பாஜக திமுக கள்ள உறவு

லிங்கம் தேவா

பாஜக திமுக கள்ள உறவு

எங்கே கம்யூனிஸ்டுகள் தவறுகிறார்களோ அங்கே பாசிசம் வளர்கிறது னு சொல்றாங்க.

எங்கே கம்யூனிஸ்டுகள் தாங்கள் யார் என்பதையே மறந்துவிட்டு முதலாளித்துவ கட்சியின் கீழ் ஒன்றிப் போகிறார்களோ, அங்கே பாசிசமும் பாயாசமும் கள்ள உறவு கொண்டு மக்களை மட்டும் அல்ல கம்யூனிஸ்டுகள் என்று மறந்துவிட்டவர்களையும் சேர்த்தே ஏமாற்றிச் சுரண்டுகிறது.

தி.மு.க ஆட்சி பொற்கால ஆட்சியெல்லாம் இல்ல போலீஸ் ஆட்சி னு சொல்றீங்க. சரி, அப்பறம் எதுக்கு மற்றெந்த முதலாளித்துவ கட்சி அவங்களை விமர்சனம் பண்ணினாலும்,

தி.மு.க அரசாங்கம் மேல எப்ப எங்க இருந்து அடி விழுந்தாலும் அந்தக்கட்சிக்காரங்களே அமைதியா இருந்தாக் கூட, முதல் ஆளா முன்னுக்கு வந்து முட்டுக் குடுக்குறீங்க ?

பாசிசப் போக்கு எங்க இருந்தாலும் அது எதிர்க்கக் கூடியது தான். அதைவிட்டுட்டு தி.மு.க அரசிடம் அந்தப் போக்கு இருந்தால் "பாயாசம்  சுவையானது. உடலுக்கு நல்லது." என்று பேசுவதெல்லாம் அபத்தமாக இல்லையா ?

எந்தப் பாயாசம் சுவையானது ?

சாம்சங் இல் இன்று வரை தொழிலாளர்களை இரண்டாம்தரமாக நடத்தி அவர்களுக்கு எதிராக செயல்படுகிறதே அந்தப் பாயாசம் சுவையானதா ?

கைதான தொழிலாளர் பிரதிநிதிகளை மனஉளைச்சலுக்கு ஆளாக்கி மொட்டை அடித்து அனுப்பியதே அந்தப் பாயாசம் சுவையானதா ?

வேங்கைவயலில், பாதிக்கப்பட்டவர்கள் தான் குற்றவாளிகள் என்றும் அங்கு மலம் கலக்கப்படவே இல்லை என்றும் வழக்கை மாற்றியதே அந்தப் பாயாசம் சுவையானதா ?

திருப்பரங்குன்றம் பகுதிகளில் மதநல்லிணக்கத்திற்காக நோட்டீஸ் கொடுத்தவர்கள் மீது பாய்ந்து, அவர்களை தடுத்துவிட்டு இன்னொரு பக்கம் மதவாதிகளை மிகப்பெரிய அளவில் கூட்டம் கூட்டி முழங்க விட்டதே அந்தப் பாயாசம் சுவையானதா ?

அண்ணா பல்கலைக்கழக விஷயத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணே இன்னொரு நபரிடம் இருந்து அழைப்பு வந்ததை உறுதி செய்தும், aeroplane mode இல் இருந்தது என நிரூபிக்கப்பட முடியாத உண்மைக்கு மாறான தகவலைச் சொல்லி வழக்கை முடித்து முக்கிய குற்றவாளிகளை காப்பாற்றியதே அந்தப் பாயாசம் சுவையானதா ? 

தேசிய கல்விக் கொள்கையில் இருக்கும் மற்ற விஷயங்களை எல்லாம் மறைத்து விட்டு, அவற்றை நடைமுறைப்படுத்திக் கொண்டே, வெறும் இந்தி மட்டும் தான் பிரச்சனை என பிரச்சனையை சுருக்கி அரசியல் ஆதாயம் தேடுகிறதே அந்தப் பாயாசம் சுவையானதா ?

திருநர்களின் பாதுகாப்பை கேலிக்கு உள்ளாக்கும் விதமாக காவல்துறையால் மோசமாக அடித்து உதைத்து விரட்டப்பட்டார்களே அந்தப் பாயாசம் சுவையானதா ?

அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் மாணவியின் தகவலை இணையத்தில் வெளியிட்ட காவல்துறை குற்றம் செய்யவில்லை, அதை download செய்த பத்திரிகையாளர்கள் தான் குற்றவாளிகள் என பத்திரிக்கையாளர்களை மிரட்டி அவர்களின் கைபேசிகளை பிடுங்கி வைத்ததே ? அந்தப் பாயாசம் சுவையானதா ?

நாங்குநேரியில் சிறுவன் வெட்டப்பட்டதை அடுத்து, சாதி வெறியர்களுக்கு தோதாக அச்சிறுவனின் குடும்பத்தை ஊரை விட்டே விரட்டி வேறொரு ஊரில் தங்க வைத்து, அந்த விவகாரத்தில் நீதிநாயகம் சந்துரு அவர்களின் அறிக்கையையும் அப்படியே கிடப்பில் போட்டதே அந்தப் பாயாசம் சுவையானதா ?

பரந்தூர் மக்களின் விருப்பத்திற்கு மாறாக அவர்களது கிராமங்களை கையகப்படுத்தியே தீருவேன் என முழுமூச்சாக நிற்கிறதே அந்தப் பாசமிகு பாயாசம் சுவையானதா ?

பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் பாதுகாப்பு இல்லாத சூழலை உருவாக்கி வச்சிட்டு தினமும் பேப்பரில் எத்தனை வன்கொடுமைனு கணக்கு எடுக்குற நிலையை உருவாக்கி வந்திருக்குதே அந்தப் பாயாசம் தான் சுவையானதா ?

தொடர்ந்து காவல்நிலைய மரணங்களை வேடிக்கை பார்த்துக் கொண்டும் பூர்வ குடிகளின் வீடுகளை இடித்துக் கொண்டும் எதிர்ப்புக் குரல்களே ஏழாத வண்ணம் எந்த ஒரு போராட்டங்களும் (செந்தொண்டர் அணிவகுப்பும் கூட )/நடத்த விடாமல் செய்யும் இந்த உன்னதப் பாயாசம் சுவையானதா ?

பரந்தூர் - வேங்கைவயல் கிராமங்களை மொத்தமாக தனிமைப்படுத்தி சிறை செய்யும், #tag போட்டு மக்களை ஏமாற்றிக் கொண்டே Neet விலக்கு உட்பட வாக்குறிதிகளை நிறைவேற்றாமல் மக்களை வஞ்சிக்கும் இந்த கார்ப்பரேட் பாயாசம் சுவையானதா ?

காண்டராக்ட் முறையால் துப்புறவு பணியாளர்கள், போக்குவரத்து தொழிலாளர்கள் என அனைத்து தரப்பு ஆட்களையும் சுரண்டும் இந்தக் காண்டராக்ட் பாயாசம் தான் சுவையானதா ?

ஒன்றிய அரசுக்கு சற்றும் சளைக்காமல் அத்தனை பொதுத்துறையிலும் தனியார் மயத்தை புகுத்தி வரும் மண்ணுக்கேற்ற பாசிசம் தான் சுவையானதா ?

எந்தப் பாயாசம் சுவையானது ?

மக்களுக்கு எதிராக நடந்து கொள்ளும் - இங்கு - ஆளும் அரசின் இந்துத்துவ, சாதிய, முதலாளித்துவ போக்கை விமர்சிக்காமல் அவர்கள் மீது விழும் விமர்சனத்துக்கு எல்லாம் முன் விழுந்து காப்பாற்றுவது தான் உங்கள் கூட்டணி தர்மம் என்றால் அந்த தர்மத்தைக் குப்பையில் வீசுங்கள்.

- லிங்கம் தேவா

https://www.facebook.com/share/p/18r91HiGob/?mibextid=oFDknk

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு