நடுக்காவிரி: காவல்துறையால் நிகழும் மரணங்களுக்கு பணியிடை நீக்கம் ஒருபோதும் தீர்வல்ல!

லிங்கம் தேவா

நடுக்காவிரி: காவல்துறையால் நிகழும் மரணங்களுக்கு பணியிடை நீக்கம் ஒருபோதும் தீர்வல்ல!

காவல்துறையால் நிகழும் மரணங்களுக்கு பணியிடை நீக்கம் ஒருபோதும் தீர்வல்ல ! - இனியும் அதைச் சொல்லி ஏமாற்றாதீர்கள்.

தஞ்சாவூர் மாவட்டம் நடுக்காவேரி பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்து வந்த தங்களின் சகோதரனை விடுவிக்கக் கோரி இரண்டு பெண்கள் விஷம் அருந்தியுள்ளனர். அதில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

தற்போது மிகச்சில ஊடகங்கள் தவிர பல்வேறு ஊடகங்களிலும், மேலே குறிப்பிட்ட துணுக்குடன் இந்தச் செய்தி சுருக்கப்படுகிறது. ஆனால், இந்நிகழ்வு மிகவும் விரிவாக விவாதிக்கப்பட வேண்டியது. அரசின் சட்ட ஒழுங்கு, கள்ளத்தனமாக விற்கப்படும் சாராயம், கண்டுகொள்ளாமல் துணை நிற்கும் காவல்துறை, மக்களை காவல்துறை நடத்தும் விதம், பொய் வழக்குகள், கண்முன்னே அப்பாவிகளைச் சாக விட்டு வேடிக்கை பார்க்கும் சீழ்பிடித்த நிர்வாகம் என இதைப் பரந்த அளவில் பார்க்க வேண்டியுள்ளது.

-------------------

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு வட்டம், நடுக்காவேரி அரசமர தெருவை சேர்ந்தவர், அய்யாவு. 

அவரது மகன் தினேஷ் சமூக செயற்பாட்டாளாரகவும், தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் மாவட்டச் செயலாளராகவும் இருந்து வருகிறார் என அறிய முடிகிறது. இவர்மீது போராட்டங்கள் தொடர்பாக அரசியல் சார்ந்து போடப்பட்ட வழக்குகளும் உள்ளூர் அடிதடி வழக்குகளும் என 12 வழக்குகள் இருப்பதாக காவல்துறை தரப்பில் சொல்லப்படுகிறது. தினேஷின் பெரியம்மாள் மகள் துர்கா அவர்கள் மொத்தம் 4 வழக்குகள் மட்டுமே இருந்ததாகவும் மீதமுள்ள வழக்குகள் அனைத்தும் போலீசாரால் ஜோடிக்கப்பட்ட பொய் வழக்குகள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அந்தப் பகுதியில்  கள்ளச் சந்தையில் மது விற்பனை நடக்கிறது என்பதைத் தினகரன் உட்பட பல்வேறு ஊடகங்களும் நடுக்காவேரியை சேர்ந்த மக்களும்  உறுதியாக தெரிவிக்கின்றனர். சில நாட்களுக்கு முன் அப்பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவர் கள்ளச் சந்தையில் மது விற்பனை செய்ய தினேஷின் தந்தையான அய்யாவுவை பயன்படுத்தியிருக்கிறார். இதனைக் கண்டித்து ஆறுமுகத்தின் வீட்டிற்கு சென்று எச்சரித்துள்ளார் தினேஷ். அது பிரச்சனையாக மாறியுள்ளது. 

இதையடுத்து ஆறுமுகத்தின் மகன், 'தன் வீட்டிற்கு வந்து பிரச்சனை செய்ததாக' தினேஷ் மீது காவல் துறையில் புகார் கொடுத்திருக்கிறார். இந்தப் புகாரின் பெயரில்தான்,  ஏப்ரல் 8 ஆம் தேதி இரவு தினேஷ் அவரது தாய்மாமாவின் இறப்பு நிகழ்வுக்காக புறப்பட்டு குடும்பத்துடன் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த போது நடுக்காவேரி காவல் நிலைய ஆய்வாளர் சர்மிளா அவர்களது தலைமையில் கைது செய்யப்பட்டு, காவல் நிலையம் அழைத்து வரப்பட்டுள்ளார்.

தமிழக அரசின் காவல் துறை என்பது பொதுவாகவே சீழ்பிடித்துப் போன அமைப்பாக விளங்குகிறது. ஏற்கனவே, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டவர்கள் உயிரிழப்பதும் காவல்துறையால் கடுமையாக தாக்கப்படுவதும் உளவியல் ரீதியாக அச்சுறுத்தப்படுவதும் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்நிலையில் போலீசாரால் அழைத்துச் செல்லப்பட்ட தங்கள் சகோதரனுக்கு அசம்பாவிதம் ஏதும் நடந்து விடக்கூடாது என்பது அவரது சகோதரிகளை இயல்பாகவே பதட்டமடையச் செய்துள்ளது.

மேலும், தினேஷின் சகோதரி மேனகாவுக்கு ஏப்ரல் 12 அன்று திருமண நிச்சயதார்த்தம் செய்வதாக திட்டமிடப்பட்டு அதற்கான வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருந்திருக்கின்றன. இதைக் கவனத்தில் கொண்டு தான், தினேஷை கைது செய்து சிறைப்படுத்தினால் மேனாகவின் திருமணமே நின்றுவிடும் என அச்சகோதரிகள் கெஞ்சியிருக்கிறார்கள். ஆனால், இதனால் கோபமான காவல் ஆய்வாளர் சர்மிளா, சகோதரிகள் இருவரையும் மிகவும் தகாத வார்த்தையில் மோசமாகத் திட்டியிருக்கிறார். (அவர்களின் சாதியைக் குறிப்பிட்டும் மிகக் கொச்சையாகத் திட்டியதாகக் கூறப்படுகிறது.) இதற்கிடையில் தினேஷின் மீது ஆறுமுகத்தின் மகன் பெயரால் கொடுக்கப்பட்ட புகாரானது திரும்பப்பெறப்பட்டும் காவல் துறையினரால் arms act இல் புதிதாக மற்றொரு வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அதாவது, ஆறுமுகத்தின் வீட்டிற்குச் சென்ற தினேஷ் அருவாளோடு சென்று கொலை மிரட்டல் விட்டிருக்கிறார் என பதிவு செய்திருக்கிறார்கள். ஆனால், ஊர்மக்கள் அவ்வாறு நடக்கவில்லை என்றும் தினேஷ் ஆயுதங்கள் எதுவும் எடுத்துச் செல்லவில்லை என்றும் உறுதியாகக் கூறுகிறார்கள்.

எனவே, போடப்பட்ட இந்தப் பொய்வழக்கை ரத்து செய்து தங்களது 24 வயது தம்பியை மீட்டுக் கொண்டுவர வேண்டும். இல்லையெனில், நிச்சயதார்த்த நிகழ்வும் தினேஷின் வாழ்வும் பாதிக்கப்படும் என்று எண்ணி,மனம் நொந்து போன சகோதரிகள் விஷத்தைக் குடித்துள்ளார்கள். பாட்டிலையும் காவல் நிலையத்தின் உள்ளேயே போட்டுவிட்டு அரைமணி நேரத்துக்கும் மேலாக அங்கிருந்து புலம்பிய இரண்டு சகோதரிகளைக் காவல்துறையினர் கொஞ்சமும் பொருட்படுத்தவேயில்லை. 

பின்னர் இவர்கள் விஷம் அருந்தியதை அறிந்த ஊர் மக்கள் அவர்களை மீட்டு தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்திருக்கிறார்கள். இதில் கீர்த்திகா ( பிடெக் பட்டதாரி) உயிரிழந்துவிட்டார். இவர் இரண்டுமுறை TNPSC தேர்வு எழுதியிருக்கிறார். இப்போது அறிவிப்பு வெளியாகியிருக்கிற group 1 தேர்வுக்கு தயாராகி வந்திருக்கிறார். சிறு வயதிலிருந்தே அரசு அதிகாரியாக வேண்டும் என்ற கனவோடு வாழ்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பதிவு வெளியாகும் இன்று 12 ஏப்ரல் நிச்சயதார்த்தம் நடக்கவிருந்த மேனகா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கிறார். 

இந்நிலையில், அவர்களது உறவினர்களும் அப்பகுதியை சேர்ந்த மக்களும் பல்வேறு இயக்கங்களும் இணைந்து, இறந்து போன கீர்த்திகாவின் உடலை வாங்க மறுத்து, கீழ்கண்ட கோரிக்கைகளை முன்வைத்து காத்திருப்பு போராட்டத்தைத் துவங்கினர்.

1.ஆய்வாளர் சர்மிளா மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து அவரை சிறைப்படுத்த வேண்டும்.

2. தினேஷ் மீது போடப்பட்ட பொய் வழக்கை ரத்துசெய்ய வேண்டும்.

இரவு பகலாக மூன்று நாட்கள் நீடித்த இந்தப் போராட்டத்தின் விளைவாக நேற்று தற்கொலைக்குத் தூண்டியது, வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 4 சட்டப் பிரிவுகளில், சட்ட மாற்று அறிக்கையை காவல் துறை கொடுத்திருக்கிறது. ஆனாலும், ஆய்வாளர் உள்ளிட்டோரை இடைநீக்கம் செய்ய வேண்டும் என்றும் அவர்களை கைது செய்து சிறைப்படுத்த வேண்டும் என்றும் முன்வைத்த கோரிக்கைகள் இன்னும் ஏற்கப்படாத காரணத்தால் நான்காவது நாளாக மக்கள் தொடர்ந்து போராடி வருகிறார்கள்.

----------

- ஊடகங்கள் சமூகத்தின் நான்காவது தூண் என்று சொல்லப்படுகிறது. ஆனால், இன்று அவை எந்த ஒரு சாதாரண youtube சேனல்களையும் விட தரம் குறைந்தவையாக மாறிக் கொண்டிருக்கின்றன.

- நிறைய நேரங்களில் பொய்யான செய்திகள் வெளியிடப்படுகின்றது. சில நேரங்களில் உண்மையான செய்திகள் ஒரு பாதியோடு நிறுத்தி கண்டுகொள்ளாமல் செய்யப்படுகிறது. பாதி உண்மை, பொய்யை விட ஆபத்தானது.

- இந்த விவகாரத்தைப் பொறுத்தவரையில் கைது செய்யப்பட்டிருக்கும் தினேசுக்கு வயது 24. ஆனால், தினகரன் உள்ளிட்ட முன்னணி செய்தி ஊடகங்களிலும் தினேஷின் வயது 32 எனக் குறிப்பிட்டுள்ளார்கள். 24 வயதான இளைஞர் ஒருவர் மீது பொய்வழக்கு போடப்பட்டிருக்கிறது. அவரது அக்காக்கள் இருவர் அவருக்காக போராடி, ஒருவர் உயிரை விட்டிருக்கிறார் என்ற செய்தி, 32 வயதான ஆள் ஒருத்தர் கைது செய்யப்பட்டிருக்கார் அவரது தங்கைகள் அவருக்காக போராடி இருக்கிறார்கள் என கட்டமைக்கப்படுகிறது. ஊடகங்கள் ஒரு செய்தியை இந்த அளவுக்குத்தான் அக்கறையோடு கையாள்கிறார்களா?

- தனது தந்தையை கள்ளச் சந்தையில் மது விற்பனை செய்ய வைத்ததற்காகதான் தினேஷ் கேட்கப் போயுள்ளார் என்று பதிவு செய்த  ஊடகங்களில் எவையும் கள்ளச்சந்தையில் மது விற்கப்படுவது ஏன் என்றோ அது இத்தனை நாட்களாக தடுக்கப்படவில்லை என்றோ கேட்கவில்லை. 

- நூற்றில் ஒரு வாய்ப்பாக அது இந்தப்பிரச்சனையின் மூலமே தெரிய வந்திருந்தாலும் கூட தற்போதாவது அதில் ஏதும் நடவடிக்கை எடுத்துள்ளார்களா? என்ற கேள்வியையும் எழுப்பவில்லை.

- ஆறுமுகம் அவர்களின் மகன் குடுத்த புகாரானது வாபஸ் பெறப்பட்டு, அதற்கு பதில் arms act இல் புதிய வழக்கு பதியப்பட்டிருக்கிறது என்பதையோ, மக்கள் அவ்வாறு ஆயுதம் எதுவும் அவர் எடுத்துக் கொண்டு செல்லவில்லை அது பொய்வழக்கு என்று சொல்வதையோ ஊடகங்கள் பதிவு செய்யவில்லை. மாறாக, ஆயுதம் எடுத்துச் சென்று மிரட்டினார். அதனால் கைது செய்யப்பட்டிருக்கிறார். என அவர்களாகவே கதையெழுதி தீர்ப்பும் எழுதி முடித்து விட்டார்கள்.

- ஆய்வாளர் சர்மிளா அவர்கள் சாதியரீதியாக அவர்களைத் திட்டியதாக எந்த ஊடகங்களும் பதிவு செய்யவில்லை. அப்படியெனில், தற்போது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் அரசு கைது செய்திருப்பது முரணாக இல்லையா ? எனில், சாதிய ரீதியாக அவர்களைக் கொச்சைப்படுத்தியதையும் அதனால் மக்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் அவரை கைது செய்யச் சொன்னதையும் ஊடகங்கள் ஏன் வெளிப்படுத்தவில்லை என்ற கேள்வியும் எழுகிறது.

- தற்போது வரை இரவு பகலாக நடந்து கொண்டிருக்கும் இந்தப் போராட்டமும் மக்கள் தொடர்ந்து ஒரு குடும்பத்துக்காக நிற்பதன் பின் உள்ள நியாயமோ ஊடகங்களால் கண்டுகொள்ளப் படவில்லை. தற்கொலை செய்துகொண்டார் என்று கூறுவதில் இருக்கும் TRP அதன் பின் அதற்கான நியாயம் வேண்டி மக்கள் நிற்பதில் இருப்பதில்லை என நினைக்கிறார்கள் போலும்.

இறுதியாக,

- ஏற்கனவே கஞ்சா போன்ற போதை வணிகம் பெருகிவிட்ட சூழலில் கள்ளச் சந்தையில் மது விற்பனை என்பதும் ஒருபக்கம் தொடர்ந்து நடந்து வருகிறது. இது மிகப்பெரிய பிரச்சனையாக ஆகும் முன்னர் அரசு அவசியம் இதனைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

- வழக்கு கொடுத்தவரே வாபஸ் பெற்றுவிட்ட நிலையில், தினேஷின் மீது போடப்பட்டிருக்கும் பொய் வழக்கானது ரத்து செய்யப்பட வேண்டும்.

- தினேஷ் குற்றவாளியாகவே இருந்தாலும் கூட, அவருக்காக வந்து பேசுவதும் கோரிக்கை வைப்பதும் அவரது உறவினர்களின் உரிமை. ஆனால், அப்படியாக வருவோர்களை மிகவும் கொச்சையாக பேசுவது, அவமரியாதை செய்வது என்பது கீழ்த்தரமான செயல். இந்தச் சம்பவம் மட்டும் அல்ல, தமிழ்நாடு முழுவதிலும் காவல் நிலையங்களில் மக்கள் நடத்தப்படும் விதம் என்பது காவல்துறையின் மேல் இருந்த நம்பிக்கையை முற்றிலும் அகற்றியுள்ளது. இது போல மக்களை நடத்திய எந்த ஒரு காவலரும் பெரிய அளவுக்கு எந்த தண்டனையும் அனுபவிக்காத நிலையில் அரசே இவற்றைத் தான் விரும்புகிறதோ என்றும் நினைக்க தோன்றுகிறது.

- கண்முன் விஷம் அருந்தி அரை மணி நேரத்திற்கும் மேலாக போராடிக் கொண்டிருந்த இரண்டு பெண்களை சுத்தமாகப் பொருட்படுத்தாமல் அதில் ஒருவரை மரணிக்க வைத்திருப்பது என்பது எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாத மனிதத் தன்மையற்ற செயல். இது தற்கொலை அல்ல; நிறுவனப் படுகொலை. இப்படியான கொடுஞ் செயலுக்கும் கூட மக்கள் மூன்று நாட்கள் இரவு பகலாக போராடிய பின்னர் தான், சம்பந்தப்பட்ட காவலரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்திருக்கிறார்கள். அதுவும் இதுவரை கைது செய்து சிறைப்படுத்தப்படவில்லை. அதற்காக மீண்டும் தொடர்ந்து போராடத்தான் வேண்டியுள்ளது. எனில் இதில் அரசின் பொறுப்பு என்ன ? 

- அடிக்கொருமுறை, சமூகநீதி என்றும் ஜனநாயகம் என்றும் பேசிக்கொண்டு, இன்னொரு பக்கம் ஆயுதம் தாங்கிய இந்தப் படைகளைக் கொண்டு மக்களை தொடர்ந்து ஒடுக்கும் போக்கு கண்முன் அம்பலப்பட்டு நிற்கிறது. காவல்துறையைத் தன்வசம் வைத்திருக்கும் முதல்வர் இவற்றிற்கு எந்த வகையில் பொறுப்பேற்கப் போகிறார் ?

- ஒவ்வொரு செய்திக்கும் பின்னால் ரத்தமும் சதையுமான இம்மக்களின் உரிமையும் நீதியும் காவு கொடுக்கப்படுகிறது. இவை எளிய மக்களின் மரணத்தையும் அவலத்தையும் கூட பின்னணி இசையுடன் நக்கல் செய்யும் அளவிற்கு தரம் தாழ்ந்து போய் நிற்கின்றன. இந்நிலையில் மக்களுக்கான கடைசி நம்பிக்கையாக 'தோழர்களும்' , 'இயக்கங்களுமே' நிற்க வேண்டியுள்ளது. 

களத்தில் நிற்கும் தோழர்களுக்கு அன்பும் ஆதரவும் !

நன்றி !

- லிங்கம் தேவா

https://www.facebook.com/story.php?story_fbid=8693935270708711&id=100002769735269&rdid=SLlFn81xb1vK2P4B

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு