“330 கோடி மக்கள் கொதித்தெழும் நிலைக்கே சென்றுவிட்டனர்”
ஐ.நா. பொதுச்செயலாளர் எச்சரிக்கை.
சமூக நலத் திட்ட செலவுகளுக்கு முன்னுரிமை தருவதற்கு பதிலாக அந்நியக் கடன்களை அடைப்பதற்கு முன்னரிமைத் தரும்படி ஏழை நாடுகளை நிர்பந்திப்பது ‘பேரவலம்’ என்று ஐ.நா. சபையின் தலைவர் கூறியிருக்கிறார்.
“பல நாடுகள் கல்விக்கும், மருத்துவத்திற்கும் செலவு செய்வதைவிட அந்நியக் கடன்களை அடைப்பதற்காக செய்துவரும் செலவு அதிகமாக உள்ளது என்றும் கிட்டத்தட்ட மனித குலத்தில் சரிபாதி மக்கள் அதாவது 330 கோடி மக்கள் இதனால் பெரும் பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர்” என்று ஐ.நா.வின் பொதுச் செயலாளர் அந்தோனியோ குத்தேரஸ் கூறியிருக்கிறார்.
“நாடுகளின் வளர்ச்சி என்பதே பேரவலமாக நீடித்துவரும் நிலையில், இப்பூமியில் வாழக்கூடிய இரண்டில் ஒரு நபர்கள் இந்த அவலத்தில் சிக்கித் தவித்து வருகின்றனர். இந்நிலையில்தான் இம்மக்களின் முதுகுத்தண்டு உடையும் அளவிற்கான கடன் சுமை ஏற்றி வைக்கப்படுகிறது” என்று கடந்த வாரம் புதன்கிழமையன்று எச்சிரிக்கை மணி எழுப்பிய ஐ.நா.வின் பொதுச் செயலாளர் அந்தோனியோ குத்தேரஸ் அவர்கள் உடனடியாக கடன் தள்ளுபடியோ, கடன் மறு சீரமைப்பிற்கான நடவடிக்கையையோ மேற்கொள்ள வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.
ஐ.நா.வின் சார்பில் உலகளாவிய உணவு, எரிசக்தி மற்றும் நிதிநெருக்கடிகளை எதிர்கொள்வதற்காக உருவாக்கப்பட்ட நிபுனர் குழு(GCRG) வெளியிட்டிருந்த ஆய்வறிக்கையை குறிப்பிட்டு “பல நாடுகள் கல்விக்கும், மருத்துவத்திற்கும் செலவு செய்வதைவிட அந்நியக் கடன்களை அடைப்பதற்காக செய்துவரும் செலவு அதிகமாக உள்ளது என்றும் கிட்டத்தட்ட மனித குலத்தில் சரிபாதி மக்கள் அதாவது 330 கோடி மக்கள் இதனால் பெரும் பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர்” என்பதையும் சுட்டிக்காட்டி குத்தேரஸ் பேசியிருந்தார்.
“தாங்க முடியாத கடன்களை ஏழை நாடுகளே அதிகமாக வாங்கியிருக்கின்றன என்பதால் அந்நாடுகளின் பொருளாதாரம் வீழ்ந்தாலும் உலக நிதி மூலதன அமைப்பின் அஸ்திவாரத்திற்கு பெரிய அளவிலான பாதிப்பை ஏற்படுத்தாது என்று நம்பப்பட்டு வருகிறது. எனினும், இது மூட நம்பிக்கையே” என்று குத்தேரஸ் கூறினார்.
அவர் இவ்வாறு கூறுகிறார்: “330 கோடி மக்கள் ஏற்றத்தாழ்வான வளர்ச்சி எனும் பேரவலத்தினால் பாதிக்கப்படுகின்றனர் என்பதே உலக நிதி மூலதன அமைப்பின் அஸ்திவாரத்தை ஆட்டங்காணச் செய்வதற்கு போதுமான காரணியாகும். அவர்கள் பாதிக்கப்படுவதென்பதே இந்த அமைப்பு முறையின் அடிப்படைத் தோல்வியையே பறைசாட்டுகிறது. சந்தைகள் ஒப்பீட்டளவில் இப்போதைக்கு சீராக இயங்குவது போலத் தெரிந்தாலும், மக்களின் நிலை மிக மோசமாக பாதிக்கப்பட்டு வருகிறது என்பதே யதார்த்தமாகும்.”
“காலனியாதிக்க நலன்களை பிரதிபலிக்கக்கூடிய வகையில் உருவாக்கப்பட்ட பாரபட்சமான பழைய நிதி மூலதன கட்டமைப்பே இன்றளவும் தொடர்வதுதான் ஏழை நாடுகள் கடன் நெருக்கடியில் சிக்கித் தவிப்பதற்கு ஒரு காரணமாக விளங்குகிறது.”
கொரோனா பெருந்தொற்று, உக்ரைன் போர் மற்றும் புதை படிவ எரிபொருட்களால் உண்டான காலநிலை மாற்ற நெருக்கடியின் காரணமாக மட்டும் கடந்த 2019 முதல் கூடுதலாக 12.2 கோடி மக்கள் பட்டினி கிடக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு வரை எடுக்கப்பட்ட மதிப்பீட்டின் படி உலக அளவில் 73.5 கோடி மக்கள் உணவு பஞ்சத்தில் தவித்து வருகின்றனர் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. கிடைக்கும் உணவில், ஊட்டச்சத்து பஞ்சம் என்பதன் அடிப்படையில் பார்த்தால், உலகளவில் 2021 வரை 310 கோடிக்கும் அதிகமான மக்கள் ஆரோக்கியமான உணவின்றி நலிந்து வருவதாக கணக்கிடப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட இதே எண்ணிக்கையிலான மக்கள் வசிக்கக்கூடிய நாடுகளில்தான் சமூக நலத் திட்டங்களுக்கான செலவினங்கள் வெட்டப்பட்டு அந்நியக் கடன்களை அடைப்பதற்கான செலவினங்களுக்கு முன்னுரிமை தரப்படுகிறது என சென்ற வார புதன்கிழமை தனியாக ஐ.நா.வின் வலைதளத்தில் செய்தியாக வெளியிடப்பட்ட பதிவில் விரிவாக கூறப்பட்டிருக்கிறது.
‘கடனில் மூழ்கிய உலகம்: உலக நாடுகளின் வளர்ச்சிக்கு எதிராக வளர்ந்து கொண்டே செல்லும் கடன் சுமை’ என்ற தலைப்பில் ஐ.நா.வின் GCRG நிபுணர் குழு வெளியிட்டிருந்த ஆய்வறிக்கையின்படி, மேற்கண்ட சிக்கல்களெல்லாம் உண்மையில் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையதாகும். ஏனெனில், குத்தேரஸ் சுட்டிக்காட்டியபடி, “உலகில் உள்ள சில ஏழை நாடுகள் மக்களுக்கு சேவை செய்வதா இல்லை கடன் கொடுத்த அந்நிய நிறுவனங்களுக்கு சேவை செய்வதா என்ற இரண்டக நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.”
“தக்கவைக்கும் வளர்ச்சி இலக்குகளுக்கோ (SDG) அல்லது புதுப்பிக்கத்தக்க மாற்று எரிசக்தி முறைகளை நோக்கியோ மாறிச்செல்வதற்கான முக்கிய முதலீட்டுத் திட்டங்களை தீட்டுத்துவதற்கான நிதிசார்ந்த வாய்ப்பே இதுபோன்ற நாடுகளுக்கு விட்டுவைக்கப்படுவதில்லை என்றே சொல்லலாம்,” என்கிறார் குத்தேரஸ்.
அரசுகளின் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கடன்கள் கடந்த பத்தாண்டுகளாக அதிகரித்து வருகின்றன. மேலும், “சமீபத்திய ஆண்டுகளில் அலையலையாக ஏற்பட்ட நெருக்கடிகளைத் தொடர்ந்து கடன் வாங்கும் வேகம் மேன்மேலும் அதிகமாகியுள்ளது” என்று GCRG நிபுணர் குழு வெளியிட்டிருந்த ஆய்வறிக்கையில் கண்டறியப்பட்டுள்ளது. உலகளவில் ஒவ்வொரு நாடுகளின் அரசாங்கங்களும் வாங்கிய கடன்களின் அளவு வரலாறு காணாதளவிற்கு உயர்ந்து 2022 வரையில் 92 டிரில்லியன் அமெரிக்க டாலர்களை என்ற அளவை எட்டியுள்ளது. இதில் குறைந்த மற்றும் நடுத்தர வருவாயீட்டக்கூடிய நாடுகளின் பங்கு 30 சதவீதமாக இருக்கிறது.
“வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கான நிதித் தேவைகள் என்பது வளர்ச்சி குறைந்த நாடுகளில் அதிகரித்துக் கொண்டே வருவதால்,” கடந்த பத்தாண்டுகளில் மட்டும் பூமியின் வடக்கு பகுதியில் உள்ள நாடுகளோடு ஒப்பிடுகையில், பூமியின் தெற்கு பகுதியில் உள்ள நாடுகளின் கடன் வாங்கும் விகிதம் அதிகமாகியுள்ளது. கொரோனா பெருந்தொற்று பாதிப்பு, விண்ணைமுட்டும் வாழ்க்கைச் செலவினங்கள், காலநிலை மாற்ற நெருக்கடி போன்றவற்றாலும், “சர்வதேச நிதி மூலதனக் கட்டமைப்பிடமிருந்து வளர்ந்து வரும் நாடுகளுக்கு வேண்டிய நிதியைப் பெறுவதில் இருந்துவரும் சமச்சீரற்ற, பாரபட்சமான நிலைமையின் காரணமாக இந்நாடுகளுக்கு போதுமான கடன் கிடைப்பதில்லை என்பது மட்டுமல்லாது அதற்காக அதிக இழப்பை சந்திக்க வேண்டியதாகவும் உள்ளது,” என நிபுணர் குழுவின் அறிக்கை கூறுகிறது.
வளர்ச்சிக்கான நிதித்தேவை அதிகரித்துக் கொண்டே செல்வதும், இழப்புகள்(செலவுகள்) குறைந்த வழிகளில் கடன்களைப் பெறுவதற்கான குறைவான வாய்ப்புகளும் நீடிப்பதால்தான் சுமக்க முடியாத கடன்களை சுமக்கும் நாடுகளின் எண்ணிக்கை கடந்த 2011-ல் 22 என்பதாக இருந்த நிலையிலிருந்து 2022ல் 59 என்றளவிற்கு உயர்ந்துள்ளது.
“இவ்வாறு ஏழை நாடுகள் அதிகமாக பெறும் கடன்களை மிக அதிக வட்டி விகிதத்திற்கு அதிகமானளவில் தனியார் முதலாளிகளே வழங்கி வருகிறார்கள்” என்பது வருந்தத்தக்க விசயம் என்று குத்தேரஸ் கூறினார். “வழக்கமாக வாங்கிய கடனிற்காக அமெரிக்காவால் என்ன தொகை திருப்பித் தரப்படுகிறதோ அதை விட நான்கு மடங்கு அதிகமாகவும், ஐரோப்பாவைவிட எட்டு மடங்கு அதிகமாகவும் திருப்பித் தர வேண்டிய நிலையில் ஆப்பிரிக்க நாடுகள் இருந்து வருகின்றன.”
இதன் காரணமாகத்தான் ஐ.நா.வின் தலைவர், “காலனியாதிக்க நலன்களை பிரதிபலிக்கக்கூடிய வகையில் உருவாக்கப்பட்ட பாரபட்சமான பழைய நிதி மூலதன கட்டமைப்பே இன்றளவும் தொடர்வதுதான் ஏழை நாடுகள் கடன் நெருக்கடியில் சிக்கித் தவிப்பதற்கு ஒரு காரணம்.” என்று கூறினார்.
“வழக்கமாக வாங்கிய கடனிற்காக அமெரிக்காவால் என்ன தொகை திருப்பித் தரப்படுகிறதோ அதை விட நான்கு மடங்கு அதிகமாகவும், ஐரோப்பாவைவிட எட்டு மடங்கு அதிகமாகவும் திருப்பித் தர வேண்டிய நிலையில் ஆப்பிரிக்க நாடுகள் இருந்து வருகின்றன.”
விரல்விட்டு எண்ணக்கூடிய வெகுசில பணக்கார நாடுகள்தான் ஐ.எம்.எப், உலக வங்கி உள்ளிட்ட பிரட்டன் வுட்ஸ் அமைப்பு முறையை இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வரும் தருவாயில், காலனிய நீக்கம் துவங்குவதற்கு முன்பு தோற்றுவித்தது. இந்த இரண்டு நிறுவனங்களை வடிவமைப்பதில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளே தீர்மானகரமான பங்கு வகித்தன. புதிய தாராளவாதக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்ட நாள் முதல் ஏழை நாடுகளில் நிதிப் பற்றாக்குறையை சரி செய்வதற்கு சிக்கன நடவடிக்கையை மேற்கொள்ளத் தூண்டியது, தனியார்மயமாக்கலுக்கு தூண்டியது என்பன போன்ற “கட்டமைப்பு மாற்றத்” திட்டங்களை மேற்சொன்ன இரண்டு நிறுவனங்களே திணித்து வந்தன எனலாம்.
“இன்று அலையலையாக மக்களைத் தாக்கி வரும் கணிக்கவியலா பாதிப்புகளிலிருந்து அதாவது கொரோனா பெருந்தொற்று, காலநிலை மாற்ற நெருக்கடியின் பேரழிவுகள், உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு போர் போன்றவற்றிலிருந்து எல்லா நாடுகளையும் பாதுகாப்பதற்காக இந்த அமைப்பு முறையால் உருவாக்கப்பட்ட சமூக பாதுகாப்பு வலை/கவசத்தினால் எவ்வித பலனையும் தரமுடியவில்லை” என்று குத்தேரஸ் கூறியுள்ளார்.
அந்நிய நாணயங்களில் கடன்கள் வாங்குவதனால் வெளியிலிருந்து வரும் நெருக்கடிகளுக்கு அதிகம் ஆட்படுவதோடு மட்டுமல்லாது வாங்கிய கடனை திருப்பித் தருவதென்பதேகூட வளரும் நாடுகளக்கு எவ்வாறு நெருக்கடியாக மாறிவிடுகிறது என்பதை ஐ.நா. வெளியிட்டிருந்த செய்தி குறிப்பில் விரிவாக கூறப்பட்டுள்ளது. மேலும், குறைந்த மற்றம் நடுத்தர வருமானமுடைய நாடுகள் அந்நியக் கடன்களை பெறுவதற்கு தனியார் முதலாளிகளை மட்டுமே நம்பியிருக்க வேண்டிய நிலையில், வாங்குவதற்கான இழப்பும்(செலவு) அதிகமிருப்பதோடு, கடனை மறுசீரமைப்தென்பதும் கூட மிகவும் சிக்கலானதாகவே இருக்கிறது என அந்த பதிவில் சேர்த்துக் கூறப்பட்டிருந்தது.
“வளர்ச்சியை உந்தித் தள்ளுவதற்கு கடன் ஒரு முக்கியமான நிதிசார் கருவியாக இருப்பது மட்டுமல்லாது, மனித வள மேம்பாட்டிற்கான முதலீடுகளுக்கும், மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்துவதற்கான வாய்ப்புகளையும் உருவாக்கித் தருகிறது” என்பதை குத்தேரஸ் வலியுறுத்தி கூறினார். “ஆனால், ஒரு நாடு கடனை மட்டுமே நம்பி வாழும் நிலைக்கு தள்ளப்படும்போது, கடன் வலையில் சிக்குவதோடு மேன்மேலும் அதிகக் கடன்களை சுமக்கும் நிலைக்கு சென்றுவிடுகிறது” என்றார்.
“வளர்ச்சியைத் தக்க வைப்பதற்கான நிதியாதாரத்தை உறுதி செய்வதற்கான செயல்திட்டம்” பற்றியும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மூன்று துறைகளில் பல நாடுகளின் கூட்டு நடவடிக்கையை இது கோருகிறது:
1) கடன் பெறுவதற்காக அதிக இழப்புகளை சந்திக்கும் நிலைமை, அதிகரித்துக்கொண்டே வரும் கடன் பொறியில் சிக்கிக்கொள்ளும் அபாயம் போன்ற பிரச்சினைகளை சமாளித்தல்;
2) வளர்ச்சிப் பணிகளுக்கு நீண்ட கால அடிப்படையில் குறைந்த செலவில் கடன் வழங்குவதற்கான வாய்ப்புகளை பன்மடங்கு அதிகப்படுத்துதல்; மற்றும்
3) நெருக்கடியில் சிக்கிக்கொண்ட நாடுகளுக்கு அவசர கால நிதி உதவு வழங்குவதை விரிவுபடுத்துதல்.
4) “உலக நிதி மூலதன கட்டமைப்பில் அடிப்படை மாறுதல்களை நிகழ்த்துவதென்பது ஓரிரவில் செய்து முடிக்கக்கூடிய விசயமல்ல” என்பது தனக்குத் தெரியும் என்று குத்தேரஸ் கூறினார். “எனினும், அதை அடைவதற்கான பாதையில் இன்றே நம்மால் பல அடிகளை எடுத்து வைக்க முடியும்” என்றார்.
“செய்வது எளிதல்ல”தான், “ஆனால் அது அவசர அவசியமான விசயமாக மாறிவிட்டது… 330 கோடி மக்கள் கொதித்தெழும் நிலைக்கே சென்றுவிட்டனர்.” என்பதையும் சேர்த்தே கூறினார்.
குறைந்த மற்றும் நடுத்தர வருமானுடைய நாடுகளில் வளர்ச்சித் திட்டங்களை மேற்கொள்வதற்காக, காலநிலை மாற்றப் பிரச்சினைகளை எதிர்கொள்வதற்காக தேவைப்படும் 13.3 டிரில்லியன் டாலர்கள் மதிப்பிலான நிதியுதவியை பணக்கார நாடுகள் வழங்குவதாக வாக்குறுதியளித்திருந்தனர். ஆனால், இதற்கு மாறாக ஏழை நாடுகள் வாங்கிய கடனிற்கான மொத்தத் தொகையான 507 பில்லியன் டாலர்களை 2028ஆம் ஆண்டிற்குள்ளாக திருப்பித் தர வேண்டும் என பணக்கார ஜி-7 நாடுகள் நிர்பந்திக்கின்றனர் என்று ஐ.நா. சபையின் வலைதளத்தில் வெளியிட்டிருந்த செய்தியறிக்கையில் கடந்த மே மாதம் சர்வதேச ஆராய்சி நிறுவனமான ஆக்ஸ்ஃபார்ம் வெளியிட்டிருந்த ஆய்வறிக்கையில் கூறியிருந்த தகவலையும் மேற்கோள்காட்டியுள்ளனர். பெருமளவிலான நிதி அதாவது ஒரு நாளைக்கு 232 மில்லியன் டாலர்கள் என்ற அளவில் கடனை அடைப்பதற்காக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது; இவையனைத்தையும், தரமான கல்வி, சுகாதாரம், காலநிலை மாற்ற பிரச்சினைகளை எதிர்கொள்வது போன்று பற்பல விசயங்களுக்காக பயன்படுத்தலாம் என GCRG நிபுனர் குழு கூறுவது போலவே ஆக்ஸ்பர்ம் நிறுவனத்தின் ஆய்வறிக்கையும் கூறுகிறது.
வருகிற 2030 ஆண்டிற்குள்ளாக தக்கவைக்கும் வளர்ச்சி இலக்குகளை(SDG) அடைவதற்காக தேவைப்படும் முதலீட்டில் பெரும் பற்றாக்குறை காணப்படுவதாக கடந்த வாரம் ஐ.நா. சபை கணக்கிட்டுள்ளது. அதாவது ஏழாண்டுகளுக்கு முன்பு (2015) 2.5 டிரில்லியன் டாலர்களுக்கான முதலீட்டுப் பற்றாக்குறை இருந்ததென்றால் 2022ல் இந்த பற்றாக்குறை 4 டிரில்லியன் டாலர்கள் என்றளவிற்கு அதிகரித்துள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. தக்கவைக்கும் வளர்ச்சி இலக்குகளை அடைவதில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய பற்றாக்குறையை பணக்கார நாடுகள் கடன் நிவாரணம் வழங்குவதன் மூலம் ஓரளவிற்கு சரிசெய்ய முடியும் என ஐ.நா.வின் வர்த்தக அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
சென்ற மாதம் புதிய உலகிற்கான நிதி ஒப்பந்தம்(New Global Financing Pact) குறித்து பேசுவதற்காக பாரிஸில் மாநாடு ஒன்று கூட்டப்பட்டது. அதில் உயிருக்கே உலை வைக்கும் காலநிலை மாற்ற நெருக்கடி, ஏற்றத்தாழ்வு போன்ற பிரச்சினைகளை சமாளிப்பது குறித்து பணக்கார நாடுகளின் தலைவர்களிடம் 140க்கும் மேற்பட்ட பொருளாதார நிபுணர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். உலகின் தென்பகுதியில் உள்ள நாடுளின் அந்நியக் கடன்களை தள்ளுபடி செய்வது உட்பட டிரில்லியன் கணக்கிலான பணத்தை பணக்கார நாடுகள் பகிர்ந்தளிக்க வேண்டுமென மன்றாடியுள்ளனர்.
“அதிகமான மக்கள் பலனடையும் வகையில் பொறுப்புள்ள, பாரபட்சம் பார்க்காத வகையில் சர்வதேச நிதி மூலதன அமைப்பை உருவாக்குதல்” என்பதே அந்த மாநாட்டின் நோக்கம் என்று சொல்லப்பட்டாலும், இலக்கை அடைவதற்கு துரும்பை கூட அசைக்க முன்வராத தலைவர்களுக்கு உலகெங்கிலும் உள்ள தொண்டு நிறுவனங்கள் கண்டனம் தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
கட்டுரையாளர்: கென்னி ஸ்டான்சில்
- விஜயன்
(தமிழில்)
மூலக்கட்டுரை : https://www.commondreams.org/news/un-poor-nation-debt-crisis