பாஜக: ஏகாதிபத்தியம் மற்றும் இந்திய பெருமுதலாளி வர்க்கத்தின் தேர்வு

இரா. முருகவேள்

பாஜக: ஏகாதிபத்தியம் மற்றும் இந்திய பெருமுதலாளி வர்க்கத்தின் தேர்வு

1) அமெரிக்கா தலைமையில் ஒற்றை துருவ உலகம் உருவாகியிருந்தது. (ஒற்றை மேலாதிக்கத்திற்கு முயற்சித்ததே தவிர உருவாக்கவில்லை; உருவாக்கவும் முடியாது) 

2) இந்தியா சுதந்திர நாடு (இந்தியா இன்றும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் புதியகாலனியாகவே நீடிக்கிறது) 

3) இந்திய முதலாளிகள் பெரு முதலாளிகள் (இந்திய பெரும் முதலாளிகள் இன்றும் ஏகாதிபத்திய சார்புடைய தரகு முதலாளிகளாகவே உள்ளனர்) 

4) சி.பி.எம் அரசு வேறு வழியின்றி உலகமயத்தை ஏற்றுக் கொண்டது. (கொள்கையளவிலேயே அவர்கள் அதை ஏற்றுக்கொண்டார்கள்) போன்றவற்றில் செந்தளம் வலைதளம் மாற்று நிலைபாடுகளைக் கொண்டுள்ளது.

பாஜக கட்சியானது ஏகாதிபத்தியங்கள் மற்றும் இந்திய தரகு பெருமுதலாளி வர்க்கங்களின் விருப்பத் தேர்வாக எவ்வாறு நீடிக்கிறது - தனியார்மய, தாராளமய உலகமயக் கொள்கைகளை அமல்படுத்துவதில் - ஒரு பாசிச அரசைக் கட்டியமைப்பதில் அவர்களுக்குச் சேவை செய்கிறது  என்பதை தோழர். முருகவேள் மிக எளிமையாக விளக்குகிறார்.  இருப்பினும் மேற்கண்ட விமர்சனங்களோடு இக்கட்டுரையை படிக்க வேண்டுமாறு கேட்டு கொள்கிறோம்.  

பிஜேபி கட்சியின் இந்துத்துவ கொள்கைகளுக்கும் அதன் தாராளமய, தடையற்ற வணிகக் கொள்கைகளுக்கும் உள்ள உறவைப் பற்றி உயிர்மையில் ஒரு கட்டுரை எழுதியுள்ளேன். There is no alternative (TINA) அரசு சலுகைகளை நீக்குவதைத் தவிர வேறு வழி இல்லை என்ற மார்கரெட் தாட்சரின் சொற்களை தலைப்பாக வைத்திருந்தேன்.  அதைவிட கவர்ச்சியாக ஷார்ப்பாக பெருமுதலாளித்துவ கொள்ளை என்பது போன்ற தலைப்பைக் கொடுத்து உள்ளனர். இதுவும் பொருத்தமாகத்தான் இருக்கிறது. . உயிர்மைக்கு நன்றியுடன் கட்டுரையை பகிர்கிறேன். கட்டுரை பற்றி நண்பர்கள் கருத்து கூறினால்  மகிழ்வேன்.

TINA –    வேறுவழியேதும் இல்லை 

பிஜேபி அரசு இரண்டுவிதமான தோற்றங்களை அளிக்கிறது. ஒன்று நாடு முழுவதும் பிரம்மாண்டமான நான்குவழி ஆறுவழி சாலைகள் அமைத்து வடக்கு தெற்கு கிழக்கு மேற்கு நான்கு பகுதிகளையும் துறைமுகங்களுடனும், வெளிநாடுகளுடனும் இணைப்பதன் மூலமும் வெளிப்படுத்திக் கொள்ளும் முகம். இதன் மூலம் ஏற்கெனவே உள்ள துறைமுகங்களை மேம்படுத்தியும், புதுப் புது துறைமுகங்களை ஏற்படுத்தியும் வணிகத்தை நவீனப்படுத்தும் சாகர் மாலா திட்டத்தை  இந்த அரசு செயல்படுத்துகிறது.

கார்ப்பரேட் பாணி ஆட்சி, உலகம் முழுவதும் பயணம் செய்து அன்னிய முதலீடுகளை ஈர்த்தல் என்று நவீனமான அரசு போல ஒரு தோற்றத்தை அளிக்கிறது இந்தக் கட்சியும் ஆட்சியும். 

இறைச்சி கொண்டு செல்பவர்களை அடித்துக் கொல்லுதல், கும்பல் தாக்குதல்கள், கோமியம், காதலர் தின எதிர்ப்பு, பழமைக்குத் திரும்புதல், சிஏஏ போன்ற சட்டங்கள் என்று முற்றிலும் பழமைவாத முகத்தையும் காட்டுகிறது பிஜேபி. 

சுதந்திர வணிகமே எங்கள் குறிக்கோள் என்று பேச்சு. ஆனால் பேச்சு, எழுத்து சுதந்திரத்தின் மீதான தாக்குதல்கள். மாநில உரிமைகளைப் பறிக்கும் செயல்பாடுகள், மாநிலக்கட்சிகளை தொடர்ந்து பலவீனப்படுத்திவரும் நடவடிக்கைகள், தனித்துவமான பண்பாடுகளை இந்துமயமாக்கும் போக்கு, இந்தி திணிப்பு என்று சர்வாதிகாரப் போக்கு.

இந்த  மூன்றில் எது பிஜேபியின் உண்மை முகம்? இந்த  மூன்றையும் கொண்டு கடந்த எட்டு ஆண்டுகளில் பிஜேபி என்ன சாதித்து உள்ளது?

                             -------------------------------

சுதந்திரத்துக்குப் பிறகு இந்திய பெருமுதலாளித்துவ குழுக்கள் இந்திய சந்தையை தங்கள் இரும்புக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தன. புதிதாக வேறு யாரும் தொழில் தொடங்க பல கட்டுப்பாடுகள் இருந்தன. எந்த அன்னிய நிறுவனமும் இந்திய நிறுவனங்களுடன் கூட்டு சேராமல் தனித்து இங்கே தொழில் தொடங்க  பல தடைகள் இருந்தன. அரசானது உற்பத்தி, ஏற்றுமதி, இறக்குமதி அனைத்தையும் கட்டுப்படுத்தியது.  இந்திய பெருமுதலாளித்துவ குழுமங்களின் செல்வாக்கை  பாதுகாக்கவே  இந்தக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. 

இந்த முதலாளிகளால் செய்ய முடியாத தொழில்களை அரசு மேற்கொண்டு நடத்தியது. அரசு இரும்புப் பாதைகள் அமைத்தது. இரும்பு டாடாவின் கட்டுப்பாட்டில் இருந்தது. பெரும் அணைகளை அரசு கட்டியது. சிமெண்ட் போன்ற கட்டுமானப் பொருட்கள் தனியாரின் பிடியில் இருந்தன. அரசு பஸ் போக்குவரத்தை நடத்தியது. பஸ்களை டாட்டாவும் அசோக் லைலேண்டும் தயாரித்து அரசுக்கு அளித்தன. எனவே அரசும் தனியாரும் இணைந்து செய்யும் கலப்புப் பொருளாதாரம் என்பது டாடா பிர்லா பஜாஜ் போன்ற பெரும் முதலாளித்துவ குழுமங்களுக்குப் பலனளிப்பதாகவே இருந்தது. 

அரசு நகரப் பகுதிகளில் உள்ள குறைவான எண்ணிக்கை கொண்ட முறைப்படுத்தப்பட்ட தொழிலாளர்கள், அரசு ஊழியர்கள் ஆகியோருக்கு சலுகைகள் அளித்து தன்னை ஒரு மக்கள் நல அரசாகக் காட்டிக் கொண்டது. துல்லியமாக திட்டமிட்டு பெருநகரங்களில் குடியிருப்பு பகுதிகள் தொழில் பேட்டைகள் ஆகியவற்றை  அமைத்தது. ஆனால் அவற்றை சுற்றி திட்டமிடப்படாத பெரும் பெரும் சேரிப் பகுதிகளும், அரசு அங்கீகாரம் பெறாத நெரிசலான குடியிருப்பு பகுதிகளும் உருவாவதைத் தடுக்க முடியவில்லை. நகரங்கள் மாபெரும் பிரஷ்ஷர் குக்கர்களைப் போல மூச்சுத் திணறவைக்கும் அளவுக்கு நெரிசலும் வறுமையும், மூர்க்கமும் கொண்டவையாக இருந்தன. வாழ்க்கை வசதிகள் நல்ல வசதிபடைத்தவர்களுக்கே கிடைத்தன. மத்திய தர வர்க்கம் ஒண்டுக்குடித்தனங்களிலேயே முடங்கிக் கிடந்தது. சைக்கிளே முக்கிய போக்குவரத்து சாதனமாகவிருந்தது. ஹாலிவுட் படங்களில் சாலைகளில் கார்கள் பறப்பதை வியப்புடன் பார்த்ததை   இன்னும் கூட சிலர் நினைவு வைத்திருக்க வாய்ப்பு உண்டு. 

நகர வணிகத்தின் பெரும்பகுதி சிறு துணிக்கடைகள், சிறு மற்றும் சாலையோர உணவகங்கள், சிறு பிளாஸ்டிக் பொருள் விற்பனையகங்கள் போன்ற கணக்கில் வராத சிறு உற்பத்தியாளர்கள், வணிகர்களின் கரங்களிலேயே இருந்தது. இது ஓர் இணைப் பொருளாதாரமாக (parallel economy) இயங்கியது.

கிராமங்கள் பெரும் நிலப்பிரபுக்கள் பிடியிலிருந்தன. தலித் மக்களின் பெரும்பகுதி இந்த நிலப்பிரபுக்களின் பண்ணைகளில் பண்ணையாட்களாகவிருந்தனர். இந்த மக்கள் வாழும் பகுதிகள் முதலாளித்துவ நுகர்வுக் கலாச்சாரத்திற்குள் வரவே இல்லை. பேஸ்ட், பிரஷ், ஷாம்பு, டிவி, பைக், நவீன மின் சாதனங்கள், கார்ப்பரேட் பாணியில் தயாரிக்கப்படும் பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள் போன்றவற்றுக்கு இங்கே மார்க்கெட்டே இல்லை. 

காங்கிரஸ் அரசு நகரங்களில் அதிநவீன கல்வி நிலையங்கள் நிறுவி இடதுசாரிகளுக்கு இடம் அளித்து முற்போக்கானதாகக் காட்டிக் கொண்டது. கிராமங்களில் ரண்வீர் சேனா போன்ற பெரும் நிலப்பிரபுத்துவ ஆயுதக் குழுக்கள் மூலம் ஆட்சி நடத்தியது. 

இந்த முதலாளித்துவக் குழுக்களின் பிடியை தளர்த்தி மற்றவர்களுக்கு வாய்ப்பளிக்கும் விதத்தில் லைசன்ஸ் முறையை தளர்த்த 1966, மற்றும் 1980களின் தொடக்கத்தில் முயற்சிகள் செய்யப்பட்டன. ஆனால் அவை பெரிய பலனளிக்கவில்லை.  

1980 க்கு முன்பு பிஜேபிக்கும் அதன் முன்னோடியான ஜன சங்க்  மற்று தாய் அமைப்பான ஆர். எஸ்.எஸ்க்கும்   இந்த தடையற்ற வணிகம், தாராளமயம், தனியார் மயம் ஆகியவற்றில் பெரிய அக்கறை இருந்தது இல்லை. இவற்றையெல்லாம் பேசியது ராஜாஜி தலைமை தாங்கிய சுதந்திரா கட்சிதான். ஆர் எஸ் எஸ் தலைமையிலான இந்துத்துவ அமைப்புகள் பெரும்பாலும் பண்பாட்டு தேசிய வாதம், இந்தியா இந்து மதம் ஆகியவற்றுக்கு ஆபத்து, மதமாற்றம் பெரிய பிரச்சினை என்று மட்டுமே பேசி வந்தன. இத்தனைக்கும் சங் பரிவார் பார்ப்பன பனியா கட்சி என்றே பெயர் பெற்றிருந்தது. 

1970களில்தான்  ஜன சங் கட்சி தனக்கான பொருளாதார கொள்கைகளை வரைவு செய்யும் படி சுப்பிரமணியன் ஸ்வாமியை  கேட்டுக் கொண்டது. சுப்பிரமணியன் ஸ்வாமி தடையற்ற வணிகம், தனியார்மயம், தாராளமயம் ஆகியவற்றின் ஆதரவாளர். இருந்தபோதிலும் ஜன சங்க் மற்றும் பாரதிய  ஜனதா கட்சி தலைவர்கள் ஒரு வினோதமான அன்னிய நிறுவன எதிர்ப்பு பேசியே வந்தனர். ஸ்வாமிதான் முதல் முதலாக கோட்பாட்டு ரீதியில் சங் பரிவார் அமைப்புகளை   சுதந்திர வணிகப் பொருளாதாரக் கொள்கைகளை நோக்கித் திருப்பினார்.

1985 ஆம் ஆண்டு பிஜேபி என்று ஒரு கட்சி இருப்பது பலருக்குத் தெரியாது. 1992 இல் இந்தக் கட்சி  பலலட்சம் பேர்களைத் திரட்டி பாபர் மசூதியை இடித்துவிட்டது. 1998 இல் பிஜெபி பிரதமர் ஆட்சிக்கு வந்துவிட்டார். இவ்வளவு குறுகிய காலத்தில் இவ்வளவு பெரிய வளர்ச்சி எப்படி சாத்தியமானது?

இந்தியா ஒரு பெரும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்வதற்கான அறிகுறிகள் 1985ல் தோன்றின. இந்த நெருக்கடி வளர்ந்து 1990 இல் உச்சகட்டத்தை அடைந்தது. அன்னிய செலாவணி  கையிருப்பு இரண்டு வாரத்துக்கே போதுமானது என்ற நிலைக்கு நாடு தள்ளப்பட்டது. 

சோவியத் யூனியன் சிதறி அமெரிக்காவை மையமாகக் கொண்ட ஒற்றை மைய உலகம் தோன்றியிருந்த காலம் அது. கம்யூனிசம் வீழத் தொடங்கியதுமே அரசுகள் மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும், மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்ற கோட்பாடுகளை அமெரிக்க ஐரோப்பிய அரசுகள் கைவிடத் தொடங்கின. 

சந்தையே அனைத்தையும் தீர்மானிக்கும். அரசு தொழில் உற்பத்தியையும், வணிகத்தையும் கட்டுப்படுத்தக் கூடாது, திட்டமிடக் கூடாது என்ற கோட்பாடு முன்னுக்கு வந்தது. இது இங்கிலாந்து பிரதமர் மார்கரெட் தாட்சர், அமெரிக்க குடியரசு தலைவர் ரீகன் ஆகியோரால் முன் வைக்கப்பட்டது. 

சந்தையே மக்கள் தேவைகளை பூர்த்தி செய்யும் என்றால் என்ன?

அப்படி என்றால் மக்களுக்கு சைக்கிள் தேவைப்படுகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். உற்பத்தியாளர்கள் சைக்கிள் உற்பத்தி செய்தால் லாபம் கிடைக்கும் என்று அதில் இறங்குவார்கள். தடையற்ற வணிகம் என்பதால் பலர் சைக்கிள் உற்பத்தி செய்வார்கள். எனவே உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் தங்கள் விருப்பபடி விலை வைக்க முடியாது. சந்தையில் நிலவும் போட்டி சைக்கிள் விலை உயராமல் கட்டுப்படுத்தி விடும். மக்களின் தேவை பூர்த்தியாகிவிடும். எனவே மக்களுக்காக இவ்வளவு சைக்கிள்கள், இன்ன விலையில் தயாரிக்க வேண்டும் என்ற கட்டுப்பாடுகளை அரசு விதிக்கக் கூடாது. இன்னாருக்கு மட்டுமே லைசன்ஸ் வழங்கப்படும் என்ற முறை இருக்கக் கூடாது. அரசின் தலையீடு வணிகத்தின் வீச்சை குறைத்துவிடும். தவிர இதற்காக அரசு செய்யும் செலவுகள் மக்கள் தலையிலும் நிறுவனங்கள் தலையிலும் விழும். எனவே அரசின் வேலைகளைக் குறைக்க வேண்டும். அரசு நீதித்துறை, பாதுகாப்பு ஆகியவற்றை மட்டுமே பார்த்துக் கொள்ள வேண்டும். ரேஷன் போன்ற மான்யங்கள் வழங்குவது, போக்குவரத்து, கல்வி, மருத்துவம் போன்ற சேவைகளை வழங்குவது ஆகியவற்றை அரச நிறுத்த வேண்டும். இவை தனியாரிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். உள்நாட்டு அமைப்புகள் மட்டுமல்லாமல் வெளிநாட்டு அமைப்புகளும் இங்கே வந்து முதலீடு செய்யவும், வணிகம் செய்யவும் தடைகள் இருக்கக் கூடாது. அடிப்படையில் பன்னாட்டு நிறுவனங்களை இங்கே அனுமதிக்க வேண்டும் என்பது முதன்மையானதாகக் கருதப்பட்டது.

இதுதான் சுருக்கமாக தடையற்ற வணிகம். தாராளமயம். உலகமயம்.

போட்டிக்கு சோவியத் யூனியன் இல்லாத நிலையில் உலக வங்கி, பன்னாட்டு நிதியம் போன்றவை பொருளாதார நெருக்கடியில் சிக்கிய நாடுகளை வற்புறுத்தியும், மிரட்டியும் இந்தப் பொருளாதார சீர்திருத்தங்களை ஏற்றுக் கொள்ளச் செய்தன. 

இதை எதிர்த்த நாடுகளின் அரசுகள் கவிழ்க்கப்பட்டன. தலைவர்கள் மர்மமான முறையில் இறந்து போயினர். 

இந்தச் சூழ்நிலையில் தான் ராஜீவ் காந்தி கொல்லப்பட்டு அந்த இடத்தில் நரசிம்ம ராவ் உட்கார்ந்தார்.  முன்னாள் உலகவங்கி அதிகாரியான மன்மோகன் சிங் நிதியமைச்சரானார். இதில் உலக வங்கியின் வற்புறுத்தல் இருந்தது என்ற வாதங்கள் உள்ளன. நரசிம்ம ராவும், மன்மோகன் சிங்கும் விரைந்து உலக வங்கி கோரிய பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொள்ளத் தொடங்கினர். இறக்குமதிகளுக்கான வரிகளைக் குறைத்தல், சந்தைகளின் மீதான அரசு கட்டுப்பாட்டை நிறுத்துதல், வரிகளைக் குறைத்தல் ஆகிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.அரசு செலவுகளைக் குறைக்க அரசு பொதுத்துறை நிறுவனங்களில் முதலீடு செய்வதைக் குறைத்தது.  பல்வேறு சீர்திருத்தங்கள் செய்யப்பட்ட  பிறகு உலகவங்கி நவம்பர் 1991இல் 500 மில்லியன் டாலர் கடன் அளித்து இந்தியா தனது பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டு வர உதவியது. 

இதன் பிறகு வெளிநாட்டு மூலதனம் வெள்ளம் போல பாய்ந்தது. இந்தியாவில் அன்னிய முதலீடுகள் மூன்று மடங்கு அதிகரித்தது. அன்னிய மூலதனத்தால் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுவது 7.3சதவீதத்தில் இருந்து 14 சதவீதமாக 1990 லிருந்து 2000 க்குள் உயர்ந்தது. 

“1991 ஆம் ஆண்டுக்கு பிறகு காங்கிரஸ் முன்னெடுத்த பொருளாதார சீர்திருத்தங்கள் தொடங்கின. அவை பெரும்பாலும் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படாமல், அதிகாரிகளுடனான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், ரகசியமான கொள்கை மாற்றங்கள் என்ற பாணியில் கள்ளத்தனமாகவே செயல்படுத்தபப்ட்டன. தொழிலாளர் நலச்சடங்களை திருத்துவது, ரேஷன் முறையை ஒழிப்பது ஆகியவை இவ்வாறு செய்யப்பட்ட மாற்றங்களில் முக்கியமானவை.  திருட்டுத்தனமாக நிறைவேற்றப்பட்டதன் காரணமாக இந்திய சீர்திருத்தங்கள் பெரும் கொள்ளையை ஊக்குவிப்பவையாகவும் ஊழல் மயமானவையாகவும் மாறின. காங்கிரசின் இந்த  தந்திரத்தின் காரணமாக  பொருளாதார சீர்திருத்தங்களை ஆதரிக்கும் மாபெரும் வல்லமை வாய்ந்த பெருமுதலாளித்துவ குழுக்களுக்கு  அவற்றை நேரடியாக நடைமுறைப்படுத்தும் திறன்பெற்ற ஒரு அரசியல் கட்சியை நாட வேண்டிய அவசியம் ஏற்பட்டது” என்கிறார் சங்கர் கோபாலகிருஷ்ணன். (Why do they love Narendra modi).

                              ---------------------

இது தவிர இன்னொரு சூழலும் இந்தியாவை சங்பரிவாரின் கரங்களில் ஒப்படைத்தது. பசுமைப்புரட்சிக்குப் பிறகான காலத்தில் பெரும் வளர்ச்சி பெற்ற கிராமப்புற பணக்கார விவசாயிகள் ஆட்சியதிகாரத்தில் தங்கள் பங்குக்காக போராடத் தொடங்கிய காலம் எண்பதுகள். இந்தியா முழுவதும் தொடர்சியாக விவசாயிகள் போராட்டங்கள் நடந்தன. பஞ்சாப், அஸ்ஸாம், வடகிழக்கு மாநிலங்களில் தேசிய இன விடுதலைப் போராட்டங்கள் தீவிரமடைந்தன. பிஹார், ஆந்திரா, ஒரிஸ்ஸா போன்ற மாநிலங்களில் புதிதாக மாநிலக்கட்சிகள் உருவாகின. இந்தப் பகுதிகளின் மாவோயிஸ்ட் கட்சியின் தலைமையிலான பழங்குடி மக்கள், கூலி, ஏழை விவசாயிகளின் போராட்டம் பாய்ச்சலில் முன்னேறியது. இது வலிமையான இந்தியாவை விரும்பிய பெரும் தொழில் நிறுவனங்களுக்கு தொழில் ரீதியிலான சிக்கலையும், பயத்தையும் அளித்தது. இந்தியா பல மையங்கள் கொண்ட நாடாக மாறுவதை இவர்கள் பீதியுடன் பார்த்துக் கொண்டிருந்தனர்.

இந்தக் காலகட்டத்திலேயே பார்ப்பன பனியா கட்சியாக அறியப்பட்ட ஆர்எஸ்எஸ் பிஜெபியையும், விஸ்வ ஹிந்து பரிஷத்தையும் உருவாக்கியது. தொடர்சியான இந்துத்துவ பிரச்சாரம், ஒரு நாடு, ஒரு மதம், ஒரு மொழி என்ற கொள்கை, ராம் லீலா பூஜைகளால் ஏற்பட்ட மதப்பிளவு ஆகியவற்றால் பிஜெபி நாட்டின் அரசியலின் மையப் பகுதிக்கு வந்தது. 

சிறு நகரங்களுக்கும், கிராமங்களுக்கும் தங்கள்  வணிகத்தை விரிவுபடுத்துவது, அரசு சொத்துக்களைக் கைப்பற்றுவது, வெளிநாட்டு மூலதனத்தின் உறவோடு உலகச் சந்தைக்கு செல்வது போன்ற நோக்கங்கள் கொண்டிருந்த இந்திய பெருமுதலாளிகளுக்கு வலிமையான மத்திய அரசு, மையப்படுத்தப்பட்ட வரிவசூல் முறை, மக்களின் எதிர்ப்புகளை முறியடிக்க ஆயுதப்படைகளை தயங்காமல் பயன்படுத்தும் ராணுவவாதம்,   உள்ளூர் கட்சிகளை எதிர்த்து நிற்கக் கூடிய வலிமை பெற்ற அணிகள் ஆகியவற்றை கொள்கையாகக் கொண்ட ஒரு கட்சி தேவைப்பட்டது. 

இந்த எதிர்பார்ப்புகள் அனைத்தையும் நிறைவு செய்யக் கூடியதாக இருப்பது பிஜேபி என்பதில் சந்தேகமில்லை அல்லவா? 1998 இல் வந்த வாஜ்பாய் அரசு பல தனியார்மய நடவடிக்கைகளை எடுத்க ஒரு தனி அமைச்சரையே ஏற்படுத்தியது. இந்த நடவடிக்கைகள் நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தின. இவை ஏற்படுத்திய அதிருப்தியின் காரணமாக மாநிலக் கட்சிகளிடமிருந்தும், உள்ளூர் முதலாளிகளிடமிருந்தும் பிஜேபி தனிமைப்பட்டது.   தோல்வியடைந்தது. 

அடுத்து வந்த பத்தாண்டுகளில் நன்கு திட்டமிடப்பட்டு மோடி வளர்ச்சியின் நாயகனாக இந்தியா முழுவதும் பிரபலப்படுத்தப்பட்டார். பலவீனமான மன்மோகன் சிங்குக்கு மாற்றாக ஆளூமை மிக்க, ஆண்மை மிக்க (56 இன்ச்), வீரம் செறிந்த தலைவராக மோடி முன்னிருத்தப்பட்டார். பிஜேபியிலேயே இருந்த பொருளாதார சீர்திருத்தங்களை மெதுவாக செயல்படுத்த வேண்டும் என்று கருதிய அத்வானி போன்ற தலைவர்கள் ஓரம் கட்டப்பட்டனர். பின்பு நடந்தது அனைவரும் அறிந்ததே. 

TINA – There is no alternative  என்று மார்க்கரெட் தாட்சர் தான் மேற்கொண்டு வந்த பொருளாதார சீர்திருத்தங்கள் குறித்துக் கூறினார். பின்பு இந்தச் சொற்கள் உலகமய பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொள்பவர்கள் அனைவரும் உச்சரிக்கும் சொற்களாகிவிட்டன. 

இந்தியாவைப் பொருத்தவரை வேறு வழியேதும் இல்லை என்ற சொற்கள் இரட்டை பொருளைத் தருகின்றன. மோடி அரசு பொருளாதார சீர்திருத்தங்களே நாட்டின் முன் உள்ள ஒரே பாதை என்கிறது. கம்யூனிஸ்ட் கட்சிகள் தவிர மற்ற எல்லா கட்சிகளும் தனியார்மயம் தாராளமயத்தை ஏற்றுக் கொள்கின்றன. கம்யூனிஸ்ட் கட்சிகளும் கொள்கையளவில் எதிர்த்தாலும் நடைமுறையில் தனியார் மயத்தை ஏற்றுக் கொள்வதைத் தவிர அவற்றுக்கும் வேறு வழியில்லை. 

எனவே வேறு வழியேதும் இல்லை என்பது ஒன்று. வேறு வழி இல்லாத சூழ்நிலை ஏற்படுத்தப்படுகிறது என்பது இன்னொன்று. 

மோடியின் பொருளாதார சீர்திருத்தங்களை எல்லா கட்சிகளும் ஏற்றுக் கொள்கின்றன. சரி. இந்துத்துவா? அதையும்  பெரும்பாலான ஏற்றுக் கொள்கின்றன. 

1998 ஆம் ஆண்டு வாஜ்பாய் ஆட்சிக்கு வந்ததும் ராமர் கோவில் கட்டவில்லை. காஷ்மீரி பண்டிட்டுகளை காஷ்மீரில் குடியமர்த்தவில்லை. அதற்கு பதிலாக இந்திய தொலை தொடர்பு நிறுவனத்தை பாரத் சன்சார் நிகம் லிமிட்டட் என்ற அரசு கம்பெனி ஆக்கினார், இதற்கு தனியார் நிறுவனங்கள் போலவே மேனேஜிங் டைரக்டர் போன்ற பதவிகள் உருவாக்கப்பட்டன.  தனியார் முதலீடுகள் அனுமதிக்கப்பட்டன. அதிகமாக முதலீடு செய்யும் தனியார் நிறுவனங்கள் பிஎஸ்என்எல்லின் நிர்வாகத்திலும் பங்கு பெற்றன. தங்க நாற்கர சாலைத் திட்டத்தை உருவாக்கினார். மும்பை, டெல்லி சென்னை கல்கத்தா நகரங்களை நான்குவழி ஆறுவழி சாலைகள் மூலம் இணைக்க லட்சம் கோடி ரூபாய் செலவிடப்பட்டது. இந்தப் பணம் பெட்ரோல் கேஸ் பொருட்களின் மீதான வரியிலிருந்து திரட்டப்பட்டது. காஷ்மீர் பண்டிட்டுகள், ராமர் கோவில் எல்லாம் கிடப்பில் போடப்பட்டன.

வாஜ்பாய் அரசு அமைத்த இந்த சாலைகள் நாட்டின் பொருளாதார மையங்களை, முக்கியமான சந்தைகளை ஒன்றிணைத்தன. உள்நாட்டில் சரக்குப் போக்குவரத்து பெரும் வளர்ச்சியடைந்தது. உள்நாட்டில் உள்ள தொழிற்சலைகள், வணிக மையங்கள் துறைமுகங்களுடன் இணைக்கப்பட்டன. இதுவரை நவீன முதலாளித்துவத்தின் கரங்கள் தீண்டாத கிராமங்களில் கார்ப்பரேட் விற்பனைப் பொருட்கள் தாராளமாகக் கிடைக்கத் தொடங்கின. சந்தை விரிந்து பெருகியது.

உதாரணமாக நாமக்கல் கோழி இந்தியா முழுவதும் செல்கிறது. திருச்செங்கோடு ரிக் வண்டிகள் இந்தியா முழுவதும் செல்கின்றன. இந்தக் கோழிகளுக்கான தொழில் நுட்பம் அமெரிக்காவிலிருந்து வருகிறது. ரிக் வண்டிகளுக்கான பல உதிரிப்பாகங்கள் பல்வேறு பன்னாட்டு நிறுவனங்களால் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த சாலைகள் திருப்பூர், கோவை போன்ற இரண்டாம் கட்ட நகரங்களையும், நாமக்கல், திருச்செங்கோடு போன்ற மூன்றாம் கட்ட நகரங்களையும் தொட்டுச் சென்றன.  

இந்தியா முழுவதும் இது போல நடந்ததில் வட நாட்டு பெருமுதலாளிகளுடன் நெருங்கிய உறவு கொண்ட ஒரு உள்ளூர் வணிக  வர்க்கம் நாடு முழுவதும் ஒவ்வொரு மாநிலத்திலும், நகரத்திலும், தொழில் மையத்திலும் உருவாகியது. தமிழ் நாடு, கேரளா ஆந்திரா தவிர்த்து மற்ற பகுதிகளில் இந்த வர்க்கமே தனி சந்தைகள், உள்ளூர் ஆதிக்கம் ஆகியவற்றை  தங்கள் கொள்கைகளாகக் கொண்டிருந்த பல மாநிலக் கட்சிகளை பிஜெபியை நோக்கி உந்தித் தள்ளியது. மாநிலக் கட்சிகளைத் தோற்கடித்து அந்த இடத்தில் பிஜேபியை உட்கார வைத்தது. 

மாநிலங்களின் தனித்தன்மை, போன்றவை மறைந்து வலிமை வாய்ந்த இந்தியா, வலிமை வாய்ந்த மத்திய அரசு என்ற கோட்பாட்டின் ஆதரவாளர்களாக இந்த உள்ளூர் முதலாளிகள் மாறினார்கள்.

மோடி நாடு முழுவதும் துறைமுகங்களை உலகத் தரம் வாய்ந்தவையாக நவீனப்படுத்தும். கடல்வழி போக்குவரத்தை வளர்க்கும் சாகர் மாலா திட்டத்தை தொடங்கியுள்ளார். இதுவும் வாஜ்பாய் அரசின் திட்டம்தான். இதில் 9 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான 577 திட்டங்கள் உள்ளன. 

உலக சப்ளை சங்கிலி தொடரில் இந்தியாவை இரண்டறக் கலக்கச் செய்வதே இந்த சாகர் மாலாவின் நோக்கம். 

                        ------------------------------------

பிஜேபி அரசின் பொருளாதாரக் கொள்கை என்ன? இந்திய மக்களின் பிரச்சினைகளை தீர்க்க இந்தக் கட்சி என்ன வழி வைத்திருக்கிறது? 

பிஜேபி அரசு இந்தியாவில் எல்லா துறைகளிலும் தனியார் முதலீட்டை ஆதரிக்கிறது. தனியார் முதலீடு என்பது வெளிநாட்டு முதலீடுகளையும் சேர்த்துதான். உதாரணமாக இன்சூரன்ஸ், ரயில்வே ஆகியவற்றை சொல்லலாம்.

அரசு துறைகளை தனியாருக்கு விற்கிறது.  அட்டவனை தயாரித்து சுமார் 1500 பிரம்மாண்டமான அரசு நிறுவனங்களை விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறது

மானியங்கள், சலுகைகள் ஆகியவற்றை ஒழிப்பது.

அத்தியாவசிய சேவைகளான குடிநீர், மின்சாரம் போன்றவற்றை  வியாபாரம் ஆக்கி தனியாரிடம் கொடுத்துவிடுவது.

இந்த கொள்கைகளை செயல்படுத்துவதன் மூலம் இந்தியாவில் யார் வேண்டுமானாலும் வணிகம் செய்யலாம், தொழில் தொடங்கலாம், உலக கார்ப்பரேட்டுகள் தடையில்லாமல் இங்கே முதலீடு செய்யலாம் என்ற நிலையை  பிஜேபி அரசு ஏற்படுத்தி வருகிறது. 

உதாரணமாக அரசு மக்களுக்கு கல்வி, மருத்துவம், போக்குவரத்து, போன்ற சேவைகளை அளிக்க வேண்டிய அவசியம் இல்லை. இதை தொழிலாகச் செய்து வருபவர்களிடம் அதைக் கொடுத்துவிட்டால் அவர்கள் செய்து கொள்வார்கள். உதாரணமாக  மருத்துவ நிலையங்கள் முழுமையும் தனியார் மயமானால் நல்ல  சிகிச்சை கொடுப்பதில் போட்டி நிலவும், கட்டணம் அதிகமாக இருந்தால்  நோயாளிகள் வரமாட்டார்கள். எனவே குறைந்த கட்டணத்தில் நல்ல  மருத்துவம் தரும் நிறுவனமே லாபம் பெறும். எனவே தனியார் நிறுவனம் கட்டணத்தை ஒரு அளவுக்கு மேல் உயர்த்த முடியாது. போட்டியில் நிற்க நல்ல சிகிச்சை அளிக்க வேண்டும். இதுவே சந்தையே தீர்மானிக்கும் என்ற கோட்பாடு. 

வணிகம் பெருகினால் மக்களிடம் அதிக பணம் வந்து சேரும், குறைந்த விலையில் பொருட்கள் கிடைக்கும். தொழில் பெருகினால் வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும் என்று பிஜெபி கணக்கிடுகிறது. இதன் மூலம் மேற்கத்திய நாடுகளைப் போலவே இந்தியாவிலும் வாழ்க்கைத் தரத்தை அதிகரிக்க முடியும் என்று நம்மை நம்பச் சொல்கிறது பிஜெபி. நாட்டில் நெருக்கடி ஏற்படும் போதெல்லாம் கார்ப்பரேட்டுகளுக்கு சலுகைகள் அளித்து அவர்கள் வளர்ச்சியடைந்தால் நாடு வளரும் என்ற கொள்கையை கடைப்பிடிக்கிறது. அதன் கொள்கைப்படி பார்த்தால் அந்தக் கட்சிக்கு வேறு வழியேதும் இல்லை. அதனால் பொருளாதாரச் சீர்திருத்தங்களில் இருந்து பின்வாங்க முடியாது. TINA!.

அடுத்த கட்டமாக மக்களின் அடிப்படை உரிமை, சேவை என்று எதுவும் இல்லை. எல்லாமே வணிகம் என்றானதும் வணிகத்தின் மையங்களான நகரங்களின் முக்கியத்துவம் அதிகரிக்கிறது.

இந்தியாவின் ஆன்மா கிராமங்களில் இருக்கிறது என்பதற்கு மாறாக நகரங்களே வளர்ச்சியின் என்ஞின்கள் என்கிறது பிஜெபி அரசு. நகரங்களை வணிகத்துக்கு ஏற்றவிதத்தில் மாற்றியமைக்க  பல்லாயிரம் கோடி ரூபாய் ஸ்மார்ட் சிட்டி திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது. நாட்டின் பெரும்பகுதியிலிருந்து வரும் வருமானத்தைக் கொண்டு 150, 200 நகரங்களை மட்டும் வணிகம் செய்ய ஏற்ற விதத்தில் மாற்றியமைக்கிறது அரசு. 

விரும்பியபடி பொருட்களை விற்பனை செய்ய பேரங்காடிகளை ஏற்படுத்த வாய்ப்பு இல்லாமல் போனால் பொருட்களை உற்பத்தி செய்ய வாய்ப்புகள் ஏற்படுத்தி தருவதால் என்ன பலன்? எனவே என்ன விலை செலுத்தியாவது நகரங்களை நவீனமானவையாக, விசாலமானவையாக, மாற்ற முயல்கிறது பிஜெபி அரசு.  

ஆனால் நினைத்தது வேறு நடந்தது வேறு

1. கிராமங்களின் வளர்ச்சிக்கு செலவிட வேண்டிய தொகை ஒரு சில நகரங்களுக்கு செலவிட்டதாலும், விவசாயிகள் ஓரளவு சிரமமில்லாத வாழ்க்கை நடத்த பணப்பயிர்களை பயிரிட வேண்டிய நிலை வந்ததாலும் கிராமப் பொருளாதாரம் பெரும் சேதமடைந்தது. நிலம் ஆழ்துளை கிணறுகளுக்காக சல்லடையாகத் துளைக்கப்பட்டதால் நிலத்தடி நீர் அடியாழத்துக்குப் போனது. ஆறுகளும் ஏரிகளும் வறண்டு போயின.  

வசதியானவர்கள் வேறு தொழில்களுக்கு மாற, ஏழை விவசாயிகளும் நிலமற்ற விவசாயக் கூலிகளும் லட்சக்கணக்கில் கிராமங்களை விட்டுக் கிளம்பினர். இவர்கள் பெரும் வளர்ச்சியடைந்து வரும் நகரங்களில் கொத்தடிமைகளாக மாறிப் போயினர். எந்த அடிப்படை வசதியும் இல்லாத மாட்டுக் கொட்டகையை விட மோசமான சேரிப்பகுதி வீடுகளிலும், நடைபாதைகளிலும் லட்சோப லட்ச மக்கள் வாழ்கின்றனர். இவர்களுக்கு நல்ல குடிநீர், உணவு, மருத்துவம், கல்வி ஆகியவை நினைத்தே பார்க்க முடியாதவையாக மாறிப் போயிருக்கின்றன.

இதை பிஜேபி ஆதரவு பொருளாதர வல்லுனர்கள் பெரும் உழைப்பு சக்தி கிராமங்களிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளது என்று பெருமை பேசுகின்றனர்.

2. எண்ணற்ற பெரும் ஆலைகள் முதலாளிகளால் பல சிறு சிறு ஆலைகளாக உடைக்கப்பட்டன. அல்லது ஆரம்ப கட்ட வேலைகள் சிறு ஆலைகளுக்கு குத்தகைக்கு விடப்பட்டன. இந்த சிறு ஆலைகள் ஒப்பந்தக் கூலிகளைக் கொண்டே நடத்தப்படுகின்றன.  

பல்லாண்டு கால போராட்டங்களின் விளைவாக தொழிலாளர்கள் பெற்ற உரிமைகள் பின்வாசல் வழியாக ஒழிக்கப்பட்டன. பாதுகாப்பு பெற்ற தொழிலாளர்களை விட ஒப்பந்தக் கூலிகளின் எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்தது.

3. நடுத்தர வர்க்கம் திரும்பிப் போக கிராமம் இல்லாத நிலையில் நகரங்களிலேயே போராடி வாழ வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது. நல்ல வீடு, நல்ல கல்வி, நல்ல மருத்துவம், வாழ்க்கை வசதிகள் ஒவ்வொன்றுக்கும் போராட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. 

மாணவர்கள் தினமும் மூன்று டியூஷன் போகின்றனர். கல்விக்காக கடன் வாங்கிய பெற்றோர் செக் மோசடி வழக்குகளில் சிக்கி நிற்கின்றனர். 

மனை நிலம், வாகனங்கள், மின்சாதனங்கள் எதையும் மொத்தமாக விலை கொடுத்து வாங்க முடியாத நிலைக்கு பெரும்பாலான மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். தாராளமய உற்பத்தியின் காரணமாக பொருட்களின் விலை குறையும் என்று எண்ணியதற்கு மாறாக செல்போன் போன்ற சில்லறைப் பொருட்களைக் கூட வாங்க முடியாத நிலை ஏற்பட்டுவிட்டது. இதன் காரணமாக வாங்குவோர் இல்லாமல் உற்பத்தி வீழ்ச்சியடையும் என்ற சூழலில் எல்லாவற்றுக்கும் கடன் கொடுப்பது என்ற உத்தியை அரசும் கார்ப்பரேட்டுகளும் செயல்படுத்துகின்றனர். ஒரு நடுத்தர வர்க்க குடும்பம் இரண்டு மூன்று கடன்கள் கட்டுவது என்பது அன்றாட விஷயமாகிவிட்டது. 

விவசாயிகள், தொழிலாளர்கள், மீனவர்கள், நடுத்தர வர்க்கம், நடுத்தர தொழில் முனைவோர் என அனைவரும் கடனில் மூழ்கடிக்கப்பட்டுள்ளனர். உலகத்தில் படுமோசமாக வெறுமையில், விரக்தியில் மூழ்கிய நாடாக இந்தியா மாறியுள்ளது. 

அதே நேரம் பெருநகரங்களின் நெரிசலைக் குறைத்து அவற்றை வணிகத்துக்கு ஏற்றவையாக மாற்றும் அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டமும் பெரும் தோல்வியடைந்து வருகிறது. ஒதுக்கப்பட்ட பணம் முழுவதும் அதிகார வர்க்கத்தாலும், ஆட்சியாளர்களாலும் விழுங்கப்பட கார்ப்பரேட்டுகளின் நோக்கமும் வீணாகி, லட்சக்கணக்கான மக்கள் வாழிடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டு, அரசு செல்வமும் சூறையாடப்பட்டு நாடே துவம்சம் செய்யபடுகிறது. 

சுதந்திரமான முதலாளித்துவ போட்டியை உருவாக்குவதே அரசின் நோக்கம் என்று அறிவிக்கப்பட்டது. துறைமுகங்களை தனியார் நிர்மாணித்து நடத்தலாம்,  அண்மையில் இப்படி ஒரு துறைமுகத்துக்கு ஒரு மாநில அரசு டெண்டர் விட்ட போது அதானி குழுமமும், இன்னொரு நிறுவனமும் மட்டுமே விண்ணப்பித்து இருந்தன. வேறு எந்த நிறுவனத்திடமும் இதற்கான தொழில் நுட்பம் இல்லை. தவிர்க்க இயலாமல் இந்த டெண்டரை அதானி குழுமத்துக்குக் கொடுத்தே ஆக வேண்டிய சூழல் உருவாகியது. இதேதான் எல்லாத் துறைகளிலும்.

இது ஒரு உதாரணம் மட்டுமே. இந்திய தொழில்களும் வணிகமும் திரும்பவும் ஒரு குழுவைச் சேர்ந்த கார்ப்பரேட்டுகளால் கைப்பற்றப்படுகின்றன. அரசு அவர்களைச் சேர்ந்தும், அவர்கள் அரசைச் சார்ந்தும் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டது. 

கீழ் மட்டத்தில் யார் வேண்டுமானாலும் தொழில் தொடங்கலாம் என்ற நிலை இருப்பது போலத் தெரிந்தாலும் இந்திய தொழில் களம் விரல்விட்டு எண்ணக்கூடிய கார்ப்பரேட்டுகளால் முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்டுவிட்டது. மீடியா முழுமையும் இவர்களால் கட்டுப்படுத்தப்படுகிறது. அரசு கொள்கைகள் இவர்களுக்கு ஏற்பவே உருவாக்கப்படுகின்றன. 

பிஜெபி இந்த பெரும் பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களின் ஆதரவைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டிய நெருக்கடியில் இருக்கிறது. இதற்காக கற்பனைக்கெட்டாத அளவுக்கு வளைந்து கொடுக்கிறது. கொஞ்சம் நிதானமாகப் போகலாம் என்று விரும்பிய அத்வானி, யஷ்வந்த் சின்ஹா போன்ற தலைவர்கள் ஓரம்கட்டப்பட்டுவிட்டனர். 

பிஜேபி அரசு கார்ப்பரேட்டுகளின் ஆதரவைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டுமென்றால் தன்னால் இந்தியா முழுவதையும் ஒருங்கிணைக்க முடியும் என்று நிரூபிக்க வேண்டும். தேர்தல்களை வென்று காட்ட வேண்டும். பிஜேபி இதற்காக மாட்டுக்கறி, காதலர் தினம், இந்துக்களுக்கு ஆபத்து போன்ற விஷயங்களை அடிக்கடி ஊதி ரத்தக்களரியை ஏற்படுத்துகிறது.  

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை கூட இன்னொரு வகையில் பார்க்கலாம். ஒவ்வொருவரும் தங்கள் குடியுரிமையை நிரூபிக்க வேண்டும் என்றால் நிரூபிக்க முடியாதவர்கள் அனைத்து உரிமைகளையும் இழப்பார்கள். இப்போதைய புலம் பெயர் தொழிலாளர்களைப் போல இரண்டு மூன்று மடங்கு அனாதரவான தொழிலாளர்கள் அற்ப கூலிக்குக் கிடைப்பார்கள். இது இந்திய தொழிலாளர் சந்தையும், நுகர்வோர் சந்தையும் எந்த விதத்திலும் பாதிக்காது. இன்னும் மிச்சமீதி இருக்கும் சிறு வணிகர்களையும் ஒழித்துக் கட்டிவிடலாம். 

பிஜேபி கட்சி இந்துத்துவ உணர்வுகளின் மீது கட்டப்பட்ட கட்சி. ஆனால் அந்தத் தூண்கள் பார்சிகள், ஜெய்ன்கள், கிருத்துவர்கள், முஸ்லீம்கள் உள்ளிட்ட மாபெரும் கார்ப்பரேட் கோட்டையைத் தாங்கி நிற்கின்றன. 

எட்டாண்டு கால அனுபவம் இதைத்தான் காட்டுகிறது.

- இரா. முருகவேள்

(முகநூல் பதிவிலிருந்து)

Disclaimer: இந்த பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. விவாதத்திற்காக இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு

கட்டுரையாளரின் முகநூல் பக்கத்திற்குச் செல்ல கீழேயுள்ள இணைப்பை சொடுக்கவும்