த வயர் ( The wire.in ) செய்தி ஊடகத்தின் மீதான பழிவாங்கும் நடவடிக்கையைக் கைவிடு!

குமரன்

த வயர்  ( The wire.in )  செய்தி ஊடகத்தின் மீதான பழிவாங்கும் நடவடிக்கையைக் கைவிடு!

த வயர் செய்தி ஊடகத்தின் மீது பாஜகவின் தகவல்தொழில்நுட்ப அணித் தலைவர் அமித் மாளவியா கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்திருக்கிறது. அதனடிப்படையில் வயர் செய்தி ஊடக்தின் ஊடகவியலாளர்கள் வேணு , ஜானவி சென், சித்தார்த் பாட்டியா மற்றும் த வயர் ஆசிரியர் சித்தார்த் வரதராஜன் ஆகியோரின் வீடுகளில் தில்லி காவல்துறை இன்று  சோதனையில் ஈடுபட்டிருக்கிறது.

அண்மையில் மீட்டா நிறுவனம் பாஜகவின் அமித் மாளவியாவிற்கு பாஜகவின் கருத்துகளை விமர்சிக்கிற பதிவுகளை நீக்க சிறப்பு சலுகை கொடுத்திருப்பதாக த வயர் ஊடகத்தினுடைய செய்தி பங்களிப்பாளரான தேவேஷ் குமார் கொடுத்த தகவலின் அடிப்படையில் தொடர் கட்டுரைகளை வெளியிட்டிருந்தது. பின்னர் மீட்டா நிறுவனம் கொடுத்த பதில் காரணமாக அச்செய்திகளின் பின்னுள்ள நம்பகத் தன்மையை ஆய்வு செய்து தனது செய்தியில் உள்ள பிழையை உறுதி செய்து கொண்டது. அதனடிப்படையில் மீட்டா குறித்து மேற்சொன்ன செய்தி பதிவுகளுக்காக வெளிப்படையாக மன்னிப்பு கோரியிருந்தது.

மேலும் த வயர் ஊடகத்திற்கு தவறான செய்தியை வழங்கிய தேவேஷ் குமார் மீது வயர் நிறுவனம் காவல்துறையில் புகாரும் அளித்திருக்கிறது.

ஆனால் வயர் கொடுத்த விளக்கங்களை ஏற்காமல் பாஜகவின் மாளவியா  வயர் ஊடகத்தின் மீது புகார் அளித்து வழக்கு பதிவு செய்ய காரணமாகி இருக்கிறார்.

ஏற்கனவே பாஜகவின் பாசிச கொள்கைகளைத் தக்க ஆவணங்களுடன் வயர் ஊடகம் அம்பலப்படுத்தி வருகிறது. குறிப்பாக   பெகாசஸ் உளவுச் செயலியைப் பயன்படுத்தி ஒன்றிய அரசு உளவு பார்த்த செய்தியை பன்னாட்டு ஊடகங்களின் உதவியோடு வெளி கொண்டு வந்தது. பாஜக ஊடகங்களில் உண்மைக்குப் புறம்பான செய்திகளைப் பரப்பி வெறுப்பை விதைத்து வரும் இந்த நெருக்கடியான காலகட்டத்தில் மக்களின் பக்கம் நின்று வயர் ஊடகம் சனநாயகத்தை பாதுகாக்கும் ஊடகப் பணியை சிறப்பாக செய்து வருகிறது. இதன் காரணமாக சித்தார்த் பல வழக்குகளையும் எதிர்கொண்டிருக்கிறார்.

த வயர் செய்தி ஊடகத்தின் மீது மீட்டா செய்தியை வைத்துக் கொண்டு அச்சுறுத்திப் பணிய வைக்கும் பழிவாங்கும் நடவடிக்கையை ஒன்றிய பாஜக அரசு மேற்கொண்டு வருகிறது.  ஒன்றிய அரசின் கொள்கைகளை விமர்சித்ததற்காகவே காஷ்மீர் வாலா, கேரவான்‌,  போன்ற ஊடகங்களின் செய்தியாளர்கள் மீது ஊபா சட்டத்தில் வழக்கு பதிவு செய்திருக்கிறது.   ஊடகவியலாளர் சித்திக் கப்பன் ஆண்டு கணக்கில் உபியில் நடந்த பாலியல் வல்லுறவு தாக்குதல் தொடர்பாக செய்தி சேகரிக்க சென்றதற்காகவே ஆண்டுக் கணக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

ஊடக சுதந்திரத்தின் மீது கட்டவிழ்த்துவிடப்படும் இத்தகைய கொடிய தாக்குதல்கள் அரங்கேறி வரும்  சூழ்நிலையில் சனநாயக விழுமியங்களைப் பாதுகாக்க வயர் போன்ற செய்தி ஊடகங்களின் மீதான தாக்குதலை எதிர்த்து சனநாயக ஆற்றல்கள் குரல் எழுப்ப வேண்டும். ஊடக சுதந்திரத்தை குற்றமயமாக்கி வரும் பாஜகவின் கருத்துரிமைப் பறிப்பு நடவடிக்கைகளை எதிர்த்து நமது ஒருமைப்பாட்டை வயர் போன்ற ஊடகங்களுக்காக தெரிவிக்க முன்வர வேண்டும்.

- குமரன்

(முகநூலிலிருந்து)

கட்டுரையாளரின்  முகநூல் பக்கத்திற்கு செல்ல கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்

https://www.facebook.com/100006749801868/posts/pfbid02WkLoQHpoZM7xExv8T9EmuaQwRE1M89mQGT9ech3UvEK5ogLPWwhnGKLei26jXdXrl/?app=fbl

Disclaimer: இந்த பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. விவாதத்திற்காக இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு