திமுக அரசின் தொழிலாளர் விரோத சட்டத் திருத்தத்தை கண்டித்து அரசு ஊழியர்கள் சங்கம் அறிக்கை

சேரன் வாஞ்சிநாதன்

திமுக அரசின் தொழிலாளர் விரோத சட்டத் திருத்தத்தை கண்டித்து அரசு ஊழியர்கள் சங்கம் அறிக்கை

பத்திரிகை செய்தி

தொழிலாளர்களின் போராடிப் பெற்ற உரிமையைப் பறிக்கும் கருப்புச் சட்டத்தை வாபஸ் பெறுக! தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் கண்டனம்!

2020ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் தொழிலாளர் நலச் சட்டங்கள் 23ஐ ஒருங்கிணைத்து 4 சட்டங்களாக ஒன்றிய அரசு பாராளுமன்றத்தில் சட்டம் இயற்றியபோது திராவிட முன்னேற்றக் கழகம் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து சட்டத்தை நிறைவேற்றுவதற்கு எதிராக வாக்கு அளித்தது.

ஆனால் இன்று தமிழக சட்டமன்றத்தில் ஒன்றிய அரசை பின்பற்றி, தமிழக தொழிலாளர்கள் இனி 12 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்று தொழிலாளர்களுக்கு எதிரான கருப்புச் சட்டத்தை தமிழக சட்டமன்றம் இயற்றி உள்ளது.

உலகத் தொழிலாளர்கள் கடுமையாக போராடி பல உயிர்களை பலி கொடுத்து பெற்ற உரிமையான 8 மணி நேர வேலை என்ற உரிமையை திராவிட முன்னேற்றக் கழக அரசு பறித்து சட்டம் நிறைவேற்றி உள்ளதை தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் கண்டிக்கிறது.

தமிழகத்தில் உழைப்பாளி மக்கள் தங்கள் வாழ்வில் ஒரு விடியல் வரும் என்ற நம்பிக்கையுடன் திராவிட முன்னேற்றக் கழகத்தை அரியணையில் அமர வைத்துள்ளனர். உழைப்பாளி மக்களின் நம்பிக்கையை சிதைக்கும் வண்ணம் முதலாளிகளுக்கு ஆதரவான இந்த சட்டத்திற்கு "நெகிழ்வு தன்மை" என்ற புதிய வார்த்தையை கண்டுபிடித்து இருக்கும் திராவிட முன்னேற்றக் கழக அரசு உடனடியாக இச்சட்டத்தை வாபஸ் பெற வேண்டும் என தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் மாநில தலைவர் சு.தமிழ்ச்செல்வி பொதுச்செயலாளர் ஜெ.லெட்சுமிநாராயணன் ஆகிய இருவரும் இணைந்து வெளியிடும் கூட்டறிக்கை

 - சேரன் வாஞ்சிநாதன் 

(முகநூலில்) 

Disclaimer: இந்த பகுதி சங்கத்தின் பார்வையை வெளிப்படுத்துகிறது. விவாதத்திற்காகவும் செய்திக்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம். – செந்தளம் செய்திப் பிரிவு