மாணவர்களை சீரழிக்கும் “கஞ்சா மாடல்” அரசு
லிங்கம் தேவா
வடமாநில இளைஞரை போதையில் தமிழ்நாட்டு சிறுவர்கள் அரிவாளால் வெட்டும் காணொளிகள் பார்க்கவே மனசு பதைக்கிறது.
போதைக் கலாச்சாரம் இங்க மிக அதிக அளவில் பரவி பள்ளி மாணவர்கள் வரை சென்றுள்ளது என கொரோனா தொற்றுக்குப் பின்பு பள்ளிகள் திறக்கப்பட்ட போதே பல்வேறு தரப்பினராலும் ஆசிரியர்களாலும் அறிவுறுத்தப்பட்டது.
அந்த எச்சரிக்கையை உறுதி செய்யும் விதமாக கொரோனாவுக்குப் பின் தொடர்ந்து போ*தையில் மாணவர்கள் ஆசிரியர்களையும் சக மாணவர்களையும் தாக்கும் சம்பவங்கள் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களிலும் அரங்கேறின.
அப்போதும் அந்த எச்சரிக்கையை இந்த திராவிட மாடல் விளம்பர அரசு உரிய தீவிரம் கொண்டு கையாள வில்லை.
கள்ளச்சாராயம் அருந்தி இரண்டு முறை பெரிய அளவில் உயிர் சேதங்கள் ஏற்பட்டன. தொடர்ந்து அங்கு சாராய விற்பனை நடந்து வந்ததும் அதன் தொடர்ச்சியாக ஒரு நாள் இந்த பலிகள் நிகழ்ந்ததாகவும் தான் செய்திகள் வெளிப்படுத்தின. ஆனால், அத்தனை நாட்கள் அதை கண்டு கொள்ளாமல் இருந்த அரச இயந்திரத்தை எந்தவிதமான விசாரணைக்கும் தண்டனைக்கும் உட்படுத்தாமல், மடை மாற்றும் விதமாக தமிழகம் முழுவதும் உள்ள பனையேறிகள் மீது கடும் அடக்குமுறை ஏவிவிடப்பட்டது.
கள்ளச்சாரயத்துக்கும் பனையேறிகளுக்கும் என்ன சம்பந்தம்? ஆனால், அந்த ஏழை பனையேறிகளை அச்சுறுத்தியதன் மூலம் தங்கள் கடமையை நிறைவேற்றியதாக அரசு படம் காட்டிக் கொண்டது.
சரி, கள்ளச்சாரயத்துக்கு எந்த வகையிலும் தொடர்பில்லாத கள் குறித்து பனையேறிகளை ஒடுக்க முனைந்த அரச எந்திரம், அதனை விட பல மடங்கு மோசமான *ஞ்சா ஊடுவரலை அதே வேகத்தில் ஏன் கையாளவில்லை ?
ஒரு பொருள் தமிழ்நாட்டின் பெரு நகரங்கள் முதல் கடைக்கோடி கிராமங்கள் வரைக்கும், தொடர்ந்து குடித்துச் சீரழியும் பெரியவர்கள் முதல் பள்ளிச் சிறுவர்கள் வரைக்கும் மிக்கப்பரவலாக விநியோகம் ஆகிறது. ஆனால், அதைக் குறித்து அரசுக்கு தெரியவில்லை, அதை அரசு தடுக்கவில்லை என்பது அரசின் உதாசீனத்தைக் காட்டுகிறதா ? அல்லது கையாலாகத் தனத்தைக் காட்டுகிறதா ? அல்லது கள்ள உறவைக் காட்டுகிறதா ? என்னும் கேள்வி மிக இயல்பாக எழுகிறது.
நாளைய சமுதாயம் பள்ளிகளில் நிர்ணயம் ஆகிறது. எனில், பள்ளி மாணவர்கள் படு மோசமாக போ*தை பழக்கத்தால் பாதிக்கப்பட்டு இருக்கும் நிலையில் எந்த வகையான சமூகத்தை உருவாக்க விளைகிறார்கள் ?
கல்வியில் சிறந்த தமிழ்நாடு என விளம்பரம் செய்யும் ஆட்கள், மற்றவர்கள் அரசைக் கேள்வி கேட்கும் போது வெட்கமே இல்லாமல் முன்னே விழுந்து முட்டுக் கொடுக்கும் கயவர்கள், 2024-25 வெளியான UDISE+ இன் தரவுகளை வாகாக மறைத்துக் கொண்டு மௌனம் காப்பதும் முந்தைய வருட தரவுகளை எடுத்துப் போட்டு ஏமாற்றுவதும் யாரைக் காப்பாற்ற ??
இங்கே சென்ற வருட கணக்கில் மட்டும் இடைநிலைக் கல்வியில் மாணவர்களின் இடைநிற்றல் விகிதம் 11.6 சதவீதமாக இருக்கிறது. இதற்கு என்ன விதமான நடவடிக்கை இங்கு எடுக்கப்பட்டது ?
நன்றாக படிக்கும் மாணவர்களை மட்டும் தேர்வு செய்து மாடல் பள்ளிகள் நடத்தி விளம்பரம் தேடும் அரசு, படிப்பிலும் ஒழுக்கத்திலும் கவனம் தேவைப்படும் மாணவர்களை அத்து விடுவதும் குற்றவாளிகள் ஆக்குவதையுமே வாடிக்கையாகக் கொண்டுள்ளது.
இது போல ஒவ்வொரு விஷயத்தின் போதும் அமைதியாக இருந்து கொண்டு, அரசு விளம்பரம் செய்யும் வீக்கத்தையே வளர்ச்சி என promote செய்து நம்ப வைக்கும் அசிங்கமான பிழைப்பை தலையாயக் கடமையாக எடுத்துச் செய்யும் மக்கள் விரோத மண்டை வீங்கி கும்பல்கள் முழுவதும் அம்பலப்பட்டு நிற்கின்றன.
பதின்பருவ மாணவர்கள்/சிறுவர்கள் மத்தியில் இயங்க வேண்டியதும் அவர்களுக்காக மற்ற தளங்களில் இயங்க வேண்டியதும் மிக அவசியமாக இருக்கிறது. பள்ளிகளுக்கு விநியோகம் ஆகும் போ*தைப் பொருட்கள் குறித்தும், அவற்றைத் தடுப்பது குறித்தும், பள்ளியில் சேராத இளம் வயதினர் குறித்தும், அதற்கான சமூக பின்புலத்தை சரி செய்வது குறித்தும் உண்மையான அக்கறையோடு கூடிய செயல்திட்டங்கள் வகுக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
மாணவர்கள் படிப்பில் இருந்து தள்ளி வரும் போதே சரி செய்யாததன் விளைவு அவர்கள் பள்ளியை விட்டே நகர்கிறார்கள். பள்ளிகளை விட்டு நகரும் போதே சரி செய்யாததன் விளைவு அவர்கள் அடிப்படை அறத்தை விட்டு லும்பன்களாக இங்குள்ள கேவலமான அதிகார வர்க்கத்தால் உருவாக்கப்படுகின்றனர்.
இதற்கு முழுப்பொறுப்பு எடுக்க வேண்டியது அரசு மட்டுமே. அதை விடுத்து தனிமனிதப் பிரச்சினையாக மடைமாற்றுவது எவ்வகையிலும் ஏற்கத்தக்கது அல்ல. திணை விதைத்தால் திணை தான் வளரும். சூழலை மாற்றாமல் அதன் விளைவுகளையும் விளைச்சலையும் மாற்ற முடியாது என்பது எதார்த்தம்.
கடுமையான கண்டனங்கள்!
லிங்கம் தேவா
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு