ரசிய எல்லைக்கு அருகே லித்துவேனியாவில் இராணுவ தளம் அமைக்கும் ஜெர்மன்

ராய்ட்டர்ஸ்

ரசிய எல்லைக்கு அருகே லித்துவேனியாவில் இராணுவ தளம் அமைக்கும் ஜெர்மன்

2024 ஆகஸ்ட் 19 அன்று லித்துவேனியா ஒரு இராணுவத் தளத்தை நிர்மாணிக்கத் தொடங்கியது. இந்தத் தளம் 2027 ஆம் ஆண்டின் இறுதிக்குள் கட்டி முடிக்கப்படும்போது, சுமார் 4,000 போர்வீரர்களைக் கொண்ட ஜெர்மன் துருப்புக்கள் இங்கு நிலைநிறுத்தப்படுவார்கள். இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஜெர்மன் இராணுவம் வெளிநாட்டில் நிரந்தரமாகத் தனது துருப்புக்களை நிறுவுவது இதுவே முதல் முறையாகும்.

கடந்த ஆண்டு, ரஷ்யாவுடன் எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் நேட்டோ மற்றும் ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடான லித்துவேனியாவில் தனது துருப்புக்களை நிறுவுவதற்கு ஜெர்மனி ஒப்புக்கொண்டது. ஜெர்மன் பாதுகாப்பு அமைச்சர் போரிஸ் பிஸ்டோரியஸ் இந்த முடிவை, சோவியத் தாக்குதலை எதிர்கொள்வதற்காக மேற்கு ஜெர்மனியில் நேச நாட்டுப் படைகள் நிலைநிறுத்தப்பட்டிருந்த பனிப்போர் காலத்திய நடைமுறையுடன் ஒப்பிட்டார்.

இந்தத் தளம், தலைநகர் வில்னியஸுக்கு அருகிலுள்ள ருட்னின்காய் என்னுமிடத்தில், ரஷ்யாவின் கூட்டாளியான பெலாரஸிலிருந்து சுமார் 20 கிலோமீட்டர் (12 மைல்) தூரத்தில் அமைந்துள்ளது. 

இது சுமார் 4,000 வீரர்கள் வரை தங்கும் வசதிகள், டாங்கிகள் மற்றும் ஏனைய தளவாடங்களுக்கான சேமிப்பு மற்றும் பழுதுபார்க்கும் கூடங்கள், அத்துடன் பல்வேறு அளவிலான துப்பாக்கிச் சுடும் பயிற்சி இடங்களையும் உள்ளடக்கியிருக்கும். மேலும், லித்துவேனியாவிலுள்ள மற்ற தளங்களின் பணிகளுக்கு ஆதரவளிப்பதற்காகச் சுமார் 1,000 ஜெர்மன் இராணுவப் பணியாளர்களும் சிவில் ஒப்பந்தக்காரர்களும் பணியில் அமர்த்தப்படுவார்கள்.

லித்துவேனியாவின் பாதுகாப்புப் படைத் தலைவர் ரைமுண்டாஸ் வெய்க்ஸ்னோராஸ் அவர்களின் மதிப்பீட்டின்படி, இந்தத் தளத்தை மேம்படுத்துவதற்காக அடுத்த மூன்று ஆண்டுகளில் ஒரு பில்லியன் யூரோக்களுக்கும் அதிகமான தொகையை (சுமார் 1.10 பில்லியன் டாலர் - குறிப்பு: $1 = 0.9063 யூரோக்கள்) முதலீடு செய்யும், இது லித்துவேனியாவின் மிகப்பெரிய கட்டுமானத் திட்டங்களில் ஒன்றாகும். 

ஆரம்ப விழா ஒன்றில் வெய்க்ஸ்னோராஸ் கருத்துத் தெரிவிக்கையில், “2.9 மில்லியன் மக்களைக் கொண்ட ஒரு தேசத்திற்கு இது ஒரு பெரிய முதலீடாகும், குறிப்பாக எமது பொருளாதாரம் ஜெர்மனியின் பொருளாதாரத்தில் பத்தில் ஒரு பங்கு அளவு கூட இல்லாத நிலையில்,” என்று குறிப்பிட்டார். மேலும் அவர் கூறுகையில், “இந்த படைப்பிரிவு எமது மக்களுக்கு ஒரு மன உறுதியளிக்கும் காரணியாகவும், ரஷ்யாவின் முன்னேற்றங்களைத் தடுத்து நிறுத்துவதற்கான ஒரு வலுவான அரணாகவும் விளங்கும்” என்றார். லித்துவேனியா இந்த ஆண்டு தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 3% பாதுகாப்புச் செலவினங்களுக்காக ஒதுக்கியுள்ளது. பிரதமர் இங்ரிடா சிமோனைட், இந்தத் தளத்தின் கட்டுமானப் பணிகள் உட்பட பாதுகாப்புத் தேவைகளுக்கு உதவும் வகையில் அடுத்த சில ஆண்டுகளில் வரி அதிகரிப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். ஜெர்மனியைச் சுட்டிக்காட்டி அவர், “நாங்கள் பாதுகாப்பாக இல்லையென்றால், அவர்களுக்கும் பாதுகாப்பு இருக்காது,” என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

இதற்கிடையில், ஜூன் மாதத்தில் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தால் ஆய்வுசெய்யப்பட்ட ஒரு இரகசிய வரைவு வரவுசெலவுத் திட்டத்தின்படி, ஜெர்மன் அரசாங்கம் 105 லியோபார்ட் 2 ஏ8 டாங்கிகளை கொள்முதல் செய்வதற்காகத் தனது பாராளுமன்றத்திடம் 2.93 பில்லியன் யூரோக்களைக் கோரியுள்ளது, இதில் ஒரு பகுதி லித்துவேனிய தளத்திற்குத் தேவையான உபகரணங்களை வழங்கப் பயன்படுத்தப்படும். 

இருப்பினும், ஜெர்மனியின் கூட்டாட்சி அரசாங்கத்திற்குள் நிலவும் உள்நாட்டு வரவுசெலவுத் தகராறுகள் தற்போது பெர்லினின் ஆயுதப் படைகளை நவீனமயமாக்கும் உறுதிப்பாட்டிற்கு அச்சுறுத்தலாக உள்ளன.

தற்போதைய நிலையில், வளாகத்தின் திட்டமிடப்பட்ட கட்டிடங்களில் சுமார் ஐந்தில் ஒரு பங்கிற்கான கட்டுமான ஒப்பந்தங்கள் மட்டுமே கையெழுத்திடப்பட்டுள்ளன. இது குறித்த நேரத்தில் கட்டுமானப் பணிகளை முடிப்பது குறித்த சந்தேகங்களை கிளப்பியுள்ளது. 

பாதுகாப்பு அமைச்சர் லௌரினாஸ் காஸ்கியூனாஸ் செய்தியாளர்களிடம் கூறுகையில், எஞ்சியிருக்கும் கட்டுமானப் பணிகளுக்கான ஒப்பந்தங்களை இந்த ஆண்டின் இறுதிக்குள் வழங்க அவரது அமைச்சகம் இலக்கு நிர்ணயித்துள்ளது, இது அவரது பதவிக் காலத்தின் இறுதியும் ஆகும் என்று தெரிவித்தார்.

(ஆண்டிரியஸ் சைட்டஸ்)

- வெண்பா (தமிழில்)

மூலக்கட்டுரை: https://www.reuters.com/world/europe/lithuania-begins-construction-base-german-troops-near-russian-border-2024-08-19/