துறைமுகங்களின் உலகளாவிய வலைப்பின்னலை சீனா எவ்வாறு கட்டியமைத்தது

வெண்பா (தமிழில்)

துறைமுகங்களின் உலகளாவிய வலைப்பின்னலை சீனா எவ்வாறு கட்டியமைத்தது

கடந்த இரண்டு தசாப்தங்களாக, அண்டார்டிகா தவிர மற்ற அனைத்து கண்டங்களிலும் வர்த்தகத் துறைமுகங்களின் உலகளாவிய வலைப்பின்னலை உருவாக்குவதற்கு சீனா பல பில்லியன் டாலர்களை முதலீடு செய்துள்ளது. கப்பல் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் இரயில்வே வழியாக வர்த்தக உள்கட்டமைப்பை ஆதிக்கம் செய்வதானது ஜின்பிங்கின் ‘பெல்ட் அண்ட் ரோட் திட்டத்தின்’ (Belt and Road Initiative)-இன் மையத் தூணாகும். டிரம்பின் வர்த்தகப் போருக்கு மத்தியில் கூட யுத்ததந்திர ரீதியாக இது பலனளித்து வருகிறது. அமெரிக்கா வெளிநாட்டு முதலீடுகளில் இருந்து பின்வாங்கும் அதே நேரத்தில் சீனா அதை வேகப்படுத்துவதால், இந்தத் திட்டங்கள் வேறு எந்த நாடும் மேற்கொண்ட முயற்சிகளை விடவும் பரந்ததாக உள்ளன. சீன அரசுக்கு சொந்தமான அல்லது அதனுடன் இணைந்த நிறுவனங்கள் 129 வெளிநாட்டு துறைமுக திட்டங்களில் 60 பில்லியன் டாலருக்கும் அதிகமாக முதலீடு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விரிவாக்கத்தை அமெரிக்காவும் பிற நாடுகளும் கவலையளிக்கும் போக்காகக் கருதுகின்றன: இணைப்பில் உள்ள ப்ளூம்பெர்க் ஒரிஜினல்ஸ் ஆவணப்படத்தில் விளக்குவது போல, இந்த துறைமுகங்களில் பல இராணுவப் பயன்பாட்டுக்கானவையாக உருவாக்கப்பட்டுள்ளன, அவை நெருக்கடி நேரத்தில் பயன்படுத்தப்படலாம் என்று நிபுணர்கள் வாதிடுகின்றனர்.

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, அமெரிக்கா உலகம் முழுவதும் இராணுவத் தளங்களின் பரந்த அமைப்பைப் பராமரித்து வருகிறது. ஆனால், தற்போது உள்நாட்டு அரசியலில் கவனம் செலுத்துவதாலும், அதிகரித்து வரும் உள்நாட்டு ஸ்திரமின்மையின் மத்தியில் அமெரிக்கா சர்வதேச அரங்கில் இருந்து பின்வாங்குவதால், சீனா அந்த வெற்றிடத்தை நிரப்புவதை நோக்கி நகர்கிறது. குறைந்தது 14 துறைமுகங்கள் சீனா நேரடியாக உரிமை கொண்டதாக அடையாளம் காணப்பட்டுள்ளன. அவை இராணுவப் பயன்பாட்டுக்கானதாக உள்ளன. இந்த வளர்ச்சியானது சில நாடுகளை முந்தைய ஒப்பந்தங்களை மறுபரிசீலனை செய்யும் நிலைக்கு தள்ளியுள்ளது. உதாரணமாக ஆஸ்திரேலிய அரசு, டார்வின் துறைமுகத்தை சீன குத்தகைதாரரிடம் இருந்து திரும்பப் பெற திட்டமிடுவதாகக் கூறியது. ஐரோப்பிய ஒன்றியம், "முக்கியமான போக்குவரத்து உள்கட்டமைப்பு" என்று அழைக்கப்படும் பகுதிகளின் வெளிநாட்டு உரிமையின் மீதான கட்டுப்பாடுகளை இறுக்குவது குறித்து பரிசீலித்து வருகிறது.

டிரம்ப்பைப் பொறுத்தவரை, உடனடி கவலை என்னவென்றால், வர்த்தக பதட்டங்களின் பகுதியாக சீனா கட்டுப்படுத்தும் துறைமுகங்களை எவ்வாறு தான பயன்படுத்த முடியும் என்பதே ஆகும். குறிப்பாக பனாமா கால்வாயின் மீதான சீனாவின் செல்வாக்கு குறித்தும் கவலை தெரிவித்துள்ளார். அந்தக் கால்வாயை அமெரிக்க ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டர் வெகு காலத்திற்கு முன்பே பனாமாவிடம் திரும்ப ஒப்படைத்துவிட்டார். இந்தக் கால்வாயின் இருபுறங்களிலும் உள்ள இரண்டு துறைமுகங்கள் ஹாங்காங்கை தளமாகக் கொண்ட CK Hutchison நிறுவனத்திற்குச் சொந்தமானவை. சீன நிறுவனங்கள் இந்த துறைமுகங்களைக் கட்டுப்படுத்துவது, மோதல், வர்த்தகம் அல்லது வேறு எந்த சூழ்நிலையிலும் கால்வாய் போக்குவரத்தை சீனா தடுக்கலாம் என்று டிரம்ப்பின் உதவியாளர்கள் கூறியுள்ளனர். நாட்டின் கொள்கலன் (Container) போக்குவரத்தில் 40% இந்தக் கால்வாய் வழியாக செல்வதால், இது அமெரிக்க பொருளாதாரத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக  அமையும்.

இந்த ஆவணப்படத்தில், அமெரிக்கா உள்ளிட்ட பிற நாடுகளுக்கான அபாயங்கள் குறித்து ஆராயப்பட்டுள்ளது. அதே நேரத்தில் சீனா துறைமுகங்களை கட்ட  முதலீடு செய்யும் பல நாடுகள் இந்த திட்டத்தையும் நிதியையும் எவ்வாறு வரவேற்கின்றன என்பதும் காட்டப்பட்டுள்ளது.

வெண்பா (தமிழில்)

மூலக்கட்டுரை: https://www.bloomberg.com/news/articles/2025-11-27/video-china-has-a-network-of-ports-encircling-the-globe

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு