இந்தியப் புரட்சியின் நாயகன் ஏ எம் கே!

முகநூல் பதிவுகள்

இந்தியப் புரட்சியின் நாயகன் ஏ எம் கே!

1

இந்தியப் புரட்சியின் நாயகன் ஏ எம் கே!

கோடானு கோடி நாமம் சூடி நிற்கின்றாய் 

குறை நிறை யாவும் தாங்கி நிற்கின்றாய்!  

கண்ணிமைகளின் கடைக்கோடியில் 

கண்ணீர் ஊற்றைத் தோற்றுவித்து  

கையறு நிலையில் எங்களைத் தவிக்கவிட்டு 

எங்கே சென்றாய்?

உலகப் புரட்சியின் ஓரங்கமாய் 

லெனினியத்தின் தொடர்ச்சியாய் 

இந்தியப் புரட்சியின் வரலாற்றில்

விசுவரூபம் எடுத்து நிற்கும் 

புரட்சியின் தேவதூதனே, 

உன் திருநாமம் 

புரட்சியை நேசிக்கும் ஒவ்வொருவராலும் 

என்றென்றும் ஜெபிக்கப்படும்!

இந்தியப் புரட்சியைச் சாதிக்கத்  துடிக்கும் 

புரட்சியின் நேசர்களுக்கு அது எப்போதும் 

உத்வேகம் அளிக்கும்!

எங்கள் தலைவனே ஏ எம் கே.

நின் திருநாமம் ஜெபிக்கப் படுவதாக!

சபிக்கப்பட்ட இந்தியப் பாட்டாளி  வர்க்கத்தை

நின் திருநாமம் ஆசீர்வதிக்கட்டும்!

ஆயிரமாயிரம் இளைஞர்களை அது 

புரட்சியை நோக்கி ஆற்றுப் படுத்தட்டும்!

இந்தியப் புரட்சியை சாதித்துக்  காட்டுவோம் என்று 

நின் பெயரால் சூளுரைக்கின்றோம்!

(இந்தியப் புரட்சியின் நாயகன் தோழர் ஏ எம் கே அவர்களுக்கு இறுதிச் செவ்வஞ்சலி செலுத்த காட்பாடி செல்லும்முன் எழுதிய பதிவு!  நவம்பர் 25 ஏ எம் கே நினைவுநாள்!)

- Ilango pichandy

https://m.facebook.com/story.php?story_fbid=pfbid092iQV4c9FxdLtg7rkaUnsQoxK98CeNnoCVAzBHe7ryvyxDvroibT2m9hf4afx4qVl&id=100006587319842&sfnsn=wiwspwa&mibextid=Na33Lf

=============================================

2

சுவடுகள் அழிவதில்லை!

ஏ எம் கே! 

இந்தியப் புரட்சியின் வரலாறு இப்படி ஒரு 

மகத்தான மானுடரைப் படைத்தளித்து உள்ளது.

தமிழ்நாட்டில் புரட்சியின் மூல ஊற்றாய் 

மாபெரும் நக்சல்பாரி இயக்கத்தைக்  

கட்டி எழுப்பிய தலைமைச் சிற்பியாய்

மண் பயனுற வாழ்ந்து மறைந்த 

மகத்தான மாமனிதர் 

தோழர் ஏ எம் கே!  

அரை நூற்றாண்டு காலத் தலைமறைவு 

வாழ்க்கையின் ஊடே இந்தியப் புரட்சிக்குப் 

பாதை சமைத்து  யுகத்தின் மீது சுவடு பதித்த 

மாபெரும் பாட்டாளி வர்க்கப் புரட்சியாளர் 

தோழர் ஏ எம் கே! 

மகத்தான 

மார்க்சிய லெனினிய சிந்தனையாளராய்  

மார்க்சிய மூல ஆசான்களின் வரிசையில் 

அடுத்து அமரும் அருகதை வாய்ந்தவர்   

தோழர் ஏ எம் கே!

வலது இடது திரிபுகளையும்

கலைப்புவாதத்தையும் 

காலமெல்லாம் எதிர்த்துச் சமர் புரிந்து 

மார்க்சிய லெனினியத்தின் தூய்மையைக் காத்த 

மாபெரும் சமரன் எங்கள் 

தோழர் ஏ எம் கே!

வசந்தத்தின் இடிமுழக்கம் வெடித்த காலத்தில் 

புரட்சியை நேசிக்கும் 

பல்லாயிரக் கணக்கான இளைஞர்களால் 

வேறு எவருடைய  திருநாமமும்

இவ்வளவு ஆவேசத்துடன் 

சுவீகரிக்கப் பட்டதில்லை

ஏ எம் கேயின் திருநாமம் தவிர!

போய்வா வீர நாயகனே!

இந்தியப்  புரட்சியின் நீண்ட பயணத்தில் 

உன் பாதம் பதிந்த  

சுவடுகள் அழிவதில்லை!

அவை என்றென்றும் எமக்கு ஆதர்சமாய்

புரட்சியை வென்றெடுங்கள் என்று 

எங்கள் செவிகளில் ஓதிக்கொண்டே இருக்கும்!

- ilango pichandy

https://m.facebook.com/story.php?story_fbid=pfbid09CmB8wgWWQZgM6FYdRbsCKPfev1e9jYePFsPL1hYvpbcB9bEc4P2wJ6cvwubsQTil&id=100006587319842&sfnsn=wiwspwa&mibextid=Na33Lf

********************************************************

3

தோழர்  ஏ எம் கோதண்டராமன் ( AMK) - (நட்பு 49)

எனது வாழ்க்கையில் இரண்டு கோதண்டராமன்கள் மிக மிக முக்கியத்துவம் வாய்ந்தவர்கள் . . .  ஒன்று மொழியியல் பேராசிரியர் பொன். கோதண்டராமன் (பொற்கோ) ; மற்றொருவர் அரசியல் போராளி தோழர் ஏ எம் கோதண்டராமன்! 

எனக்கு . . . 

மொழியியலில் கலங்கரைவிளக்கம்  . . . பேரா. பொன். கோதண்டராமன்! 

அரசியலில் கலங்கரைவிளக்கம்  . . .  தோழர் ஏ எம் கோதண்டராமன்! 

1970-ஆம் ஆண்டில் நான் நெல்லை ம தி தா இந்துக்கல்லூரியில் இளங்கலை - இயற்பியல் படிப்பில் 3-ஆம் ஆண்டு. தோழர் டி எஸ் எஸ் மணியும் என் வகுப்புத் தோழர். 1969-இல் எங்கள் இருவருக்கும் அரசியலில் ஒரு திருப்பம். எங்களைச் சந்திக்க அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பொறியியல் மாணவர் மறைந்த தோழர் கணேசன் வந்திருந்தார். அவருடன் மற்றொருவரும் வந்திருந்தார். அவர்தான் ஏ எம் கே என்று எங்களுக்குத் தெரியாது. யாரோ ஒரு கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர் வந்திருக்கிறார் என்றுதான் கருதினோம்! அப்போதெல்லாம் ஒருவர் பெயரை யாரும் கேட்கக்கூடாது. எங்கிருந்து வருகிறார்கள் , என்ன செய்கிறார்கள் என்றெல்லாம் கேட்கக்கூடாது! அதுதான் எங்களது முதல் சந்திப்பு!

பின்னர், தமிழகத்தில் மாணவர் இயக்கத்தைக் கட்டுவதற்காக . . .  திருச்சியில் ஒரு சிறிய கூட்டம்! அங்குதான் ஏ எம் கே-யையும் மறைந்த தோழர் அப்புவையும் எனக்குப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. தோழர் கணேசன் அவர்களை அங்குதான் இறுதியாகப் பார்த்தேன். அதன்பின்னர் அவர் நடவடிக்கையில் மறைந்துவிட்டார்! 

பிறகு அடிக்கடி நானும் மணியும் அவரைச் சந்தித்துவந்தோம்! ''பெரியவர்'' என்றுதான் அவரை எல்லோரும் அழைப்பார்கள்! பிறகு ஒரு கட்டத்தில் அவர் கைது செய்யப்படுகிறார். நான் 1975-இல் சென்னைக்கு முனைவர் பட்டப் படிப்பிற்கு வந்தேன். அப்போது அவர் சிறையில் இருந்தார். 77 அல்லது 78-இல் அவர் விடுதலை ஆனார். அவரை வரவேற்கச் சென்னைச் சிறைவாசலில் ஆயிரக்கணக்கான தொழிலாளர் தோழர்கள். 1968-க்குமுன்னர்  இவர் சென்னையில் மிக மிகச் செல்வாக்காக விளங்கிய ஒரு தொழிற்சங்கத் தலைவர். இவருடைய போராட்டங்கள் எல்லாம் மிக நூதனமாக இருக்கும் என்று கேள்விப்பட்டுள்ளேன். சிறைச்சாலையிலே நூதனப் போராட்டம் நடத்தி, அதிகாரிகளையும் அமைச்சர்களையும் அதிரவைத்தவர். 1965- இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் சென்னையில் மிகத் தீவிரம் காட்டியவர்.  தோழர் குசேலர், ஆர் கே சுவாமிநாதன் , பல தொழிற்சங்கத் தலைவர்களும் ஊர்வலத்தில்  வந்திருந்தார்கள். அங்கிருந்து எழும்பூரில் குசேலரின் தொழிற்சங்க அலுவலகம் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கானவர்களும் ஊர்வலமாக அவரை அழைத்துச் சென்றனர். மாடியில் இருந்து தோழர் ஏ எம் கே அவர்கள் ஒரு நல்ல எழுச்சியுரையை அளித்தார்! 

அதன்பின்னர் அவரை அடிக்கடிச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போதுதான் அவர் எனக்கு எவ்வாறு ஒரு நூலைப் படிக்கவேண்டும் என்று கற்பித்தார். குறிப்பிட்ட பிரச்சினை ஒன்றை எடுத்துக்கொண்டு, அதைப் புரிந்துகொள்ளுவதற்காக மார்க்சிய நூல்களைப் படித்தால்தான் அது புரியும் என்பதைத் தெளிவு -படுத்தினார். அவரது ஆய்வுமுறை உண்மையிலேயே மிக மிகச் சிறப்பானது. மிக வியப்பாக இருக்கும் எனக்கு! 

தொடர்ந்து என்னைப் படிக்கவைத்தார். மார்க்ஸின் ''மூலதனம்'' முதல்  . . .  ஏராளமான நூல்களைப் படித்தேன். அடுத்து அவர் கூறியது . . .  ''படித்தவற்றைத் தொழிலாளிகளுக்குப் புரியும்படி எழுது; அப்போதுதான் உனக்குத் தெளிவு கிடைத்துள்ளதா இல்லையா என்று பார்க்கமுடியும்'' என்று கூறினார். அவரது வழிகாட்டுதலில் , ''சமரன்'' என்ற இதழில் ''மூலதனம்'' உட்பட பல கட்டுரைகளைத் தொழிலாளர்களுக்காக எளிமையாக  எழுதினேன். சமூக அறிவியலை . . .  தத்துவம், பொருளாதாரம், அரசியல், பண்பாடு ஆகியவற்றை எவ்வாறு ஆராயவேண்டும் என்பதற்கான ஆய்வுநெறிமுறைகளை அவரிடமிருந்துதான் கற்றுக்கொண்டேன். 

மற்றவர்களிடம் அவர் விவாதிக்கும்போதும் . . .  முதலில் மற்றவர்கள் கூறுவதைத் தெளிவாக, குறுக்கீடு இல்லாமல் கேட்பார். அடுத்து, அவர்கள் கூறியதை மேலும் தெளிவாக்கிக்கொள்ளப் பல ஐயங்களையும் வினாக்களையும் முன்வைப்பார். அதன்பின்னர்தான் அவர் தனது கருத்துக்களைத் தெளிவுபடுத்துவார். விவாதத்தின் முடிவில் நமக்கு உண்மையிலேயே ஒரு நல்ல தெளிவு கிடைக்கும்! 

என்னைப் பொறுத்தவரையில் . . .  தோழர் ஏ எம் கே அவர்கள் ஒரு மிகப் பெரிய சமூக விஞ்ஞானி. அவரது கருத்துக்களில், செயல்பாடுகளில் ஒருவர் மாறுபடலாம், வேறுபடலாம்! ஆனால் அவரது ஆய்வுமுறை, அறிவுத்திறன், தத்துவத் தெளிவு . . . . என்னை வியக்கவைக்கும்! சோவியத் ரசியாவில் சோசலிசத்திற்கு பின்னடைவு ஏன் ஏற்பட்டது, இந்தியாவில் தேசிய இனப் பிரச்சனையை எவ்வாறு ஆய்வுசெய்யவேண்டும் போன்ற பல தலைப்புக்களில் எனக்குப் பேசவும் எழுதவும் பயிற்றுவித்தவர் அவரே. ஆனால் அவர் மிகவும் கண்டிப்பான ஒரு ஆசிரியர். எதைப்பற்றியும் விவாதிக்கவேண்டுமென்றால், நான் முதலில் அதுதொடர்பான நூல்களைப் படித்துவிட்டுத்தான் பேசவேண்டும்! ''நீங்களே சொல்லுங்களேன்'' என்று அவரிடம் கேட்கமுடியாது!

உண்மையில் இப்படிப்பட்ட ஒரு அரசியல் விஞ்ஞானியின் தொடர்பு எனக்குக் கிடைத்ததில் எனக்கு அளவுகடந்த மகிழ்ச்சியும் திருப்தியும் உண்டு! இவருடைய வாழ்க்கையிலும் போராட்டங்களிலும் பல குறிப்பிடத்தக்க நிகழ்வுகள் உண்டு. அவைபற்றி மற்றொரு சந்தர்ப்பத்தில் எழுதுகிறேன்.

மறைந்த தோழர் ஏ எம் கே-வின் தொடர்பில் நான் மகிழ்வடைகிறேன்.

- தெய்வ சுந்தரம் நயினார்

https://m.facebook.com/story.php?story_fbid=pfbid02ytc6YQ3aQdptgoQwfw7sWYXR8ozJUT46LyRttzELGK4Ekemb6WYqZV7wtMAp7GAWl&id=100004424580477&sfnsn=wiwspwa&mibextid=RUbZ1f

(முகநூல் பதிவுகளிலிருந்து)