பாரதி நினைவு நீடூழி வாழ்க!

முகநூல் பதிவுகளின் தொகுப்பு

பாரதி நினைவு நீடூழி வாழ்க!

நான் ஜாதி பேதத்துக்கு நண்பனல்லேன்

இந்தியர்களெல்லாரும் அல்லது ஹிந்துக்களெல்லாரும் ஒரே ஜாதியென்ற ஸாதாரண இங்கிலிஷ் படிப்பாளிகளின் கொள்கையை நான் அனுஸரிக்கவில்லை. 

உலகத்து மனிதர்கள் எல்லாரும் ஒரே ஜாதி - "வஸுதைவ குடும்பம்" என்ற பர்த்ருஹரியின் கொள்கையைத் தழுவியுள்ளேன். 

மனித ஜாதியும் மற்ற ஜந்து ஸமூஹங்களும் ஒரே குடும்ப மென்ற (d)டார்வின் என்னும் ஆங்கில சாஸ்த்ரியின் கருத்தைப் பின்பற்றுகிறேன். 

எல்லா ஜீவர்களும் கடவுளுடைய அம்சமென்ற பகவத் கீதையின் பரமோபதேசத்தைக் கடைப்பிடித்து நிற்கிறேன்.

ஒரு பிராமணனை, ஒரு ஆங்கிலேயனை, ஒரு ஆட்டைக் கொல்லுதல் அல்லது அடிப்பதால் எய்தும் பாவம் ஒரே மாதிரி. உபசரிப்பதால் அல்லது வணங்குவதால் எய்தும் புண்யமும் ஒரே தன்மையுடையது. 

இஃதென் உண்மையான, யான் ஒழுக்கப்படுத்தி வருகிற கொள்கை.

எனிலும், ஜாதி பேதம் தொலையும் வரை நாம் ஸ்வராஜ்யம் புரியத் தகுதி பெற மாட்டோம் என்று சொல்வோருடைய பேச்சு காசு பெறாதென்பதை நான் உறுதியாகத் தெரிவிக்க விரும்புகிறேன்.

பாரதி 

"காலக் கண்ணாடி" 

கதேச மித்திரன்: 15-3-1921

- subbaraj V

========================================

பெண் விடுதலை பற்றி மகாகவி பாரதியார்

பெண்களுக்கு விடுதலை கொடுப்பதில் இன்னும் முக்யமான ஆரம்பப் படிகள் எவையென்றால்:

பெண்களை ருதுவாகு முன்பு விவாகம் செய்து கொடுக்கக் கூடாது.

அவர்களுக்கு இஷ்டமில்லாத புருஷனை விவாகம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தக் கூடாது.

விவாகம் செய்துகொண்ட பிறகு அவள் புருஷனைவிட்டு நீங்க இடங் கொடுக்க வேண்டும். அதன் பொருட்டு அவளை அவமானப் படுத்தக் கூடாது.

பிதுரார்ஜிதத்தில் பெண் குழந்தைகளுக்கு. ஸமபாகம் கொடுக்க வேண்டும்

புருஷன் இறந்த பின்பு ஸ்த்ரீ மறுபடி விவாகம் செய்துகொள்வதைத் தடுக்கக்கூடாது. 

விவாகமே இல்லாமல், தனியாக இருந்து வியாபாரம் கைத்தொழில் முதலியவற்றால் கௌரவமாக ஜீவிக்க விரும்பும் ஸ்த்ரீகளை யதேச்சையான தொழில் செய்து ஜீவிக்க இடங் கொடுக்க வேண்டும்.

பெண்கள் கணவனைத் தவிர வேறு புருஷருடன் பேசக்கூடாதென்றும். பழகக் கூடாதென்றும் பயத்தாலும் பொறாமையாலும் ஏற்படுத்தப்பட்ட நிபந்தனையை ஒழித்துவிட வேண்டும்.

பெண்களுக்கும் ஆண்களைப் போலவே உயர்தரக் கல்வியின் எல்லாக் கிளைகளிலும் பழக்கம் ஏற்படுத்த வேண்டும். 

தகுதியுடன் அவர்கள் அரசாட்சியில் எவ்வித உத்யோகம் பெற விரும்பினாலும் அதைச் சட்டம் தடுக்கக் கூடாது.

தமிழ் நாட்டில் ஆண்மக்களுக்கே ராஜரீக சுதந்திரம் இல்லாமல் இருக்கையிலே, அது பெண்களுக்கு வேண்டுமென்று இப்போது கூறுவதில் பயனில்லை. எனினும், சீக்கிரத்தில் தமிழருக்கு ஸ்வராஜ்யம் கிடைத்தால் அப்போது பெண்களுக்கும் ராஜாங்க உரிமைகளிலே அவசியம் பங்கு கொடுக்க வேண்டும். 

இங்ஙனம் நமது பெண்களுக்கு ஆரம்பப் படிகள் காட்டினோமானால், பிறகு அவர்கள் தமது முயற்சியிலே பரிபூர்ண விடுதலை நிலைமையை எட்டி மனுஷ்ய ஜாதியைக் காப்பாற்றுவார்கள். "

10-05-1918 

சுதேச மித்திரன்

subbaraj V

=======================================

பாரதி பற்றி பாரதிதாசன்

(1949 பச்சையப்பன் கல்லூரி மாணவர்களிடையே  பேசியது, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர், அன்றைய மாணவத் தலைவர் என். சஞ்சீவி!)

என்னை யாரும் பாரதி பற்றிப் பேச அழைப்பதில்லை. இன்றைக்கு, ‘’பாரதி, பாரதி…’’ என்று கொம்மாளமடிக்கும் கூட்டம் என்னைக் கூப்பிடுவதில்லை. ஏன்? நான் வந்தால் உண்மை பாரதியைப் பற்றிக் கூறிவிடுவேன். அவர்கள் காட்டிவரும் வர்ணம் தீட்டப்பட்ட பாரதி மறைவார் என்ற பயம் தான்! உண்மை பாரதியார் உங்களிடம் காட்டப்படவில்லை. இன்று பாரதி பாட்டை புகழ்பவர்கள் உண்மையான பாரதியை மறைத்துவிட்டார்கள்! பாரதியாருடைய முக்கிய கொள்கை சாதி ஒழிப்பு! அது தான் அவரிடம் இருந்த சிறந்த கொள்கை! பேச வேண்டிய கொள்கை!

அவர் பாடி இருக்கிறார்

''சூத்திரனுக்கு ஒரு நீதி தண்டச் சோற்றுப் பாப்புக்கு ஒரு நீதி'' என்று!

இது எங்கே? அவர் புத்தகத்தில் இல்லை. என்னிடம் இருக்கிறது!

மறைத்து விட்டனர் சுயநலம் கருதி! 

( இதன் பிறகு தான் பாரதி பாடலில் இந்தக் கவிதை சேர்க்கப்பட்டது - அதுவும் முழுமையாக இல்லை)

பாரதியார் செத்ததற்கே அது தானே காரணம்!

பாண்டியிலே பாரதியார் பலரும் பார்க்க வேண்டும் என்றே கடைவீதி நடுவே ஒரு முஸ்லீம் கடையில் தேனீர் வாங்கி அருந்துவார்!

அவர் ஒரு சமயம், ‘’என்ன சுப்புரத்தினம் என் பெண் வேறு ஒரு தாழ்ந்த சாதியானோடு ரங்கூனுக்கு ஒடிப்போய், அங்கிருந்து எனக்கு, ‘அப்பா இன்னாரோடு நான் இங்கு சுகமே இருக்கிறேன். அவரைத் தான் விரும்புகிறேன். மணம் செய்து கொள்ளப் போகிறேன்’ என எழுத வேண்டும். அதைக் கேட்டு நான் ஆனந்தப்பட வேண்டும்’’ என்றார்.

அவர் சாதி ஒழிப்பில் எவ்வளவு அக்கறை கொண்டார் என்பதற்கு இது நல்ல எடுத்துக்காட்டு!

அவர் இங்கு (சென்னை) வந்ததும் அவருக்கு பூரணாதி லேகியம் நிறைய கொடுத்தனர். Opium என்ற அபினியை அளவு மீறிக் கொடுத்தனர். செத்தார். வேண்டுமென்றே அவருடைய சீர்திருத்த கருத்துகளுக்காகவே அவர் பழிவாங்கப்பட்டார் என்றே கூறுகிறேன். 

இன்று அவரை போற்றுபவர்கள் அன்று அவரை தூற்றினர்! கல்கி கிருஷ்ணமூர்த்தி ஆனந்தவிகடனில், ‘’ஆபாசம், ஆபாசம்’’ என பாரதி பாடலை கிண்டல் செய்தார்!

பெண்கள் மார்பகத்தை குறிக்கும் பொதுப் பெயரை கவிதையில் எழுதியதற்காக, ‘’மகா மோசம்’’ என்று எழுதினார்.

இன்று புகழ்கிறார் என்றால், அது அவர்கள் வழக்கம், வாடிக்கை!

கல்கி ஆனந்தவிகடனில் பாரதியை ‘’மட்டக் கவி’’ என்று எழுதியதைக் கண்டித்து, நான் கவிதா மண்டலத்தில், ‘’பாரதி உலகக் கவிதானப்பா’’ என்று தீட்டினேன்.

சுதேசமித்திரனில் பாரதியை, ‘’ஒழுக்க ஈனன். பூணூல் போடுவது இல்லை. சுருட்டு பிடிப்பவன், ஆசாரமற்றவன்’’ என்றெல்லாம் கண்டித்து எழுதினார்கள். 

பாரதி சொல்வார் ‘’பூணூல் தான் ஆச்சாரமா? உச்சிக் குடுமி நான்கைந்து மயிர்கள் தான் ஒழுக்கத்தின் அறிகுறியா? இல்லை’’ என்பார்!

சாதி மறுப்பு பாரதியை பாவேந்தர் அடையாளம் காட்டுகிறார் என்பதற்காக,  பார்ப்பனர்களும், (பாரதிதாசன் அங்கம் வகித்திருந்த) திராவிட இயக்கத்தினரும் ஒருசேர  பாவேந்தரை  புறக்கணித்துள்ளனர் என்பது சோகம்...

- Subbaraj V

=====================================

திறம்பட வந்த மறவன், புதிய அறம்பாட வந்த அறிஞன், நாட்டிற் படரும் சாதிப்படைக்கு மருந்து! மண்டும் மதங்கள் அண்டா நெருப்பவன்! அயலார் எதிர்ப்புக் கணையா விளக்கவன்! என்னென்று சொல்வேன், என்னென்று சொல்வேன்! தமிழால், பாரதி தகுதி பெற்றதும் தமிழ், பாரதியால் தகுதி பெற்றதும்...

பாரதிதாசன்

- Subburaj V 

========================================

பாரதி நினைவு நூற்றாண்டு : தொடக்கம்.

பாரதி இந்த மண்ணைப்  பிரிந்து  104ஆம் ஆண்டு  தொடங்கும் நாள் 12.9.2024 .

 " தமிழரின் உயிர்நிகர் 

  தமிழ்நிலை தாழ்ந்ததால்

  தமிழகம் தமிழுக்குத் தகும்

 உயர்வு அளிக்கும்

 தலைவனை எண்ணித்

  தவம்கிடக் கையில்

 இலகு பாரதி 

 புலவன் தோன்றினான் "

  - பாவேந்தர் பாரதிதாசன்

பாரதி என்றால் கலைமகள்(சரசுவதி) என்று பொருள்.

பாரதி மறைந்த மூன்று நாள் இடைவெளியில் (15.9.1921இல்) பிறந்த தம் மகளுக்குப் பாரதிதாசன் வைத்த பெயர் சரசுவதி .

 பாரதி நினைவாக வைத்த பெயரோடு கரூரில் வாழ்ந்து மறைந்தவர் பாவேந்தரின் திருமகளார்.

பாரதி எனும் பட்டத்தை 1893இல் எட்டயபுரத்தில் வழங்கியவர் கோவையைச் சேர்ந்தவர்; அவிநாசியில் பிறந்தவர் ; விருதுநகர் சென்று சித்த மருத்துவம் பார்த்து வந்த விருதை சிவஞான யோகி.

சென்னை திருவல்லிக்கேணி துளசிங்கப் பெருமாள் தெருவில் குடியிருந்த பாரதி 12.9.1921 விடியல் 2.00மணிக்குப் புகழுடம்பாகி விடைபெற்றார்.

 பாரதி உடல்எடுக்க2 5 உரூபா தந்து உதவியவர் வழக்கறிஞர் துரைசாமி.

 பாரதி இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றோர் இருபதுக்கும் குறைவே !

பாரதி மறைந்த 1921இல் மின்சாரம், திரைப்படம் , பேருந்து எதுவுமில்லாத நிலை!

 பாரதியாராக இன்று நாம் பார்க்கும் படத்தை 1920இல் புதுவையிலிருந்து சென்னை சென்று ஒளிப்படம் எடுத்து உலகிற்கு வழங்கியவர் தமிழாசிரியர் கனக சுப்புரத்தினர். அவரே பாவேந்தர் பாரதிதாசன் !

வாழ்ந்த காலத்திலேயே அடையாளம் கண்டு பாரதி அறிவித்தார்

 " என் உரைநடைக்கு வாரிசு வ.ராமசாமி (வ.ரா.)

 கவிதைக்கு வாரிசு சுப்புரத்தினம் ( பாரதிதாசன் ) " 

(செந்தலை கவுதமன்)

- Kanagu kanagaraj 

=======================================

பாரதி பற்றி  பாரதிதாசன்

பாரதி ஜாதியை ஒழிக்கிறான், அனுஷ்டான மற்றவன், ஆசாரமற்றவன் என்றெல்லாம் அப்பொழுது தூஷித்தார்கள். அவருடைய மனைவியிடம்  " எல்லாப் பெண்களுமே நகை  போட்டிருக்கிறார்கள் உனக்கில்லையே! உன் புருசனைக் கேள்" என்றெல்லாம் கிளப்பி விட்டார்கள். 

இம்சை பொறுக்க மாட்டாமல் தாமே தற்கொலை செய்து கொண்டு விடுவார் என்பது இந்த மடையர்கள் முடிவு. காரைக்குடியில் அன்பர்கள் பாரதியார் திட்டத்திட்ட அதை பொறுத்துக்கொண்டு உபசாரம் செய்து அவருக்கு வேண்டியதையெல்லாம் அளித்தார்களென்றால் அதை மறக்க முடியுமா ?

மூன்று லட்ச ரூபாய்களை கொடுத்து அழகான வீட்டில் உட்கார வைத்து ஐந்து ஆட்களை அமர்த்தி நூலாக எழுதித் தள்ளு என்றல்லவா சொல்லியிருக்க வேண்டும் பாரதியாரிடம். 

இல்லை அவர் தெரு தெருவாக அலைந்தார். எனக்குத் தெரியும். விரிந்த உள்ளமில்லாமல் அவருடைய குலத்தினரே அவரைத் தூஷித்தார்கள். செத்துப் போன பின்னர், பாரதி நாமம் வாழ்க என்கிறார்கள். 

1947 ல் வெளிவந்த " கவிஞர் பேசுகிறார் " என்ற நூலில் உள்ள கட்டுரை [ தமிழும் பாரதியும் ]

- T soundhar soundhar

======================================

பாரதி நினைவு நாள் செப்டம்பர் 11.

"பாரதிக்கு முன்னால் தமிழ் கவிதை என்னும் குயிலானது,

 ஆடம்பரம் மிக்க மன்னர்களது அரண்மனைகளில், தங்கக் கூண்டில் பூட்டி வைக்கப்பட்டிருந்த இன்னிசை குயில் போலவே இருந்தது.

அந்தக்குயில் வெளியே பறந்து போய் விடாமல், குறுகிய ரசிகர் வட்டத்தை சேர்ந்த ஒரு சிலர், அதை கவனமாக பாதுகாத்து வந்தனர்.

இவ்வாறு சிறைப்பட்டிருந்த குயில், குறுநில மன்னர்களின் புகழைப் பாடிக் கொண்டிருந்தது. 

எதார்த்த வாழ்க்கையில் இருந்து மிகவும் விலகிச் சென்றுவிட்ட,

 சமய கோட்பாடுகளை போற்றிப் புகழ்ந்து  .

பாரதி அந்த தமிழ் குயிலை சிறையுடைத்து மீட்டார். 

அந்த குயிலுக்கு வாழ்வின் ஜீவ நாடித்துடிப்பை உருவேற்றி, அதற்கு உத்வேகம் ஊட்டினார். 

இறுதியில் பாரதியே, தமிழ் குயிலாக மாறி அமரத்துவம் கண்டுவிட்டார்.

 வள்ளுவர், கம்பர், ஔவையார், தாயுமானவர் போன்ற கவிஞர்களின் மதிப்பிடற்கரிய அனுபவத்தை இழந்து விடாமலே, 

வறட்டுக் கோட்பாடுகளை கைவிட வேண்டிய தருணம், வந்துவிட்டது என்று பாரதி தெள்ளத்தெளிவாக கண்டு உணர்ந்தார்...

... சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய இலட்சியங்களின்பால்,

பாரதி கொண்டிருந்த நம்பிக்கையையும், பற்றும் அவரை சுதந்திரப் போராட்ட இயக்கத்தில் சேர செய்தன. 

பாரதி,

கடந்த காலத்திற்கும் வருங்காலத்திற்கும், பாலமாக அமைந்தார். 

இந்த மக்கள் கவி, பண்டைக்கால கவிதை படைத்த கற்பனை வடிவை நிராகரித்து விடவில்லை. 

மாறாக, அவர் அதில் "தாயகம் "பற்றிய கருத்தை புகுத்தினார். 

இதன்மூலம் தமிழ் இலக்கியத்தில் அற்புதமானதொரு கருத்து, 

"தேசபக்தி" என்பது நாட்டு மக்களின் நலனுக்காக பாடுபடுவது என்ற கருத்து திரட்சி பெற்றது...

... பாரதி வாழ்க்கையில் மிக மிக மதித்து வந்த செல்வம் மனிதன்தான். 

அவனது களிப்பு தான். கண்ணீரும் தான்.

அவர் மனிதனை, கவிதை கலையின் பீடத்தில் ஏற்றி வைத்தார். 

இந்த புதிய கலைக்கு பாரதியே முன்னோடியாகத் திகழ்ந்தார்...

... பாரதியின் மேதத்துவம், அவரது நாட்டு மக்களின் மீது இன்றும் பேரளவில் செல்வாக்கைப் செலுத்தி வருகிறது ...

டாக்டர்.வித்தாலி பி.பூர்ணிக்கா, சோவியத் தமிழறிஞர்.

    

வீ. வெள்ளிங்கிரி

=========================================================================

பாரதி ஒரு யகசந்தி-குன்றக்குடி அடிகளார்.

... மக்களுக்காக பாடிய கவிஞர்கள் வரிசையில், பாரதி தலை சிறந்து விழங்குகின்றான். 

பாரதி, பிறவிக் கவிஞன். பாரதிக்கு கவிதை தான் தொழில். பாரதியின் படைக்கலம் கவிதையே தான். 

நாடு அரசியல் சுதந்திரத்தை பெறுவதற்கு முன்பே, பாரதி, இந்த நாட்டுத் திருக்கோயில்களுக்குள் இருக்கும் உமையம்மை 

திரு மேனிகளுக்கெல்லாம்

 "சுதந்திர தேவி" என்று பெயர் சூட்டினான்.

பாரதி, பழமையைப் பாராட்டியவன். புதுமையை போற்றியவன்.

பாரதி, விநாயகர் நான்மணி மாலை பாடும் பொழுது, பக்தனாகவே திகழ்கின்றான். 

சோவியத் புரட்சியை வரவேற்றுப் பாடும் பொழுது புரட்சி செய்பவனாகி விடுகின்றான். 

பாரதி, "ஆலைகள் வைப்போம்" என்ற பாடும் பொழுது, தொழில் முனைவோனாக திகழ்கின்றான்.

பாரதி, யுகாந்திரமாக வளர்ந்து வந்த அறியாமைக்கு, அடிமைத்தனத்திற்கு அதிர் வேட்டு என வந்தான். 

பாரதி, ஒரு யுகத்தையே அழிக்க நினைக்கின்றான்.அதாவது, ஒரு யுகம் என்று சொல்லப்படுகின்ற, பல நூற்றாண்டுகள் வளர்ந்த அடிமைத்தனத்தை, நிர்வாணமான சுயநலத்தை சுட்டு பொசுக்குகின்றான்.

பாரதியின் கவிதைத் தீ ,கல்வியில்லாத ஊரை மட்டும் கொளுத்த வில்லை. மடமையை கொளுத்துகிறது. 

"எனக்கே உடமை. உடமைக்காக,உடன் பிறந்த சகோதரனையும் கொல்வேன்,

பழகிய நட்பையும் பகையாக்குவேன்" என்று பிறக்கிறது கலியுகம். 

கலியுக பிறப்பை இங்ஙனம் தான் மகாபாரதம் கூறுகிறது.

உடமை வர்க்கம் தோன்றி, உழைப்பை சுரண்டும் பொய்மைத்தனமான வாழ்க்கைக்கு, வித்திட்டதே கலியுகம் தான். 

உடமை வர்க்கம் தோன்றிய பிறகு, சமுதாய வரலாறு தடம் புரண்டு விடும். பிறர் பங்கை திருடும் களவு வரும்.

கடவுள் முதல், கவிஞன் வரையில் உள்ள அனைவரையும், உடமை வர்க்கம் தனது ஒலி பெருக்கிகளாகவே இயங்கச் செய்யும். 

வினோதமாக, வளமும் வளரும். வறுமையும் வளரும்.

இத்தகைய கலியுகத்தில் பிறந்து, கலியுகத்தை களத்தில் சந்தித்து, கலியுகத்தோட போராடி, கலியுகத்தை கொன்று,

கிருதாயுகத்தை கொண்டு வர பிறந்தவன் கவிஞன் பாரதி. 

பாரதி ஒரு யுக பிரளயக் கவிஞன். பாரதி ஒரு யுக சந்திப்பாக விளங்கியவன்...

(தவத்திரு குன்றக்குடி அடிகளார்)

வீ.வெள்ளிங்கிரி

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு