எரிசக்திப் போர்: தாக்குதல்கள், தடைகள் மற்றும் மாறிவரும் கூட்டணிகள்
தி கார்டியன் - தமிழில்: வெண்பா
உக்ரைன் போர் குறித்த சுருக்க அறிக்கை: ரஷ்ய எண்ணெய் மற்றும் எரிவாயு நிலையங்கள் மீதான தாக்குதல்களுடன் எரிசக்திப் போர் தொடர்கிறது.
ரஷ்யா, டினிப்ரோபெட்ரோவ்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள நிலக்கரி சுரங்கத்தையும் செர்னிஹிவ் மின் கட்டமைப்பையும் தாக்கியுள்ளது. ட்ரம்ப் மீண்டும் புடினுக்கு ஆதரவான நிலைக்குத் திரும்புகிறார். உக்ரைன் போரின் 1,335வது நாளில் நாம் அறிவது என்ன?.
உக்ரேனிய ஆளில்லா விமானங்கள் தெற்கு ரஷ்யாவில் உள்ள பிரம்மாண்டமான ஒரன்பர்க் எரிவாயு சுத்திகரிப்பு ஆலையைத் தாக்கியதில் தீப்பற்றி எரிந்ததுடன், கஜகஸ்தானில் இருந்து எரிவாயுவை பெறுவதையும் நிறுத்தி வைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என்று ரஷ்ய - கசாக் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த ஆலையை ரஷ்ய அரசுக்குச் சொந்தமான கஸ்பிரோம் (Gazprom) நிறுவனம் நடத்துகிறது, மேலும் இது கசாக் எல்லைக்கு அருகில் அதே பெயரிலான பிராந்தியத்தில் அமைந்துள்ளது. இது உலகின் மிகப்பெரிய உற்பத்தி மற்றும் சுத்திகரிப்பு நிலையங்களில் ஒன்றாகும். இதன் ஆண்டுத் திறன் 45 பில்லியன் கன மீட்டர்கள் ஆகும். இது கஜகஸ்தானின் கராசகனாக் வயலில் இருந்தும், ஒரன்பர்க்கின் எண்ணெய் மற்றும் எரிவாயு வயல்களில் இருந்தும் வரும் எரிவாயுக்களை (gas condensate) கையாளுகிறது.
ரஷ்ய பிராந்திய ஆளுநர் யெவ்கேனி சோல்ன்ட்செவ், ஆளில்லா விமானத் தாக்குதல்கள் ஆலையின் ஓர் அலகு தீக்கிரையாக்கியதாக கூறினார். அதைத் தொடர்ந்து ஏற்பட்ட ஒரு அவசரநிலை காரணமாக கஜகஸ்தானில் இருந்து பெறப்படும் எரிவாயுவைச் சுத்திகரிக்க ஆலையால் தற்காலிகமாக முடியவில்லை என்று கஸ்பிரோம் தங்களுக்கு அறிவித்ததாக கசாக் எரிசக்தி அமைச்சகம் கூறியது. உக்ரைனின் பொதுப் பணியாளர்கள் (General Staff), ஆலையில் "பெரிய அளவிலான தீ" ஏற்பட்டது என்றும், அதன் எரிவாயு சுத்திகரிப்பு மற்றும் தூய்மைப்படுத்தும் அலகுகளில் ஒன்று சேதமடைந்தது என்றும் தெரிவித்தனர்.
ஒரன்பர்க்கிற்கு அருகிலுள்ள சமாரா பிராந்தியத்தில் உள்ள ரஷ்யாவின் நோவோகுய்பிஷெவ்ஸ்க் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் மீது மற்றொரு ஆளில்லா விமானத் தாக்குதல் நடத்தப்பட்டது. இது தீப்பற்ற வழிவகுத்ததுடன், அதன் முக்கிய சுத்திகரிப்பு அலகுகளை சேதப்படுத்தியது என்று உக்ரைனின் பொதுப் பணியாளர்கள் கூறினர். இது ரோஸ்னெஃப்ட் (Rosneft) நிறுவனத்தால் இயக்கப்படுகிறது, மேலும் இது 4.9 மில்லியன் டன் ஆண்டுத் திறனைக் கொண்டுள்ளது, 20 க்கும் மேற்பட்ட வகையான பெட்ரோலியப் பொருட்களை உற்பத்தி செய்கிறது.
இதற்கிடையில், ரஷ்யப் படைகள் உக்ரைனின் டினிப்ரோபெட்ரோவ்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள ஒரு நிலக்கரி சுரங்கத்தையும், செர்னிஹிவ் பிராந்தியத்தில் உள்ள ஒரு எரிசக்தி தளத்தையும் தாக்கியதாக அவற்றின் இயக்குநர்கள் தெரிவித்தனர். டிடிஇகே (DTEK) என்ற எரிசக்தி நிறுவனம், 192 நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்கள் எந்த காயமும் இன்றி பாதுகாப்பாக மேலே கொண்டு வரப்பட்டதாகக் கூறியது; செர்னிஹிவ்வில் உள்ள பிராந்திய எரிசக்தி நிறுவனமான செர்னிஹிவோப்லெனெர்கோ (Chernihivoblenergo), அங்கு நடந்த தாக்குதல் பரந்த சேதத்தை ஏற்படுத்தியதாகவும், 55,000 பயனர்களுக்கான மின்சாரத்தை துண்டித்ததாகவும் தெரிவித்தது. சமீபத்தில் ரஷ்யத் தாக்குதல்கள் உக்ரைனின் பொதுமக்களின் மின் கட்டமைப்பு மற்றும் எரிசக்தி தளங்களை மையமாகக் கொண்டிருந்தன, அதே சமயம் உக்ரைன், ரஷ்ய எண்ணெய் மற்றும் எரிவாயு கட்டமைப்புகளைத் தாக்கியுள்ளது. இந்த கட்டமைப்புகள் போருக்கு நேரடியாகவும் ஏற்றுமதிகள் மூலமும் நிதியளிக்க உதவுகின்றன.
தடை செய்யப்பட்ட "நிழல் கடற்படை" (shadow fleet) டேங்கர் ஒன்று, மலேசியக் கடற்கரையில் ரஷ்யாவின் இயற்கை எரிவாயுவை (LNG) மற்றொரு கப்பலுக்கு மாற்றத் தயாராகி வருவதாக ப்ளூம்பெர்க் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டது. மலேசியாவின் கிழக்கே சுமார் 90 கிமீ தொலைவில் ‘பெர்லே’ என்ற "இருண்ட கப்பல்" (dark ship) மற்றொரு கப்பலுக்கு அருகில் இருப்பதை செயற்கைக்கோள் கண்காணிப்பு காட்டியது என்று ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது. "மலேசியாவிற்கு அப்பால் உள்ள கடற்பரப்பில் ரஷ்ய LNG மாற்றப்படுவது இதுவே முதல் முறையாக இருக்கலாம் என்று ப்ளூம்பெர்க் செய்தி வெளியிட்டது. இந்த எரிவாயு பால்டிக் கடற்கரையில் உள்ள ரஷ்யாவின் போர்டோவயா ஆலையில் இருந்து வந்ததாக அந்த நிறுவனம் கூறியது.
கப்பல்களைப் பதிவு செய்யும் "ஃப்ளாக் ஸ்டேட்ஸ்" (flag states), ரஷ்யாவின் சட்டவிரோத எண்ணெய் டேங்கர்களின் "நிழல் கடற்படையைத்" தடுத்து நிறுத்தி ஆய்வு செய்வதற்கு முன் அங்கீகாரம் அளிக்க வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் விரும்புகிறது. ஐரோப்பிய ஒன்றியத்தின் இராஜதந்திரப் பிரிவான ஈஇஏஎஸ் (EEAS), நிழல் கடற்படையில் 600 முதல் 1,400 கப்பல்கள் வரை இருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டதாகக் கூறியது. மேலும், அந்தக் கடற்படை இயங்க உதவிய நிறுவனங்கள் மற்றும் 400க்கும் மேற்பட்ட கப்பல்களுக்கும் ஐரோப்பிய ஒன்றியம் தடை விதித்துள்ளது. தடை செய்யப்பட்ட கப்பல்களின் எண்ணிக்கை சுமார் 560 ஆக உயரும் என்றும் ரஷ்ய இயற்கை எரிவாயு (LNG) இறக்குமதி மீதான தடையை ஒரு வருடம் முன்னதாகவே ஜனவரி 1, 2027லேயே கொண்டு வருவோம் என்றும் ஐரோப்பிய யூனியன் தெரிவித்துள்ளது.
ஈஇஏஎஸ் அறிக்கையின்படி, தவறான கொடியின் கீழ் பயணிக்கும் நிழல் கடற்படைக் கப்பல்களின் எண்ணிக்கை சமீபத்தில் அதிகரித்துள்ளது. ஆய்வுகளை வலுப்படுத்துவது ஐரோப்பிய ஒன்றியத்தின் சமீபத்திய திட்டமாகும், இதன் நோக்கம் உக்ரைன் போருக்கு ரஷ்யா நிதியளிக்கப் பயன்படுத்தும் ரஷ்ய எண்ணெய் மற்றும் எரிவாயு வருவாயைக் கட்டுப்படுத்துவதாகும். ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவு அமைச்சர்கள் திங்களன்று கூடி ரஷ்யாவிற்கு எதிரான பிற புதிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க உள்ளனர். ஜி7 நாடுகள் நிழல் கடற்படையைக் கட்டுப்படுத்துவதற்கும், ரஷ்யா மீதான தடைகளைத் தவிர்ப்பதற்கு உதவும் நாடுகளையும் ரஷ்ய எண்ணெய் இறக்குமதியை அதிகரித்த நாடுகளையும் இலக்கு வைப்பதற்காகவும் இணைந்து செயல்பட ஒப்புக்கொண்டுள்ளன. தங்களது நடவடிக்கை டேங்கர்களுக்கு எரிபொருள் நிரப்புவதையும் கூட இலக்காகக் கொள்ளும் என்று ஐரோப்பிய ஒன்றியம் கூறியது.
டிரம்ப் போர் குறித்த தனது நிலைப்பாட்டை மீண்டும் மாற்றிக்கொண்டார், இந்த முறை ஜெலன்ஸ்கியை புடினிடம் பிரதேசத்தை சரணடையச் செய்யுமாறு அழுத்தம் கொடுத்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. டிரம்ப் ஒரு மாதத்திற்கு முன்புதான், உக்ரைன் தனது அனைத்துப் பகுதிகளையும் திரும்பப் பெற முடியும் என்றும், ரஷ்ய நிலப்பரப்புக்குள் "மேலும் முன்னேற முடியும்" என்றும் நினைப்பதாகக் கூறியிருந்தார். இப்போது, புடினிடம் இருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்த பிறகு, உக்ரைனுக்கு டோமஹாக் க்ரூஸ் ஏவுகணைகளை வழங்குவது குறித்த பேச்சில் இருந்தும் டிரம்ப் பின்வாங்கத் தொடங்கியுள்ளார். டிரம்ப் புடினால் கையாளப்படுவதுபோல மாறி மாறி நிலை எடுக்கிறார். சமாதான ஒப்பந்தம் செய்யப்படாவிட்டால் புடின் உக்ரைனை "அழித்து விடுவார்" என்று டிரம்ப் ஜெலன்ஸ்கியை எச்சரித்ததாக ஃபைனான்சியல் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
ஜெலன்ஸ்கியுடன் டிரம்ப் நடத்திய சந்திப்புக்குப் பிறகு, "இது மிகவும் மோசமாக இருந்தது," என்று ஒரு ஆதாரம் கூறியது. "[உக்ரைன் ரஷ்யாவுடன் ஒப்பந்தம் செய்யவில்லை என்றால்] 'உங்கள் நாடு உறைந்து போகும், உங்கள் நாடு அழிக்கப்படும்' என்பதே செய்தியாக இருந்தது," என்றும் அது கூறியது. டிரம்ப் "அழிப்பார்" என்று கூறியதை மற்றொரு தனி ஆதாரம் மறுத்தது, ஆனால் டிரம்ப் பலமுறை ஆபாச வார்த்தைகளைப் பயன்படுத்தினார் என்று இரு ஆதாரங்களும் தெரிவித்தன. ரஷ்யாவின் பெல்கோரோட் பிராந்தியத்தில் "ஆளில்லா விமானம் ஒன்று விவசாய நிறுவனம் ஒன்றின் மீது வெடிகுண்டுகளை வீசியதில் இருவர் உயிரிழந்தததாகவும் ஒருவர் படுகாயமடைந்ததாகவும் ரஷ்ய ஆளுநர் வியாசஸ்லாவ் கிளாட்கோவ் கூறினார். ரஷ்யா, உக்ரேனிய பொதுமக்களின் உள்கட்டமைப்பு மீதான நேரடித் தாக்குதல்களை அதிகரித்துள்ளது. அதே சமயம் உக்ரைன் இராணுவம் வேண்டுமென்றே பொதுமக்களை இலக்கு வைப்பதைத் தவிர்த்துள்ளது.
வெண்பா (தமிழில்)
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு