பட்டது போதாதா? கெட்டது போதாதா?
துரை. சண்முகம்
பட்டது போதாதா?
கெட்டது போதாதா?
எனும் அளவுக்கு முற்போக்கு ஜனநாயக சக்திகள் குறிப்பாக இடதுசாரி கட்சிகள்” திமுக தலைமையில் பாசிச பாஜகவை வெல்வது!” எனும் பைத்தியக்கார மாடலை கைவிட வேண்டும்.
ஆம்! சுய சிந்தனை ஆய்வு அற்ற இந்தக் கருத்தைக் கடந்து சிந்திக்க வேண்டும். பாசிச பாஜகவை வெல்வதற்கான குறிப்பான சமரசமற்ற பாட்டாளி வர்க்க கண்ணோட்டத்தில் ஆன கொள்கை திட்டத்தின் அடிப்படையில் மக்களை அணி திரட்ட வேலை செய்வதே சரி! என்பதை ஒவ்வொரு சம்பவங்களும் நிரூபித்துக் கொண்டிருக்கின்றன.
நாம் இன்னும் பலம் பெறவில்லை! என்று பலம் பெறுவதற்கான அடிப்படை வேலை செய்யாமல் தொடர்ந்து பாசிச சமரசவாத சக்திக்கு முட்டுக் கொடுத்துக் கொண்டே போய்க்கொண்டு இருந்தால், பிறகு முட்டுக் கொடுக்கவும் தெம்பு இல்லாமல் மக்களால் புறந்தள்ளப்படும் சூழ்நிலையே உருவாகும்.
தேர்தல் வழியில் தேய்ந்து அழிந்த இடதுசாரிகளின் அனுபவங்களும் இதைத்தான் நமக்குச் சொல்கி ன்றன. கம்யூனிச அரசியலை வளர விடாமல், தங்கள் கால்களின் அளவுக்கு வைத்துக்கொண்டு, அதை மீறினால் மிதித்து கொள்ளவதுதான் கார்ப்பரேட் கட்சிகளின் கொள்கை. கடந்த கால தொழிற்சங்க மற்றும் அரசியல் அனுபவங்களில் இருந்து பார்த்தால் திமுக ஒருபோதும் புரட்சிகர அமைப்புகளை வளர விடாது. புரட்சிகர நோக்கத்திற்காக திமுகவுடன் ஐக்கியப்படவும் முடியாது.
“மகாவிஷ்ணு” விவகாரத்தில் கூட
தலைமை ஆசிரியரை பலிகடாகி ஆக்கி விட்டு தப்பிக்கிறது பள்ளிக்கல்வித்துறை. இதன் கல்விக் குழுவில் தேசிய கல்விக் கொள்கையை ஒட்டிய அழுத்தம் இருப்பதாக சொல்லி போராடி வெளியே வந்த பேராசிரியர் ஜவகர் போன்றவர்கள் உள்ள நிலைமை யை உணர்த்தி இருக்கிறார்கள்.
பள்ளிக்கல்வி துறைக்கு உள்ளேயே உள்ள ‘காவி’ய நிலைமையை பட்டவர்த்தனமாக பேசியதற்காக தண்டிக்கப்பட்ட ஆசிரியர் உமா மகேஸ்வரி அவர்களின் அனுபவமும் இதுதான்.
ஆனால் பொதுமக்கள் மத்தியில் நடப்பது ராமர் ஆட்சி! என்று சொன்ன ரகுபதியையோ! வரப்போவது ரெட்டியார்களுக்கு சாதகமான ஆட்சி! என்று சொன்ன அமைச்சர்களையோ! பூணூல் போட்ட முருகன் மாநாடு நடத்தும் அமைச்சரையோ! திமுக தண்டித்ததில்லை.
ஏன்? முதலமைச்சரே திமுகவும் இந்துக்கள் கட்சிதான்! என்பதும்,
ஆர்எஸ்எஸ் ராஜ்நாத் சிங்கை பாராட்டி “ராஜ்நாத்சிங் கலைஞரின் நாணயத்தை வெளியிடுவது பொருத்தமானது!” என்பதும்
காவியோடு சமரச சந்தர்ப்பவாத அரசியல் நடத்தும் சக்திதான் திமுக என்பதை குறிப்பு காட்டுகிறது.
காவி பாசிச நிலைமையில் மட்டுமல்ல, கார்ப்பரேட் அம்பானி திட்டங்களுக்கும் பாசிச பாஜகவின் பொருளாதாரத் திட்டங்களுக்கும் பொருத்தமான கட்சிதான் திமுக என்பதை களத்தில் நிரூபித்து வருகிறது. வசன வேறுபாடுகளை வர்க்க வேறுபாடுகள் போல சித்தரிக்கும் போலி முற்போக்காள ர்களையும் சேர்த்து அம்பலப்படுத்த வேண்டிய தருணம் இது.
உண்மையில் சிறு சிறு புரட்சிகர இயக்கங்கள் ஆனாலும் மக்கள் மத்தியில் பாசிச எதிர்ப்புக்கான அடிப்படை அரசியல் வேலை செய்வதுதான் கம்யூனிச அரசியல் வளர்வதற்கு உதவி செய்யும்.
இதில் சமரசவாத கட்சிகளையும் அவர்களின் சந்தர்ப்பவாத செயல்களையும் அம்பலப்படுத் துவது தவிர்க்க இயலாதது.
தேர்தல் பழம் பழுக்கும்! என்று இலவு காத்து கிளியாக இருக்க வேண்டிய அவசியம் கம்யூனிச இயக்கங்களுக்கு தேவையற்றது.
நீங்கள் என்ன செயல் திட்டத்தின் அடிப்படையில் ஆதரித்தாலும் கம்யூனிஸ்டுகளுக்கே உரிய செயல் திட்டத்தை ஒருபோதும் அவர்கள் ஒடுக்காமல் விடப்போவதில்லை.
பிற்பாடு, நேற்று வரை திமுகவை ஆதரித்தவர்கள்தானே நீங்கள்! என்று மக்களிடம் உங்களை காரியவாதிகளாக அம்பலப்படுத் தவே சமரசவாத சக்திகள் மேல் கை எடுக்கும். புரட்சிகர இயக்கங்க ளுக்கு இது ஒரு தற்கொலை பாதையாகவே போய் முடியும்.
இடதுசாரி போர்வையில் உலவும்
சில மகாவிஷ்ணுக்களின் அருளுரையைக் கேட்டு “ இந்தியா கூட்டணி நலனுக்கு உட்பட்ட வகையில் திமுகவின் தவறுகளை பரிசீலிக்க வேண்டும்! இல்லையேல் பாசிசம் பூந்துடும்!”
எனும் பாரம்பரிய சுத்த வாக்கிய பஞ்சாங்கத்தை தூக்கி எறிந்து,
பாசிசத்தோடு சமரச ஊசலாட்டம் கொண்ட, அதை வெல்வதற்கான எந்த பொது திட்டமும் இல்லாமல்
ஆட்சியே பாசிசத்தை வென்று விடும்! எனும் சுழலுக்குள் சிக்காமல் தவிர்ப்பது நல்லது.
தங்களது பாட்டாளி வர்க்க அரசியல் வேலை திட்டத்தை முன்னெடுப்பதுதான் இப்போதே விழித்துக் கொண்டு மக்களிடம் உள்ள வர்க்க சக்திகளுக்கு தலைமை தாங்குவதற்கான வழிமுறை. ஏனெனில் நாட்டின் அரசியல் பொருளாதார நிகழ்ச்சி நிரல் போக்கு மக்களின் தன்னெழுச்சியான போராட்டங்களை தருவிக்கும் சூழலில் இருக்கிறது. இதற்கு தலைமை தாங்கும் சக்தியாக ஒரு கம்யூனிச இயக்கம் தன்னை தகவமைத்து வளர்த்துக் கொள்வதற்கான அவசியத்தையும் சேர்த்து பரிசீலிக்க வேண்டி உள்ளது. மக்களின் அரசியல் தேவைக்கு பயன்படாத எந்த இயக்கமும் இனி வளர வாய்ப்பில்லை. இந்தத் தேவைக்கு பொருந்தும் சூழலில் இருந்து தான் எந்த ஒரு அமைப்பும் இனி பலம் பெறவும் முடியும்.
- துரை. சண்முகம்
https://www.facebook.com/share/p/NC4AsYfFtWNoFzNv/?mibextid=oFDknk
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு