இந்திய அரசியல் பொருளாதாரத்தில் ஆர்வமுடையவர்களுக்கு மட்டும் - தினமணி கட்டுரைபற்றி!

தெய்வசுந்தரம் நயினார்

இந்திய அரசியல் பொருளாதாரத்தில் ஆர்வமுடையவர்களுக்கு மட்டும் - தினமணி கட்டுரைபற்றி!

சில நாள்களுக்குமுன் . . .  ஆகஸ்டு 26 ஆம் தேதி ''தினமணி'' நாளிதழில் தலையங்கப் பக்கத்தில் முனைவர் கோ. விசுவநாதன் அவர்கள் (VIT University வேந்தர், முன்னாள் எம் பி)  ''பொருளாதார ஆய்வு - எச்சரிக்கை மணி'' என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அதில் குறிப்பிடப்பட்டுள்ள சில குறிப்புக்கள்(மட்டும்) நாம் கவனத்தில் கொள்ளவேண்டியவை என்ற நோக்கில் இப்பதிவை இடுகிறேன். 

நடுவண் அரசு இந்தாண்டுக்கான நிதி அறிக்கையைப் பாராளுமன்றத்தில் முன்வைப்பதற்குமுன்  . . .  ''பொருளாதார ஆய்வறிக்கையை'' நிதியமைச்சர் தாக்கல் செய்தார். அதனை அடிப்படையாகக்கொண்டு கட்டுரை ஆசிரியர் மேற்குறிப்பிட்ட கட்டுரையை எழுதியுள்ளார். 

1) நம் நாட்டில் 85 சதவீதத்துக்கு அதிகமான விளை நிலங்கள் 2 ஹெக்டேர் அளவிலோ அதற்குக் குறைவாகவோ இருக்கின்றன.

2) நாட்டில் வேலை வாய்ப்பில் 45 % விவசாயம் சார்ந்ததாக இருக்கிறது.

3) வேலைவாய்ப்பில் சரிபாதியை வழங்கக்கூடிய விவசாயத்தில் 85% பேர் சிறு விவசாயிகளாக இருக்கின்றார்கள்.

4) அவர்கள் விவசாயத்துக்குத் தேவையான ஆட்கள் கிடைக்காத நிலையில் இயந்திரங்களைப் பயன்படுத்தும்போது அந்த விவசாயம் லாபகரமாக இல்லை.

5) 2000 முதல் 2010 வரை அதாவது 10 ஆண்டுகள் இந்தியாவில் 16 ஆயிரம் சதுர கி.மீ. விவசாய நிலம் விவசாயப் பயன்பாட்டுக்கு இல்லாமல் போனது. 

6) அதே சமயம் 26,000 சதுர கி.மீ. விவசாயநிலம்  நகரமைப்புப் பயன்பாட்டுக்கு மாற்றப்பட்டது. 

7) 2015 முதல் 2019 வரை 3 கோடி ஹெக்டேர் நிலங்கள் தரிசு நிலங்களாக மாறிய சோக வரலாறு இங்குதான் நடந்திருக்கிறது. 

8 ) நம்முடைய பொருளாதாரம் மேம்பட இரண்டு வழிகள் உள்ளன. முதல் வழி விவசாயத்தை நாம் ஊக்கப்படுத்தவேண்டும். இரண்டாவது வழி தொழில்வளர்ச்சியில் கூடுதல் கவனம் தேவை. இதற்கு நாம் ஏற்றுமதியை அதிகரிக்கவேண்டும். கணிசமான அளவு இறக்குமதியைக் குறைக்கவேண்டும். இறக்குமதிக்கான அந்நிய செலவாணி மற்றும் கடன் இரண்டுமே நமக்குப் பொருளாதாரத்துக்கான முட்டுக்கட்டைகள்தான். 

மேற்குறிப்பிட்ட குறிப்புக்களைப் பார்க்கும்போது . . .  இந்தியப் பொருளாதார வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை . . .  கிராமப்புறங்களில் இன்று நீடிக்கிற சிறு விவசாயிகளை அடிப்படையாகக்கொண்ட  விவசாயமும், அதன்மேல்  மேலிருந்து திணிக்கப்படுகிற இயந்திரங்களால் ஏற்படுகிற நெருக்கடியும்தான்  என்று ஆசிரியர் எண்ணுவதாகக் கொள்ளலாம். மேலும் பணக்கார விவசாயிகளின் வளர்ச்சிதான் இந்த நெருக்கடியைத் தீர்க்கும் என்று அவர் கருதுவதாகக் கொள்ளலாம். 

மேலும் விவசாய நிலங்கள் பல காரணங்களின் அடிப்படையில் விவசாயத்திற்குப் பயன்படாத நிலங்களாக மாற்றப்பட்டுள்ளது என்று கூறுகிறார். நகரமைப்பு வளர்ச்சித் திட்டங்கள் என்ற பெயரில் விவசாய நிலங்கள் விவசாயத்திற்குப் பயன்படாமல் ஆகிக்கொண்டிருக்கிறது என்று தனது கவலையை வெளிப்படுத்துகிறார். 

அயல் நாடுகளை - ஏகாதிபத்திய நாடுகளை - சார்ந்து இருப்பதால்தான் இறக்குமதி அதிகரித்துள்ளது. ஏற்றுமதி குறைந்துள்ளது என்று கூறுகிறார். இதற்கு மாற்றாக அவர் கூறுகிற கருத்து  . . .  எடுத்துக்காட்டாக, சீனப் பொருள்களை இறக்குமதி செய்வதற்குப் பதிலாக சீனத் தொழிலாளிகளை இந்தியாவுக்கு ''இறக்குமதி'' செய்து, அவர்களுடைய தொழில்நுட்ப அறிவைப் பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என்று கூறுகிறார். அவருடைய இந்தக் கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. 

ஆனால் அவருடைய குரல் . . .  கவலை . . .  கிராமப்புறங்களில் விவசாய உற்பத்திமுறை பணக்கார விவசாய உற்பத்திமுறையாக மாறவேண்டும் என்பதாகும். அதற்குத் தடைகளாக இருப்பது எவை என்ற ஆய்வுக்கு அவர் செல்லவில்லை. அதுபோன்று, ஏகாதிபத்திய நாடுகளின் சுரண்டலை நேரடியாக ஏற்றுக்கொள்ளாமல், அவர்களது தொழில்நுட்பங்களைச் சார்ந்த ஆலை உற்பத்தி அமையவேண்டும் என்று கருதுகிறார். 

மொத்தத்தில் அவருடைய ''கருத்து''  . . .  இந்தியாவின் விவசாய உற்பத்திமுறை முழுமையாக மாற்றி அமைக்கப்படவேண்டும்.  பழைய நிலவுடைமை உற்பத்திமுறை மாற்றப்பட்டு, முதலாளித்துவ விவசாய உற்பத்திமுறை உருவாக்கப்படவேண்டும். தொழில் வளர்ச்சிக்காகவும், நகரமைப்பு வளர்ச்சி போன்றவற்றிற்காகவும் விவசாய நிலங்களை ''பலி ஆடுகளாக'' ஆக்கக்கூடாது.

அதுபோன்று இங்குள்ள தொழில் அதிபர்கள் ''ஏகாதிபத்தியத் தொழில்நுட்பங்களை'' இறக்குமதி செய்து, தொழில் உற்பத்தியை வளர்க்கவேண்டும் என்று கூறுகிறார். அதற்கு ஒரு எடுத்துக்காட்டாக, ''சீனர்களின் பொருள்களை இறக்குமதி செய்வதற்குப பதிலாக, சீனத் தொழிலாளிகளேயே இறக்குமதி செய்யவேண்டும் '' என்று கூறுகிறார்.   

 மொத்தத்தில் இக்கட்டுரை இன்றைய அரைநிலவுடைமை உற்பத்திமுறை முழுமையாக அழிக்கப்படவேண்டும் என்ற குரலைப் பிரதிபலிக்கிறது.  அப்போதுதான் விவசாய உற்பத்தி வளர்ச்சியடையும். நவீன இயந்திரங்கள் முழுமையாகப் பயன்படுத்தவேண்டும். இதற்குத் தற்போதைய தடை . . .  சிறு விவசாயிகளின் விவசாய உற்பத்திமுறையே ஆகும். 

அதுபோன்று, தொழில் உற்பத்தியில் நேரடியான தேசிய முதலாளித்துவம் தற்போதைய ஏகாதிபத்தியச் சூழலில் நடைமுறைக்கு உதவாது; மாறாக, ஏகாதிபத்தியத் தொழில்நுட்பத்தைச் சார்ந்த ஒரு முதலாளித்துவ வளர்ச்சி - ''தரகு முதலாளித்துவ வளர்ச்சி - வளர வேண்டும் என்பதே அடிநாதமாகத் தெரிகிறது. தற்போது நடுவண் அரசும் மாநில அரசுகளும் போட்டி போட்டுக்கொண்டு, இந்தியாவில் ஏகாதிபத்திய நாடுகளின்  ''முதலீடுகளை'' சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்றுக்கொண்டிருக்கின்றன என்பதை இங்குக் கவனத்தில் கொள்ளவேண்டும். 

இக்கட்டுரையில் நான் பார்ப்பது . . .  இந்தியப் பொருளாதாரத்தின் இன்றைய நெருக்கடிகளை மறைமுகமாக, அதேவேளையில் தெளிவாக  வெளிப்படுத்துகின்றது. அது உண்மையானது. ஆனால் அதற்கு அவர் முன்வைக்கிற மாற்று வழிமுறைகள் அவரது ''அரசியல் பொருளாதாரக் கண்ணோட்டத்தின்'' அடிப்படையில் அமைந்துள்ளன என்பதில் ஐயம் இல்லை. ஒவ்வொரு சொல்லுக்கும் பின்னால் ஒரு வர்க்கம் ஒளிந்துகொண்டிருக்கும் என்பதை இங்கு மனதில் கொள்ளவேண்டும். 

சரியான மாற்றுவழி . . .  கிராமப்புறங்களில் விவசாய உற்பத்திமுறை மாற்றி அமைக்கப்படவேண்டும்; நவீன உற்பத்திமுறை கொண்டுவரப்படவேண்டும். அதேவேளையில் அதனால் வேலை வாய்ப்புகளை இழக்கிற மக்களுக்கு நகர்ப்புறத் தொழில் வளர்ச்சி வேலை வாய்ப்பு அளிக்கவேண்டும்.  இந்த நகர்புறத் தொழில்வளர்ச்சி ஏகாதிபத்திய நாடுகளைச் சார்ந்த தொழில்வளர்ச்சியாக அமையாமல் உள்நாட்டு முதலீட்டாலும் உள்நாட்டுத் தொழில்நுட்பத்தாலும் வளர்கின்ற ஒன்றாக இருக்கவேண்டும். 

உள்நாட்டுத் தொழில்முதலீட்டின் வளர்ச்சி . . .  இந்திய விவசாயத்தின் உற்பத்தி வளர்ச்சியைச் சார்ந்த ஒன்று. மாறாக, விவசாய உற்பத்தி பாதிக்கப்பட , பாதிக்கப்பட இந்தியத் தொழில் வளர்ச்சி அந்நிய முதலீட்டைச் சார்ந்த - தரகு முதலாளித்துவமாவே- மேலும் மேலும் வளரும். 

இக்கட்டுரை எனக்கு ஆர்வத்தை அளித்தற்கு ஒரு காரணம் . . .  இதுபற்றி இங்குள்ள அரசியல் கட்சிகள் அதுபற்றிக் கவலைப்படாமல் . . .  மேற்குறிப்பிட்ட உண்மையான பொருளாதார நெருக்கடிகளை மக்கள் கவனத்திற்குக் கொண்டுசெல்லாமல் . . .  போலி வாக்குறுதிகள், இலவசங்களை முன்னிலைப்படுத்தி . . .  அரசியல் நடத்திக்கொண்டிருக்கிற ஒரு நேரத்தில் . . .  உண்மையான பொருளாதார நெருக்கடிகளைக் கோடிட்டுக் காட்டுவதாலே ஆகும். ஆனால் இந்தக் கட்டுரையை ''இன்றைய அரசியல் தலைவர்கள்'' எத்தனை பேர்கள் படித்திருப்பார்கள்?

- தெய்வசுந்தரம் நயினார்

https://m.facebook.com/story.php?story_fbid=pfbid0276AnzfqHU6NjSFt2vanKdyM5M6iyojcakucMsejuaunjz457Udd7ekt1vVbkCedjl&id=100004424580477&sfnsn=wiwspwa&mibextid=6aamW6

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு