டிரம்ப்பின் வரிவிதிப்புகள் இந்திய-அமெரிக்க மூலோபாய கூட்டுக்கு ஆபத்து

வெண்பா (தமிழில்)

டிரம்ப்பின் வரிவிதிப்புகள் இந்திய-அமெரிக்க மூலோபாய கூட்டுக்கு ஆபத்து

டிரம்ப்பின் இந்தியாவுடனான வர்த்தகப் போரும், அவரது நிர்வாகத்தின் சமீபத்திய பேச்சுக்களும், உலகின் இரு பெரும் ஜனநாயக நாடுகளுக்கு இடையேயான உறவுகளில் பல தசாப்தங்களாக இரு கட்சிகளின் ஆதரவுடன் ஏற்பட்ட முன்னேற்றத்தை சீர்குலைக்கக்கூடும் என்று முன்னணி சட்டமியற்றுபவர்கள், செல்வாக்கு மிக்க இந்திய அமெரிக்க தொழிலதிபர்கள் மற்றும் முன்னாள் அமெரிக்க தூதர்கள் செப்டம்பர் 10, 2025 அன்று எச்சரித்தனர்.

ஒரு உயர் மட்ட காணொலிக் கூட்டத்தை இந்திய அமெரிக்க கவுன்சில் ஏற்பாடு செய்தது. இந்திய அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் ரோ கண்ணா தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், வினோத் கோஸ்லா, இந்தியாவுக்கான முன்னாள் அமெரிக்க தூதர்கள் ரிச்சர்ட் வெர்மா, எரிக் கார்செட்டி, தொழில்முனைவோர், சமூகத் தலைவர்கள் ஆகியோர் கூடினர். கூட்டத்தில் அவசரமான சூழல் நிலவியது: பேச்சாளர்கள், “டிரம்ப்பின் அதிகரித்து வரும் வரிவிதிப்புகளை, இந்தியாவை ரஷ்யா-சீனாவுடன் நெருக்கமாக்கக்கூடிய - 2000-களின் தொடக்கத்திலிருந்து கவனமாக கட்டமைக்கப்பட்ட நம்பிக்கையை சிதைக்கக்கூடிய வகையிலான சுயமாக ஏற்படுத்திக்கொண்டதொரு காயம்" என்று விவரித்தனர்.

"இது நீங்கள் விலகிச் செல்லும் வணிக ஒப்பந்தம் அல்ல. இது நீண்ட கால அர்ப்பணிப்பு," என்று ஜனாதிபதி ஜார்ஜ் டபிள்யூ. புஷ்ஷின் கீழ் வரலாற்று சிறப்புமிக்க அமெரிக்க-இந்தியா சிவில் அணுசக்தி ஒப்பந்தத்தில் முக்கியப் பங்காற்றிய பில்லியனர் முதலீட்டாளரான கோஸ்லா கூறினார். "நாம் இந்தியாவை ரஷ்யா மற்றும் சீனாவுடன் நெருக்கமாக்கினால், அதன் விளைவுகள் பல தசாப்தங்களுக்கு நீடிக்கக்கூடும்" என்றார் அவர்.

வரிவிதிப்புகள், "இயற்கையான இணக்கத்தை" ஒரு விலகலாக மாற்றும் அபாயம் இருப்பதாக திரு. கோஸ்லா எச்சரித்தார். "டாலருக்கு மாற்றாக ஒரு உலகளாவிய நாணயம் பற்றிய சில பேச்சுக்களை நான் பார்த்தும் கேட்டும் இருக்கிறேன்," என்றார் அவர். "அது பிரிக்ஸ் நாடுகளுக்கு இயல்பானதொரு விஷயமாக இருக்கும். அவர்களுக்கும் ரஷ்யா மற்றும் சீனாவுக்கும் இடையில், பரிமாற்ற ஊடகமாக மற்றொரு உலகளாவிய கிரிப்டோகரன்சி இருக்கலாம், அது டாலருக்கு சவால் விடத் தொடங்கும். பல மூலோபாய தாக்கங்கள் இருக்கலாம். நாம் அதை நடக்க விடாமல் தடுப்பது மிகவும் முக்கியம்," என்று அவர் சில பத்திரிகையாளர்களுக்கு அந்த பிரத்யேக காணொலிக் கூட்டத்தில் கூறினார்.

கேபிடல் ஹில்லில் இருந்து பேசிய திரு. கண்ணா, டிரம்ப்பின் நடவடிக்கைகள் ஏற்கனவே "சீனாவை விட இந்தியா மற்றும் பிரேசில் மீது அதிகபட்ச தீர்வைகளை" விதித்துள்ளன என்று கூறினார் — இது ஜவுளி மற்றும் தோல் போன்ற இந்தியத் தொழில்களுக்கு தாங்க முடியாதொரு நடவடிக்கை என்று அவர் விவரித்தார். மோடி, டிரம்ப்பை நோபல் அமைதிப் பரிசுக்கு பரிந்துரைக்கவில்லை என்ற செய்திகளுடன் இதை அவர் தொடர்புபடுத்தினார். "டிரம்ப் தான் இதை உண்மையில் தூண்டிவிட்டவர்," என்றார் கண்ணா. "அவர் இதைத் தணிக்க வேண்டும் என்பதை நாம் உறுதி செய்ய வேண்டும்".

திரு. கோஸ்லா மற்றும் திரு. கண்ணா இருவரும் ஒரு நேரடியான தீர்வு இருப்பதாகக் கூறினர்: தீர்வைகளைத் திரும்பப் பெறுதல். "இரண்டு விஷயங்கள் கூட இல்லை," என்று கோஸ்லா வலியுறுத்தினார். "இப்போது முக்கியமான ஒரே விஷயம்... தீர்வைகள் தான். அவர் தீர்வைகள் விஷயத்தில் பின்வாங்கினால், மோடியும் டிரம்ப்பும் அவர்கள் கட்டமைத்து வந்த இயற்கையான இணக்கத்திற்குத் திரும்ப முடியும்".

சமீப காலம் வரை இந்தியாவில் அமெரிக்கத் தூதராகப் பணியாற்றிய முன்னாள் லாஸ் ஏஞ்சல்ஸ் மேயர் எரிக் கார்செட்டி, நல்லெண்ணம் எவ்வளவு விரைவாக மறையக்கூடும் என்பதை இந்த நெருக்கடி காட்டுவதாகக் கூறினார். "இன்று வாஷிங்டனில் அரிதாகக் காணப்படும் அந்த இரு கட்சி, இரு அவை, இரு கிளைகளின் ஒருமித்த கருத்து... சில வாரங்களில் முற்றிலுமாக அழிக்கப்பட்டு வருகிறது," என்றார் அவர். "இது; முகத்தில் விடப்பட்ட ஒரு குத்து மட்டுமல்ல; 20 ஆண்டுகளுக்கும் மேலாக நாம் கண்டிராதொரு அமெரிக்க அதிபரிடமிருந்து இந்தியாவுக்குக் கிடைத்த மிக பலமான அடி"

திரு. கார்செட்டி, இந்தியா - அமெரிக்காவையும் அவைகளின் கூட்டாளிகளையும் உறவை மீண்டும் கட்டியெழுப்புவதில் கவனம் செலுத்துமாறு வலியுறுத்தினார். அவர் இரண்டு "செயல் திட்டங்களை" முன்வைத்தார்: வணிகம், கல்வி மற்றும் பாதுகாப்புத் துறைகளில் அதிகாரப்பூர்வ உரையாடல்களைத் தொடங்குதல், பொதுமக்களுக்கு உறுதியளிக்க இந்தியாவுக்கு காங்கிரஸ் பிரதிநிதிகள் குழுக்களை அனுப்புதல். "அதை விட சிறந்தது எதுவும் இல்லை," என்றார் அவர். "இந்தியாவுக்குச் செல்லுங்கள்... இந்த உறவில் அனைத்து அமெரிக்கர்களும் அக்கறை கொண்டுள்ளனர் என்பதை இந்தியர்களுக்குக் காட்டுங்கள்".

முன்னாள் தூதர் ரிச்சர்ட் வெர்மா, ஜனாதிபதி பில் கிளிண்டனின் வரலாற்று சிறப்புமிக்க 2000-ஆம் ஆண்டு பயணத்திலிருந்து ஏற்பட்ட முன்னேற்றத்தை டிரம்ப்பின் கொள்கைகள் எவ்வளவு விரைவாக அழித்துவிட்டன என்பது குறித்த தனது அதிர்ச்சியை விவரித்தார். "இரண்டு மாத காலத்தில் நான் கண்டதை என்னால் நம்ப முடியவில்லை — ட்ரம்ப் 25 ஆண்டுகால முன்னேற்றத்தை அழித்துவிட்டார். ஏன்? இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நடந்ததாகக் கூறப்படும் போரை நிறுத்தியதில் தனது பங்கை பிரதமர் மோடி அங்கீகரிக்கவில்லை என்பதால் அவர் வருத்தமடைந்ததாகத் தெரிகிறது," என்றார் வெர்மா.

வெர்மா மேலும் கூறுகையில், டிரம்ப்பின் இந்தியப் பொருளாதாரம் மீதான தொடர்ச்சியான விமர்சனங்களும், பாகிஸ்தானுடனான அவரது நெருக்கமும், அமெரிக்கக் கொள்கை இரண்டு தசாப்தங்களாகத் தவிர்த்து வந்த "இந்தியா-பாகிஸ்தான் என இரு நாடுகளையும் இணைத்துப் பார்க்கும் பழைய கொள்கையை மீண்டும் கொண்டுவந்துள்ளது". "இந்த உறவில் நமக்கு ஒரே ஒரு பலவீனம் இருக்கிறதென்றால், அது நம்பிக்கை தான்" என்றார் அவர். "துரதிர்ஷ்டவசமாக, கடந்த சில மாதங்கள், நாம் நம்பத் தகுந்தவர்கள் அல்ல என்பதை இந்தியர்களுக்கு நிரூபித்துள்ளன".

வணிகத் தலைவர்களும் அமைதிக்கு அழைப்பு விடுத்தனர். கிளிவ்லேண்ட்டை தளமாகக் கொண்ட வாகனத் தொழில்முனைவோர் மான்டி அஹுஜா, "பல ஆண்டுகளாக மெதுவாகவும் சீராகவும் கட்டமைக்கப்பட்ட உறவு, ஒரு சில நாட்களில் தகர்க்கப்பட்டதாக தெரிகிறது" என்று எச்சரித்தார். அவர் "இந்தச் சூழலில் ஒருவித அமைதியை" உருவாக்க அழைப்பு விடுத்ததோடு புலம்பெயர் இந்தியர்களை கட்சி சார்பு நிலைகளைக் கடந்து ஒன்றுபட வலியுறுத்தினார்.

மற்றவர்கள் அணிதிரட்டலை வலியுறுத்தினர். மற்றொரு தொழிலதிபர் கன்வல் ரேகி, வெளிப்படையாகக் கூறினார்: "நான் நினைக்கிறேன், இது பணம் திரட்ட வேண்டிய நேரம்... அமெரிக்க ஆட்டத்தை, மக்கள் தொடர்பு (PR) ஆட்டத்தை, செல்வாக்கு செலுத்தும் (lobbying) ஆட்டத்தை ஆட வேண்டும். பரந்த அளவில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்".

திரு. கண்ணா அதன் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டி முடித்தார். "இது முக்கியம் இல்லையென்றால், நான் இந்த அழைப்பை அவசரமாக விடுத்திருக்கவோ - வினோத் கோஸ்லா, தூதர்கள் உள்ளிட்ட உங்கள் அனைவரையும் கூட்டியிருக்கவோ மாட்டேன்," என்றார் அவர். "30 ஆண்டுகால கடின உழைப்பை உண்மையில் சிதைத்துவிடும் அபாயம் உள்ளது" என்றார்.

கூட்டத்தின் முடிவில் இரண்டு உடனடி நடவடிக்கைகள் ஒப்புக்கொள்ளப்பட்டது: வரிவிதிப்புகளைத் திரும்பப் பெற குடியரசுக் கட்சி மற்றும் ஜனநாயகக் கட்சி சட்டமியற்றுபவர்களை வலியுறுத்துதல், மற்றும் அமெரிக்க-இந்தியா கூட்டின் மூலோபாய முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் சமூக செயல்பாடுகளை அதிகரித்தல்.

லலித் கே. ஜா

வெண்பா (தமிழில்)

மூலக்கட்டுரை: https://www.thehindu.com/news/international/donald-trump-tariffs-spark-alarm-over-india-us-ties-calls-for-unity/article70036288.ece

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு