ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் அமெரிக்க வர்த்தகப் போரும் இந்தியா-சீனா உறவுகளுமே முதன்மை பேசுபொருளாக விளங்கும்
தமிழில்: விஜயன்

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட உலகத் தலைவர்கள் இந்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உச்சி மாநாட்டில் கலந்துகொள்கின்றனர். மக்கள் தொகையின் அடிப்படையில், உலகிலேயே மிகப்பெரிய பிராந்தியக் கூட்டமைப்பாக (regional grouping) இது தற்போது திகழ்கிறது.
சீனாவால் முன்னிறுத்தப்படும் இம்மாநாடு, வடக்குச் சீன நகரான தியான்ஜினில் ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைகளில் கூடுகிறது. ஆசியா, ஐரோப்பா, மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் தலைவர்களும் அதிகாரிகளும் அரசியல்-பொருளாதாரப் பிரச்சனைகள் குறித்து விவாதிக்க அங்கு திரள்கின்றனர்.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பானது 2001ஆம் ஆண்டில் சீனா, ரஷ்யா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளால் தோற்றுவிக்கப்பட்டது. ஆரம்பத்தில், அதன் கவனம் மத்திய ஆசியாவில் மட்டுமே குவிந்திருந்தது; ஆனால் கடந்த இருபது ஆண்டுகளில், அது விரிவான சர்வதேசிய விவகாரங்களை நோக்கியும் நகர்ந்துள்ளது.
அமெரிக்கா தலைமையிலான நிறுவனங்களுக்கு மாற்றாக, அவைகளுக்கு "இணையான சர்வதேச நிர்வாக அமைப்பு" (parallel international governance system) என்று அழைக்கப்படும் ஒன்றைக் கட்டமைக்க சீனா மேற்கொள்ளும் முயற்சியில் SCO ஒரு முக்கியமான அங்கமாக மாறியுள்ளது என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். அமெரிக்கா தலைமையிலான உலக ஒழுங்கிற்கு அப்பாற்பட்ட பேச்சுவார்த்தைக்கும் ஒத்துழைப்புக்கும் இந்த மாநாடு ஒரு களம் அமைத்துக் கொடுக்கிறது. தியான்ஜினில் நடக்கும் இந்தக் கூட்டம் பெரும்பாலும் அடையாளத்திற்கானது என்றாலும், பங்கேற்பாளர்கள் தங்கள் பொதுவான குறைகளையும் நிலைப்பாடுகளையும் பகிர்ந்துகொள்ள இது வழிவகுக்கிறது என்று சைனா-குளோபல் சவுத் பிராஜெக்ட்டின் தலைமை ஆசிரியர் எரிக் ஓலாண்டர் விளக்கினார்.
அமெரிக்க நட்பு நாடுகள் உள்பட பல நாடுகளின் சர்வதேச அரசியலில் ட்ரம்ப்பின் வர்த்தகப் போர் ஆதிக்கம் செலுத்திவரும் காலகட்டத்தில் இந்த ஆண்டிற்கான உச்சி மாநாடு நடைபெறுகிறது. இந்தக் களச்சூழல், பங்கேற்பாளர்களுக்கு இடையே பொதுவான இணக்கப்பாட்டை (common ground) உருவாக்கக்கூடும்.
விருந்தினர் பட்டியலில், போர்க் குற்றங்களுக்காக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் பிடியாணை உத்தரவை எதிர்கொள்ளும் புதின்; பெலாரஸின் எதேச்சாதிகாரத் தலைவர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ; மட்டுமல்லாது ஐ.நா. சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குடெரஸ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டுள்ள பல நாடுகள் தங்களுக்குள்ளும் நீண்டகாலப் பூசல்களைக் கொண்டுள்ளன—உதாரணமாக, இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும், இந்தியாவுக்கும் சீனாவுக்கும், சவுதி அரேபியாவுக்கும் ஈரானுக்கும், மட்டுமல்லாது மத்திய ஆசிய நாடுகளுக்கு சீனா மற்றும் ரஷ்யா ஆகிய இரண்டுடனும் பூசல்கள் உள்ளன.
“இங்கு மிகவும் சிக்கலான இயக்கபோக்குகள் (dynamics) நிலவுகின்றன,” என்று ஓலாண்டர் குறிப்பிட்டார். “சிரித்த முகத்துடன் கூடிய குழுப் புகைப்படத்திற்குப் பின்னாலும், தலைவர்கள் ஒருவரையொருவர் உன்னிப்பாக கவனித்து வருவார்கள்”.
உறுப்பினர் எண்ணிக்கையை விரிவுபடுத்துதலும் 'ஊசலாடும் தேசங்களும்'
அண்மையில், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு இந்தியா, பாகிஸ்தான், ஈரான் மற்றும் பெலாரஸ் ஆகிய நாடுகளை உள்ளடக்கியவாறு தனது உறுப்பினர் எண்ணிக்கையை விரிவுபடுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தான் மற்றும் மங்கோலியா பார்வையாளர்களாக (observers) உள்ளன. அதேவேளை, ஐக்கிய அரபு எமிரகம், சவுதி அரேபியா, துருக்கி, கத்தார், கம்போடியா, மியான்மர் மற்றும் இலங்கை போன்ற பிற நாடுகள் உரையாடலில் பங்கேற்கும் நாடுகளாக (dialogue partners) இருக்கின்றன.
இந்த உச்சி மாநாட்டில் தென்கிழக்கு ஆசியாவும் ஒரு மையப் பாத்திரத்தை வகிக்கிறது. அமெரிக்காவிற்கும் சீனாவுக்கும் இடையிலான அதிகாரப் போராட்டத்தில் இந்த பிராந்தியத்தை ஓலாண்டர் “ஊசலாடும் தேசங்களுடன்” (swing states) ஒப்பிடுகிறார். மலேசியாவின் அன்வார் இப்ராஹிம் மற்றும் இந்தோனேசியாவின் பிரபோவோ சுபியான்டோ உட்பட ஐந்து தென்கிழக்கு ஆசிய நாடுகளின் தலைவர்கள் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆசியான் கூட்டமைப்பின்(ASEAN) பொதுச் செயலாளர் காவ் கிம் ஹோர்ன் அவர்களும் கலந்துகொள்வார்.
கடந்த ஏழு ஆண்டுகளாக இல்லாமல் தற்போது ஷி ஜின்பிங் மற்றும் மோடி இடையே நடக்கும் கருத்துப்பரிமாற்றம் (interaction) இந்த மாநாட்டில் மிகவும் கூர்ந்து கவனிக்கப்படும் தருணங்களில் ஒன்றாகும். இந்தியா பாரம்பரியமாக அமெரிக்காவிற்கு நெருக்கமாகவே இருந்து வந்துள்ளது. ஆனால், ரஷ்யாவிலிருந்து தொடர்ந்து எண்ணெய் வாங்குவதற்கான தண்டனையாக, கடந்த வாரம் ட்ரம்ப் இந்தியப் பொருட்கள் மீது 50 சதவிகித வரிகளை அறிவித்தார். சர்வதேசத் தடைகளைத் (sanctions) தாண்டி ரஷ்யா நிலைத்திருக்கவும், உக்ரைனில் போரைத் தொடரவும் இந்தியாவின் இறக்குமதிகள் உதவுகின்றன என்பதே அமெரிக்காவின் வாதமாக உள்ளது.
இருப்பினும், இந்த அமெரிக்க வரிகள் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையேயான உறவுகளில் சில முன்னேற்றங்களை ஊக்குவிக்கின்றன. இமயமலை எல்லையில் இராணுவ வீரர்களுக்கு இடையே உயிர்ப்பலி வாங்கிய சண்டைக்குப் பிறகு 2020-ல் இருதரப்பு உறவுகள் கடுமையான பின்னடைவைச் சந்தித்தன. 2024 ஆம் ஆண்டில் ஒரு எல்லைத் தீர்வு எட்டப்பட்டபோதிலும், அவநம்பிக்கை இன்னமும் நீடிக்கவே செய்கிறது. அமெரிக்கா தலைமையிலான குவாட் (QUAD) கூட்டணி (இதில் ஜப்பான், ஆஸ்திரேலியா, அமெரிக்கா மற்றும் இந்தியா உறுப்பினர்களாக உள்ளன) போன்ற கூட்டமைப்புகளிடமிருந்து இந்தியாவை விலக்கி வைப்பதற்கான ஒரு அரிய வாய்ப்பாக ட்ரம்பின் வர்த்தகப் போரை சீனா தற்போது காண்கிறது என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.
சீன ஆய்வுகளுக்கான மெர்கேட்டர் இன்ஸ்டிடியூட் அமைப்பைச் சேர்ந்த கிளாஸ் சூங் கூறுகையில், “இந்த மாநாட்டுக்குப் பிறகு சீனா, இந்தியாவுடனான தனது உறவை எப்படி விவரிக்கிறது, மேலும் நிலைமைகள் மெருகேறுகிறதா என்பதுதான் முக்கியமான விஷயமாக அமையும்”. “பெய்ஜிங்கின் அதிகாரப்பூர்வ மொழியில் ஏற்படும் சிறு மாற்றங்கள் கூட வலுவான இராஜதந்திர சமிக்ஞைகளாகவே கருதப்படும்”.
உக்ரைன் மோதல் தொடர்பாக ட்ரம்பைச் சந்திப்பதற்காக புதின் இம்மாதத் துவக்கத்தில் அலாஸ்காவிற்குச் சென்றுவந்த பிறகு, புதினுக்கும் ஷி ஜின்பிங்கிற்கும் இடையேயான முதல் சந்திப்பிற்கான களமாகவும் SCO உச்சி மாநாடு அமைகிறது. சீனா-ரஷ்யா உறவுகளை விவரிக்கும்போது இருநாட்டுத் தலைவர்களும் பயன்படுத்தும் துல்லியமான மொழி குறித்தும் பார்வையாளர்கள் கவனம் செலுத்துவார்கள் என்பதே ஆய்வாளர்களின் கருத்தாக உள்ளன.
பிப்ரவரி 202-ல், உக்ரைனுக்கு எதிராக ஆக்கிரமிப்பு போரைத் துவங்குவதற்கு சற்று முன்பாகத்தான், சீனாவும் ரஷ்யாவும் ஒரு “எல்லைகளற்ற கூட்டணியில்” (no limits partnership) கையெழுத்திட்டன. அதிலிருந்து, ரஷ்யாவின் பொருளாதாரத்தைத் தாங்கிப் பிடிக்க சீனா உதவி வருகிறது. இந்த ஒருதலைபட்சமான நிலை இந்தியாவுக்கு ஒரு கவலையாக உள்ளது. ஏனெனில், சீனா தன்னை ஆதரிப்பதை விட ரஷ்யாவை அதிகமாக ஆதரிப்பதாக அது உணர்கிறது. அதே சமயம், இந்தியா இப்போது எதிர்கொள்ளும் அதே அளவிலான அமெரிக்கத் தடைகளை சீனா எதிர்கொள்ளவில்லை.
இத்தனை போட்டி நலன்கள் நிலவுவதால், பெரும்பாலான நிபுணர்கள் மாநாடு ஒரு கூட்டுப் பிரகடனத்துடன் (joint declaration) முடிவடையும் என்று எதிர்பார்க்கின்றனர். அமெரிக்கக் கொள்கைகளைக் குறிப்பதாகப் பலர் கருதும் ஒரு வார்த்தையான “ஒற்றை மேலாதிக்கத்தை” எதிர்ப்பதை சீனாவும், ரஷ்யாவும் வலியுறுத்த முயற்சிக்கும். இருப்பினும், கூட்டறிக்கையில் அனைத்துப் பங்கேற்பாளர்களுக்கும் ஏற்றுக்கொள்ளச் செய்யும் வகையில் இக்கருத்து நீர்த்துப்போகச் செய்யப்படும் என்று பார்வையாளர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
“அங்கு பயன்படுத்தப்படும் வார்த்தைகளை விட, அனைத்து உறுப்பினர்களையும் ஒரு பொதுவான கூட்டு அறிக்கைக்கு உடன்படச் செய்வது அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும்,” என்று சிங்கப்பூரில் உள்ள சர்வதேச ஆய்வுகளுக்கான எஸ். ராஜரத்தினம் ஆய்வு மையத்தைச் சேர்ந்த டேனியல் பாலாஸ் கூறினார். “இது பெரும்பாலும் ஸ்திரத்தன்மை, பாதுகாப்பு, பொருளாதார ஒத்துழைப்பு, மற்றும் பல்துருவ உலக ஒழுங்கின் (multilateralism) முக்கியத்துவத்தை வலியுறுத்தும் கூட்டறிக்கையாக இருக்கும் என்றார். அதேசமயம், மிகவும் சர்ச்சைக்குரிய எதையும் கொண்டிருக்காது”.
தியான்ஜின் மாநாட்டுக்குப் பிறகு, தலைவர்கள் பெய்ஜிங்கிற்குப் பயணப்படுவதற்கு முன், சீனாவில் மேலும் ஒரு நாளைச் செலவிடுவார்கள். செப்டம்பர் 3 ஆம் தேதி, ஆசியாவில் இரண்டாம் உலகப் போர் முடிவடைந்து 80 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் குறிக்கும் வகையில் ஒரு பிரம்மாண்டமான இராணுவ அணிவகுப்பு நடத்தப்படும். அதற்கு முந்தைய நாள்—செப்டம்பர் 2—தலைவர்களுக்கு இடையேயான தனிப்பட்ட சந்திப்புகளுக்காக ஒதுக்கப்படும்.
வட கொரியத் தலைவர் கிம் ஜோங் உன், செர்பிய அதிபர் அலெக்சாண்டர் வூசிக் மற்றும் ஸ்லோவாகியப் பிரதமர் ராபர்ட் ஃபிகோ உட்பட மேலும் பல தலைவர்கள் இந்த அணிவகுப்பிற்காக வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மோடி இந்த அணிவகுப்பிற்காக தங்கி இருப்பார் என்று எதிர்பார்க்கப்படவில்லை; இருப்பினும், அவர் தனது வெளியுறவு அமைச்சரை அல்லது வேறு ஒரு உயர்நிலை பிரதிநிதியை அனுப்பக்கூடும்.
சீன ஆய்வுகளுக்கான மெர்கேட்டர் இன்ஸ்டிடியூட் அமைப்பைச் சேர்ந்த கிளாஸ் சூங்கின் கூற்றுப்படி, சீனாவைப் பொறுத்தவரை, இவ்வளவு விரிந்த அளவிலான தலைவர்கள் மாநாட்டு அமர்விலும் அணிவகுப்பிலும் கலந்துகொள்வது, அதன் பிம்பத்தை மேம்படுத்தும், குறிப்பாக உலகளாவிய தெற்கில் (Global South) உள்ள நாடுகளிடையே சீனாவின் முகமதிப்பை மேம்படுத்தும். “எந்தெந்த நாடுகள் தனது நண்பர்களாக இருக்கவும் தனது நிலைப்பாட்டை ஏற்றுக்கொள்ளவும் தயாராக உள்ளன என்பதை சீனா இதன் மூலம் பறைசாற்றுகிறது,” என்று அவர் கூறினார்.
- விஜயன் (தமிழில்)
மூலக்கட்டுரை: https://www.aljazeera.com/news/2025/8/30/us-trade-war-india-china-ties-loom-large-at-shanghai-cooperation-summit
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு