உக்ரைன் கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கை

தமிழில் : தோழர். மீரான் மொய்தீன்

உக்ரைன் கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கை

உலகப்போரை உள்நாட்டுப் போராக மாற்றுவது - ஒவ்வொரு நாடும் தனது சொந்த நாட்டு ஆளும் வர்க்கத்திற்கெதிராக ஆயுதங்களை திருப்புவது - ஏகாதிபத்திய அநீதி யுத்தத்தை நீதி யுத்தமாக மாற்றுவது - இன்று நடக்கும் போர் இரு ஏகாதிபத்தியங்களின் மறுபங்கீட்டு போரே போன்ற சரியான நிலைபாடுகளை உக்ரைன் கம்யூனிஸ்ட் கட்சி தன் அறிக்கையில் வெளியிட்டுள்ளது. ஆனால், உக்ரைன் பாட்டாளி வர்க்கத்திற்கான அறைகூவலை அழுத்தமாக வைக்கவில்லை. நேட்டோ, ரஷ்ய பாட்டாளி வர்க்கத்திற்கு விடுக்கும் வேண்டுகோளையே உக்ரைன் பாட்டாளி வர்க்கத்திற்கும் விடுக்கிறது. பிற தேச விடுதலை இயக்கங்கள் பக்கம் சார்ந்து நின்று உக்ரைனில்  சோசலிசப் புரட்சியை முன்னெடுக்க தீர்வு வைக்கவில்லை - அதை நோக்கி உக்ரைன் மக்களை அணிதிரள அழைக்கவில்லை - கிரீமியா டோன்பாஸ் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை பற்றி நிலைபாடு இல்லை போன்றவை விமர்சனமாக பார்க்க வேண்டியுள்ளது. எனவே வாசகர்கள் இந்த அறிக்கையை செந்தளம் நிலைபாடுகளிலிருந்து படிக்குமாறு   கேட்டுக் கொள்கிறோம்

- செந்தளம் செய்திப் பிரிவு

உக்ரைன் கம்யூனிஸ்ட்டுகள் ஒன்றியம் உக்ரைன் ஆக்கிரமிப்பு போரில் தங்கள் நிலைப்பாட்டை வெளியிட்டுள்ளது. உக்ரைனில் தடை செய்யப்பட்டுள்ள கம்யூனிஸ்டுகள் ஒன்றியம் மற்றும் உக்ரைன் கம்யூஸ்ட் கட்சி ரஷியாவின் உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பு போரில் தங்கள் நிலைபாட்டை முதல்முறையாக கடந்த மாதம் 27 ஆம் தேதி வெளியிட்டனர்.

அதில் தற்போது நடைபெற்று வரும் உக்ரைன் போரானது இரு பிரதான ஏகாதிபத்தியங்களின் மறுபங்கீடு போரே எனக் கூறியுள்ளது. இரு ஏகாதிபத்தியங்களாவது ஒரு புறம் அமெரிக்க நேட்டோ நாடுகள் மற்றொரு புறம் ரஷிய அரசு ஏகபோக மூலதனம் சார்ந்த நாடுகளும் ஆகும் எனவும் இந்த இரு முகாம்கள் போக இந்தியா, சீனா போன்ற முதலாளித்துவ நாடுகளும் தங்கள் நலன்களுக்காக தக்க சந்தர்ப்பத்தை எதிர்நோக்கி காத்திருப்பதாகவும் தம் அறிக்கையில் தெரிவித்துள்ளது. நடைபெற்றுக்கொண்டிருக்கும் இந்த ஆக்கிரமிப்பு போரின் வரலாற்று காரணியானது ஸ்டாலினுக்கு பிந்தைய கலைப்புவாதமும் அதன் பயனாய் சோஷலிச முகாமில் ஏற்பட்ட முதலாளித்துவ மீட்சியுமே ஆகும் எனவும் அவ்வறிக்கை குறிப்பிட்டுள்ளது. ரஷியாவில் குருஷேவின் காலத்தில் ஏற்பட்ட முதலாளித்துவ மீட்சியானது உக்ரைன் சோவியத் மாகாணத்தில் அதுவரை மக்கள் கையில் இருந்த பொருளாதார வளங்களை உக்ரைன் பெருமுதலாளி வர்க்கம் பெருமளவு சுரண்ட வழிவகை செய்து அரசு அதிகாரம் முழுதும் ஒரு சில பணமுதலைகளின் கைகளில் குவிக்கப்பட்டு உக்ரைன் ஆட்சி அதிகாரம் தனியார் மயமாக்கப்பட்டது. இந்த விரல் விட்டு எண்ணக்கூடிய பணமுதலைகள் கொண்ட தன்னலக் குழுவானது (oligarchy) உக்ரைன் இயற்கைப பொருளாதார வளங்களை நேட்டோ நாடுகளுடனோ, முதலாளித்துவ ரஷியாவின் நேச நாடுகளுடனோ பகிர்ந்து கொள்ள விரும்பவில்லை. அதே சமயம் சோவியத் வீழ்ச்சியால் பலமும் தன்னம்பிக்கையும் அடைந்த உக்ரைன் பெருமுதலாளி வர்க்கம் அந்நிய முதலீடுகளை இரண்டு பிரதான காரணங்களுக்காக சார்ந்து இருந்தது. 1) ரஷிய தரகு முதலாளிகளிடமிருந்து மலிவு விலையில் கிடைத்த கச்ச எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு. 2) உள்நாட்டு சுரண்டல் லாபங்களை பாதுகாக்க மேற்கு நாடுகளால் ஏற்படுத்தி கொடுக்கப்பட்ட வரி ஏய்ப்பு வசதிகள். இப்படி இரு ஏகாதிபத்திய முகாம்களிடமிருந்தும் பலன்களை அனுபவித்த உக்ரைன் பெருமுதலாளி வர்க்கம் மக்களை ஏமாற்றுவதற்கு உக்ரைன் தேசியவாதத்தை பிரதானமாக கையாண்டது. இதுவும் ஒரு வகையில் அமெரிக்க நேட்டோ கூட்டுறவு முகாமிற்கே சாதகமாக அமைந்தது என்பதை 2004 நடைபெற்ற ஆரஞ்சு புரட்சி நிரூபித்தது. பெருமளவு உக்ரைன் உழைக்கும் வர்க்கத்தினரும், கிராமப்புற நகர்ப்புற உக்ரைன் மக்களும் நடைபெற்ற முதலாளித்துவ மீட்சி பல வகையில் உள்நாட்டு உற்பத்தி உறவுகளின் வளர்ச்சிக்கு முட்டைக்கட்டையாக அமைந்தது என்ற எண்ணத்தை பிரதிலிப்பவர்களாகவே உள்ளனர். ஆனாலும் போதுமான அளவு தத்துவ அரசியல் புரிதல் இல்லாததாலும், வர்க்க அரசியல் பலகீனமடைந்ததையும் நடைபெறும் ஆக்கிரமிப்பு போரில் உக்ரைன் இராணுவத்திற்கு அடியாளாக இருப்பதை தவிர அவர்களுக்கு தற்போது வேறு வழியில்லை எனவும் அவ்வறிக்கை தெரிவித்தது.

2008 பொருளாதார நெருக்கடிக்கு பின் ஏற்பட்ட உலக நிதி மற்றும் வர்த்தக நெருக்கடியே தற்போது இரு ஏகாதிபத்திய முகாம்களும் மோதிக்கொள்வதற்கான நேரடி காரணி எனவும், அதன் பின் பல நாடுகளில் ஏற்பட்ட பல வண்ணப் புரட்சிகளும் இதன் காரணமாகவே நடைபெற்றது எனவும் குறிப்பிட்டுள்ளது. இந்த நிகழ்வுகள் சர்வதேச முரண்பாடுகளை கூர்மையடையவும், உக்ரைனிய தேசியவாத பாசிசத்தை வளர்க்கவும் செய்தது. 2010 ல் ரஷியா சார்பு பெருமுதலாளி வர்க்கத்தின் பிரதிநிதியாக கருதப்பட்டு ஆட்சிக்கு வந்த யானுகோவிச், ரஷிய மற்றும் உக்ரைன் ஏகபோக நிதிமூலத்தின் கூட்டுறவை பலப்படுத்தினார். ஆனாலும் அதிகாரம் உக்ரைனிய தன்னலக்குழுவின் கைகளை மீறிவிடாத வண்ணம் பார்த்துக் கொண்டார். மக்களிடம் தம் செல்வாக்கை அதிகப்படுத்துவதற்காகவும் இரண்டாம் முறை ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றவும் பால் மாணாபோர்ட் (Paul Manafort) போன்ற  மேற்குலகின் தேர்தல் தொழில்நுட்ப ஆலோசகர்களின் உதவியை நாடினார். மேற்கு நாடுகளும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி அதுவரை விளிம்பு நிலையில் இருந்த உக்ரைனிய தீவிர வலது சாரி நாஜி மனோபாவ கட்சியான ஸ்வோபோடாவை (Svoboda) பிரதான எதிர்க்கட்சியாக முன்னிறுத்தி பிரபலமடைய வைத்தனர். பின்னர் இந்த கட்சியின் மூலமே 2014-ல் மைதான் கலகம் அரங்கேற்றப்பட்டது. இதுவே உக்ரைனில் க்டோபர் புரட்சியின் மிச்சம் மீதியை முற்றிலும் ஒழித்துக்கட்டியது. மைதான் கலகத்தின் விளைபயனாகவே டொனேட்ஸ்க் மற்றும் லுகான்ஸ்க் மாகாணங்கள் உக்ரைனிலிருந்து பிரிவினையை விரும்பும் நிலைக்கு தள்ளப்பட்டன. டொனேட்ஸ்க் மற்றும் லுகான்ஸ்க் மக்கள் குடியரசின் பிரிவினையை பொறுத்தவரை ரஷிய பெருமுதலாளி வர்க்கம் ஒரு முரண்பாடான நிலையை  கொண்டிருந்தது. ஒரு புறம் அதற்கு இராணுவ மற்றும் பொருளாதார உதவிகள் செய்துவந்தாலும் மறுபுறம் இப்பகுதியின் இறையாண்மையை ஆதரிக்காததோடு மட்டுமன்றி கிரிமியாவை தன்னுடன் இணைத்துக்கொண்டது போல் LDPR-ஐ தன்னுடன் இணைத்துக்கொள்ள விரும்பவில்லை. மேலும் மின்ஸ்க் உடன்படிக்கையில் கையெழுத்திட்டு அதிகாரத்தில் இருக்கும் ஜெலன்ஸ்கி அரசாங்கத்தோடு நட்புறவையே பாராட்டி வந்தது. காரணம் ரஷிய ஆளும் வர்க்கத்தின் பிரதான உறுப்பான தரகு வர்க்க தன்னலக் குழுவின் நலன்கள் பல வகையில் உக்ரைன் நாஜி அரசாங்கத்தோடும், அமெரிக்க நேட்டோ நாடுகளின் மூலதனத்தோடும் ஒரு சிக்கலான பிணைப்பை கொண்டிருந்ததே ஆகும். ரஷியாவிலிருந்து மேற்கு ஐரோப்பிய சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் அம்மோனியாவானது உக்ரைன் வழியாக குழாய் மூலம் ஒடெஸ்ஸா துறைமுகத்தை வந்தடைவது இங்கு குறிப்பிடத்தக்கது. வெகு காலத்திற்கு இவ்விரு நாடுகளும் பேச்சளவில் ஒருவருக்கொருவர் பகைமை பாராட்டுவது போல் தம் நாட்டு மக்களை ஏமாற்றினாலும் வர்த்தக அளவில் இருநாட்டு ஆளும் வர்க்கமும் கள்ள உறவை பேணிக்காத்து வந்தது. டான்பாஸ் தொழிலாளர் வர்க்கம் அப்பகுதியில் இருக்கும் நிறுவனங்களை உக்ரைனிய நிதிமூலதன ஆதிக்கத்திலிருந்து மீட்கவும், அவற்றை தேசிய மயமாக்கவும் போராடிய போது LDPR அரசு அதை ஒடுக்கியதும் கூட ரஷிய பெருமுதலாளி வர்க்கம் உக்ரைன் ஆளும் வர்க்கத்தோடு கொண்டிருந்த கள்ள உறவின் நலன்களிலிருந்தே ஆகும். அமெரிக்க நேட்டோ நாடுகளின் கிழக்கு நோக்கிய ஆக்கிரமிப்பையம் அமைதியான முறையில் எதிர்கொள்வதற்கு ரஷியாவிற்கு உக்ரைனின் உதவி தேவைப்பட்டது. ஆனால் நாளாக நாளாக கூர்மைடைந்த முரண்பாடுகள் இந்த உறவை சுமூகமான முறையில் கையாள்வதை மிகவும் சிக்கலாக்கியது. சிறப்பு இராணுவ நடவடிக்கை என்ற பெயரில்  நடைபெற்று கொண்டிருக்கும் இந்த ஆக்கிரமிப்பு போரினால் ரஷிய மக்களுக்கோ அல்லது உக்ரைன் பகுதியில் வாழும் டாட்டர், சுவாஷ், யாக்குட் உழைக்கும் வர்க்கத்திற்கோ எந்த பிரதிபலனும் இல்லை மாறாக இது ரஷிய மூலத்தின் நலத்தை பாதுகாப்பதற்காகவே நடைபெறும் போராகும். உக்ரைன் ஆளும் வர்க்கம் தான் சார்ந்திருக்கும் அமெரிக்க நேட்டோ நாடுகளின் மூலதனத்தின் நலன்களை பாதுகாக்க தன் நாட்டு இராணுவத்தை நேட்டோவின் அடியாளாக பாவித்து இந்த ஆக்கிரமிப்பு போரை எதிர்கொள்கிறது.

நடைபெற்றுக் கொண்டிருக்கும் போரும் தொடங்கிய லட்சியத்திலேயே தொடரவில்லை, சிறப்பு இராணுவ நடவடிக்கை என்ற பெயரில்  டான்பாஸ் பகுதியை மட்டுமே கையகப்படுத்துவதில் தொடங்கிய ரஷியாவின் முயற்சி இப்போது உக்ரைன் முழுவதையும் ஆக்கிரமிப்பு செய்வதில் என்று தொடர்ந்துகொண்டிருக்கிறது. இரு ஏகாதிபத்தியங்களும் இப்போது மிகவும் வெளிப்படையாகவே தமது போரை உக்ரைனில் நடத்திக்கொண்டிருக்கிறார்கள். இதற்கும் உக்ரைனிய தொழிலாளி வர்க்கமே பீரங்கி உணவாய் பயன்படுத்தப் பட்டு கொண்டிருக்கிறார்கள். உக்ரைனிய பெரு முதலாளி வர்க்கம் தம் குழந்தைகள், குடும்பம் மற்றும் மூலதனக் குவியலை பத்திரமாய் உக்ரைனிலிருந்து வெளியேற்றியது மட்டுமின்றி நடைபெற்றுக் கொண்டிருக்கும் போருக்கு இராணுவ தளவாடங்கள் மறுவிற்பனை மற்றும் சேவைகளிலிருந்து பெருமளவு லாபங்களை ஈட்டிய வண்ணமே உள்ளது. அமைதி காலத்தில் சுரண்டப்டுவதை விட அதிக அளவு போர்க்காலத்தில் தொழிலாளர் வர்க்கம் சுரண்டப்படுகிறது.

வெறும் அமைதிக்கான அறைகூவலினால் எந்த பயனும் இல்லை என்பதை உக்ரைன் கம்யூனிஸ்டுகள் ஒன்றியம் சொல்லிக்கொள்ள கடமைப்பட்டிருக்கிறது. உக்ரைன் மக்கள் உக்ரைன் நாட்டு முதலாளி வர்க்கத்திற்கெதிராக ஆயுதங்களை திருப்ப வேண்டும். உக்ரைன் மக்கள்  மட்டுமல்ல இந்த இரு ஏகாதிபத்திய மறுபங்கீட்டு போரின் வரம்பிற்குள் கொண்டுவரப்படும் அனைத்து நாட்டு தொழிலாளர் வர்க்கமும் உடனடியாக செய்யவேண்டியது தத்தம் நாட்டு பெரும் தரகு முதலாளி வர்க்கத்திற்கு எதிராக நடத்தும் உள்நாட்டு போரே ஆகும். ரஷிய மற்றும் அமெரிக்க நேட்டோ நாடுகளின் பெருமுதலாளி வர்க்க நலன்களுக்காக மட்டுமே நடத்தப்படும் இந்த போரை தங்கள் தோள்கள் சுமக்கப் போகும் ரஷிய மற்றும் நேட்டோ நாடுகளின் தொழிலாளி வர்க்கத்திற்கும் இதே அறைகூவலை விடுக்கிறோம். கடந்த இரண்டு நூற்றாண்டுகளாக முதலாளித்துவம் தொழிலாளி வர்க்கம் மீதான பெருமுதலாளி வர்க்கத்தின் சுரண்டலைக் கொண்டு வளர்ந்து வந்துள்ளது. பல பத்தாண்டுகளுக்கு முன்பே அது காலாவதியும் ஆகிவிட்டது. தொழிலாளர் சர்வதேசியமே பெருமுதலாளித்துவ தேசியத்திற்கான சிறந்த மாற்று. அதை செயற்படுத்துவது இப்போதுள்ள சூழ்நிலையில் மிகவும் எளிதல்ல என்பதையும் நாம் அறிந்துள்ளோம். உலககெங்கும் உள்ள பல்வேறு நாடு பொதுவுடைமை இயக்கங்கள் தங்கள் அனுபவங்களிலிருந்து சரியான பாதையையும், வர்க்க போராட்டத்தின் வடிவங்களையும் வளர்த்தெடுக்க வேண்டும்.

2014 ல் இருந்து உக்ரைன் கம்யூனிஸ்ட்டுகள் ஒன்றியம் தலைமறைவாக தமது செயல்திட்டங்களை வகுத்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. 21 ஆம் நூற்றாண்டில் ஏகாதிபத்தியத்தை எதிர்ப்பது என்பது ஒரு சர்வதேசிய அளவிலான பணி, அதற்கு சர்வதேசிய அளவிலான ஒத்துழைப்பும், பல தேசிய பொதுவுடைமை இயக்கங்களில் ஒருங்கிணைந்த செயல்பாடும் முக்கியமான தேவையாக இருக்கிறது என்றும் அவ்வறிக்கையில் தெரிவித்தது.

தமிழில் : 
தோழர். மீரான் மொய்தீன்