அரசு தன்னுடைய ஆயுதம் தாங்கிய படையை எந்த அளவுக்குப் பாதுகாக்கிறது?

Lingam Deva

அரசு தன்னுடைய ஆயுதம் தாங்கிய படையை எந்த அளவுக்குப் பாதுகாக்கிறது?

- கள்ளச்சந்தையில் சாராயம் விற்பதை கண்டுகொள்ளாமல் இருந்துள்ளார்கள்.

- அதை எதிர்த்து கேள்வி கேட்டவரை கைது செய்துள்ளார்கள்.

- புகார் திரும்பப் பெறப்பட்டும் பொய் வழக்கு போடப்பட்டுள்ளது.

- தம்பி மீது போடப்பட்ட பொய் வழக்கை நீக்கக் கோரி முறையிட்டுக் கெஞ்சிய சகோதரிகளை

சாதிய ரீதியாக மிகவும் கொச்சைப்படுத்திப் பேசியுள்ளார்கள்.

- கண் முன்னே விசம் குடித்த பின்னும் கண்டு கொள்ளாமல் 30 நிமிடங்களுக்கும் மேலாக காவல் நிலைய வாசலிலேயே துடிக்க விட்டுள்ளனர்.

- ஒரே குடும்பத்தில் 24 வயதையொத்த இளைஞர் ஒருவர் பொய் வழக்கால் சிறையில் இருக்கவும், அரசு வேலைக்காக தொடர்ந்து முயற்சித்து வந்த பட்டதாரி அக்கா பல மணி நேரம் துடித்து இறந்து போகவும், திருமண நிச்சயதார்தம் முடிந்து இருக்க வேண்டிய அக்காள் தற்போது தீவிர சிகிச்சையில் இருக்கவும் காரணமானவர்கள் யாராக இருந்தாலும் 'சமூக நீதி' அரசு உடனடியாக அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து இருக்க வேண்டும்.

ஆனால், தாமாக அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

6 நாட்களுக்கும் மேலாக அந்த ஊர் மக்களும், சொந்தங்களும், தோழர்களும் அவர்களது வேலை, வாழ்க்கை என அனைத்தையும் விட்டு நீதிக்காகத் தொடர்ந்து போராடிய பிறகு, அரசு அவர்களுக்கு வழங்கும் உச்சப்பட்ச தண்டனை என்பது.

காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றுவது.

பணியிட மாற்றம்.

வன்கொடுமை வழக்கு.

குறைந்தபட்சம் வன்கொடுமை வழக்கு போடப்பட்ட அவர்களை கைது செய்யுங்கள் என கோரிக்கை வைத்து தொடர்ந்து போராடும் மக்களின் குரல் அதிகார வர்க்கத்தின் கேளாச் செவிகளுக்கு எட்டுவதில்லை.

இது போன்ற அரச பயங்கரவாத செயலால் பொது வெளியில் சாதி ரீதியாக வசைபாடப்பட்டு, உயிருக்கு துடிக்க விடும் அவலம் வட மாநிலங்களில் நடந்து இருந்தால், அதை அலசி ஆராய்ந்து பல்வேறு மேடைகளிலும் நீட்டி முழங்கி இருக்கக் கூடிய முற்போக்கு சந்தர்ப்பவாத அரச அடிவருடிகளுக்கு, இங்கிருக்கும் எளிய மக்களின் பிரச்சனைகள் தெரிவதில்லை.

மக்களுக்காக பேசுகிறோம் என்கிறவர்கள், அரசுக்கு ஆதரவாக மக்களின் மரணத்தில் அமைதி காப்பார்கள் எனில், அவர்கள் சந்தேகத்துக்கு இடம் இல்லாமல் சந்தர்ப்பவாதிகள் தான். 

6 நாட்கள் மக்கள் போராடிய பின்னர், சில ML இயக்கங்கள் நேரில் சந்திக்கிறார்கள். MLA சந்திக்கிறார், MP சந்திக்கிறார். ஆனால், தீர்வு இன்னும் எட்டப்படாத நிலையில் பிரதான கம்யூனிச கட்சிகளும், திராவிட இயக்கங்களும்  இது குறித்து இன்னும் ஒரு அறிக்கை கூட விட்டதாகத் தெரியவில்லை. 

விஜய் என்ன பேசுகிறார், எடப்பாடி என்ன பேசுகிறார் என ஒவ்வொரு நொடியும் கூர்ந்து கவனித்து எதிர்வினை ஆற்றும் அன்பர்களே, மக்கள் என்ன சொல்கிறார்கள் என்றும் கேளுங்கள். இந்த அரசு அவர்களை என்னவாக நடத்துகிறது என்றும் பாருங்கள். வதைக்கப்பட்டு வெளிப்படும் ஓலங்கள் காற்றில் நிறைந்து கனக்கிறது. காதுகளைத் திறந்து வையுங்கள்.

நன்றி வணக்கம் !

சம்பந்தப்பட்ட காவலர்கள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும். 

பாதிக்கப்பட்ட குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை உறுதி செய்யப்பட வேண்டும். 

இனி அரச துறையால் பாதிக்கப்படுபவர்கள் அணுகும் வகையில் தனியாக ஒரு autonomous body உருவாக்கப்பட வேண்டும்.

- Lingam Deva

https://www.facebook.com/story.php?story_fbid=pfbid0f8HbAsgLc97YQTr7SWdbqnYS6f2yncARe6Jf4dqAsabmkNdeM9ybk5oSaCE4m9dPl&id=100002769735269&sfnsn=wiwspwa&mibextid=6aamW6&_rdr

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு