பாகிஸ்தான் – சீன கூட்டணியின் நெருக்கமான உறவு: இந்தியாவிற்கு உணர்த்தும் செய்தி என்ன?

தமிழில்: விஜயன்

பாகிஸ்தான் – சீன கூட்டணியின் நெருக்கமான உறவு: இந்தியாவிற்கு உணர்த்தும் செய்தி என்ன?

நீண்ட காலமாக, பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் ஊடுருவ முயலும் பயங்கரவாதிகள் சீன தொழில்நுட்பம் கொண்டு தயாரிக்கப்பட்ட ஸ்னைப்பர் துப்பாக்கிகளைப் பயன்படுத்தி வருகிறார்கள். சுமார் பத்தாண்டுகளுக்கு முன்னர், ஜம்மு & காஷ்மீரில் பெரிய அளவிலான தாக்குதல்கள் நிகழ்ந்த பிறகு, பயங்கரவாதக் குழுக்களால் பகிரப்பட்ட படங்களை வைத்து பார்க்கும் பொழுது, அவர்கள் சீனாவில் தயாரிக்கப்பட்ட சீருடையோடு பொருத்தப்பட்டிருக்கும்(Body cameras) கேமராக்களைப் பயன்படுத்தியிருந்ததைக் காண முடிந்தது.

பயங்கரவாதிகள் தங்களின் தகவல்தொடர்புகளுக்கும்கூட சீனாவில் தயாரிக்கப்பட்ட குறியாக்கும் திறன்பெற்ற தகவல்தொடர்பு சாதனங்களையே பயன்படுத்தி வருகின்றனர். பாகிஸ்தான் இராணுவம் பெரும்பாலும் சீனாவிடம் இருந்து ஆயுதங்கள், கேமராக்கள் மற்றும் தகவல்தொடர்புச் சாதனங்களைப் பெற்று வருவதை பாதுகாப்பு ஏஜென்ஜிகள் சுட்டிக்காட்டியுள்ளன. இவை சில சமயங்களில் தீவிரவாதிகளுக்கு வழங்கப்படுகின்றன.

முன்னதாக, சீனாவின் நெருங்கிய நட்பு நாடாக விளங்கும் பாகிஸ்தானுக்கு மிகக் குறைந்த அளவிலேயே சீனத் தயாரிப்பு ஆயுதங்கள் அனுப்பப்பட்டு வந்தன. ஆனால் இப்போது, இது இரண்டு பெரிய இராணுவச் சக்திகளுக்கு இடையேயான மிக வலுவான இராணுவக் கூட்டணியாகப் பரிணமித்துள்ளது.

'ஆப்பரேஷன் சிந்துர்' நடவடிக்கையைத் தொடங்கி, பாகிஸ்தானின் பெரும்பாலான வான்வழித் தாக்குதல்களைத் முறியடித்ததற்குப் பிறகு, மே 12 அன்று இந்தியப் படைகளுக்கு எதிராக சீனா வழங்கிய ஆயுதங்களைப் பாகிஸ்தான் பயன்படுத்தியுள்ளது என்று இந்தியா முதல் முறையாக அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்தது. ஏவுகணைப் பாகங்களின் பட ஆதாரங்களை செய்தியாளர்கள் சந்திப்பின் போது விமானப் படைத் தலைமை இயக்குநர் ஏர் மார்ஷல் ஏ கே பார்தி காண்பித்தார். "நீங்கள் இதன் துண்டுகளைத் திரையில் காணலாம்," என்று அவர் கூறினார், பஞ்சாபின் ஹோஷியார்பூரில் கண்டெடுக்கப்பட்ட பெரிய பாகம் உட்பட, இந்தியப் பிரதேசத்தில் வீழந்த PL-15 என்ற நீண்ட தூர தாக்குதல் திறன் கொண்ட ஏவுகணையின் உடைந்த பாகங்களையும் அவர் காண்பித்தார்.

கடந்த வாரம், பாகிஸ்தானால் பயன்படுத்தப்பட்ட பல மேம்பட்ட வெளிநாட்டு ஆயுதங்களை இந்திய ஆயுதப் படைகள் முறியடித்து அழித்தன. இதில் சீனத் தயாரிப்பான PL-15 ரக வான்-வழி-வான்தாக்கு ஏவுகணைகளும் முறியடிக்கப்பட்டன. 200 கிலோமீட்டருக்கும் அப்பால் வான்வெளியிலுள்ள பிரதான இலக்குகளைத் தொலை தூரத்திலிருந்தே தாக்கக்கூடிய PL-15 ஏவுகணையை சீனாவின் ஏவியேஷன் இண்டஸ்ட்ரி கார்ப்பரேஷன் (AVIC) தயாரிக்கிறது.

இதன் ஏற்றுமதி ரகமான PL-15E, 145 கிலோமீட்டர் தூரம் வரை சென்று தாக்கும் திறன் பெற்றுள்ளது. இது பாகிஸ்தானின் JF-17 பிளாக் III, J-10CE ரகப் போர் விமானங்களில் பயன்படுத்தப்படுகிறது.

பாகிஸ்தானுடனான தற்போதைய மோதலில், சீனாவை இந்தியா வெளிப்படையாகக் குறிப்பிட்டது இதுவே முதல் முறை. முன்னதாக, சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே வளர்ந்து வரும் இராணுவத் தொடர்புகளை இந்தியா உன்னிப்புடன் கண்காணித்து வந்தாலும், சீனாவின் பெயரை நேரடியாகக் குறிப்பிடவில்லை.

சமீபத்திய வான்வழி மோதல்களுக்குப் பிறகு, பாகிஸ்தான் தனது முக்கிய இராணுவ கூட்டாளி சீனாவே என்பதை ஒளிவுமறைவின்றி வெளிப்படையாக அடையாளம் காட்டியுள்ளது. ஏப்ரல் 26 அன்று, பாகிஸ்தான் விமானப் படை, PL-15E, PL-10 ஏவுகணைகளைத் ஏந்திய JF-17 ரக ஜெட் விமானங்களின் படங்களை வெளியிட்டது. பாகிஸ்தான் விமானப் படையிடம் சுமார் 45-50 JF-17 பிளாக் III ரக ஜெட் விமானங்களும், 20 J-10CE ரக ஜெட் விமானங்களும் உள்ளன. அவ்வகையில், சுமார் 70 விமானங்கள் இந்த PL-15E ஏவுகணையைப் பயன்படுத்தும் திறன் கொண்டவை என மதிப்பிடப்பட்டுள்ளது.

PL-15 ஏவுகணையானது பல்வேறுபட்ட வழிகாட்டுதல் முறைகளை அதாவது நிலைம இயக்க வழிகாட்டுதல் (inertial navigation), சீனாவின் பெய்டூ செயற்கைக்கோள்களில் இருந்து பெறப்படும் உடனுக்குடனான புதுப்பிக்கப்பட்ட தகவல்கள், இருவழித் தரவுப் பரிமாற்ற இணைப்பு (two-way data link), மட்டுமல்லாது அதிநவீன ராடார்களை (advanced radar) கையாளும் திறன் கொண்டதாக உள்ளது.

இது இரட்டைத் துடிப்பு ராக்கெட் என்ஜீனைக் கொண்டு செயல்படுகிறது, மேலும் மாக் 5 வேகத்தைக் காட்டிலும் அதிவேகத்தில் பறந்து சென்று தாக்கவல்லது. பல துண்டுகளாகச் சிதறி வெடிக்கும் அதன் வெடிப்பு முனை (warhead), சுமார் 20 முதல் 25 கிலோகிராம் வரை எடையுடையதாக இருக்கும். இந்த ஆயுதம் பெரும்பாலும் சீன விமானப்படையிடமிருந்தே நேரடியாகப் பெறப்பட்டிருக்க வேண்டும் என யூகிக்கப்படுகிறது.

சீனாவும் பாகிஸ்தானும் இணைந்து JF-17 ரகப் போர் விமானத்தை உருவாக்கி வருகின்றன. இது பாகிஸ்தான் விமானப்படையின் முக்கிய போர் விமானங்களில் ஒன்றாக விளங்குகிறது.

பாதுகாப்புத் துறை நிபுணர் பிரவீன் சாவ்னி அவர்கள் சுட்டிக்காட்டுகையில், இந்தியா எதிர்பார்த்து வந்த "இரு முனைப் போர்" (two-front war) என்ற கருத்தாக்கம் - அதாவது சீனாவையும் பாகிஸ்தானையும் ஒரே சமயத்தில் எதிர்கொள்ளும் நிலை - இப்போது அடியோடு தகர்ந்துவிட்டதாகக் கூறுகிறார். இன்று, பாகிஸ்தானுடனான எந்தவொரு மோதலும் தவிர்க்க முடியாமல் சீனாவையும் உள்ளடக்கியதாகவே இருக்கும். ஏனெனில், இவ்விரு நாடுகளுக்கும் இடையே வலுவான இராணுவக் கூட்டணி நிலவுகிறது, மேலும் அவை எண்ணிப்பார்க்க முடியாத அளவிற்கான ஒருங்கிணைப்புடன் இணைந்து செயல்படக்கூடியவையாக விளங்குகின்றன.

போர் விமானங்கள் (fighter jets), ஏவுகணைகள் (missiles), தரவுப் பகிர்வு (data sharing), மின்னணுப் போர் (electronic warfare) மட்டுமல்லாது, அதிநவீன ராடார் மற்றும் சென்சார் கருவிகளுடன் (advanced radar and sensors) கூடிய சிறப்பு விமானங்கள் (special aircraft) போன்றவற்றிலும் நெருங்கிய இராணுவ ஒத்துழைப்பை காண முடிகிறது. இந்தச் சிறப்பு விமானங்கள் நீண்ட தொலைவில் இருந்தே வான்வழி மற்றும் தரைவழி இலுக்குகளைக் கண்டறிந்து கண்காணிக்க வல்லவை. அவை முன்னறிந்து எச்சரிக்கை செய்வது (early warning) மட்டுமல்லாது தாக்குதல் தொடுக்கும் பணிகளுக்கும் பெரும் துணை புரிகின்றன. 

மே 7 அன்று நிகழ்ந்த வான்வழி மோதலிபின்போது, பிரெஞ்சு தயாரிப்பு ரஃபேல் உள்ளிட்ட இந்திய விமானங்களை தமது சீனத் தயாரிப்பான J-10C போர் விமானம் சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் ஒர் அறிக்கையை வெளியிட்டது முதல், சீனாவின் பாதுகாப்புத் துறை மீது உலகளாவிய கவனம் கூடியுள்ளது. ஆனால், இந்தக் கூற்றை இந்தியா ஏற்கவில்லை.

J-10C என்பது, சீனாவின் ஒற்றை எஞ்சினைக் கொண்ட, பல்வேறு பணிகளை ஆற்றக்கூடிய (multirole) J-10 போர் விமானத்தின் புதிய வடிவமாகும். 2000களின் தொடக்கத்தில் J-10 போர் விமானம் பயன்பாட்டிற்கு வந்தது. சிறந்த ஆயுத அமைப்புகளையும் தொழில்நுட்பத்தையும் இது கொண்டிருப்பதால், 4.5-தலைமுறை போர் விமானமாகக் கருதப்படுகிறது. இது ரஃபேலுக்குச் சமமானது என்றாலும், சீனாவின் J-20 அல்லது அமெரிக்காவின் F-35 போன்ற மிகவும் அதிநவீன 5ஆம் தலைமுறை மறைதாக்கு(ஸ்டெல்த்) விமானங்களுக்கு சமமானது அல்ல.

ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் (SIPRI) வெளியிட்டுள்ள தரவுகளின்படி, கடந்த ஐந்து ஆண்டுகளில், பாகிஸ்தான் இறக்குமதி செய்துள்ள ஆயுதங்களில் 81% சீனாவிலிருந்தே வந்துள்ளன. மேம்பட்ட போர் விமானங்கள், ஏவுகணைகள், ரேடார்கள் மட்டுமல்லாது வான் பாதுகாப்பு அமைப்புகளும் பாகிஸ்தானால் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. இவை இந்தியாவுடனான எந்தவொரு மோதலிலும் முக்கியப் பங்கு வகிக்கும் என பாதுகாப்புத் துறை நிபுணர்கள் கூறிவருகின்றனர். பாகிஸ்தானில் உருவாக்கப்படும் சில ஆயுதங்களும் சீன உதவியுடன் அல்லது சீனத் தொழில்நுட்பத்தைக் கொண்டுதான் மேம்படுத்தப்படுகின்றன.

ஆகஸ்ட் 2019-இல் இந்தியா தனது அரசியலமைப்பின் 370வது பிரிவின் கீழ் ஜம்மு & காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை நீக்கியதிலிருந்து, சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே இருந்த வலுவான கூட்டணி மேலும் வலுப்பெற்றிருப்பதில் ஆச்சரியம் இல்லை. சீனாவால் கட்டுப்படுத்தப்படும் பகுதிகளைத் தவிர்த்து, ஜம்மு & காஷ்மீரின் அனைத்துப் பகுதிகளையும் பாகிஸ்தான் உரிமை கோருகிறது.

சீன - பாகிஸ்தான் படைகள் தரைவழி, கடல்வழி மற்றும் வான்வெளியில் மேம்பட்ட கூட்டுப் பயிற்சிகளிலும் பங்கேற்கின்றன. இவற்றில் போர் ஒத்திகைகளும், படைவீரர்களைப் பரிமாறிக்கொள்வதும் கூட அடங்கும்.

முன்னாள் இந்திய ராணுவ உயர் அதிகாரி, ஓய்வுபெற்ற லெப்டினன்ட் ஜெனரல் வினோத் பாட்டியா, இந்த பாதுகாப்பு கூட்டணியைப் பற்றிக் தாம் அதிகம் கவலைப்படவில்லை என்று கூறுகிறார். J-10C விமானத்தால் ரஃபேல் சுட்டு வீழ்த்தப்பட்டதாகக் கூறப்படுவதற்கு பின்னால் வணிக நோக்கங்களே பிரதானமாக இருக்கிறது என்கிறார். ஏனெனில், சீனா அதிக ஆயுதங்களை விற்பனை செய்ய விரும்புவதோடு, வாங்குபவர்களைக் கவருவதற்காகவே இதுபோன்ற விளம்பர உத்திகளைப் பயன்படுத்துகிறது என்பது வினோத் பாட்டியாவின் வாதம்.

மே 6 ஆம் தேதி இரவு 'ஆபரேஷன் சிந்தூர்' தொடங்கப்பட்டதிலிருந்து, J-10 போர் ஜெட் விமானங்களைத் தயாரிக்கும் சீன நிறுவனமான Avic Chengdu Aircraft-ன் பங்கு விலை மிகக் குறுகிய சில நாட்களுக்குள்ளாகவே 60%க்கும் மேல் உயர்வைக் கண்டது. ஆனால், மே 13 அன்று, இந்த நடவடிக்கை வெற்றிகரமாக முடிவடைந்துவிட்டதாக பிரதமர் நரேந்திர மோடி ஒரு திடமான அறிவிப்பை வெளியிட்ட பின்னர், அப்பங்குகளின் விலை கிடுகிடுவெனச் சரிந்தது. அவரது அறிவிப்புக்குப் பிறகு, சீன பாதுகாப்பு நிறுவனங்களின் பங்குகள் கணிசமாகச் சரிந்தன, அதே சமயம் இந்திய பாதுகாப்பு நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம் கண்டன.

போர் அல்லது மோதல் நிலவும் காலங்களில், இரு தரப்பிலிருந்தும் பலவிதமான முழக்கங்களும் எதிர் முழக்கங்களும் எழுவது இயல்பே. ஆயினும், சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நிலவும் வலுவான ராணுவக் கூட்டணியை யாரும் குறைத்து மதிப்பிட்டு விடக் கூடாது என்பதை ஆய்வாளர் பிரவீன் சாவ்னி ஒரு முக்கிய எச்சரிக்கையாக முன்வைக்கிறார். "சீனா ஒரு ராணுவ வல்லரசு. இந்தியா அப்படியில்லை. மேலும், பாகிஸ்தானின் ராணுவமும் பலவீனமானதல்ல", என்பதையும் அவர் சேர்த்துக் கூறியுள்ளார்.

- விஜயன் (தமிழில்)

மூலக்கட்டுரை: https://www.livemint.com/news/the-depth-of-the-pakistan-china-alliance-and-what-it-means-for-india-11747199687258.html

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு