ஆஸ்திரேலியாவின் மூதாதையர்: இரண்டு பாதைகள், 60,000 ஆண்டுகள்"
வெண்பா (தமிழில்)
நவீன மனிதர்கள் 60,000 ஆண்டுகளுக்கு முன்பு ஆஸ்திரேலியாவிற்கு வந்தனர், அவர்கள் 'ஹாபிட்கள்' போன்ற பழங்கால மனிதர்களுடன் இனக்கலப்பில் ஈடுபட்டிருக்கலாம். கிட்டத்தட்ட 2,500 மரபணுக்கள் (genomes) பற்றிய புதிய ஆய்வு, நவீன மனிதர்கள் ஆஸ்திரேலியாவிற்கு எப்போது வந்தனர் என்ற விவாதத்திற்கான தீர்வு ஒன்றை கண்டுள்ளது. ஓசியானியா முழுவதும் உள்ள பண்டைய மற்றும் சமகால பூர்வீக மக்களின் (Aboriginal people) டி.என்.ஏ. தரவுகளின் பல்வேறுபட்ட களஞ்சியத்தைப் பயன்படுத்தி, ஆராய்ச்சியாளர்கள் 60,000 ஆண்டுகளுக்கு முன்பே மக்கள் வடக்கு ஆஸ்திரேலியாவில் குடியேறத் தொடங்கினர் என்றும், அவர்கள் இரண்டு தனித்தனி வழிகள் மூலம் வந்தனர் என்றும் உறுதிப்படுத்தியுள்ளனர். மனிதர்கள் முதன்முதலில் ஆஸ்திரேலியாவை அடைந்த தேதி குறித்து வல்லுநர்கள் நீண்ட காலமாக விவாதித்து வருகின்றனர்; இது நீர்வழிக் கலங்களை ஆராயக் கோரும் சாதனையாகும். சில ஆராய்ச்சியாளர்கள் வருகைக்கான "குறுகிய காலவரிசை" (short chronology) என்பது சுமார் 47,000 முதல் 51,000 ஆண்டுகளுக்கு முன்பு என்பதை மரபணு மாதிரிகள் மூலம் கண்டறிந்தாலும், மற்றவர்கள் "நீண்ட காலவரிசை" (long chronology) அதாவது முதல் வருகைகள் 60,000 முதல் 65,000 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தன என்ற கருத்தை தொல்பொருள் சான்றுகள் மற்றும் பூர்வீக அறிவின் அடிப்படையில் முன்வைத்துள்ளனர்.
வெள்ளிக்கிழமை (நவம்பர் 28) 'சயின்ஸ் அட்வான்சஸ்' (Science Advances) இதழில் வெளியிடப்பட்ட புதிய ஆய்வில், மனிதர்கள் எப்போது சுண்டாவிலிருந்து (Sunda – இது இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் மற்றும் மலேசிய தீபகற்பம் ஆகியவற்றை உள்ளடக்கிய பண்டைய நிலப்பரப்பு, சுண்டாலாண்ட் என்றும் அழைக்கப்படுகிறது) சாகுலுக்கு (Sahul – இது நவீன கால ஆஸ்திரேலியா, டாஸ்மேனியா மற்றும் நியூ கினியா ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு பழங்காலக் கண்டம்) பயணித்தனர் என்ற கேள்விக்கு பதிலளிக்க, ஆராய்ச்சியாளர்கள் (முன்னெப்போதும் இல்லாத வகையில்) 2,456 மனித மரபணுக்களின் தரவுத் தொகுப்பை பகுப்பாய்வு செய்தனர். "இந்தக் கேள்வியை நிவர்த்தி செய்வதற்கான மிகவும் விரிவான மரபணு ஆய்வு இதுவாகும். மேலும் இது குறுகிய காலவரிசையை விட நீண்ட காலவரிசைக்கு வலுவான முக்கியத்துவத்தை அளிக்கிறது” என்று ஆய்வின் இணை ஆசிரியரும் இங்கிலாந்தின் ஹடர்ஸ்ஃபீல்ட் பல்கலைக்கழகத்தின் தொல்மரபணுவியலாளருமான (archaeogeneticist) மார்ட்டின் ரிச்சர்ட்ஸ், லைவ் சயின்ஸ் (Live Science) இணையதளத்திற்கு தெரிவித்தார்.
வடக்கு மற்றும் தெற்குப் பாதைகள் வழியாக வந்த இரண்டு தனித்தனி மனிதக் குழுக்களையும் பகுப்பாய்வு வெளிப்படுத்தியது. "இந்த முடிவு சுமார் 60,000 ஆண்டுகளுக்கு முன்பு சாகுலில் நுழைந்ததற்கான தொல்பொருள் மற்றும் கடலியல்/பழைய காலநிலை (oceanographic/paleoclimate) ஆதாரங்களுடன் மிகச் சரியாகப் பொருந்துகிறது," என்று ரிச்சர்ட்ஸ் கூறினார். தங்கள் முடிவுகளை அடைய, ஆராய்ச்சியாளர்கள் ஒரு மூலக்கூறு கால அளவீடு அணுகுமுறையைப் (molecular clock approach) பயன்படுத்தினர், இது டி.என்.ஏ வரிசைகளில் ஏற்படும் சடுதி மாற்றங்கள் (mutations) காலப்போக்கில் நிலையான விகிதத்தில் நிகழ்கின்றன என்று கருதுகிறது. இரண்டு டி.என்.ஏ வரிசைகளில் உள்ள வேறுபாடுகளைப் பார்ப்பதன் மூலம், அந்த வரிசைகள் ஒன்றுக்கொன்று எப்போது பிரிந்தன என்பதை ஆராய்ச்சியாளர்கள் மதிப்பிட முடியும்.
இந்த ஆய்வில், ஆய்வுக் குழுவினர் மைட்டோகாண்ட்ரியல் டி.என்.ஏ-வை (தாயின் வழியில் கடத்தப்படுவது) மற்றும் Y-குரோமோசோம் தரவை (தந்தையின் வழியில் கடத்தப்படுவது) பகுப்பாய்வு செய்ய பல புள்ளிவிவர முறைகளைப் பயன்படுத்தினர். அவர்களின் அனைத்து புள்ளிவிவர மாதிரிகளும் வடக்கு ஆஸ்திரேலியாவில் குடியேறியதற்கான தேதியாக சுமார் 60,000 ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தை தருவித்தன. ஆனால் மரபணுத் தரவு ஒரே காலத்தில் நடந்த இரண்டு தனித்தனி குடியேற்றங்களையும் வெளிப்படுத்தியது. ஒரு குழுவினர் தெற்கு சுண்டா (இந்தோனேசிய தீவுகள்) வழியாக ஆஸ்திரேலியாவை அடைந்தனர், மற்றொரு குழுவினர் வடக்கு சுண்டாவிலிருந்து (பிலிப்பைன்ஸ் தீவுக்கூட்டம்) வந்தனர்.
இந்த இரண்டு குழுக்களும் சுமார் 70,000 முதல் 80,000 ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்காவிலிருந்து வெளியேறிய மக்கள்தொகையின் பகுதியாக இருந்தன என்று ரிச்சர்ட்ஸ் கூறினார். "அவர்கள் கிழக்கு நோக்கி பரவும்போது, தெற்காசியா அல்லது தென்கிழக்கு ஆசியாவில் பிரிந்திருக்கலாம் என்று நாங்கள் நினைக்கிறோம்". இது ஆஸ்திரேலியாவை அடைவதற்கு 10,000 முதல் 20,000 ஆண்டுகளுக்கு முன்பு நடந்திருக்கலாம். "ஆப்பிரிக்காவிற்கு வெளியே உள்ள எந்தவொரு மனிதக் குழுவையும் விட பூர்வீக ஆஸ்திரேலியர்கள் மற்றும் நியூ கினியர்கள் மிகவும் பழமையான உடையாத மூதாதையர் வம்சாவளியைக் (most ancient unbroken ancestry) கொண்டுள்ளதாக எங்கள் முடிவுகள் சுட்டிக்காட்டுகின்றன" என்று ரிச்சர்ட்ஸ் கூறினார். வரும் வழியில், இந்த ஆரம்பகால மனித முன்னோடிகள் (pioneers) ஹோமோ லோங்கி, எச். லூசோனென்சிஸ் மற்றும் "ஹாபிட்" எச். ஃப்ளோரெசியென்சிஸ் போன்ற பழங்கால மனிதர்களுடன் இனக்கலப்பு செய்திருக்கலாம் என்றும் ரிச்சர்ட்ஸ் கூறுகிறார். இருப்பினும், நவீன மனிதர்கள் அப்பகுதியில் உள்ள பழங்கால மக்களுடன் எந்த அளவிற்கு தொடர்பு கொண்டிருந்தனர் என்பது தற்போது தெளிவாகத் தெரியவில்லை.
இந்த ஆய்வில் ஈடுபடாத, ஆஸ்திரேலியாவின் கிரிஃபித் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த தொல்பொருள் ஆராய்ச்சியாளர் ஆடம் ப்ரம் (Adam Brumm), ஆரம்பகால மனித இயக்கங்கள் சாகுல் பகுதியின் ஆரம்பகால மக்கள்தொகையில் முக்கிய பங்கைக் கொண்டிருந்தன என்ற கருத்தை இந்த ஆய்வு ஒத்திருப்பதாக லைவ் சயின்ஸ்-க்கு தெரிவித்தார். "என்னிடம் நிதியிருந்தால் நான் அதை 'நீண்ட காலவரிசை' மாதிரி ஆய்வுக்கு செலவிடுவேன்" என்று ப்ரம் கூறினார். இந்த மரபணு ஆய்வு ஆஸ்திரேலியாவில் உள்ள பூர்வீக மக்களின் தொன்மைக்கு விரிவான தாக்கங்களை அளித்துள்ளது. "பல பூர்வீக ஆஸ்திரேலியர்கள் மற்றும் டோரஸ் ஜலசந்தி தீவுவாசிகள் (Torres Strait Islanders) தாங்கள் எப்போதும் தங்கள் நாட்டிலேயே ('Country') இருந்தோம் என்று புரிந்துகொள்கிறார்கள்," என்று ஆய்வின் இணை ஆசிரியரும், இங்கிலாந்தில் உள்ள சவுத்தாம்ப்டன் பல்கலைக்கழகத்தின் தொல்பொருள் ஆராய்ச்சியாளருமான ஹெலன் ஃபார் (Helen Farr) லைவ் சயின்ஸ்-க்கு தெரிவித்தார்.
"இந்த தரவு இந்த சமூகங்களின் மிக ஆழமான பாரம்பரியத்தை (deep heritage) வழங்குகிறது," என்று ஃபார் கூறினார். "குறைந்தது 60,000 ஆண்டுகளாக மக்கள் தங்கள் நாட்டுடனும் கடலுடனும் கொண்டிருந்த நெருங்கிய தொடர்புகளை இது கூறுகிறது,". ஆனால், தொல்பொருள் பதிவுகளில் காணப்படாத கடற்பயண அறிவு மற்றும் திறன்கள் ஆரம்பகால மனிதர்களின் உயிர்வாழ்வுக்கு முக்கியமானவையாக விளங்கியது என்பதையும் இது நிரூபிக்கிறது.
வெண்பா (தமிழில்)
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு