பொத்தாம் பொதுவாக மாற்றம் எனும் இந்த நீர்க்குமிழி அரசியல் மக்களுக்கு பயன்படாத எதிரி வர்க்கத்துக்கு ஏதுவானது
துரை. சண்முகம்

த.வெ.க. தொண்டர்கள்
அரசியல் படுத்தப்படாதவர்கள் என்ற சொற்றொடரை ஊடகங்களில் அனைவருமே பேசுகின்றனர்.
நான் அப்படி நினைக்கவில்லை. இந்த பிரிவு இளைஞர்கள்
ஏற்கனவே இருக்கும் அரசியலால் படுத்தப்பட்டு, எல்லாம் திருட்டு பசங்க! என்று வெறுப்பாகி
புதுசா! மாஸா! கெத்தா! ஒன்னு வேண்டும் எனும் ஆர்ப்பாட்ட வயதுக்காரர்கள். எனவே சினிமாவில் பார்த்த நல்ல கதாநாயகன் வந்தால் நல்லது நடக்கும் எனும் பொதுவான
உளவியல் இவர்களிடம் இருக்கிறது. இதைப் பற்றிய நம்பிக்கைகளின் தொகுப்பே இவர்களின் அரசியலாகவும் இருக்கிறது. "இருக்கிற எவனும் சரியில்லை புதுசா ஒருத்தன் வரணும்! எனும் விதத்தில்
பொதுவாக அரசியலாக்கப்பட்டு இருக்கிறார்கள்.
இந்த அரசியல் தனக்கு தேர்தல் களத்தில் இணக்கமாக இல்லை, கூட்டாளியாக இல்லை என்பதே
எதிர்த்தரப்பின் கவலை.
மற்றபடி ஊரைக் கொளுத்தும் சாதிய அரசியல், நாட்டை கொளுத்தும் மதவெறி அரசியல், உழைப்பவரை வாழ விடாத கார்ப்பரேட் அரசியல்
வரை இவர்களுக்கு நட்பு வட்டம் தான்.
ஆனால் உண்மையிலேயே நம்முடைய கவலை, பொத்தாம் பொதுவாக மாற்றம் எனும் இந்த நீர்க்குமிழி அரசியல் ,
மக்களுக்கு பயன்படாத எதிரி வர்க்கத்துக்கு ஏதுவான அரசியல் என்பதுதான்.
இந்த இளைஞர்களிடம் இதற்கான உரையாடலை ஜனநாயக அணுகுமுறையுடனும் பொறுப்புடன் சகிப்புடனும் நடத்தாமல், தற்குறி! அணில் குஞ்சுகள்! என்று சாபம் விட்டு எதிர்மறையாக அணுகினால்
சமூகப் பயனில்லை.
ஏனென்றால்,
நான் அணுகிய விதத்தில் த.வெ.க. வில் இருப்பவர்கள் அதாவது தொண்டர்கள், விஜயின் ரசிகர்கள் பள்ளி கல்லூரி ஆண் பெண் மாணவர்கள் ஒரு புறம்.
20- 40 வயதுள்ள பலரும்
கீழ் நடுத்தர வர்க்கம் அதற்கும் கீழ் அடித்தளவர்க்கத்தில் உள்ளவர்களாக இருக்கிறார் கள். உழைக்கும் வர்க்கத்து வீட்டு பிள்ளைகளாக அதிகம் இருக்கிறார்கள். அவர்களின் பலரே கூட சுவிகி செமேட்டோ ஊழியர்கள், ஓட்டுனர்கள்,
டூ வீலர் மெக்கானிக்குகள்,
இளம் வழக்குரைஞர்கள் எனவாக இருக்கிறார்கள்.
இது எனது அனுபவம்.
திமுக அதிமுக காங்கிரஸ் பாஜக போன்ற கட்சிகளில் பெரும்பாலும் மேல் நடுத்தர வர்க்க குடும்பங்கள், ஏற்கனவே ஊரை அடித்து உழையில் போட்ட பேர்வழிகளின் வாரிசுகள், கட்சியை சுற்றி பிழைக்க தெரிந்த காரியவாதிகள் இந்த வர்க்க அடித்தளத்தில்தான் நிறைய இருக்கிறார்கள்.
இந்தக் கட்சிகள் பழைய வரலாறுபடி இப்போது இல்லை.
உழைக்கும் அடித்தள வர்க்கங்களிடமிருந்து அந்நியப்பட்டு இருக்கிறது. நீங்கள் வேண்டுமானால் இதைப் பற்றி ஒரு சமூக ஆய்வை நடத்திப் பாருங்கள்.
எனவேதான் அடித்தள வர்க்க இளைஞர்கள் எனும் பார்வையில் விஜய் ரசிகர்களை
அக்கறையுடன் அணுக வேண்டும். உழைக்கும் வர்க்க அரசியலுக்கு முதலில் அவர்களை நட்பு சக்தியாக்க வேண்டும்.
கொண்டாட்ட மனோபாவத்தில் இருப்பவர்கள் பொது இடங்களிலும் ரிலீஸ் தியேட்டர் வாசலிலும் எப்படி கதாநாயகனுக்காக நடந்து கொள்வார்களோ! அப்படி அவர்களின் உணர்ச்சி வெளிப்பாடு இருக்கிறது.
இதை விடவும் கேவலமாக சாதி வெறியோடு பிறர் குடிசைகளை கொளுத்துவது,
மத வெறியோடு ஊரை கொலையில் இழுத்து விடுவது படுகொலைகள் செய்வது எனும் அயோக்கியர்களுக்கு எல்லாம் நீங்கள் அரசியல் அந்தஸ்து தரும்போது.
இவர்கள் பொது இடத்தில் நடந்து கொள்ளும் அத்துமீறல் கொண்டாட்ட மனநிலையை
கட்டுப்படுத்த சட்டம் ஒழுங்காகவும், சமூக அக்கறையாகவும் கற்றுக் கொடுக்க வேண்டிய கடமை நாம் எல்லோருக்குமே இருக்கிறது.
ஒட்டுமொத்த நாட்டின் பொது சொத்தையும் அழிப்பது, கார்ப்பரேட் கொள்கைகளின் மூலம் விவசாயிகளை அழித்தொழிப்பது, கடற்கரை மேலாண் சட்டங்களின் மூலம் மீனவர்கள் வாழ்வை பாலைவனம் ஆக்குவது,
எல்லாத் துறைகளிலும் ஒப்பந்த பணியாளர்களாகவும் ஒப்பந்த சம்பளமாகவும் மக்களின் தலையில் குரங்குகள் போல தனியார்மயம் ஏறி நின்று ஆட்டுகிறது. இந்த அழிவு அரசியலை செய்பவர்கள் விஜய் ரசிகர்களை கீழ்ப்படுத்தி பார்க்கவும் பேசவும் தகுதியற்றவர்கள்.
இந்த அழிவு அரசியலைப் பற்றி எல்லாம் கொஞ்சம் கூட வாயே திறக்காமல், இந்தப் பேரழிவு பாதைக்கு சொம்படித்துக் கொண்டே தங்களை முற்போக்கு சமூக அக்கறையாளர்கள் போல காட்டிக் கொள்ளும் அயோக்கியர்களே நமக்கு உரையாடத் தகுந்த டீசன்ட் பார்ட்டிகள் என்றால், இந்த அரசியல் காரியக்கார தற்குறிகளே மேன்மக்கள் என்றால், தன்னளவில் தம் வர்க்கத்துக்கான தத்துவமும் அரசியலும் அறியாமல் , விஜய் தான் மாற்று அரசியல் என்று ஆர்வம்காட்டும் இளைஞர்களை
நாம் வாழும் ஊரில் நம் பக்கத்து வீட்டு பிள்ளைகளை தறுதலைகள் என்று ஒதுக்க முடியாது .
ஏற்கனவே உள்ள அரசியல் திருடர்களிடம் யோக்கியர்கள் போல இவர்களிடம் தாரை வார்க்கவும் முடியாது. நாட்டுப்பற்று, உழைப்பவர்கள் மீதான இயல்பான ஆர்வம் இதுதான் சரியான அரசியல்! என்று பேசுவதற்கு முதலில் அவர்களுக்கு நாம் நண்பர்களாக முடிந்தால் !
அதற்கு நம்மை மாற்றிக் கொள்ள முடிந்தால்! அவர்களுடனும் உரையாடல் சாத்தியமே!
இதன் மூலம் மட்டுமே, மக்கள் விரோத அரசியல் செய்பவர்களுடன் கூட்டணி இல்லாமல் கம்யூனிஸ்டுகள் களத்தில் தங்களது வேலைகளை செய்வதன் மூலம் மட்டுமே, விஜயை விட உண்மையான கதாநாயகர்கள் வெளியில் இருக்கிறார்கள் என்பதை நமது வர்க்கத்து இளைஞர்களிடம் கம்யூனிஸ்டுகளின் அரசியல் எடுபடும்.
அவர்கள் வெறுக்கும் மக்கள் விரோத அரசியல்வாதிகளுடன் சேர்ந்து கொண்டு நீங்கள் என்ன தத்துவம் பேசினாலும் ஏற்காது. அவர்கள் நம்ப தயாராக இல்லை.
விஜய் ரசிகர்களை திருத்துவது இருக்கட்டும்,
இந்த எதார்த்தத்தை எடுத்துச் சொல்பவர்களை திமுகவுக்கு எதிரி! விஜய்க்கு வக்காலத்தது!
என்று உழைக்கும் வர்க்க அரசியலைப் பேசாமல் , ஆளும் வர்க்க அரசியலின் முதுகுக்கு பின்னால் நின்று கொண்டு
வீர வசனம் பேசும் திருவாளர்களே நீங்கள் திருந்துவதைப் பற்றி எப்போது தான் யோசிக்கப் போகிறீர்கள்!
நமது அன்பிற்குரிய மக்களை
சுயப் பொறுப்புடன் விஜயும் காப்பாற்றவில்லை, உங்கள் பார்வைப்படி அதுதான் தற்குறி கழகம் ஆயிற்றே! அவர்கள் கையில் மக்களை ஒப்படைக்காமல், அரசும் ஏன் காப்பாற்றவில்லை?
மக்களுக்கு பொறுப்பாக நீங்களும் சிந்திப்பதாக இல்லை. மக்கள் நிலையிலிருந்து கேள்வி கேட்டால் இந்த நேரத்தில் மற்ற எதையும் பேசக்கூடாது! விஜயை மட்டும்தான் வெளுக்க வேண்டும் என்கிறீர்கள்.
சரி!
இதோ நீதி அரசரே சொல்லிவிட்டார்.
விஜயை ஏன் இன்னும் கைது செய்யவில்லை? என்று. திமுக அரசை ஏன் விமர்சிக்க மாட்டேன் என்கிறீர்கள்!
ஊடகங்களில் பொறிபறக்க பேசிவிட்டு, கைது செய்யாத ஸ்டாலினை கண்டிக்காமல்,
நீங்கள் பற்றவைக்கும் உங்கள் ஆவி எழுப்பும் சாம்பிராணியின்
மீது நீங்களே தண்ணீர் தெளித்து அமித்து விட்டு போகலாமா?
கைது செய்தால்தான் நாங்கள் உங்களுக்காக பேசுவோம்! என்ற அளவுக்காவது தார்மீக உணர்ச்சி உண்டா உங்களிடம்?
- துரை. சண்முகம்
https://www.facebook.com/share/1BNKAhPv9f/
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு