மது பாட்டில்கள் குடியிருக்க பத்திரமான கட்டிடங்கள் உள்ள நாட்டில் - நெல் மூட்டைகளை பாதுகாக்க தாராளமான கட்டிடங்கள் இல்லை
துரை. சண்முகம்

இதையெல்லாம் சொன்னால் எரியும் சிலருக்கு!
இதையெல்லாம் கேட்காவிட்டால் நாம் சோறு தின்னும் மனிதர்களா? என்பது உயிர் கணக்கு.
தீபாவளி வருவதற்கு முன்பே தட்டுப்பாடு இல்லாமல் மது பாட்டில்களை தயார் செய்ய தெரிகிறது. அதற்கான பாதுகாப்பான குடோன்கள் பராமரிப்பு இருக்கிறது.
அல்லும் பகலும் பாடுபட்டு இந்த நாட்டு விவசாயி உற்பத்தி செய்யும் நெல் மூட்டைகளை
பாதுகாக்க வக்கில்லாமல் பல இடங்களில் மழையில் நனைந்து வீணாகின்றன நெல் மூட்டைகள்.
அது எந்த ஆட்சியாக இருந்தாலும், " உழவே தலை"
என்பதை உணராத கேடுகெட்ட அரசுகள்தான் இவை.
பெரும் பாலங்கள்,
ஷாப்பிங் மால்கள்,
பொழுதுபோக்கு பூங்காக்கள்,
வெளிநாட்டு முதலாளிகள் தொழில் செய்ய அடிப்படை கட்டுமானங்கள்
இப்படி முதலாளித்துவம் தழுவிய வளர்ச்சிகள்
விவசாயிகள் விளைவிக்கும் நெல்லை பாதுகாக்க கூட முடியாத ஒரு அரசு வெட்கி தலை குனிய வேண்டும்.
பல இடங்களில் பல நாள் போர்வை போர்த்தி, மழையில் நனைந்து சேதாரம் ஆகி எடைக்கு நிறுத்துவதற்குள்
எத்தனை இழப்பு விவசாயிகளுக்கு?!
விவசாயப் பகுதிகள் முழுக்க நெல் மூட்டைகளை பாதுகாக்க
பெரிய பெரிய கிட்டங்கிகளை கட்ட வேண்டும்.
கண்ணும் கருத்துமாக காவல் இருந்து நெல்மணிகளை கொண்டு வந்து விவசாயி தருகிறான், அதை வாங்கி பாதுகாக்க கூட தகுதியற்ற அரசு .
மது பாட்டில்கள் குடியிருக்க பத்திரமான கட்டிடங்கள் உள்ள நாட்டில், நெல் மூட்டைகளை பாதுகாக்க தாராளமான கட்டிடங்கள் இல்லை.
விவசாயத்தை பாதுகாப்பது என்பது ஏதோ விவசாயிகளுக்கான தொழில் பிரச்சனை மட்டுமல்ல ஒரு நாட்டின் சுய சார்பும் கூட.
மக்கள் நல அரசியல் அற்ற கும்பல்கள்தான் நம்மை ஆள்கின்றன.
அரசவை சான்றோர்களாக அரசுக்கானஅரசியல் பேசிக்கொண்டு இருப்போர்,
அரசல் புரசலாக கூட இது போன்ற மக்கள் பிரச்சனைகளை மன்னர் காதில் போடுவதற்கு மனம் இல்லை.
இதையெல்லாம் பேசாமல் வேறு என்ன தமிழர் நலன் அரசியல்?!
- துரை. சண்முகம்
https://www.facebook.com/100080904177819/posts/841181468588651/?rdid=CfkdON0CeuMI2Iwy
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு