத்தில் புதிய கல்விக் கொள்கையையும் அதை ஆதரித்த மாநில அதிமுக அரசையையும் கடுமையாக எதிர்த்த பெரும்பாலான திமுக ஆதரவாளர்கள், தற்போது, திமுக ஆட்சியிலும் அதே நிலை நீடிப்பதை வெறுமனே பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.
- ஸ்டாலின் .தி
(முகநூல் பக்கத்திலிருந்து)
Disclaimer: இந்த பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. விவாதத்திற்காக இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு
கட்டுரையாளரின் முகநூல் பக்கத்திற்கு செல்ல கீழே உள்ள இணைப்பை சொடுக்கவும்