தமிழ்நாடு நாள்: திராவிடத்தின் பொய்யும் புரட்டும்

பா. ஏகலைவன்

தமிழ்நாடு நாள்: திராவிடத்தின் பொய்யும் புரட்டும்

முதல் மொழிவாரி மாநில கோரிக்கை ஒரிய மக்களிடம் எழுந்தது. 1895 தொடங்கி 1935-ல் ‘ஒரிஸா’ என்ற மொழிவழி மாகாணத்தைப் பெற்றார்கள்.

அதற்கடுத்து, மராட்டிய மொழிவழி மக்கள் ‘மாகாண கோரிக்கை 1906-ல் தொடங்கினார்கள். பெற்றார்கள். சுதந்திரப்போரில் பங்கெடுத்த பாலகங்காதர திலகர்கூட அந்த கோரிக்கை போராட்டத்தில் 1919-களில் பங்கெடுத்தார். 

தென்னகத்திலும் அந்த ‘மொழிவாரி’ மாகாணம் குரல் 1915-களிலேயே ஒலிக்கத் தொடங்கியது.

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி, ‘மொழிவாரி’ மாநிலம் என்பதை ஏற்கிறது. விவாதிக்கின்றது. 1921-ல் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி, ஆந்திர பிரதேச காங்கிரஸ் கமிட்டி என மொழி வழியிலேயே கட்சியின் மாகாண கட்டமைப்பை ஏற்படுத்தியது. பிறகு மாகாணங்களுக்கு ‘சுயாட்சி அதிகாரமும் வேண்டும் என (1921-ல்) தீர்மானத்தை (பெல்காம்) போடுகிறது

காங்கிரஸ் கட்சியின் மொழிவாரி கட்சி கட்டமைப்பில், திருத்தனி, திருப்பதி நெல்லூர் ஆகிய பகுதிகள் ஆந்திர காங்.கமிட்டி பகுதிக்குள் சேர்த்தார்கள். அதை தமிழ்நாடு காங்.கமிட்டி தலைவராக இருந்த சத்தியமூர்த்தி எதிர்த்தார்.

சி. சங்கரன் நாயர் அவர்கள், சென்னை ராஜதானி மாகாணத்தில் உள்ள பத்து மாவட்டங்களை தனியாக பிரித்து சுயாட்சி (தனி மாநிலம்) வழங்க வேண்டும் என்ற தீர்மானத்தை 1926-ல் மத்திய சட்டப்பேரவையில் கொண்டு வந்தார். அது தோற்கடிக்கப்பட்டது.

இந்த நகர்வில்..

சென்னை மாகாணத்தின் பிரீமியர் அமைச்சராயிருந்த இராஜாஜி இந்தியை (1937-ல்) திணித்தார். அப்போது, மறைமலை அடிகளார், நாவலர் சோமசுந்தரபாரதி, முத்தமிழ் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம், ஈழத்து அடிகளார் உள்ளிட்ட அறிஞர் பெருமக்கள் தலைமையில் தீவிர எதிர்ப்பு போராட்டம் எழுந்தது. 

பெரியார், காங்.ஆட்சிக்கு ஆதரவாக இந்தியை ஆதரித்தார்.

தமிழ் அறிஞர்கள் அவரை சந்தித்து இதில் உள்ள பாதிப்புகளை - அபாயத்தை எடுத்துச் சொல்லி விளக்கிய பிறகு பெரியாரும் இந்தியை எதிர்க்கத் தொடங்கினார். (ஆதாரம்:ஈழத்து அடிகள் எழுதிய ‘இந்தி எதிர்ப்பு போராட்டம்)

தொடர்ந்து, சென்னை கடற்கரையில் இந்தி எதிர்ப்பு மாநாடு (11,9.1938) மறைமலை அடிகளார் தலைமையில் நடந்தது. அதில்தான் “தமிழ்நாடு தமிழர்க்கே’ என்ற தீர்மானத்தை மறைமலை அடிகளார் முன்மொழிய. பெரியாரும், நாவலர் சோமசுந்தரபாரதியும் வழிமொழிந்தார்கள். 

ஆனால், அடுத்த ஆண்டே ஈவெரா, ‘தமிழ்நாடு தமிழருக்கே’ கொள்கையில் இருந்து கிரேட் எஸ்கேப்பானார். அதாவது 1939-ல் ஆந்திர தெலுங்கர்கள் ஆதிக்கத்தில் இருந்து வந்த ‘நீதிக்கட்சியின் தலைமை’ பெரியார் கைக்கு வந்தது.

அதை தலையில் தூக்கிக் கொண்டு, ‘தமிழ்நாடு தமிழர்க்கே’ என்ற முழக்கத்தை கைவிட்டுவிட்டு “திராவிட நாடு” என்ற புது முழக்கத்தை தூக்கிக் கொண்டார். 

தமிழ்நாடு தமிழர்களுக்கே என்ற கோரிக்கையை, ஈவெரா ‘திராவிட நாடு’ கோரிக்கையை வைத்து மடைமாற்றம் செய்தார். இது ஒரு மோசடி.

பிறகு 1946-களில் மா.பொ.சி. அவர்கள் தீவிரமாக களம் இறங்க ‘தமிழ்நாடு’ கோரிக்கை மீண்டும் வலுப்பெறத் தொடங்கியது. அப்போது தொடங்கி 1956 வரை, பெரியார், 'திராவிட நாடு' கோரிக்கையோடு, தமிழர்களின் கோரிக்கைகளுக்கு எதிராகவே பேசிக் கொண்டிருந்தார். 

எப்படியாக…

“தமிழ் நாட்டை தனியாகப் பிரிக்க வேண்டும் என்பது தமிழ் அரசு, தமிழராட்சி, தமிழ் மாகாணம் என்று பேசப்படுவன எல்லாம், நம்முடைய சக்தியை குலைப்பதற்காகவும், குறைப்பதற்காகவும் செய்யப்படுகிற காரியங்கள் என்பதை நீங்கள் உணர வேண்டும்” என்று (11.1.1947 ) தனது விடுதலை ஏட்டில் அறிக்கை விடுக்கிறார்.

“மொழிவழி மாகாணங்கள் பிரிவதில் உள்ள கேட்டையும் விபரீதத்தையும் முன்னரே பல தடவை எடுத்துக்காட்டி உள்ளோம். மீண்டும் கூறுகின்றோம். மொழிவழி மாகாண கிளர்ச்சியில் தமிழர்கள் கலந்துகொள்ள வேண்டாம்” (21.4.1947-விடுதலை)

“மொழிவாரி என்பதை பற்றி சில சொல்கிறேன். மொழி மீது ஒரு நாடு எதற்காக பிரியவேண்டும்? ஜாதியின் மீது, மதத்தின் மீது, இனத்தின் மீது என்றால் அதற்கு அர்த்தம் உண்டு” (1953 விடுதலையில் பெரியார்)

இப்படியாக, 1939- தொடங்கி பெரியார் பேசி வந்தார். (இந்த பெரியாரைத்தான் தமிழர் தலைவர் என்கிறார்கள்)

இங்கே ஒரு விடயத்தை நாம் மறந்துவிடக் கூடாது. 

இதே காலகட்டத்தில், ‘விசால ஆந்திரா, ஐக்கிய கேரளம், தனி கர்நாடகம்’ என்ற கோரிக்கை வலுத்தபடி இருந்தது. அவர்களைப் பார்த்து, “முட்டா பசங்களா, தனி மாநிலம் கேட்பது திராவிட நாடு ஒற்றுமையை சீர்குலைக்கும், எவனாவது மொழிக்காக தனி மாநிலம் கேட்பானா“ என்று பெரியார்  கேட்கவில்லை, எழுதவுமில்லை.

ஆனால், தமிழர்களுக்குதான் அப்படி சொன்னார், எழுதினார்.

1952 அக்டோபர் 19-ம் தேதி ஒரு சம்பவம் நடத்தது. 

சுதந்திரப் போராட்ட தியாகியான பொட்டி ஸ்ரீராமுலு, தனி ஆந்திர மாநிலம் கோரிக்கைக்காக சென்னையில் உண்ணாவிரதம் தொடங்கினார். 82 நாட்களுக்கு பிறகு டிசம்பர் 15-ல் இறந்து போகிறார். சென்னைக்குள்ளாக இறுதி ஊர்வலம். பெரும் கலவரம், தமிழர்களுக்கு பொருட்சேதம், உயிர்சேதம் நடக்கிறது.

பிரதமர் நேரு படிந்தார். உடனே ஆந்திர மாநிலம் அமைக்கப்படும் என்கிறார்.

அதன் பேரில் 1953- அக்டோபர் 1-ம் தேதி கர்நூலை தலைநகராகக் கொண்டு ஆந்திர மாநிலம் அமைக்கப்பட்டது. அப்போது ஐதராபாத் நிஜாம் அரசின் கீழ் இருந்த தெலுங்கானா பகுதி ஆந்திராவுடன் சேர்க்கப்படவில்லை.

தொடர்ந்து,  தமிழ் அறிஞர்கள் மத்தியில் ‘தமிழ்நாடு கோரிக்கை எழுந்தபடியே இருந்தது. இதற்கிடையில் மாநில எல்லை பிரிப்பு விடயமும் நடக்கின்றது. சென்னை திருத்தனி, திருப்பதி, சித்தூர் ஆகிய பகுதிகள் ஆந்திராவுடன் சேர வேண்டும் என்ற போராட்டம் தீரவிரமடைகிறது.

இந்த பக்கம் கன்னியாகுமரி மாவட்டம் கேரளாவோடு என்ற சிக்கல்.

வடக்கே ம.பொ.சி தலைமையில் எல்லை மீட்பு போராட்டம். ஐந்து பேர் சிறை, இருவர் துப்பாக்கி சூட்டில் பலியானார்கள்.

தெற்கே கன்னியாகுமரி மீட்பு போராட்டத்தில் ஐயா மார்ஷல் நேசமணி முன்நின்றார். 11 பேர் துப்பாக்கிச் சூட்டில் பலியானார்கள். இந்த உயிரிழப்புகள் எல்லாம் வரலாற்றில் மறைக்கப்பட்டது. பேசப்படவில்லை. முக்கியத்துவம் கொடுக்கப்பட வில்லை.

இவர்களின் உயிர் தியாகத்தில்தான் வடக்கே சென்னையும், திருத்தனியும், தெற்கே கன்னியாகுமரியும் தப்பியது. தமிழ்நாட்டில் சேர்ந்தது.

இப்படி,

மொழிவாரி மாநிலம் அமைக்கப்படுவது உறுதி என்றான பிறகுதான், 1955 இறுதியில் பெரியார் திராவிட நாடு கோரிக்கையை கைவிட்டு, மீண்டு ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்ற கோரிக்கைக்கு வந்து நின்றார்.

அதாவது 

1938-ல் திராவிட நாடு என ஓடிப்போன பெரியார், மொழிவழி மாநிலமாக தமிழ்நாடு உறுதி என்றானபோது, நம்மவர்கள் போராடி, உயிர்த் தியாகம் செய்து நகர்த்தியிருந்த போது 1955-ல் மீண்டும் இங்கே ஓடி வந்து 'தமிழ்நாடு' என்கிறார்.

(இதைத்தான் ஐயா சுபவீரபாண்டியன் பெரியார் 1956-ல் தமிழ்நாடு கோரிக்கை எழுப்பினார், அதையொட்டி சங்கரலிங்கனார் உண்ணாவிரத போராட்டம் நடத்தினார் என்று திரிக்கின்றார். அதாவது, 39-ல் ஓடிப்போன பெரியார் பிறகு வந்து தொடங்கியதையடுத்து சங்கரலிங்கனார்.. என்ற அளவில்)

எல்லைப் பிரிப்பு போராட்ட சூட்டோடு, ஐயா சங்கரலிங்கனார் ‘தமிழ்நாடு’ கோரிக்கைக்காக 1956- ஜுலை 27-ம் நாள் உண்ணாநிலை போராட்டத்தை தொடங்கினார். (சொந்த ஊர் சூலக்கரை- பிறகு விருதுநகர் தேசபந்து மைதானம்) 75 நாட்களுக்கு பிறகு அக்டோபர் 13 அன்று இறந்து போகிறார். 

ஆந்திர மாநிலத்திற்காக உயிர் தியாகம் செய்த பொட்டி ஸ்ரீராமுலுவை ஆந்திர தேசம் கொண்டாடியதைப் போல், தமிழர் தலைவர் ஐயா சங்கரலிங்கனாரை திராவிட அரசு கொண்டாட வில்லை. காங்.கட்சியும் கொண்டாடவில்லை. திராவிடத்தின் சூழ்ச்சி இதுதான்.

இந்த பின்னணியோடு 1956-ல் மொழிவாரி மாநிலம் என்பதை பிரதமர் நேரு அறிவிக்கின்றார்.

1938-ல் ‘தமிழ்நாடு தமிழருக்கே என்று கடறக்ரையில் முழக்கமிட்டு ஓடிப்போய், திராவிட நாடு திராவிடர்களுக்கே என்று களமாடிய பெரியார் 1956-ல் தான் மீண்டும் ‘தமிழ்நாடு தமிழர்க்கே’ என வந்து தன்னை ஒட்டிக்கொள்கிறார்.

இப்படியாக வந்து ஒட்டிக்கொண்டவரைத்தான் ‘பெரியார் வாங்கிக் கொடுத்த தமிழ்நாடு, பெரியார் வைத்த கோரிக்கை, பெரியார் இல்லை என்றால், கோவணம் மிஞ்சியிருக்காது என விதம் விதமாக கயிறு திரித்து, உண்மையில் போராடிய தமிழர் தலைவர்களை எல்லாம் வரலாற்றில் இருட்டடிப்பு செய்தது இந்த திராவிடம். 

இறுதியாக 1956 நவம்பர் ஒன்றாம் தேதி, மொழிவாரி மாநிலம் அமைக்கப்பட்டது. தமிழகத்தின் சில பகுதிகளோடு ஆந்திரம் அமைந்தது (பழைய ஐதராபாத் தெலுங்கானா பகுதியும் ஆந்திராவோடு இணைந்தது)

தமிழகத்தின் சில பகுதிகளை அபகரித்து கர்நாடகம் அமைந்தது.

தமிழகத்தின் சில பகுதிகளை அபகரித்து கேரள மாநிலம் அமைந்தது.

அந்த மாநிலங்கள் எல்லாம் நவம்பர் 1-ம் தேதியைத்தான் மாநிலம் பிறந்த நாளாக கொண்டாடி வருகிறது.

ஆனால் காங்கிரஸ் கட்சியும், பிறகு வந்த திராவிட கட்சிகளும், ‘நவம்பர் ஒன்று தமிழ்நாடு நாள்’ என்பதை கொண்டாடவே விரும்பவில்லை. காரணம் இரண்டு கட்சிகளும் ‘தமிழநாடு தமிழர்க்கே’ என்ற கோரிக்கையில் உடனிருக்கவில்லை. துரோகம் செய்தவர்கள். அதனாலேயே தமிழ்நாடு நாளை கொண்டாடவில்லை.

1967-ல் முதல் 1977 வரை இருந்த அண்ணா-கலைஞர் ஆட்சி ‘நவம்பர்-1’ தமிழ்நாடு நாளை கொண்டாட வில்லை.

1977-ல் ஆட்சிக்கு வந்த எம்ஜிஆர், 1981-ல்தான் ‘நவம்பர்-1’ தமிழ்நாடு நாளை கொண்டாடுவதாக அறிவித்து, கொண்டாடச் செய்தார். அதற்கு காரணம் அப்போது தமிழ் அறிஞர்கள் எல்லாம் சேர்ந்து எம்.ஜி.ஆரிடம் வைத்த கோரிக்கை, நெருக்குதல்தான்.

பிறகு ஆட்சிக்கு வந்த கலைஞர் கருணாநிதி 2006-ம் ஆண்டு முதல்வராக இருந்தபோது ‘நவம்பர்-1’ தமிழ்நாடு நாளை அறிவித்து கொண்டாடினார். 

அதற்கு காரணம் பெ.மணியரசன் உள்ளிட்ட பல தமிழ் அறிஞர்கள் தரப்பும் கொடுத்த அரசியல் அழுத்தம்-கோரிக்கையும்தான். பிறகு கிடப்பில் போடப்பட்டது.

இப்படியாக நகர்ந்து இறுதியாக 2019-ம் ஆண்டு, தமிழக முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி அவர்கள், ‘நவம்பர்-1’ தமிழர் நாள் என்பது இனி வருடம்தோறும் கொண்டாடப்படும் என்று அரசாணை அறிவிப்பை செய்தார். 

இந்த அறிவிப்பைதான் ஐயா சுபவீ அவர்கள், “முந்தைய ஆட்சி கொண்டு வந்த ‘நவம்பர்-1’ தமிழ்நாடு நாள்’ என்ற கோரிக்கை ஏற்புடையதல்ல என்று தமிழ் ஆர்வலர்கள் கோரிக்கை வைப்பதை அரசு ஏற்க வேண்டும். அண்ணா பெயர் சூட்டிய ஜுலை 18- ‘தமிழ்நாடு நாள் என அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து எழுதினார். கி.வீரமணியும் இதை ஆமோதித்தார்.

இதன் பிறகுதான், முதல்வர் ஸ்டாலின் அவர்கள், ‘ஜுலை 18-தான் தமிழ்நாடு நாள் கொண்டாடப்படும் என அறிவிக்கின்றார். (சுபவீ, வீரமணி எல்லாம் தமிழறிஞர்கள்?!!)

இது அநீதியான ஒன்று. பிறந்த நாளை தவிர்த்துவிட்டு பெயர் வைத்த நாளை யாராகிலும் கொண்டாடுவார்களா என்ற கேள்வி.

இதிலும்கூட உண்மை இல்லை. அண்ணா, தமிழ்நாடு என்று பெயர் சூட்டுவதற்கு முன்பே, 1961-ல் தமிழக சட்டப் பேரவையில் காங்.கட்சி தரப்பில் ‘தமிழ்நாடு’ என தமிழிலும், ‘மதராஸ் ஸ்டேட்’ என்று ஆங்கிலத்திலும் பெயர் சூட்ட வேண்டும் என்ற தீர்மானம் கொண்டு வரப்பட்டுவிட்டது. 

இவர்களுக்கு இருப்பதெல்லாம் காழ்ப்புணர்ச்சி அரசியல்.

தமிழனுக்கென்று சுய அடையாளம் என ஒன்றும் இருக்கக்கூடாது. எல்லாவற்றையும் குழப்பியடிக்க வேண்டும். உண்ட வீட்டுக்கு ரெண்டகம் செய்பவர்கள்தான் இந்த திராவிடர்கள்.

பெத்தவனுக்குத்தான் வலி தெரியும் என்பதை ஆந்திரமும், கர்நாடகமும், கேரளாவும் நிரூபித்தபடியே உள்ளது. 

இவர்கள்?.

-----------------------

கூடுதல் தகவல்.

அதன் பிறகும் ஈவெரா பெரியார் தமிழர்களுக்கு மனதார துரோகம் செய்தபடியே இருந்தார்.

1965-ல் இந்தி திணிப்பு ஆட்சிமொழியாக வருகின்றது. அப்போது காங்கிரஸ் ஆட்சி. பக்தவச்சலம் முதல்வர். இளைஞர்களின் பேரெழுச்சி கிளர்ச்சியாகிறது. 

அண்ணாவின் தம்பிமார்களும் இந்தி எதிர்ப்பு போராட்டத்தினுள்ளே நுழைந்து கொள்கிறார்கள்.

தமிழ்மொழி காக்கும் போராட்டம் வலுக்கிறது. மாணவர் இராசேந்திரன் தொடங்கி 400-க்கும் மேற்பட்டவர்களை சுட்டுக் கொன்றது அன்றைய காங்கிரஸ் ஆட்சி.

தமிழ் இளைஞர்களின் அந்த  உணர்ச்சிமிகு போராட்டத்தை ஈவெரா பெரியார், ‘காலிகளின் போராட்டம்’ என்ற தலைப்பிட்டு… 

“தமிழ் நாட்டில் எங்கே உள்ளது இந்தி? யார் வீட்டுப் பையனை இந்தி படி என்று எந்த பள்ளியில் யார் கட்டாயப்படுத்தினார்கள்? பத்திரிக்கைக்கார அயோக்கியர்களும், பித்தலாட்ட அரசியல்வாதிகளும், (திமுக) இந்தி கட்டாயம் என்று கட்டிவிட்டது கண்டு, எல்லா மக்களும் சிந்திக்காமல், ‘இந்தி-இந்தி’ என்று இல்லாத ஒன்றை இருக்கிறதாக எண்ணிக்கொண்டு மிரள்வதா? ஆரம்பத்திலேயே நான்கு காலிகளை சுட்டிருந்தால் இந்த நாச வேலைகளும், இத்தனை உயிர் சேதமும், உடைமை சேதமும் ஏற்பட்டு இருக்காது. எதற்காக சட்டம்? எதற்காக போலீஸ்? எதற்காக போலீஸ் கையில் தடி, துப்பாக்கி? பிறகு, முத்தம் கொடுக்கவா கொடுத்துள்ளார்கள்.? இது என்ன அரசாங்கம்? வெங்காய அரசாங்கம்” என்றிருந்தது அந்த அறிக்கை. (1965 மே-28.விடுதலை)

அது மட்டுமல்ல, ‘கிளர்ச்சிக்கு தயாராவோம்’ என்று வேறு முழங்கி 

"திராவிடர் கழகத்தினர் எல்லாம் கையில் மண்ணெண்ணை, தீப்பெட்டியோடு கிளம்புங்கள். கலவரக்காரர்களை- காலிகளை கண்டால் அந்த இடத்திலேயே அவர்கள் மீது எண்ணெயை ஊற்றிக் கொளுத்துங்கள்" என்று அறிக்கை வேறு விட்டு கொதித்திருந்தார்.

போராட்டம் நடத்திய தமிழர்களை, தமிழ் அறிஞர்களை கொளுத்துங்கள் என்றார் பெரியார்.

“எனது இந்தி எதிர்ப்பு என்பது, இந்தி கூடாது என்பதற்கோ, தமிழ் வேண்டும் என்பதற்கோ அல்ல என்பதை தோழர்கள் உணர வேண்டும். மற்றெதற்கு என்றால், ஆங்கிலமே பொது மொழியாக, அரசாங்க மொழியாக, தமிழ்நாட்டு மொழியாக ஆக வேண்டும் என்பதற்காகவே ஆகும்...ஆகையால் தமிழர் தோழர்களே! உங்கள் வீட்டில் மனைவியுடன், குழந்தைகளுடன், வேலைக்காரிகளுடன் ஆங்கிலத்திலேயே பேசுங்கள். பேசப் பழகுங்கள்” (27.1.1969-ல் விடுதலை அறிக்கை) 

இந்த தமிழ் வெறுப்புணர்வு, பெரியாருக்கு இறுதிவரை இருந்தது. 

1968-ல் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த கலைஞர் ஏதோ ஒரு பிரச்சனைக்காக, “தமிழுக்கு ஒரு ஆபத்து என்றால் அமைச்சர் பதவியை தூக்கி எறிவோம்” என்று சும்மா ஒரு சவடால் அடித்தார் (2009ல் ஈழ இன அழிப்பை தடுக்க Mp-க்கள் பதவியை ராஜினாமா செய்வோம் என நாடகமாடியது போல்). 

அப்படியான நாடக பேச்சைக்கூட பெரியார் சகித்துக் கொள்ளவில்லை. 

“எதற்கு பதவியை தூக்கி எறியனும். இதுதான் ஈரோட்டுப் பள்ளியில் கற்ற கல்வியா. நான் நாற்பது வருடமாக கூறி வருகின்றேன். தமிழ் காட்டுமிராண்டி மொழி என்று” என்ற புகழ்பெற்ற வார்த்தையை கொட்டினார். ஆனால் இவர்தான் தமிழ்த் தேசியவாதி. தமிழ் மொழிப் பற்றாளர்.

மீண்டும் அந்த வார்த்தை, ‘பெத்தவனுக்குதான் தெரியும் வலி. மற்றவனுக்கு தெரியாது. மற்றவர்களின் ஒட்டுத் திண்ணையில் குடியிருப்பவர்கருக்கும், குறிப்பாக திராவிடர்களுக்கு… 

- பா. ஏகலைவன்

(முக நூலிலிருந்து)

கட்டுரையாளரின்  முகநூல் பக்கத்திற்கு செல்ல கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்

https://www.facebook.com/100072044809967/posts/pfbid0HDT66B5pdvn34tW9cMkrGjKFKicjCD8GhW5eHByWBegQ2i7wkwsMTMVGWTL9ULcbl/?app=fbl

Disclaimer: இந்த பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. விவாதத்திற்காக இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு