எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டம் தனியார் மயமாக்குவதை கைவிட கோரி ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அனைத்து ஊழியர்கள் நலச்சங்கம்
எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டம் தனியார் மயமாக்குவதை கைவிட கோரியும்! தமிழகத்தில் 186 - எச்.ஐ.வி பரிசோதனை மற்றும் ஆலோசனை மையங்களை மூட மத்திய அரசு அனுப்பியுள்ள சுற்றறிக்கையை திரும்ப பெற கோரியும்... ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 10% ஊதிய உயர்வு வழங்கிட வலியுறுத்தியும்... மாநிலம் தழுவிய மாபெரும் மாலை நேர கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்
தேதி: 27.07.2023 வியாழக்கிழமை
நேரம்: மாலை 05:30 மணியளவில்
இடம்: அனைத்து மாவட்ட ஆட்சியரகங்கள்.
அன்பிற்கினிய தோழர்களுக்கு வணக்கம்,
இந்திய அரசு 1991 ஆம் ஆண்டு முதல் தனியார்மய தராளமய கொள்கைளை அமல்படுத்தி வருகிறது. அதன்படி அரசு சேவைதுறையிலிருந்து விலகிவிட வேண்டும். கல்வி, மருத்துவம், சுகாதாரம் போன்ற மக்கள் நலதிட்டங்களுக்கு நிதி ஒதுக்குவதைத் கைவிட்டு அவற்றை தனியாரிடம் தாரைவார்த்து விட வேண்டும். அதாவது இத்துறைகளை உள்நாட்டுப் பெரு முதலாளிகளிடமும் பன்னாட்டு முதலாளிகளிடமும் ஒப்படைத்து விட வேண்டும். அதன்படிதான் இன்று எய்ட்ஸ் கட்டுப்பாடு துறையும் தனியார்மயமாக்கப்பட்டு வருகிறது.
இந்தியாவில் எய்ட்ஸ் நோயின் தாக்கம்
கடந்த 2022 ஆம் ஆண்டு புள்ளிவிபரப்படி இந்தியாவில் சுமார் 23 லட்சம் பேர் எய்ட்ஸ் நோய்க்கு பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர் என புள்ளி விபரம் தெரிவிக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் நாட்டில் 17 லட்சத்துக்கும் அதிகமானோர் எச்.ஐ.வி நோயல் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாடு நிறுவனமே ஆர்.டி.ஐ கோள்விக்கு பதில் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆசியா பசிபிக் நாடுகளில் இந்தியாவில்தான் அதிக அளவில் எய்ட்ஸ் நோயால் பாதித்தோர் உள்ளனர் என புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில்தான் நாட்டில் எச்.ஐ.வி. நோயின் தாக்கம் குறைந்துவிட்டது என்று கூறி நாடு முழுவதும் அரசு மருத்துவமனைகளில் செயல்படும் 5081 எச்.ஐ.வி பரிசோதனை மற்றும் ஆலோசனை மையங்களில் 2119 மையங்களை மூட மத்திய அரசு மாநில அரசுகளுக்கு சுற்றறிக்கை அனுப்பி எய்ட்ஸ் கட்டுபாட்டு திட்டத்திற்கு மூடு விழா நடத்தி வருகிறார்கள். இதனால் அரசு மருத்துவமனைகளில் எய்ட்ஸ் நோய் பரிசோதனைக்கு வரும் லட்சக்கணக்கான மக்கள் பாதிப்பை சந்திப்பார்கள். மேலும் எச்.ஐ.வி. பரிசோதனை மற்றும் ஆலோசனை மையங்களில் 20 ஆண்டுககளுக்கு மேலாக பணிபுரிந்து வரும் ஆயிரக்கணக்கான ஊழியர்களுக்கு வேலை பறிபோகும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்திற்கு நிதி குறைப்பு
கடந்த 2021 - 2022 ம் ஆண்டு மத்திய நிதிநிலை அறிக்கையில் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்திற்கு அளிக்கப்படும் நீதியில் 40 சதவீதம் அளவிற்கு மத்திய அரசு குறைத்துள்ளது. நிதி பற்றாக்குறையை மாநில அரசு ஈடு செய்யவேண்டும் என்று மத்திய அரசு சொல்கிறது. ஆனால் மாநில அரசுகள் ஏற்கனவே நிதி பற்றாகுறையால் தடுமாறி வருவதால் எய்ட்ஸ் நோய் தடுப்பு திட்டத்திற்கு நிதி ஒதுக்குவதில் சிரமத்தை சந்தித்து வருகின்றன, இதனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக நாடு முழுவதும் எய்ட்ஸ் நோயாளிகளுக்கு வழங்கப்படும் ஏ.ஆர்.வி. மாத்திரைகளுக்கு பற்றாக்குறை நிலவி வருகிறது. இதனால் எய்ட்ஸ் நோய் பாதிப்புக்குள்ளாகி சிகிச்சை வெறும் சுமார் 23 லட்சம் பேர் சரியான நேரத்தில் மாத்திரை கிடைக்காமல் பரிதவித்து வருகிறார்கள். இதனால் எய்ட்ஸ் நோயாளிகளின் இறப்பு விகிதமும் அதிகரித்துள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் எச்.ஐ.வி பரிசோதனை செய்யும் உபகரணங்களுக்கும் பற்றாக்குறை நிலவி வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் எச்.ஐ.வி பரிசோதனைகளை குறைவாக செய்யும்படி ஊழியர்கள் நிர்பந்திக்கப்படுகின்றனர். இதனால் புதிய எச்.ஐ.வி. நோயாளிகள் கண்டுபிடிக்கப்படுவது திட்டமிட்டு தடுக்கப்படுகிறது. இதன்மூலம் இந்தியாவில் எச்.ஐ.வி.நோயின் தாக்கம் குறைந்துவிட்டதாக கூறி எய்ட்ஸ் தடுப்பு திட்டத்திற்கு நிதியை குறைத்து வருகிறார்கள். 2030-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் எய்ட்ஸ் நோயை ஒழிப்போம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆனால் இவர்களின் உண்மையான நோக்கம் எய்ட்ஸ் நோய் ஒழிப்பதற்கு அல்ல! எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்தை சீர்குலைத்து முடக்குவதுதான் நோக்கமாக உள்ளது இவர்களின் நடவடிக்கைகள் மூலம் தெரிகிறது.
தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் செயல்படும் 186 எச்.ஐ.வி - ஆலோசனை மற்றும் பரிசோதனை மையங்களை மூட மத்திய அரசின் சுற்றறிக்கை!
தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தின் கீழ் தமிழகம் முழுவதும் 377 எச்.ஐ.வி - ஆலோசனை மற்றும் பரிசோதனை செய்யும் நம்பிக்கை மையங்கள் அரசு மருத்துவ கல்லூரி, அரசு மருத்துவமனைகள், நகர்புற சுகாதார மையங்கள், மத்திய சிறைச்சாலை காசநோய் சிகிச்கை மையங்கள் மற்றும் தொழிலாளர் ஈட்டுறுதி மருத்துவமனைகளில் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் தமிழகத்தில் 180 மையங்களை மூடவேண்டும் என தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு நிறுவனம் சுற்றறிக்கையை 05-07-2023 அன்று தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்திற்கு அனுப்பியுள்ளார்கள் என்பது அதிர்ச்சிகரமாக உள்ளது. தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் செயல்படும் 188 எச்.ஐ.வி. பரிசோதனை மற்றும் ஆலோசனை மையங்களை முடினால் தமிழகத்தில் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டம் முற்றிலும் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது, இது எய்ட்ஸ் நோயாளிகளின் சேவையில் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை தெரிவிக்கிறோம். மேலும் தமிழகத்தில் எச்.ஐ.வி தொடர்பான விழிப்புணர்வு பணிகளின் தொய்வு ஏற்படும். எச்.ஐ.வி தொற்றாளர்களுக்கு கிடைக்க வேண்டிய ஆலோசனைகள் தடைப்படும். இதன் விளைவாக சமூகத்தில் எச்.ஐ.வி. / எய்ட்ஸ் தொற்று பரவும் விகிதம் அதிகமாகி எதிர்மறையான சமூக விளைவுகளை ஏற்படுத்திட வாய்ப்புள்ளது. தற்போது ஒவ்வொரு மையத்திலும் எச்.ஐ.வி / எய்ட்ஸ் ஆலோசகர்கள் மற்றும் ஆய்வகநுட்புனர்கள் எச்.ஐ.வி / எய்ட்ஸ் ஆலோசனை மற்றும் பரிசோதனை பணிகளை மட்டும் பார்க்காமல் பால்வினை நோய் பிரிவு ஏ.ஆர்.டி மையம் மற்றும் வளர் இளம் பருவத்தினர்கள் நல மையம் உள்ளிட்ட பணிகளை கூடுதலாக கவனித்து வருகின்றனர். தற்போது 186 மையங்களை மூடினால் மேற்கூறிய அனைத்து பணிகளும் கேள்விகுறியாகும் அபாயமும் உள்ளது. தமிழகத்தில் 20 ஆண்டுகளுக்கு மேலாக எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்தின் கீழ் பணிபுரிந்து வரும் 2500 ஊழியர்களின் வேலை பறிபோகும் சூழல் ஏற்பட்டுள்ளது.
தற்போது தமிழகத்தில் அனைத்து கர்ப்பிணிகளுக்கும் ஒருங்கிணைந்த ஆலோசனை மற்றும் பரிசோதனை மையங்களில் கட்டாயம் எச்.ஐ.வி பரிசோதனை செய்யப்படுகிறது. ஒருவேளை கர்ப்பிணி பெண்களுக்கு எச்.ஐ.வி தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டால், அது பிறக்கவிருக்கும் குழந்தைக்குப் பரவாமல் இருப்பததற்கான உரிய ஆலோசனைகள் மற்றும் மருந்துகள் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் புதிதாக பிறக்கும் குழந்தைகள் எச்.ஐ.வி தொற்றுடன் பிறப்பது முற்றிலும் தடுக்கப்படுகிறது. ஆனால் எச்.ஐ.வி பரிசோதனை செய்யும் நம்பிக்கை மையங்களை மூடினால் எச்.ஐ.வி தொற்றுள்ள கர்ப்பிணி பெண்கள் மூலம் குழந்தைக்கு எச்.ஐ.வி நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது மேலும் அரசு மருத்துவமனைகளில் செயல்படும் நம்பிக்கை மையங்களில் அறுவை சிகிச்சை டையாலசிஸ், அவசர சிகிச்சை பிரிவு மற்றும் பல் மருத்துவம் ஆகிய பிரிவுகளுக்கு வரும் நோயாளிகளுக்கு கட்டாயம் எச்ஐ.வி பரிசோதனை செய்யப்பட வேண்டிய அவசியம் உள்ளது. ஆனால் நம்பிக்கை மையங்களை மூடினால் மேற்கண்ட நோயாளிகள் பாதிப்படைவார்கள்.
அரசு - தனியார் பங்கேற்பு என்ற பெயரில் ஏ.ஆர்.டி மையங்களை தனியார்மயமாக்கும் மத்திய அரசு!
தமிழகத்தில் எச்.ஐ.வி - ஆல் பாதிக்கப்படும் மக்களுக்கு ஏ.ஆர்.டி கூட்டு மருந்து வழங்கிட அரசு மருத்துவ கல்லூரி, அரசு மருத்துவமனைகளில் 55 ஏ.ஆர்.டி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த மையங்களில் சுமார் ஒரு லட்சம் நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இங்கு வரும் நோயாளிகளுக்கு உரிய ஆலோசனைகள் கொடுக்கப்பட்டு இலவச மருந்து மாத்திரைகள் வழங்கப்படுகின்றன. இலவசமாக இரத்த பரிசோதனைகளும் செய்யப்படுகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் தனியார் மருத்துவ கல்லூரிகளில் ஏ.ஆர்.டி மையங்களை துவக்க மத்திய அரசு ஆர்வம் செலுத்தி வருகிறது.
இதுவரை 10 - தனியார் மருத்துவ கல்லூரிகளில் ஏ.ஆர்.டி மையங்கள் துவக்கப்பட்டுள்ளன. தனியார் மருத்துவ கல்லூரியில் ஏ.ஆர்.டி மையங்களுக்கு எச்.ஐ.வி - நோயாளிகளை அனுப்பி வைக்க அரசு மருத்துவ கல்லூரி ஏ.ஆர்.டி மைய மருத்துவர் மற்றும் ஆலோசகர்களுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர். மேலும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் செயல்படும் ஏ.ஆர்.டி மையங்களில் ஏ.ஆர்.டி மாத்திரைகள் மட்டும் தற்போது இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் தனியார் மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளிடம் இரத்த பரிசோதனைகளுக்கு ஆயிரக்கணக்கில் பணம் பறித்து வருகின்றனர்.
எதிர் காலத்தில் தனியார் மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் ஏ.ஆர்.டி மாத்திரைகளும் பணம் கொடுத்து வாங்க வேண்டிய நிலை ஏற்படும் அபாயம் உள்ளது. ஏ.ஆர்.டி மையங்களை தனியார் மருத்துவ கல்லூரிகளில் துவங்கினால் எய்ட்ஸ் நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை கிடைப்பதில் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும். இதனால் ஏழை எளிய நோயாளிகள் பணம் கொடுத்து மருந்து வாங்க முடியாமல் மரணம் அடையும் நிலை ஏற்படும் என்பதை மத்திய, மாநில அரசுகளின் கவனத்திற்கு கொண்டுவருகிறோம். எனவே தமிழக அரசு இப்பிரச்சனையில் தலையிட்டு மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து எச்.ஐ.வி பரிசோதனை மையங்களை குறைக்கும் முடிவையும் ஏ.ஆர்.டி. மையம் தனியார்மயமாக்குவதையும் தடுத்து நிறுத்திடவேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.
சங்க நிர்வாகிகளுடன் நடத்திய பேச்சு வார்த்தையில் ஏற்றுகொண்ட உடன்படிக்கையை மீறும் TANSACS - நிர்வாகம் :-
நமது சங்கத்தின் சார்பாக ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு பாரபட்சமில்லாமல் NACO - வின் ஆணைப்படி 10% ஊதிய உயர்வு வழங்கிட வலியுறுத்தி பல கட்ட போராட்டங்களை நடத்தி வந்தோம் அதன்படி 13-04-2023 அன்று சென்னை திட்ட இயக்குனர் அலுவலகத்தில் பெருந்திரள் முறையீடு போராட்டம் நடத்திட அறிவிப்பு செய்திருந்தோம். 12-04-2023 அன்று நமது சங்கத்தின் மாநில நிர்வாகிகள் மற்றும் அரசு ஊழியர்கள் சங்கத்தின் நிர்வாகிகளை பேச்சுவார்த்தைக்கு நிர்வாகம் அழைத்தது அதன்படி நிர்வாகத்துடன் சுமூகமான நிலையை ஏற்படுத்தும் நோக்கத்துடன் சமதான பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டோம்.
சமாதான பேச்சுவார்த்தையில் உடன்படிக்கையின்படி அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு எதிர்வரும் TANSACS - நிர்வாக குழு கூட்டத்தில் நிதி ஒப்புதல் பெற்று 10% ஊதிய உயர்வு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று எழுத்துபூர்வமாக கொடுத்தார்கள். ஆனால் நமது சங்கத்தின் சார்பாக சுகாதார துறை செயலாளர் அவர்களிடம் 05-04-2023 அன்று கொடுக்கப்பட்ட மனுவிற்கு TANSACS - நீர்வாகம் 30-06-2023 அன்று பதில் அனுப்பும்பொழுது தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாடு திட்டத்தின் கீழ் அரசு அரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு எதிர்வரும் TANSACS - நிர்வாககுழு கூட்டத்தில் தேசிய சுகாதார குழுமத்தின் நீதியை கோருவது தொடர்பாக தீர்மானம் வைக்கப்படும் என்று சங்க உறுப்பினர்களுக்கு தெரிவிக்கப்பட்டது என்று சொல்லியுள்ளார்கள்.
இது சமாதான கூட்டத்தின் உடன்படிக்கைக்கு மாறானதாகும் TANSACS - நிர்வாகத்தின் இதுபோன்ற முன்னுக்கு பின் முரண்பாடான செயல்பாடுகளால் தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாடு திட்டத்தில் சுமூக சூழ்நிலை ஏற்படாது. அதனால்தான் மீண்டும் போராடும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் என்பதை தெரிவித்துகொள்கிறோம். எனவே சமாதான கூட்டத்தின் அடிப்படையில் பேச்சுவார்த்தையில் நிர்வாகம் ஏற்றுகொண்டபடி அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியுரியும் ஊழியர்களுக்கு 10% ஊதிய ஊயர்வு வழங்கிட வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். எனவே தமிழக அரசு மேற்கண்ட பிரச்சனைகளில் தலையிட்டு மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து எச்.ஐ.வி பரிசோதனை மையங்களை குறைக்கும் முடிவையும் ஏ.ஆர்.டி மையங்கள் தனியார்மயாக்குவதையும் தடுத்து நிறுத்திட வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
தொழிலாளர்களை நவீன கொத்தடிமைகளாக்கி வரும் மத்திய அரசின் தனியார்மய கொள்கையை எதிர்த்தும், மக்கள் விரோத, ஊழியர் விரோத கொள்கைகளை எதிர்த்தும் நாடு முழுவதும் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்தின் கீழ் பணிபுரிந்து வரும் ஊழியர்கள் கிளர்ந்தெழுந்து போராடி வருகின்றனர். அதன் ஒருபகுதியாக தமிழகத்தில் நாமும் போராட வேண்டிய அவசியம் உள்ளது. எனவே 27-07-2023 அன்று அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு நடைபெறும் கவனயீர்ப்பு ஆர்பாட்டத்திற்கு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்தில் பணிபுரியும் ஊழியர்களையும், தோழமை சங்க நிர்வாகிகளையும், ஜனநாயக சக்திகளையும் அறைக்கூவி அழைக்கின்றோம்.
அடுத்த கட்ட போராட்டம்.... 17-08-2023 சென்னையில் தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்ட இயக்குனர் அலுவலகத்தில் பெருந்திரள் முறையீடு போராட்டம்.....
மத்திய அரசே! மத்திய அரசே!!
- அரசு தனியார் பங்கேற்பு என்ற பெயரில் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்தை தனியார்மயமாக்காதே!
- இந்தியா முழுவதும் 2,100 - எச்.ஜ.வி பரிசோதனை மற்றும் ஆலோசனை மையங்களை மூட மாநில அரசுக்களுக்கு அனுப்பியுள்ள சுற்றரிக்கையை திரும்பபெறு!
- ஏ.ஆர்.டி மையங்களை தனியார் மருத்துவ கல்லூரிகளில் துவங்க மாநில அரசுகளை நிர்பந்தம் செய்யாதே!
- பன்னாட்டு மருந்து நிறுவனங்களின் லாபத்திற்கு மக்களின் உயிரை பலிகொடுக்காதே!
- மக்களின் உயிர்காக்கும் மருத்துவ துறையில் அவுட் சோர்சிங் முறையை கைவிடுக! எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்திற்கு நிதி ஒதுக்கீட்டை குறைக்காதே!
தமிழக அரசே! தமிழக அரசே!!
- தமிழகத்தில் 186 - நம்பிக்கை மையங்களை மூட மத்திய அரசு அனுப்பியுள்ள சுற்றறிக்கையை திரும்பபெற வலியுறுத்திடுக!
- அரசு ஆரம்ப சுகாதாரநிலையங்களில் பணி புரியும் ஊழியர்களுக்கு 10% ஊதிய உயர்வு வழங்கிடுக! தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்தின் கீழ் பணி புரியும் ஊழியர்களுக்கு பணிபாதுகாப்பு, பணிநிரந்தரம் வழங்கிடுக!
இங்ஙனம்:
தோழமையுடன்
மாநில மாவட்ட நிர்வாகிகள்
தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அனைத்து ஊழியர்கள் நலச்சங்கம்
- சேரன் வாஞ்சிநாதன்
(முகநூலில்)