ஒரு மொழிக் கொள்கை - தாய் மொழிக் கல்வி பற்றி
முகநூல் பார்வை
எனது மொழிக்கொள்கை . . .
-------------------------------------------------------------------------
எந்தவொரு இனமும் தனது அனைத்துக் கருத்துப் புலப்பாட்டுச் செயல்களுக்கும் தனது தாய் மொழியையே பயன்படுத்தவேண்டும். எந்தவொரு அடிப்படையிலும் பிற மொழிகளை அவற்றிற்குப் பயன்படுத்தக்கூடாது.
1) தமிழகத்திலும் தமிழ் இனம் தனது தாய்மொழியாகிய தமிழ்மொழியை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும்.
2) ஆங்கிலமோ இந்தியோ இரண்டுமே தமிழ் இனத்திற்கு அயல்மொழிகள்தான்!
3) அரசு அலுவலகப் பணிகள் அனைத்தும் தமிழில்தான் நடைபெறவேண்டும்.
4) தொடக்கக்கல்விமுதல் உயர்நிலை ஆய்வுவரை பயிற்றுமொழியாகத் தமிழ்தான் தமிழகத்தில் நீடிக்கவேண்டும்.
5) வழிபாட்டுத்தலங்களில் தமிழ்தான் பயன்படுத்தப்படவேண்டும்.
6) தொழிற்சாலை, வணிக நிறுவனங்களில் தமிழ்தான் முழுமையாகப் பயன்படுத்தப்படவேண்டும்.
7) ஆங்கிலமோ பிரஞ்சுமொழியோ எந்த ஒரு அயல்மொழியும் ஒருவருக்குத் தேவையென்றால், அதை அவர் படிப்பதற்குக் கல்வி நிறுவனங்கள் உதவவேண்டும். ஆனால் அது தேவைப்படாதவர்கள்மீது அந்த மொழிகளைத் திணிக்கக்கூடாது.
8) பொது ஊடகங்கள் அயல்மொழிக் கலப்பின்றி, முறையாக, தவறின்றி, தமிழைப் பயன்படுத்த முன்வரவேண்டும்.
9) சிறுபான்மை இன மக்கள் தங்கள் தாய்மொழியில் கல்வி கற்கத் தேவையானவற்றை அரசு செய்துகொடுக்கவேண்டும்.
10) தமிழ்நாடு அரசு அலுவலகங்கள், வணிக நிறுவனங்களில் பணியாற்றும் தமிழர் அல்லாதவர்களுக்குப் பயன்பாட்டுத்தமிழ் முறையாகக் கற்றுக்கொடுக்கவேண்டும். அப்போதுதான் அவர்கள் இங்கு மக்களுடன் தமிழில் கருத்தாடலை மேற்கொள்ள இயலும்.
தமிழ்நாடு என்பது தமிழ்மொழி நாடாக இருக்கவேண்டும்; ஆங்கிலம், இந்தி போன்ற எந்தவொரு அயல்மொழிகளின் மேலாண்மையும் தமிழ் மொழியின்மேல் இருக்கக்கூடாது.
தமிழ்நாடு, குசராத்தாகவோ இங்கிலாந்தாகவோ இருக்கக்கூடாது.
ஆனால் மேற்குறிப்பிட்ட அனைத்து நோக்கங்களும் நிறைவேற்றப்படுவதற்கு . . . முதல் தேவை இந்திய ஒன்றியத்தின் ஆட்சிமொழியாக இந்திமட்டும் இல்லாமல், அனைத்து இந்தியமொழிகளும் ஆட்சிமொழிகளாக ஆக்கப்படவேண்டும். அனைத்து மொழிகளின் வளர்ச்சிக்கும் தேவையான உதவிகளை இந்திய ஒன்றிய அரசாங்கம் அளிக்கவேண்டும். எந்தவொரு மொழிக்கும் தனிப்பட்ட உரிமைகள் அளிக்கக்கூடாது.
அதற்காக இந்திய ஒன்றியத்தில் இந்தி அல்லாத பிறமொழிகள் பேசும் இனங்கள் ஒன்றுபட்டு, இணைந்து, போராடவேண்டும்.
எனது மொழிக்கொள்கை (2)
--------------------------------------------------------------------------
மொழிக்கொள்கைபற்றிய எனது முகநூல் பதிவையொட்டி நண்பர் திரு. மாலன் அவர்கள் அனைவருக்கும் எழக்கூடிய ஐயங்களைக் கேட்டுள்ளார்கள்.
ஐயம்: 1. // இன்னொரு இந்திய மொழி பேசும் சக இந்தியரோடு உரையாட, உறவாட, வணிகம் செய்வதற்கான தொடர்பு மொழி எது? //
பதில்: எனது மொழிக்கொள்கையில் நான் தெளிவாக முன்வைத்திருப்பது : தமிழகத்தில் . . . தமிழர்கள் . . . தங்களது அனைத்துப் பணிகளையும் தங்களது தாய்மொழியாகிய தமிழில்தான் மேற்கொள்ளவேண்டும் என்பதே ஆகும்.
ஆட்சிமொழி, பயிற்றுமொழி, வணிகமொழி - இந்த மூன்று தகுதிகளையும் ஒரு இனத்தின் தாய்மொழி பெறவேண்டுமா கூடாதா என்பதுதான் இங்கு அடிப்படையாகப் பேசப்படுகிறது.
ஆட்சிமொழி . . . இந்திய ஒன்றியத்தில் ஆட்சிப்பணிகளில் தமிழர்கள் இந்திய ஒன்றிய அரசோடு தமிழிலேயே தொடர்புகொள்ளும் உரிமை வேண்டும். அதற்குத் தேவை - தமிழும் ஆட்சிமொழிகளில் ஒன்றாக அரசியல் சட்டத்தில் இடம்பெறவேண்டும். ''ஆட்சிமொழி'' அதாவது அரசாங்கப் பணிகளுக்கான மொழி!
பயிற்றுமொழி . . . தமிழகத்துக் கல்விக்கூடங்களில் மாணவர்கள் தங்கள் துறைசார்ந்த அறிவைத் தாய்மொழிவழியே பெறும் நிலைமை ஏற்படவேண்டும். தமிழகத்துக் கல்விநிறுவனங்களில் தமிழே பயிற்றுமொழியாக இருக்கவேண்டும்.
பொருளாதார உற்பத்தி , வணிகம் ஆகியவற்றிற்கான மொழி . . . தமிழர்கள் தமிழ்நாட்டில் தங்களது வணிகம் உட்பட பிற பொருளாதார நிறுவனங்கள், நிலையங்களில் தமிழ்வாயிலாகத் தங்கள் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளும் உரிமை வேண்டாமா? இங்கு விற்கப்படும் பொருள்களைப்பற்றித் தமிழிலே தெரிந்துகொள்ளும் உரிமை வேண்டாமா?
ஒரு இனம் தனக்குத் தொடர்புள்ள ஆட்சிப்பணிகளைத் தன் தாய்மொழிவழியாக மேற்கொள்ள உரிமை இல்லாத ஒரு இனமாக நீடிக்கவேண்டுமா?
ஒரு இனத்தைச் சேர்ந்த மாணவர்களுக்குத் தங்களது தாய்மொழிவழியாக அறிவுத்துறைகளில் பயிற்சிபெற உரிமை வேண்டாமா?
இவற்றை உள்ளடக்கியதுதான் நான் முன்வைத்துள்ள மொழிக்கொள்கை!
ஆனால் வணிகம், அரசியல் தொடர்புகாரணமாக, பிறமொழி பேசுபவர்களிடமும் உரையாடல் செய்யவேண்டியிருக்குமே! அப்போது என்ன செய்வது?
இதுதான் நண்பர் மாலன் அவர்களின் ஐயம்!
இங்குச் ''சக இந்தியர்'' என்றால் யார் ? 20 மொழிகளுக்குமேல் பேசக்கூடிய ''இந்திய ஒன்றியத்தில்'' இந்தச் ''சக இந்தியர்களின்'' - அதாவது தமிழரைத்தவிர - தாய்மொழிகள் ஒன்று இல்லை! பல. அதில் ஒன்று இந்திமொழி. தமிழர்கள் தெலுங்கர்களோடு உறவாட, வணிகம் செய்யத் தேவையானது தெலுங்குதான்.
ஆனால் இந்தத் ''தமிழர்'' தெலுங்கரோடு மட்டும் அல்லாமல், கன்னடர்கள், மலையாளிகள், வங்காளிகள் , இந்திமொழி பேசுகிறவர்கள் என்று பலமொழி பேசுகிறவர்களோடு ''உறவாடத்'' தேவை இருக்கலாம். அவ்வாறு இருக்கும்போது, தெலுங்குமட்டும் போதாதே. அப்போது என்ன செய்வது? ஏதாவது ஒரு மொழியைப் பொதுமொழியாகக்கொண்டால் நல்லதுதானே என்ற எண்ணம் உருவாகுவது இயற்கைதான்! அந்த இணைப்புமொழியாக இந்தியோ ஆங்கிலமோ இருக்கலாம் அல்லவா? இதுதான் நண்பர் மாலன் அவர்கள் முன்வைக்கிற ஐயம்!
என்னைப்பொறுத்தவரை இந்த ஐயம் ஒரு தேவையான ஐயம் என்றாலும் கல்வித்துறை, ஆட்சித்துறை, தமிழக உள்மாநில பொருளாதாரத்துறை ஆகியவற்றிற்கு வெளியே உள்ள தனிநபர் வணிகத்துறை, பொருளாதாரத்துறை தொடர்பான ஐயம் இது!
இந்தப் பிற மாநிலங்களோடு ஏற்படும் வணிகத் தொடர்புக்காக, எந்த மொழி தேவையோ அந்த மொழியைத் தேவைப்படுகிறவர்கள் கற்றுக்கொள்ளட்டும். இதற்காக அனைத்து தமிழர்களையும் தாய்மொழி அல்லாத பிற இனத்தின் - அந்நிய இனத்தின் மொழியைப் படிக்க ஏன் கட்டாயப்படுத்தவேண்டும்?
பிற மொழி தேவைப்படுகிறவர்கள் அதைக் கற்றுக்கொள்ளட்டும்! அதைத் தடுக்கவேண்டும் என்று நான் கூறவரவில்லை! நான் முன்வைப்பதெல்லாம் தமிழகத்தின் பெரும்பான்மை மக்களுக்குத் தேவையான . . . அரசியல் சட்டத்தில் இடம்பெறவேண்டிய வேண்டிய மொழிக்கொள்கை!
ஐயம் 2: //ஆங்கிலமும் இந்தியும் அயல் மொழி, தேவையான அயல் மொழிகளைக் கற்க கல்வி நிறுவனங்கள் உதவ வேண்டும் என்கிறீர்கள். மெத்தசரி. அது இந்திக்கும் பொருந்தும்தானே? விரும்புவோர் அதனைப் படிக்க அரசுக் கல்வி நிறுவனங்கள் உட்பட வாய்ப்பும் வசதியும் செய்து தரப்பட வேண்டும்தானே?//
பதில் : நான் இதில் தெளிவாக இருக்கிறேன். பிற மொழிகள் தேவைப்படுகிறவர்கள் தமிழகத்தில் அதைக் கற்றுக்கொள்வதற்கு . . . விருப்பத்தின் அடிப்படையில் . . . தேவையானவற்றை அளிப்பதில் எனக்குக் கருத்துவேறுபாடு இல்லை! ஆனால் அதைக் கட்டாயமாக்கக்கூடாது! விருப்பப்பாடமாக வையுங்கள்! தேவைப்படுகிறவர்கள் படித்துக்கொள்ளட்டும்!
ஐயம் 3 : //"பஞ்ச பூதத்தின் செயல்கள் அவை சார்ந்த தொழில்நுட்பங்கள் மூத்த வளருது மேற்கே. அவை குறித்த தகவல்கள் தமிழ் மொழியில் குறைவு. தமிழ் மட்டுமே அறிந்தோர் தங்களை இற்றைப்படுத்திக் கொள்ள யாது செய்தல் வேண்டும்?"//
பிறநாடுகளில் - பிறமொழிகள் பேசும் நாடுகளில் - வளர்கின்ற அறிவியல், பொருளாதாரம், இலக்கியம் தொடர்பான தகவல்களைத் தமிழிலிலேயே தமிழர்கள் பெறுவதற்குத் தேவையான நடவடிக்கைகளைத் தமிழக அரசு மேற்கொள்ளவேண்டும். அதற்குத் தேவையான உதவிகளை இந்திய ஒன்றிய அரசும் அளிக்கவேண்டும்.
நண்பர் மாலன் அவர்கள் எழுப்பியுள்ள ஐயங்கள் 2, 3 -க்காகத் தமிழக மக்கள்மீது இந்தியையோ அல்லது ஆங்கிலத்தையோ சட்டங்களின்வாயிலாகத் திணிப்பது. . . கட்டாயமாக்குவதைத்தான் நான் எதிர்க்கிறேன்!
எனது முக்கியக் கோரிக்கைகள் . . .
பலமொழிகள் பேசும் பல மாநிலங்களின் ஒன்றிய அரசாக இருக்கும் இந்திய அரசு . . . தனது அரசியல் சட்டத்தில் . . .
ஒரு மொழியைமட்டும் . . .
இந்திமொழியைமட்டும் . . .
ஆட்சிமொழியாகத் தக்கவைப்பது சரி இல்லை!
இந்திய ஒன்றியத்தில் இணைக்கப்பட்டுள்ள அத்தனை இனங்களின் மொழிகளும் ஆட்சிமொழிகளாகச் சட்டத்தில் இடம்பெறவேண்டும்! இந்திய ஒன்றியமானது இந்திமொழி பேசும் இனத்தின் அரசு மட்டும் இல்லையே!
எனவே, ஆட்சிமொழி, பயிற்றுமொழி, பொருளாதார - வணிக மொழி என்ற மூன்று தகுதிகளையும் தமிழுக்குச் சட்டத்தின்வழியே அளிக்கப்படவேண்டும்!
ஒரு இனத்தின்மீது பிற இனங்களின் மொழிகளையோ பண்பாடுகளையோ அரசியல் சட்டங்களின் வழி திணிக்கக்கூடாது!
எனது மொழிக்கொள்கை (3)
--------------------------------------------------------------------------
பேராசிரியர் செ. இரா. செல்வக்குமார் அவர்கள் மொழிக்கொள்கைபற்றிய எனது பதிவை வரவேற்று எழுதியுள்ளார்கள். அதையொட்டி, நான் மேலும் ஒரு விளக்கத்தை இங்கு அளிக்கிறேன்!
''நன்றி பேராசிரியர் அவர்களே. ''தொடர்புமொழி'' பற்றிய உரையாடல் ஒருபுறம் இருக்கட்டும். அதைச் சமுதாய வளர்ச்சியின் இயக்கத்தில் மக்களே தீர்மானித்துக்கொள்வார்கள். ஆனால் அரசியல் சட்டத்தில் இந்திமொழியோடு பிற மொழிகளையும் ஆட்சிமொழிகளாக ஆக்குவதில் என்ன சிக்கல்?
''சென்னை ஐ ஐ டி -யின் செயற்கை அறிவுத்திறன் வளர்ச்சிக்கும்'' இதற்கும் என்ன தொடர்பு? இதற்குக் கீழே நான் விடை அளிக்கிறேன் பேராசிரியரே. . . அது சரிதானா என்று பாருங்கள்!
'' இந்திமொழிதான் அரசியல்சட்டப்படி இந்திய ஒன்றியத்தின் ஆட்சிமொழி. அதற்கு இணையாகப் பிற இந்திய மொழிகளை ஆட்சிமொழிகளாக அரசியல் சட்டத்தில் சேர்க்கமாட்டோம். பிறமொழி பேசுபவர்களால் இந்தியில் ஒன்றிய அரசோடு தொடர்புகொள்ள முடியவில்லையென்றால், அவர்கள் தங்கள் மொழிகளிலேயே ஒன்றிய அரசுக்குக் கோப்புகளை அனுப்பட்டும். நாங்கள் சென்னை ஐ ஐ டி-யின் உதவியுடன் அவற்றை இந்திமொழியில் மொழிபெயர்த்துக் கொள்கிறோம்! அவற்றிற்கான பதில்களை இந்தியில் நாங்கள் தயாரித்து, பின்னர் சென்னை ஐ ஐ டி-யின் உதவியுடன் அவரவர் மொழிகளுக்கு மொழிபெயர்த்து அனுப்புகிறோம். போதுமா? இதற்குப்பிறகும் பிற மொழிகள் ஏன் ஆட்சிமொழிகளாக ஆக்கப்படவேண்டும்? ''
காதில் பூ சுற்றுகிற ஏமாற்று வேலை இது! கணினி அறிவியல் வளர்ச்சிக்கும் இனங்களின் தன்னுரிமைக் கோரிக்கைகளுக்கும் என்ன தொடர்பு? பிறமொழிகள் ஆட்சிமொழிகளாக ஆக்கப்பட்டுவிட்டால், அந்தக் கணினி அறிவியல் வளர்ச்சி மக்களுக்குப் பயன்படாதா?
இங்கு எனக்குத் தெரிந்த ஒரு (100 விழுக்காடு) உண்மையைக் கூறுகிறேன் ... இந்திய ஒன்றிய அரசு இதுபோன்ற கணினிமொழியியல் வளர்ச்சித் திட்டங்களில் செய்வது என்ன? இந்தி (வடமொழி உட்பட) மொழியை அடிப்படையாகக்கொண்டு - அதன் அகரமுதலி, இலக்கணம் ஆகியவற்றிற்கு ஏற்ப பிற மொழிகளின் அகரமுதலிகளையும் இலக்கணங்களையும் கணினிவழியே ''செதுக்கிக்கொள்ள'' ஏராளமான கோடிகள் செலவிடப்படுகிறது.
அதற்காகவே TDIL ( Technology Development of Indian Languages) என்ற அமைப்பு ஒன்றிய அரசின் மின்னணுவியல் துறையின்கீழ் இயங்குகிறது. மேலும் வட இந்தியாவில் உள்ள IIT களும் ஹைதராபாத் போன்ற இடங்களில் நீடிக்கிற IIIT என்ற ஆய்வு நிறுவனங்களும் கோடிக்கணக்கில் நிதி உதவிகள் அளிக்கப்படுகின்றன. இந்தியை அடிப்படையாகக்கொண்டு தமிழ்க்கணினி மொழியியலில் யாரும் இங்கு வேலை செய்யத் தயாராக இருந்தால், அதற்கு எவ்வளவு நிதி வேண்டுமென்றாலும் கொடுக்க இந்திய ஒன்றிய அரசு தயாராக உள்ளது!
எனவே இதில் நாம் ஏமாறாமல் இருக்கவேண்டும். நமது ஒரே கோரிக்கை . . . தமிழ் உட்பட அனைத்து இந்தியமொழிகளுக்கும் இந்திய ஒன்றியத்தின் அரசியல் சட்டத்தில் ஆட்சிமொழி தகுதி வழங்கப்படவேண்டும். இந்திமொழி வளர்ச்சிக்கு அளிக்கப்படுகிற அத்தனை திட்டங்களும் பிற மொழிகளுக்கும் அளிக்கப்படவேண்டும். இதைச் செய்துவிட்டு, ஐ ஐ டி - களைப் பயன்படுத்தி, மக்களுக்கு உதவிபுரியட்டும்! வரவேற்போம்!
எனது மொழிக்கொள்கை (4)
------------------------------------------------
இந்திய அரசியல் சட்டத்தில் இந்திமொழிக்கு மட்டுமே ஆட்சிமொழித் தகுதி கொடுக்கப்பட்டுள்ளது !
தமிழ் உட்பட பிற இந்தியமொழிகளுக்கு அரசியல் சட்டத்தில் அந்தத் தகுதி கொடுக்கப்படவில்லை!
ஏன்?
இதுதான் இன்றைய அடிப்படை வினா!
இந்திய ஒன்றிய அரசில் மாற்றி மாற்றி அமர்கிற பேராயக்கட்சியும் பா ஜ கட்சியும் இதற்கு விடை தரவேண்டும்!
அதற்கு என்ன தடை என்பதை விளக்கவேண்டும்!
அதை விட்டுவிட்டு . . .
'' மாநிலங்களை மூன்றாக வகைப்படுத்தியுள்ளோம்! அதன்படி, இந்தியைமட்டுமே தாய்மொழியாகக் கொண்ட மாநிலங்கள் ஒரு வகை!
அவ்வாறு முழுமையாகக்கொள்ளாமல், 30 விழுக்காடு மக்கள்மட்டுமே இந்தியைப் பயன்படுத்துகிற மாநிலங்கள் இரண்டாவது வகை!
இந்திமொழியே பேசாத தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் மூன்றாவது வகை!''
'' இந்த மூன்றாவது வகைப்பட்ட மாநிலங்கள் தங்கள் தாய்மொழிகளிலேயே கல்வியை மேற்கொள்ளலாம். அதற்கு எவ்விதத்தடையும் கிடையாது! இந்தி மொழியைப் படிக்கவேண்டும் என்ற கட்டாயம் இல்லை!''
இவ்வாறு இன்று அனைத்துமொழிகளுக்கும் அரசியல் சட்டத்தில் ஆட்சிமொழித் தகுதி அளிக்கப்படவேண்டும் என்ற மையமான கோரிக்கை பின்தள்ளப்பட்டு . . . மறைக்கப்பட்டு . . . மறக்கடிக்கப்பட்டு ..
கல்விக்கூடங்களில் இந்தித் திணிப்பு உண்டா இல்லையா என்பதுபற்றிய பேச்சாக . . . மொழிச்சிக்கல் இன்று திசை திருப்பப்படுகிறது!
இது சரி இல்லை! அடிப்படைச் சிக்கலை மறைக்காதீர்கள்!
தமிழகத்தில் கல்விக்கூடங்களில் ஆங்கிலமா அல்லது இந்திமொழியா என்ற வாதமும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது!
இதுவும் தவறு!
தமிழகத்துக் கல்விக்கூடங்களில் தாய்மொழியாகிய தமிழா அல்லது . . .
ஆங்கிலம், இந்தி போன்ற அந்நியமொழிகளா என்ற வினாவைநோக்கிப் பேச்சு திரும்பவேண்டும்!
எனவே இந்திய ஒன்றிய அரசின் அரசியல் சட்டத்தில் இந்திமொழிக்கு மட்டுமல்லாமல், அனைத்து இந்திய மொழிகளுக்கும் ஆட்சிமொழித் தகுதி அளிக்கப்படவேண்டும் என்பதில்தான் முழுக்கவனமும் செலுத்தப்படவேண்டும்!
அந்தத் தகுதி தமிழுக்குக் கிடைத்துவிட்டாலே . . . கல்விக்கூடங்களில் தமிழ்மொழி முழுமையான மேலாண்மையைப் பெற்றுவிடும்!
இந்திமொழி இன்று பெறுகிற அத்தனை வசதிகளையும் தமிழ்மொழி பெற்றுவிடும்!
எனது மொழிக்கொள்கை (6)
-------------------------------------------------------------------------
நண்பர் திரு. மாலன் அவர்கள் இந்திமொழிக்குமட்டுமே இந்திய அரசியல் சட்டத்தில் ஆட்சிமொழித் தகுதி அளிக்கப்பட்டிருப்பதற்கான காரணங்கள்ப்பற்றிச் சில விளக்கங்களை அளித்துள்ளார். நான் புரிந்துகொண்டவரையில், பின்வரும் கருத்துக்களே அவர் கூறுகிறார் என நினைக்கிறேன். எனது புரிதலில் தவறு இருக்கலாம்.
(1) ஆங்கிலேய மேலாண்மைக்கு எதிரான மக்களின் விடுதலைப் போராட்டங்களில் இந்திமொழி பேசும் பகுதிகளே முன்னணி வகித்தன.
(2) மேலும் ஆங்கிலம் படிக்க வாய்ப்புக்கிடைத்த தலைவர்களே விடுதலைப் போராட்டத்திற்குத் தலைமைதாங்கினார்கள்.
(3) ஆங்கிலேய மேலாண்மை முடிவுக்கு வந்து, இந்திய ஒன்றிய அரசு அமைக்கப்படும்போது, இந்திமொழி பேசாத மாநிலங்களின் விடுதலைப் போராட்டங்களை மேற்கொண்டவர்கள்கூட - இராஜாஜி போன்றவர்கள்கூட - இந்தியாவுக்கும் பொது மொழி ஒன்று வேண்டும்; அது இந்தியாகவே இருக்கலாம்; அப்படி ஒரு பொதுமொழி இல்லையென்றால் இந்தியா என்பது மேலும் பல பிரிவினைகளுக்கு உட்பட்டுவிடும் என்று மறைந்த அண்ணல் அம்பேத்கார்கூட கருதினார்;
மேற்கூறிய காரணிகள் எல்லாம் செயல்பட்டு, இந்திமொழியைப் பொதுமொழியாகக்கொண்டு, அதற்கு ஆட்சிமொழித் தகுதி அளிக்கப்பட்டது என்று திரு. மாலன் அவர்கள் கூறுகிறார். அவரது வாதம் ... ''அன்றைய அரசியல் சூழல்'' காரணமாக அவ்வாறு நடைபெற்றது!
(4) அதுபோன்று இந்திமொழிமட்டுமே ஆட்சிமொழி என்பதில் பேராயக் கட்சிக்கும் பா ஜ கட்சிக்கும் அடிப்படையில் வேறுபாடு கிடையாது; ஆனால் அதைச் செயல்படுத்தும் அணுகுமுறையில் வேறுபாடு உள்ளது; இன்றைய பா ஜ கட்சி அரசாங்கம் இந்திபேசாத மாநிலங்களில் அந்த மாநிலங்களின் மொழிகளின் முழுமையான பயன்பாட்டுக்கு - கல்விக்கொள்கை உட்பட - உதவி செய்கிறது என்பதும் அவரது கருத்து.
எனது கருத்துக்கள் . . . இந்தி பேசும் மாநிலங்களில் அன்றைய ''விடுதலைப் போராட்டத்தில்'' ஈடுபட்ட அன்றைய பேராயக் கட்சியின் ''தலைவர்கள்'' இரண்டு முதன்மையான காரணங்களுக்காகவே ஈடுபட்டார்கள்:
(1) ஆங்கிலேய அரசிடம் இங்குள்ள மேல்வர்க்கத்தினரும் படித்த இடைத்தட்டுவர்க்கத்தினரும் பலவகை சலுகைகளைப் பெறுவதற்கான ''மனு போடும்'' அமைப்பாகவே பேராயக்கட்சியை நடத்திச் சென்றனர். இவர்களே அன்றைய ''பேராயக் கட்சியின் மிதவாதிகள்'' - கோகலே போன்றவர்கள்!
(2) முகலாயப் பேரரசர்களால் ''இந்து மதம்'' பாதிக்கப்பட்டு இருந்தநிலையில் , அந்தப் ''பாதிப்பிலிருந்து'' இந்துமதம் மீண்டுவந்து, மீண்டும் இங்கு ''இந்துமத அரசு'' நிறுவப்படவேண்டும். அதற்குத் தேவையிருந்தால் , அந்நிய ஆங்கில அரசு அகற்றப்படவேண்டும். பாலகங்காதார திலகர் போன்றவர்கள் ((''பேராயத் தீவிரவாதிகள்'') இதில் உறுதியாக ஒரு கட்டம்வரை இருந்தனர்.
(3) ஆங்கிலேய மேலாண்மைக்கு எதிராக - உண்மையான விடுதலைப்போராட்டங்களுக்காக - பல முனைகளில் மக்கள் முன்னுக்கு வரும்போதெல்லாம், மேற்குறிப்பிட்ட இரண்டு பிரிவினர்களும் அதை வளரவிடாமல் தவிர்த்தனர்; தடுத்தனர்.
(4) அதேவேளையில் தமிழகத்தைச் சேர்ந்த வ உ சி போன்றவர்கள் அரசியல் பொருளாதார அடிப்படையில் ஆங்கிலேய மேலாண்மையை எதிர்த்துப்போராட முன்வந்தனர். ஆனால் அவர்களைப் பேராயக்கட்சியே ஆங்கிலேய அரசின் உதவியுடன் ''செயலற்றவர்களாக'' ஆக்கினர். வ உ சி, பாரதி போன்றோர் இதற்கு எடுத்துக்காட்டுக்கள்.
(5) முதல், இரண்டாவது உலகப் போர்களினால் உலக அளவில் ஏகாதிபத்திய அரசுகள் காலனி நாடுகளில் தங்களது பொருளாதார மேலாண்மையைத் தக்கவைக்க ... புதிய ''வழிமுறைகளை'' முன்வைத்தனர். அதன் ஒரு பகுதியாகவே இந்தியாவில் ஆங்கிலேய அரசும் பேராயக் கட்சியும் முஸ்லீம் லீக் கட்சியும் இணைந்து, ''1947 - அரசியல் மாற்றத்தை'' ஏற்படுத்தினர்.
இதுதான் உண்மையான வரலாறு!
பேராயக் கட்சியின் பெரும்பாலான தலைவர்கள் இந்திமொழி பேசும் மாநிலங்களைச் சார்ந்தவர்களாக இருந்ததாலும், ஆங்கில மொழியில் தேர்ச்சி பெற்றவர்களாக இருந்ததாலும் ...
பிற இனங்களின் நலன்களையோ, மொழிகளையோ மதிக்காதவர்களாக இருந்ததாலும் . . .
இந்திய அரசியல் சட்டத்தில் இந்திமொழியைமட்டுமே ஆட்சிமொழியாக ஆக்கினார்கள். இந்தி முதல் மொழி ... ஆங்கிலம் இரண்டாவது மொழி. இதுதான் அன்றைய நிலைபாடு!
எனவேதான் வடக்குக்கும் தெற்குக்கும் இடையிலான முரண்பாடாக . . . மொழிக்கொள்கையில் இந்திமொழியா ஆங்கிலமா என்பதே முன்வைக்கப்படுகிறது.
இவையெல்லாம் 70 ஆண்டுகளுக்குமுன் நிலவிய ''மொழி அரசியல்''!
அந்த ''வரலாறு எல்லாம்'' ஒருபுறம் இருக்கட்டும்!
இன்று இந்திமொழிக்குமட்டுமே கொடுக்கப்பட்டுள்ள ''ஆட்சிமொழித் தகுதி'' தமிழ்போன்ற பிற மொழிகளுக்கும் கொடுப்பதற்கான தடைகள் என்ன?
அன்று ''தவறுகள்'' நடைபெற்றதால், அவை இன்றும் நீடிக்கவேண்டும் என்ற தேவை இல்லையே!
இந்திமொழி பேசும் மக்கள் தங்கள் தாய்மொழியை வளர்ப்பதற்காக ஆங்கிலத்தை அகற்ற முயல்வது உண்மையில் வரவேற்கத் தக்கது!
ஆனால் அதேவேளையில் தமிழ்நாடு போன்ற பிறமொழி மாநில மக்கள் தங்கள் மொழிகளுக்கும் ஆட்சிமொழித் தகுதி கேட்பதில் என்ன தவறு?
அதற்கு என்ன தடை?
எந்தக் கட்சிகள் எதிர்க்கின்றன?
எந்தக் கட்சிகள் ஆதரிக்கின்றன?
இதற்குத் தெளிவான விடைகளை அரசியல் கட்சிகள் அளிக்கவேண்டும்!
வடமாநில மக்கள் ''இந்திமொழியா ஆங்கிலமா'' என்ற வினாவுக்கு . . . ''இந்திமொழியே ... எங்களது தாய்மொழியே'' என்று கூறும்போது . . .
நாமும் இந்திய ஒன்றியத்தின் ஒரு பகுதியாக இருப்பதால் , தமிழ்மொழியை ஆட்சிமொழியாக அரசியல் சட்டத்தில் இணைக்கவேண்டும்; இந்திமொழி வளர்ச்சிக்கு அளிக்கப்படுகிற அத்தனை வாய்ப்புக்களும் தமிழுக்கும் அளிக்கப்படவேண்டும் என்று கூறுவதில் என்ன தவறு?
பிற இனங்கள் தங்கள் மாநிலங்களில் தங்கள் தாய்மொழிகளை ''வளர்க்க'' உதவிசெய்கிறோம்'' என்று கூறுகிற இந்திய ஒன்றிய அரசு . . . முதலில் இந்த மொழிகளுக்கு ''ஆட்சிமொழித்தகுதி'' அளிப்பதில் என்ன சிக்கல்?
அதைவிட்டுவிட்டு, ''புதிய கல்விக்கொள்கையில்'' மாநில மொழிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கிறோம், குழந்தைகளுக்கு மிட்டாய் கொடுத்து ஏமாற்றுவதுபோல '' செம்மொழித் தமிழாய்வு நிறுவனம்'' அமைக்கிறோம் என்று கூறுவது எல்லாம் ஏமாற்றுவேலைதானே!
தமிழ்மொழி உட்பட அனைத்து இந்திமொழிகளையும் ஆட்சிமொழிகளாக ஆக்கிவிட்டு, மற்றவைபற்றி யாரும் பேசலாம்!
அவ்வாறு ஆகிவிட்டாலே, மற்ற எல்லா மொழிச்சிக்கல்களும் தீர்ந்துவிடும்!
மொழி ஒப்பீட்டு ஆய்வுபற்றி எனது கருத்து. . . 7
-------------------------------------------------------------------------
எனது தாய்மொழியாகி தமிழ்மொழி (1)மிகத் தொன்மை வாய்ந்தது! (2) வரலாற்றுத் தொடர்ச்சியுள்ள மொழி! (3) இன்றும் தொடர்ந்து வளர்ச்சியடைந்து- கொண்டிருக்கிற மொழி! (4) தொன்மை இலக்கியத்தில் இருந்து செவ்விலக்கியம்முதல் இன்றைய இலக்கியம் -வரை அனைத்திலும் தன்னை நிலைநிறுத்தியுள்ள மொழி! (5) இன்றும் தமிழ் இனத்தின் அனைத்துச் கருத்தாடல் செயல்பாடுகளுக்கும் தகுதிபெற்ற மொழி!
இவ்வாறு ஒவ்வொரு மொழிச் சமுதாயமும் தனது இனமொழிபற்றிய சிறப்பை உணர்ந்து மகிழவேண்டும்! தனது மொழியின் தொடர்ந்த வளர்ச்சிக்குத் தேவையான பணிகளை மேற்கொள்ளவேண்டும்!
இது ஒருபுறம் இருக்கட்டும்!
மொழி ஒப்பீட்டு ஆய்வு என்பது மொழி ஆய்வில் மிக முகமை உடைய ஒரு பிரிவு!
இந்த ஆய்வின் பணி . . . பல்வேறு மொழிக்கூறுகளை ஆய்வுக்கு உட்படுத்தி . . . இந்த இந்த மொழிக்கூறுகளில் இந்த மொழிகளுக்கிடையே ஒற்றுமை உள்ளது! இந்த இந்த மொழிக்கூறுகளில் வேற்றுமை உள்ளது! என்பதை எடுத்துக்காட்டுவதே ஆகும்!
எந்தவொரு மொழியும் தனது மொழிச்சமுதாயத்தின் தேவைகளை நிறைவேற்றும் வகையில் நீடிக்கும்! வளரும்!
மொழிக்கூறுகளில் எந்தவொரு மொழியும் எந்தவொரு மொழியையும் விட தாழ்ந்தது அல்லது உயர்ந்தது என்று கூறுவதற்கு எந்தவொரு மொழிக்கூறு அடிப்படையும் கிடையாது! இதுதான் ஒப்பீட்டு மொழி ஆய்வு!
இந்த மொழி ஒப்பீட்டு ஆய்வை ஒருவர் தனது அரசியல், பொருளாதார, பண்பாட்டு நோக்கின் அடிப்படையில் உயர்வு - தாழ்வுக்கும், பிற மொழிகளின்மீது மேலாண்மைக்கும் பயன்படுத்துவதற்கு எந்தவித அறிவியல் அடிப்படையும் கிடையாது! அவ்வாறு பயன்படுத்துவது அறிவியல் அடிப்படையிலான ஆய்வைக் கொச்சைப்ப்டுத்துவதாகவே அமையும்!
ஆனால் . . . ஒரு மொழியின் ''சமுதாய மேலாண்மையானது (''ஆதிக்கமானது'')'' அந்த மொழியின் உள்ளார்ந்த மொழிக் கூறுகளின் அடிப்படையில் அமையாது! மாறாக, அந்த மொழி பேசும் இனத்தின் அரசியல், பொருளாதார, பண்பாட்டு மேலாண்மையே அதைத் தீர்மானிக்கிறது! அதாவது அந்த மொழிக்கும் அதனது புறச் சூழலுக்கும் இடையிலான நிலையைப் பொறுத்தது ஆகும்!
ஆங்கிலம், வடமொழி, இந்தி ஆகியமொழிகளின் ''சிறப்பு'' பற்றிப் பேசுகிறவர்கள் மேற்கூறிய புறச் சூழல் கூறுகளைக்கொண்டுதான் பேசுகிறார்கள்! உள்ளார்ந்த மொழிக்கூறுகளின் அடிப்படையில் பேசவில்லை! அவ்வாறு பேசவும் முடியாது! அதற்கு எந்தவித அறிவியல் அடிப்படையும் கிடையாது!
ஆட்சிமொழி, பயிற்றுமொழி, வணிகமொழி என்பவைபற்றிப் பேசும்போது . . . குறிப்பிட்ட மொழிக்கும் அம்மொழிபேசுகிற இனத்திற்கும் இடையில் நீடிக்கிற புறச்சூழல்களை அடிப்படையாகக்கொண்டுதான் பேசுகிறோம்!
ஒரு இனத்தின் மொழியின் செயல்பாடுகளின்மீது மற்றொரு இனத்தின் மொழியான் மேலாண்மை செய்தால், அதற்கு முழுப்பொறுப்பும் அந்தக் குறிப்பிட்ட இனத்தின் ''மேலாண்மையே'' ஆகும்!
''அம்பின் மேல் (அந்த மொழியின்மேல்) எந்தக் குற்றமும் இல்லை! அதை எய்தவர்தான் (மேலாண்மை இனத்தின் செயல்கள்தான்) குற்றம் இழைக்கிறார்''!
பிற இனத்தின் மேலாண்மையால் தன் இனத்தின் மொழியின் செயல்பாடுகள் குறுக்கப்பட்டால் . . . மேலாண்மை இனத்தின் மொழிமீது குற்றம் சாட்டுவதற்கு மொழிக் கூறுகள் அடிப்படை இல்லை! மேலாண்மை இனத்தின் மேலாண்மை அரசியலே அடிப்படை!
அதை ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது! அதை எதிர்த்துப் போராடவேண்டும்! தன் இனத்தின் மொழிக்கு முழு உரிமையும் - ஆட்சிமொழி, பயிற்றுமொழி, வணிகமொழி, வழிபாட்டுமொழி ஆகிய அனைத்திலும் முழு உரிமையும் - பெறுவதற்காகப் போராட வேண்டும்! மேலாண்மை செலுத்துகிற இனத்தின் மேலாண்மை அரசியலுக்கு எதிராகப் போராடவேண்டும்!
இந்தப் போராட்டத்தில் மேலாண்மை செலுத்துகிற இனமானது தனது மொழியின் உள்ளார்ந்த மொழிக்கூறுகளை அதற்குப் பயன்படுத்தினால் அது மிகத் தவறு! அறிவியல் அடிப்படை அற்ற ஒன்று அது!
எந்தவொரு மொழியும் உள்ளார்ந்த மொழிக்கூறுகளும் எந்தவொரு மொழியின் உள்ளார்ந்த மொழிக்கூறுகளையும் விட உயர்ந்தது இல்லை! தாழ்ந்ததும் இல்லை!
அதற்கு எந்தவித மொழி அடிப்படையும் இருக்கமுடியாது! புறக் காரணிகளே அடிப்படை!
இதை மறந்துவிட்டு, ஒரு சிலர் தாங்கள் ''விரும்புகிற'' இனத்தின் மொழிக்கூறுகளை ''உயர்த்திப்பிடித்தால்'' அது அவரது மொழி ஆய்வு அறியாமையையே எதிரொலிக்கும்! இதில் ஐயமே இல்லை!
ஆகவே . . . ஆங்கிலம், இந்திமொழிகளின் மேலாண்மையால் இன்று தாக்குதலுக்கு உட்பட்டுள்ள தமிழ்மொழிக்காகப் போராடுவது என்பது . . . மொழி மேலாண்மைக்கு அடிப்படையிலான இன ஒடுக்குமுறைக்கு - அதற்கு அடிப்படையான அரசியல் ,பொருளாதார, பண்பாட்டு மேலாண்மைக் கூறுகளுக்கு - எதிரான போராட்டமாக அமையவேண்டும்!
''அவர்கள் தவறு செய்கிறார்கள்'' என்றால், அதற்குக் காரணம் , மொழி மேலாண்மைக்கு அடிப்படையான இன ஒடுக்குமுறையையும் அதற்குப் பின்புலமாக அமைகிற அரசியல் , பொருளாதார, பண்பாட்டுக் கூறுகளையும் மறைப்பதற்கே ஆகும்! அவர்கள் அப்படித்தான் செய்வார்கள்!
இதை தாக்குதலுக்கு உட்படுகிற இனம் தெளிவாக உணரவேண்டும்! இல்லையென்றால் போராட்டம் ''பயனற்றுப் போகும்'' ! ''இல்லாத ஊருக்குப்'' பாதை போடுவதாகவே அமையும்!
மொழி ஒப்பீட்டு ஆய்வை மொழிகளைப் புரிந்துகொள்வதற்குப் பயன்படுத்துவோம்!
அதை யாரும் தவறாகப் பயன்படுத்தினால் அதை அம்பலப்படுத்துவோம்! ஆனால் நாம் அதே தவறைச் செய்யக்கூடாது!
எந்தவொரு அறிவியல் வளர்ச்சியும் மக்களுக்கு எதிரானது இல்லை! ஆனால் அதைப் பயன்படுத்துபவர்களின் தவறான அணுகுமுறை மக்களுக்குஎதிரானதுதான்! மொழி ஒப்பீட்டு ஆய்வும் இதற்கு விதிவிலக்கு இல்லை!
''பெரும்பான்மை'' என்ற ''ஜனநாயகத் தீர்வு நடைமுறையை'' எந்தச் சிக்கலுக்குப் பின்பற்றமுடியும்? - நண்பர் திரு. மாலன் அவர்களுக்கு எனது விடை! - 8
-------------------------------------------------------------------------
மொழி ஒப்பீட்டு ஆய்வுபற்றிய எனது முகநூல் பதிவு பற்றி நண்பர் திரு. மாலன் அவர்கள் தனது கருத்துக்களை தெளிவுபடுத்தியுள்ளார். அவருக்கு நன்றி. அவற்றில் நான் வேறுபடுகிற கருத்துபற்றி இங்கு கூறுகிறேன்.
திரு. மாலன் அவர்கள் :
----------------------------------------------------------------------
//தெளிவான கருத்துக்கள். இவற்றை நான் இவ்விதம் தொகுத்துக் கொள்கிறேன்: 1. ஒப்பீட்டு ஆய்வுகளின் அடிப்படையில் எந்த மொழியும் இன்னொரு மொழியைவிட உயர்ந்ததும் இல்லை; தாழ்ந்ததும் இல்லை. 2. ஒரு மொழியின் புறச்சூழலே அது அதிகாரம் பெறுவதைத் தீர்மானிக்கிறது. (சரியாக விளங்கிக் கொண்டிருக்கிறேனா?) இவற்றோடு இன்னும் சில யதார்தங்களையும் சிந்திக்கலாமா? 1.புறச்சூழலின் பொருட்டே (வெளிப்பாட்டிற்காகவும் தொடர்புக்காகவும்) மொழிகள் தோற்றம் பெறுகின்றன.2. மொழிகளின் அந்தச் செயல்பாடு சூழலிலும் தாக்கம் ஏற்படுத்துகிறது. பண்பாட்டு பரிமாற்றம், பண்பாட்டு ஒருமை என்பன அவற்றில் சில. 3.பண்பாட்டுப் பரிமாற்றம் மொழிக்குள் சில மாற்றங்களைக் கொண்டுவருகின்றன. 4. மொழியோ பண்பாடோ புறச்சூழலால் பாதிக்கப்படாத ஓர் இறுக்கமான கண்ணாடிக் குடுவைக்குள் இருப்பதில்லை. 5. ஜனநாயகத்தில் பெரும்பான்மையின் அடிப்படையில் எடுக்கப்படும் முடிவுகளை ஆதிக்கம் என்று சொல்லுதல் பொருத்தமல்ல. //
நான்
---------------------------------------------------------------------
நண்பர் மாலன் அவர்களுக்கு நன்றி . நண்பர் மாலன் அவர்கள் கூறியுள்ளபடி, மொழி என்பதே சமுதாயத் தேவையையொட்டித்தான் தோன்றி வளர்ந்து நீடிக்கின்றன. அதில் ஐயம் இல்லை.
அதுபோன்று ஒரு சமுதாயத்தின் தேவை, பண்பாடு போன்றவையும் ஒரு மொழியின் அமைப்பில் ( சொற்களஞ்சியம், இலக்கண அமைப்பு ) தமது செல்வாக்கைச் செலுத்தும். இதிலும் ஐயம் இல்லை.
இதுபற்றியெல்லாம் சமூகமொழியியல் (Sociolinguistics) , மானிடவியல் மொழியியல் (Anthropological Linguistics) போன்ற துறைகள் ஆய்வுசெய்கின்றன. இதிலும் ஐயம் இல்லை!
சமுதாயம் மாற மாற, வளர வளர மொழியும் வளர்கிறது. அது பாதிக்கப்படாத கண்ணாடிக் குடுவைக்குள் இருப்பதிலை என்பதும் உண்மைதான். இந்த மொழி வளர்ச்சியில் குறிப்பிட்ட சமுதாயத்தின் திட்டமிட்ட பங்குபற்றி மொழிபற்றிய சமூகவியல் (Sociology of Language) என்ற துறை ஆய்வுசெய்கிறது.
ஆனால். . .
மாலன் அவர்கள் முன்வைத்துள்ள 5-ஆவது கருத்து விவாதத்திற்கு உட்பட்டதாகும். ஒரு ஒன்றியத்தில் பல இனங்கள் நீடிக்கும்போது, ஒரு குறிப்பிட்ட இனத்தின் மொழி உரிமை போன்றவற்றில் பெரும்பான்மை அடிப்படையில் தீர்மானிக்கமுடியாது. அனைத்து இனங்களுக்குமான நலன்களைப்பற்றியதில் பெரும்பான்மை முடிவை - அதுவும் சில குறிப்பிட்ட வேளைகளில் - எடுக்கலாம்.
ஒரு இனத்தைப் பட்டினிபோடவேண்டுமென்று ''ஜனநாயக அடிப்படையில் '' - ''பெரும்பான்மை அடிப்படையில்'' தீர்மானிப்பது சரியாகுமா? ஒரு இனத்தின் மொழிதொடர்பான முடிவும் இதைப்போன்றதுதான்! இதில் ''பெரும்பான்மை'' என்ற - ''ஜனநாயகமுறை'' என்ற - ஒரு ''தேன்தடவிய தோட்டாவை'' ஒரு இனத்தின்மீது திணிக்கக்கூடாது. அவ்வாறு திணிப்பது உண்மையான மக்கள் ஜனநாயகம் இல்லை!
தன் இனத்தின் மொழி உரிமை, தேவைப்பட்டால் தேசிய இனங்கள் தனித்து வாழ்வதற்கான தன்னுரிமை ஆகியவற்றை உள்ளடக்கிய அரசியல்சட்டம்தான் ''ஒன்றிய ஜனநாயகச் சட்டமாக'' இருக்கவேண்டும். இல்லையென்றால் அது ''ஜனநாயகம்'' இல்லை!
மாறாக, ''பெரும்பான்மை'' என்ற ஜனநாயகக் கருவியைக்கொண்டு, பெரும்பான்மைப் பிரிவுகள் சிறுபான்மையை அடக்குவதாகவே, ஒடுக்குவதாகவே அமையும்! இனங்களுக்கு இடையே பகைமைதான் நிலவும்!
எனவே, இந்திய அரசியல் சட்டத்தில் தனது தாய்மொழியான தமிழையும் ஆட்சிமொழியாக இணைக்கவேண்டும் என்று தமிழினம் கோரிக்கை முன்வைப்பதில் எவ்விதத் தவறும் இல்லை! மற்றொரு இனத்தின் மொழியைத் தங்கள்மீது திணிப்பதை எதிர்ப்பதில் தவறு இல்லை! இதில் பெரும்பான்மை, சிறுபான்மை என்ற கருத்துக்கே இடம் இல்லை!
பல இனங்கள் நீடிக்கிற ஒரு ஒன்றிய அரசில் அனைத்து இனங்களின் மொழிகளும் ஆட்சிமொழிகளாக ஆக்கப்படுவதே உண்மையான ஜனநாயகமாகும்!
''தொடர்பு மொழிகள்'' - நம்மை எதிர்த்து நாமே போராடவேண்டியுள்ளது!
------------------------------------------------------------------
தமிழகத்தில் நீடிக்கிற இரண்டு முதன்மையான ''மூடநம்பிக்கைகள்'' !
''அறிவுக்கு'' ஆங்கிலம்! ஆங்கிலப் பயிற்றுமொழி!
''கடவுளுக்கு'' வடமொழி! வடமொழி வழிபாட்டுமொழி!
மேற்கூறிய இரண்டின் ''தகுதிகளும்'' சட்டங்களால் கொடுக்கப்படவில்லை! திணிக்கப்படவில்லை!
பிறப்பு, இறப்பு, திருமணம், பெண்குழந்தைகளின் பருவ முதிர்ச்சி, புதுமனைபுகுவிழா, 60 அகவை நிறைவுவிழா , குடமுழுக்குவிழா . . . இவ்வாறு எந்தவொரு ''விழாவாகவும்'' இருந்தாலும் , "கடவுள்களோடு'' தொடர்பு ஏற்படுத்த . . . வடமொழி (வேதங்கள்) தேவை! மேலும் அவற்றை ஓதுவதற்கு ஒரு குறிப்பிட்ட சாதியினரைத்தவிர , வேறு எவருக்கும் ''உரிமை'' கிடையாது!
அதுபோன்று, பள்ளிகளில், கல்லூரிகளில், உயர் ஆய்வில் . . . ''அறிவைப்'' பெறுவதற்கு ஆங்கிலமே தேவை என்ற ஒரு நிலை!
மேற்கூறிய ''தகுதிகளை'' வடமொழிக்கும் ஆங்கிலத்திற்கும் அளிப்பதில் மக்களுக்கே பங்கு மிகுதி!
இந்திமொழி ''ஆட்சிமொழியாக'' திணிக்கப்படுவதை எதிர்த்து, அதைத் திணிக்கிற ''ஆட்சியாளர்களை'' எதிர்த்துப்போராடவேண்டியுள்ளது!
ஆனால் மேற்கூறப்பட்ட வடமொழி, ஆங்கிலமொழி இரண்டையும் நம்மீது நாமேதான் திணித்துக் கொள்கிறோம்! மொழிபற்றிய மிகப்பெரிய மூடநம்பிக்கையே இதற்கு அடிப்படை! சமுதாய அமைப்பும் சூழலும் இதற்கு அடிப்படை என்பதையும் நான் மறுக்கவில்லை!
ஆனால் இதற்கான போராட்டம் . . . யாருக்கு எதிரான, யாருடைய போராட்டம்? நமக்கு எதிராக நாமே போராடவேண்டிய போராட்டம்!
(முகநூலிலிருந்து)
Disclaimer: இந்த பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. விவாதத்திற்காக இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு