போர்நிறுத்தத்தை மீறி காசா மீது தாக்குதல் தொடுத்து 33 பேரைக் கொன்ற இஸ்ரேல் அரசு

தமிழில்: வெண்பா

போர்நிறுத்தத்தை மீறி காசா மீது தாக்குதல் தொடுத்து 33 பேரைக் கொன்ற இஸ்ரேல் அரசு

காசாவின் சிவில் பாதுகாப்பு முகமை (Civil Defence Agency) வெளியிட்ட அறிக்கையின்படி, காசா முழுவதும் நடத்தப்பட்ட இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களில் குறைந்தது 33 பேரைக் கொல்லப்பட்டுள்ளனர்.

இஸ்ரேலிய இராணுவம் (Israeli military) காசாப் பகுதி முழுவதும் ஹமாஸின் டஜன் கணக்கான இலக்குகளைத் தாக்கியதாகக் கூறியது. அத்துடன், டிரம்ப் அறிவித்த போர்நிறுத்தத்தையும் (ceasefire) மீறியதாக இஸ்ரேலும் ஹமாஸும் பரஸ்பரம் குற்றம் சாட்டியுள்ளன.

இஸ்ரேலிய இராணுவம், 19.10.2025 அன்று தெற்கு காசாவில் நடந்த சண்டையில் இஸ்ரேல் இராணுவத்தைச் சார்ந்த இரண்டு பேர் கொல்லப்பட்டதாகவும் போர்நிறுத்தத்தை மீறியதாகவும் ஹமாஸை குற்றம் சாட்டியது.

மேஜர் யாணிவ் குலா (வயது 26), சார்ஜென்ட் இட்டாய் யாவெட்ஸ் (வயது 21) ஆகியோர் "தெற்கு காசாப் பகுதியில் சண்டையின் போது உயிர் துறந்தனர்" என்று இராணுவம் கூறியது. அக்டோபர் 10 அன்று போர்நிறுத்தம் நடைமுறைக்கு வந்த பிறகு நடந்த முதல் இஸ்ரேலிய உயிரிழப்புகள் இவையாகும்.

காசா குடியிருப்பாளர்களும் உள்ளூர் சுகாதார அதிகாரிகளும் தெரிவித்தபடி, காசா முழுவதும் நடத்தப்பட்ட இஸ்ரேலின் வான்வழித் தாக்குதல்கள் மற்றும் டாங்க் குண்டுவீச்சுக்கள் (tank fire) ஒரு பெண் உட்பட குறைந்தது 18 பேரைக் கொன்றது.

ஹமாஸ் படையினர் டாங்க் எதிர்ப்பு ஏவுகணையை (anti-tank missile) ஏவி, இஸ்ரேலிய படைகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் இராணுவத்தினர் இருவர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, ஹமாசின் படைத் தளபதிகள், துப்பாக்கி ஏந்தியோர், சுரங்கம், ஆயுதக் கிடங்குகள் உள்ளிட்ட ஹமாசின் இலக்குகளை குறி வைத்து காசா முழுவதும் தாக்கியதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்தது.

நுஸைராத் பகுதியில் (Nuseirat) இடம்பெயர்ந்தவர்கள் தஞ்சம் புகுந்திருந்த பள்ளிக்கூடம் ஒன்றையும் தாக்கியதாக குடியிருப்பாளர்கள் தெரிவித்தனர்.

ஹமாஸின் ஆயுதப் பிரிவு (armed wing) போர்நிறுத்த ஒப்பந்தத்திற்குத் தாங்கள் தொடர்ந்து கடமைப்பட்டுள்ளதாகக் கூறியது. மேலும், ரஃபாவில் (Rafah) நடந்த மோதல்கள் குறித்துத் தங்களுக்குத் தெரியாது என்றும், மார்ச் மாதத்திலிருந்து அங்குள்ள குழுக்களுடன் எந்தத் தொடர்பும் வைத்திருக்கவில்லை என்றும் கூறியது.

வெண்பா (தமிழில்)

மூலக்கட்டுரை: https://stories.apexnews-af.com/news/detail/00e5525e25914c165ea77885c9c01c8b?app_version=5.0+%28Linux%3B+Android+10%3B+K%29+AppleWebKit&country=zz&entry_id=5bf728e9251019en_zz&language=en&request_id=DETAIL_EXPLORE_ef79c5c1-4049-419f-8e33-21ef063d92df&features=162129586587566601&abgroup=MT-3381&client=opera&like_count=0&uid=b243f185fda586450a4b974f2d403a2509090795

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு