திருத்தி எழுதப்பட வேண்டிய தீர்ப்புகள்!

அறம் இணைய இதழ்

திருத்தி எழுதப்பட வேண்டிய தீர்ப்புகள்!

தமிழக மண்ணில் எது நடக்கக் கூடாது எனத் தவித்தோமோ, அது நீதிமன்றத் தீர்ப்பு வழியாக அரங்கேறத் துடிக்கிறது. அமைதி பூங்காவாகத் திகழும் தமிழ் நாட்டை அல்லோகல பூமியாக்க நீதித் துறையை பயன்படுத்தும் நீசப் போக்கை – அறம் தவறி, அத்துமீறி வழங்கப்படும் நீதிபதி சுவாமிநாதன் தீர்ப்புகளை அலசுகிறார், ஹரிபரந்தாமன்;

மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அவர்கள் மீண்டும் ஒரு சர்ச்சைக்குரிய தீர்ப்பை வழங்கி, அறுபடை வீடுகளில் முதல் வீடான திருபரங்குன்றத்தை கலவரத் தீ பிடிக்கும் குன்றமாக்க முயற்சித்துள்ளார்.

வழக்கமாக ஒவ்வொரு வருடமும் மதுரையில் உள்ள திருப்பரங்குன்ற மலையின்  மேல் உள்ள உச்சி பிள்ளையார் கோயிலில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபத்தன்று தீபம் ஏற்றப்படுவதை நாம் அறிவோம். ஆனால், அதே மலையின் மேல் உள்ள தர்காவிற்கு அருகிலும்  கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்ற அவரது டிசம்பர் – 1,-2025 ஆம் தேதிய தீர்பால் திருபரங்குன்றம் கார்த்திகை தீப நாளன்று கலவர பூமியானது.

இதற்கு  சுவாமிநாதன் சொல்லும் காரணம் மிகவும் விநோதமானது. கார்த்திகை தீபம் கொண்டாடும் வீடுகளில் ஒரு தீபம் மட்டுமா ஏற்றப்படுகிறது, பல இடங்களில் வீடுகளில் தீபங்கள் ஏற்றப்படுவது போல், திருப்பரங்குன்றம் மலையிலும் வழக்கமாக  தீபம் ஏற்றும் இடத்தோடு மற்றொருஇடத்திலும் ஏற்றினால் என்ன தவறு? என்கிறார் நீதிபதி.

திருவண்ணாமலையிலும், சபரி மலையிலும் எப்படி ஒரே இடத்தில் மாத்திரமே தீபம் ஏற்றப்படுகிறதோ, அதுவே திருப்பரங்குன்றத்திற்குமானது.  தனிப்பட்ட வீட்டையும், கோயில் போன்ற பாரம்பரியமான இடங்களையும் ஒப்பிடுவதே சரியல்ல என்பது என் கருத்து.

தர்காவிற்கு அருகில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று பல ஆண்டுகளாக சனாதானிகள் செய்து வந்த முயற்சிக்கு இந்த தீர்ப்பு  வலு சேர்க்கிறது. இதனால் மத நல்லிணக்கத்திற்கு மதுரையில் அதிலும் குறிப்பாக திருப்பரங்குன்றத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

திருப்பரங்குன்றம் முருகன் கோயில் மலையின் அடிவாரத்தில் உள்ளது. முருகன் கோயில் கர்ப்ப கிரகத்திற்கு நேர் மேலே அதே மலையில் உள்ளது தான் உச்சிப் பிள்ளையார் கோயில். நூறாண்டுகளுக்கும் மேலாக உச்சிப் பிள்ளையார் கோயிலில் உள்ள தீபத் தூணில் தான் கார்த்திகை தீபத்தன்று தீபம் ஏற்றும் நிகழ்வை முருகன் கோயில் நிர்வாகம் செய்து வருகிறது.

சில சனாதானிகள் தர்காவிற்கு அருகிலுள்ள தீபத்தூணில் தான் கார்த்திகை தீபத்தை ஏற்ற வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்குகளை போட்டனர்.

அந்த வழக்குகள் கார்த்திகை தீபத்திற்கு மிக நெருக்கத்தில் போடப்பட்டது ஏன்? அவசர கதியில் வழக்கு போட்டு அவசர கதியில் விசாரித்து அதிரடித் தீர்ப்பும் தரப்பட்டு, மேல் முறையீட்டுக்கு அவகாசமின்றி அவசரகதியில் அதை நீதிபதி அமல்படுத்தியே ஆக வேண்டும் என நிர்பந்திப்பதெல்லாம் தமிழக நீதித் துறை வரலாற்றில் இது வரை இல்லாததாகும்.

இதில் பாதிப்புக்கு உள்ளாகும் தர்கா நிர்வாகத்திற்கும், வக்பு போர்டுக்கும் போதிய வாய்ப்பு வழங்காமல் இந்த சர்ச்சைக்குரிய  தீர்ப்பை வழங்கியுள்ளார்.

டிசம்பர்-3 ஆம் தேதி கார்த்திகை தீப நாள் என்ற நிலையில், டிசம்பர்-1 அன்று தீர்ப்பு வழங்கியதன் மூலம், இரு நீதிபதிகள் அமர்வு முன் மேல்முறையீடு செல்வதும் சிரமம் என்பதை எவரும் அறிவர்.

இந்த விவகாரத்தில் 2017 ஆம் ஆண்டில் மதுரை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு தர்காவிற்கு அருகில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்து, விரிவான தீர்ப்பை அளித்துள்ளது. அந்த தீர்ப்பிற்கு விரோதமான தீர்ப்பை இப்போது நீதிபதி ஜி. ஆர்.சாமிநாதன் வழங்கியதன் விளைவை நாடே பார்த்தது.

நீதிமன்ற நடைமுறைகளின் படி இரு நீதிபதிகள் அமர்வு வழங்கிய தீர்ப்பு ஒற்றை நீதிபதியை கட்டுப்படுத்தும். ஆனால், அந்த நடைமுறைகளை தூக்கி எறிந்து, நீதித்துறை வகுத்துள்ள ஒழுக்கத்திற்கு மாறாக தீர்ப்பு அளித்துள்ளார் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன்.

இப்போதைய 49 பக்கங்களைக் கொண்ட சர்ச்சைக்குரிய தீர்ப்பில் வழக்கை  தாக்கல் செய்தவர்கள் என்ன வாதாடினர் என்பதை அவர் கூறவில்லை. ஆனால்,  வழக்கை போட்டவர்களுக்காக வரிந்து கட்டிக் கொண்டு தானே வாதாடி தீர்ப்பை வழங்கினார், நீதிபதி சுவாமிநாதன்!

இந்த வழக்கினை எதிர்த்து தர்கா நிர்வாகமும், வக்பு போடும் மட்டுமன்றி முருகன் கோயில் நிர்வாகமும்,  தமிழக அரசின் இந்து அறநிலையத்துறையும் உச்சிப் பிள்ளையார் கோயில் தீபத் தூணில் மட்டுமே வழக்கம் போல  கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும், தர்காவிற்கு அருகில் கார்த்திகை தீபம் ஏற்றுவது வழக்கமில்லை என்று வாதாடின.

1920 ஆம் ஆண்டில் ஒரு வழக்கை கோயில் நிர்வாகம் மதுரை சிவில் கோர்ட்டில்  தாக்கல்  செய்தது. 1923 ஆம் ஆண்டில் அந்த வழக்கில் வழங்கிய தீர்ப்பில் ,திருப்பரங்குன்ற மலையில் உள்ள மசூதி, தர்கா மற்றும் நெல்லித் தோப்பு என்ற பகுதி இஸ்லாமியருக்கு சொந்தமானது என்று கூறப்பட்டுள்ளது.அந்த தீர்ப்பை வழங்கியவர் நீதிபதி ராம ஐயர் ஆவார். அவரது தீர்ப்பு லண்டனில் உள்ள பிருவி  கவுன்சிலால் உறுதி செய்யப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இப்போது நீதிபதி சுவாமிநாதன் அனுமதித்துள்ள இடத்தில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்றால், இஸ்லாமியருக்கு சொந்தமான நெல்லித்தோப்பு பகுதி வழியாக சென்று தான் தீபத்தை ஏற்ற வேண்டும். இது எப்படி சரியாகும்.?

மேலும், தர்கா அருகில் உள்ள சம்பந்தப்பட்ட  இடத்தை நேரில் சென்று பார்வையிடும் போது எதிர் வழக்காடிய கட்சிக்காரர்கள், வழக்குரைஞர்களுக்கு முறையாக அறிவிக்காமல் ஒற்றை மனிதராக  நீதிபதி சுவாமிநாதன்  பார்வையிட்டது முறையற்றது. மேலும், தன்னைத் தவிர்த்து வேறு எவரும் வர வேண்டாம் என்று வாய்மொழியில் கூறியதாக எதிர் தரப்பில் கூறப்படுகிறது. இதை நீதிமன்றத்தில் உள்ள சிசிடிவி பதிவிலும் சரி பார்த்துக் கொள்ளலாம் என்றும் எதிர் தரப்பினர் கூறுகின்றனர்.

அவ்விடத்தில் கார்திகை தீபம் ஏற்றுவதை தமிழ்நாடு அரசாங்கம் தடுத்ததாக தொடுக்கப்பட்ட  நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாமதிக்காமல் அவசர, அவசரமாக எடுத்து சி.ஐ.எஸ்.எப் வீரர்கள் பாதுகாப்புடன் ஏற்றுங்கள் என விரைந்து உத்திரவு பிறப்பித்தார். நான் மட்டும் நீதிபதியாக இல்லை என்றால், நானே அங்கு கார்திகை தீபம் ஏற்றுவேன் என்றும் கூறியுள்ளார். இதுவே இந்த வழக்கில் சமூக அமைதி மற்றும் நல்லிணக்கத்தை பொருட்படுத்தாமல் தனிப்பட்ட முறையில் அதிக ஈடுபாடு காட்டுகிறார் என்பதற்கான ஒப்புதல் வாக்குமூலமாகிறது.

சமூக பதற்றத்தை உருவாக்கும் இவ்வழக்கில்  இந்து அமைப்பினர் அத்துமீறி சட்டம், ஒழுங்கை சிதைப்பதற்கு தூண்டுதலாக இருந்தது நீதிபதி சுவாமி நாதனின் தீர்ப்பு என்றால், அது மிகையில்லை.

நேற்று கார்த்திகையை முன்னிட்டு திருப்பரங்குன்றம் தீபத்தை காண மதுரை  மாவட்ட கிராமங்களில் இருந்தும் வெளிமாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து மலையை சுற்றிவிட்டு, கோயிலில் அமைதியாக சுவாமி தரிசனம் செய்து சென்றனர். இவர்களோ, உள்ளூர் மக்களோ இந்து அமைப்பினர் அரசுக்கு எதிராக நடத்திய அத்துமீறலில் பங்கெடுக்கவில்லை என்பது கவனத்திற்கு உரியதாகும்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழக அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு மனு இன்று (டிச.4) நீதிபதிகள் ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அரசுத் தரப்பில் வைக்கப்பட்ட வாதங்களாவன;

#  ‘திருப்பரங்குன்றம் மலை உச்​சி​யில் உள்ள தீபத் தூணில் தீபம் ஏற்றும் விவகாரத்தில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவை எதிர்த்து நாங்கள் மேல்முறையீடு செய்யத் தயாராகி வந்தோம். ஆனால், அதற்குள் உயர் நீதிமன்ற பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்ட மத்திய தொழில் பாதுகாப்புப் படையினரின் பாதுகாப்போடு மலை உச்சியில் தீபத் தூணில் தீபம் ஏற்ற மனுதாரருக்கு அனுமதி வழங்கப்பட்டது. இது சட்டவிரோதமானது.

# வழக்கமாக தீபம் ஏற்றும் இடத்தில் எவ்வித தடையுமின்றி தீபம் கோயில் நிர்வாகத்தால் ஏற்றப்பட்டது. ஆனால், 100 ஆண்டுகளாக வழக்கத்தில் இல்லாத பழக்கமாக தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டிய அவசியம் என்ன?’

# இந்த உத்தரவால் திருப்பரங்குன்றத்தில் சட்டம் ஒழுங்கு, சமூக நல்லிணக்கம் பாதிக்கப்பட்டுள்ளது. மனுதாரர் 10 பேருடன் சென்று தீபம் ஏற்ற அனுமதி வழங்கப்பட்ட நிலையில், அவர் ஒரு படையையே திரட்டி வந்தார். மேலும் சிஐஎஸ்எஃப் வீரர்கள் உயர்நீதிமன்ற வளாக பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டவர்கள். அவர்களை சட்டம் ஒழுங்கு பணி மேற்கொள்ள அனுமதிக்க முடியாது. மேலும், மனுதாரரை பாதுகாப்பதும் சிஐஎஸ்எஃப் வீரர்கள் பணியல்ல.

# மனுதாரருக்கு தீபம் ஏற்றுவதைத் தாண்டி மறைமுக உள்நோக்கம் உள்ளது. அவருடைய செயல் கலவரத்தைத் தூண்டுவதாக அமைந்தது. அவரால் திரண்ட கூட்டத்தினர் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டதால் போலீஸ் மீது தாக்குதல் நடந்தது. காவலர்கள் சிலர் காயமடைந்துள்ளனர். மலைக்குச் செல்லும் வாயில்கள் சேதம் அடைந்துள்ளது. எனவே, மனுதாரர் ராம ரவிக்குமார் மீதுதான் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அரசு தரப்பில் வாதம் வைத்த இந்த வழக்கில், இன்று இரு நீதிபதிகள் அளித்த தீர்ப்பில்,  நீதிமன்ற அவமதிப்புக்கு தடை விதிக்க மறுத்ததோடு ‘’நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் உத்தரவில்  தவறு இருப்பதாக தெரியவில்லை. ராம ரவிக்குமாரோடு 10 பேரை அழைத்து போக சொன்னதும் தவறில்லை, அவருக்கு பாதுகாப்பாக மத்திய படை செல்லச் சொன்னதும் தவறில்லை. அரசு ஏதோ நோக்கத்துடன் வழக்கை தொடர்ந்துள்ளது. வழக்கை மீண்டும் ஜி.ஆர்.சுவாமிநாதனே விசாரிப்பார். மாநில அரசு கடமையை செய்யத் தவறியதாலேயே மத்திய படை செல்ல தனி நீதிபதி உத்தரவிட்டார்’’ என்று தெரிவித்ததோடு, தமிழக அரசின் மனுவையும் தள்ளுபடி செய்துள்ளனர்.

நீதிபதி சுவாமிநாதன் வழங்கிய தீர்ப்பு எவ்வளவு தவ்றானதோ, அதே போலவே இரு நீதிபதிகளும்  ஒரே நாளில் விரைந்து விசாரணை செய்து, அதிரடியாக வழங்கிய தீர்ப்பும் தவறானது. தமிழக அரசு தரப்பில் நியாயமாக வைக்கப்பட்ட வாதங்கள் நீதிபதிகளால் புறக்கணிக்கப்பட்டுள்ளது துரதிர்ஷ்டவசமானது.

நீதிபதி சுவாமிநாதன் வழங்கிய தீர்ப்புகளை அவதானிக்கையில்,

# பார்ப்பனரல்லாதார் அர்ச்சகராக முடியாது

# கரூர் வழிபாட்டுத் தளத்தில் பார்ப்பனர்கள் உண்ட எச்சில் இலையின் மேல் பக்தர்கள் உருளுவதை அனுமதித்தது, போன்றவை  சனாதானத்திற்கு ஆதரவாகவும்  அரசமைப்புச் சட்ட கோட்பாடுகளுக்கு எதிரானதுமாகும் என்பது எமது விமர்சனம்.

# தன் மீது கடும் குற்றச்சாட்டு சுமத்திய சவுக்கு சங்கர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுத்து, தானே தீர்ப்பளிப்பது என்பது நீதித்துறை ஒழுங்கிற்கே விரோதமானதாகும்.

பாஜக ஆட்சிக்கு வந்ததற்கு பின்னர், இந்த உயர் சாதி சனாதானிகள் பெரும் எண்ணிக்கையில் நீதிபதிகளாக நியமிக்கப்படுவதால் இது போன்ற தீர்ப்புகள் சர்வ சாதாரணமாக வழங்கப்படுகின்றன. சமூக பிரதிநிதித்துவம் நீதிமன்றங்களில் சமன் செய்யப்படும் போதே இது போன்ற விபரீதங்களுக்கு முடிவு கிடைக்கும்.

ஹரிபரந்தாமன், மேனாள் நீதிபதி, சென்னை உயர்நீதிமன்றம்

அறம் இணைய இதழ்

https://aramonline.in/23427/thiruparangkunram-theepam/

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு