நீதிமன்ற பாசிசத்தை ஒருபோதும் நாம் ஆதரிக்க முடியாது

துரை. சண்முகம்

நீதிமன்ற பாசிசத்தை ஒருபோதும் நாம் ஆதரிக்க முடியாது

பாசிச நடவடிக்கைகளை கட்சி ரீதியாக அணிபிரித்துக்கொண்டு நியாயப்படுத்துவது என்பது பாசிசத்தை ஆதரிப்பதுதான். 

பி .ஆர். பாண்டியன் மற்றும் அதிமுக செல்வராஜ் ஆகியோர் மீது ஓ. என். ஜி. சி . ஐ எதிர்த்ததற்காக அளிக்கப்பட்டுள்ள 13 ஆண்டுகால சிறை தண்டனை என்பதை அந்தாளுக்கு வேண்டும்! என்பது போல சிலர் பார்க்கிறார்கள். 

இது தொடர்பாக நான் இட்ட முந்தைய பதிவை அந்த தனிநபரின் அரசியல் தன்மையை ஆதரிப்பதாக சுருக்கி புரிந்து கொள்கிறார்கள்.

விசயம் ஓ. என். ஜி .சி ஐ எழுத்துப் போராடியதற்காக 13 ஆண்டு காலம் சிறை தண்டனை எனும் தீர்ப்பு பற்றியே நமது விவாத கவனம் இருக்க வேண்டும் என்பதுதான்.

அந்த நபர் பாஜகவோடு தொடர்பு உள்ளவர் அரசியல் பிழைப்புவாதி என்பதற்காக நீதிமன்ற பாசிசத்தை ஒருபோதும் நாம் ஆதரிக்க முடியாது. ஏனென்றால் அது அடுத்து மக்களுக்காக போராடும் யார் மீதும் ஏவப்பட காத்திருக்கிறது. எனவே அதை கண்டிப்பதும் தடுப்பதும்தான் முதல் பிரச்சனை. 

குறிப்பிட்ட நபர்களின் அரசியல் பிழைப்புவாதத்திற்கு அளிக்கப்பட்ட தண்டனை அல்ல அது, நாம் மகிழ்ந்து வரவேற்க.

வேளாண் மண்டலத்தில் எண்ணெய் எடுப்பு நிறுவனங்களை யார் எதிர்த்தாலும் எச்சரிக்கை எனும் அரசியலைப் புரிந்து கொள்ளாமல், அவரின் தனிப்பட்ட பிழைப்புவாத தொடர்புகளை முதன்மைப்படுத்தி இந்த நீதிமன்ற தாக்குதலை நியாயப்படுத்துவது , பாசிசம் எந்த அளவுக்கு தனி நபர்களை முன்னுக்கு தள்ளி சமூக ஏற்பை பெறுகிறது எனும் அபாயத்தை உணர வைக்கிறது .

அப்படிப் பார்த்தால் தனி நபரை விட அரசு என்பதே கார்ப்பரேட் தொடர்பில்தான் இருக்கிறது. 

அது எந்த அரசாக இருந்தாலும்! அதை ஆதரிப்பவர்களை எல்லாம் ஆளும் அரசின் பிழைப்புவாத மக்கள் விரோத தன்மைக்காக இப்படி தண்டித்தால் ஏற்க முடியுமா?

பி .ஆர்.  பாண்டியனை விமர்சிப்பது அம்பலப்படுத் துவது என்பதை அரசியல் ரீதியாக செய்யலாம். அதற்காக காவிரி மண்டல கார்ப்பரேட் அரசு கூட்டாளிகளின் பாசிச தாக்குதல் பக்கம் நின்று கொள்ள முடியாது. மக்கள் எதிரிகளின் நோக்கத்தில் தன் நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வதாக மகிழ்ந்து வாழவும் முடியாது.

விவசாயிகளுக்காக போராடாத ஒடுக்கும் அரசை கண்டிக்காத அரசின் கலாட்படை பிழைப்பு வாத சக்திகள் ஒரு வகையில் பி.ஆர்.பி. அரசியல் பிழைப்பு வாதத்தின் மறுபக்கங்களே!

நாம் கவனத்தில் கொள்ள வேண்டியது வேளாண் பாதுகாப்பு மண்டலத்தில் ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட கார்ப்பரேட் முதலாளித்து இலாபத்துக்கான ஆக்கிரமிப்பை எதிர்த்துப் போராடினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என அரசு அமைப்பு காட்டும் அபாய அறிகுறிதான் இந்த அளவுக்கு மீறிய நீதிமன்றத் தாக்குதல் என்பதை புரிந்து கொள்வதுதான் முக்கியம். 

      - துரை. சண்முகம்

https://www.facebook.com/100080904177819/posts/885013617538769/?rdid=c2XYs3DCoJUNcuuA

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு