இராணுவ மோதலில் இந்தியாவும் பாகிஸ்தானும் ஈட்டியது என்ன? இழந்தது என்ன?

அல்ஜசீரா

இராணுவ மோதலில் இந்தியாவும் பாகிஸ்தானும் ஈட்டியது என்ன? இழந்தது என்ன?

நான்கு நாட்கள் நீடித்த கடும் மோதல் ஒரு முடிவுக்கு வந்த நிலையில், யார் பலம் வாய்ந்தவர்களாக விளங்கினார்கள் என்பது பற்றி வல்லுநர்கள் ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள்.

மே 10 அன்று எட்டப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தம், இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையிலான கடும் இராணுவப் பதட்டங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தது; நான்கு நாட்களுக்குப் பிறகு, இப்போது, இரு நாடுகளும் இந்த மோதலில் தாங்களே "வெற்றி பெற்றதாக" மாறிமாறி உரிமை கோரி வருகின்றன. இந்திய கட்டுப்பாட்டின்கீழ் உள்ள காஷ்மீரில் அமைந்துள்ள பஹல்காம் நகரில், ஏப்ரல் 22 அன்று 26 பொதுமக்கள், ஆயுதம் ஏந்தியவர்களால் கொல்லப்பட்ட பின்னரே இந்தச் மோதல் வெடித்தது. தி ரெசிஸ்டன்ஸ் ஃபிரண்ட் (TRF) எனப்படும் ஒரு சிறு ஆயுதக் குழு இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்றது. அந்தக் குழுவுக்குப் பாகிஸ்தான் ஆதரவளிப்பதாக இந்தியா குற்றஞ்சாட்டியது; அதேவேளையில், தங்களுக்கும், இந்தத் தாக்குதலுக்கும் எந்தப் பங்கும் இல்லை என்று பாகிஸ்தான் மறுத்திருந்தது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இத்தாக்குதலுக்குப் பதிலடி கொடுப்பதாகச் வாய்ச்சவடால் அடித்தார்.

இரு நாடுகளுக்கு இடையே தொடர் இராஜதந்திர முயற்சிகள் நடந்த பின்னரும், நிலைமை விரைவிலேயே மோதலில் சென்று முடிந்தது. மே 7ம் தேதி காலை, தாம் "பயங்கரவாதத்" தளங்கள் என்று கருதிய இடங்கள் மீது - பாகிஸ்தான் கட்டுப்பாட்டின்கீழ் இருந்த காஷ்மீர் உட்பட, பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் நான்கு இடங்களில் அமைந்திருந்த தளங்கள் மீது – இந்தியா ஏவுகணைத் தாக்குதல் தொடுத்தது.

அதற்கு அடுத்த அடுத்த நாட்களில், இரு நாடுகளும் ட்ரோன்கள் மூலமாக ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டதோடு மட்டுமல்லாமல், மோதலுக்கு வித்திட்டதாக பரஸ்பரம் குற்றஞ்சாட்டிக் கொண்டன.

சனிக்கிழமையன்று நிலைமை மேலும் மோசமடைந்தது. இந்தியாவும் பாகிஸ்தானும் மாறிமாறி குறிவைத்து இராணுவத் தளங்கள் மீது ஏவுகணைகளை ஏவின. பாகிஸ்தானில் உள்ள இராவல்பிண்டி நகரில் இருக்கும் இராணுவத் தலைமை அலுவலகத்தையும் உள்ளடக்கிய மூன்று விமானப்படைத் தலங்களை இந்தியா தாக்கியது. அதன்பிறகு, பிற பாகிஸ்தானிய தளங்களையும் தாக்குவதற்கு இந்தியா துடித்தது. இதற்குப் பதிலடியாக, பாகிஸ்தான் இந்திய கட்டுப்பாட்டின் கீழ் உள்ள காஷ்மீரிலும், இந்தியாவின் எல்லையை கடந்து இந்தியாவிற்குள்ளிருந்த இராணுவ தலங்கள் மீதும் ஏவுகணைகளைச் செலுத்தி, குறைந்தது நான்கு இலக்குகளைத் தாக்கியது.

அணு ஆயுத வலிமை கொண்ட இவ்விரு நாடுகளுக்கிடையே ஒரு பெரும் அளவிலான போர் வெடித்துவிடுமோ என உலகம் முழுவதும் அச்சம் நிலவிய நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், போர்நிறுத்தம் எட்டப்பட்டுள்ளதாக அறிவித்தார். இந்த போர்நிறுத்தம் அமெரிக்காவின் உதவியால் நிகழ்ந்தது என்று அவர் குறிப்பிட்டார். அமெரிக்காவின் பங்களிப்பிற்காக பாகிஸ்தான் அமெரிக்காவிற்கு நன்றி தெரிவித்தது. ஆனால், எவ்வித அந்நிய நாடுகளின் உதவியுமின்றி, இந்த போர்நிறுத்தம் - இந்தியாவும் பாகிஸ்தானும் மட்டுமே - தாங்களாகவே தீர்மானித்த ஒன்று என இந்தியா திட்டவட்டமாகக் கூறியது.

அன்றுமுதல், இந்தியாவும் பாகிஸ்தானும் செய்தியாளர் சந்திப்புகளை நடத்தி, தங்கள் தரப்பு வெற்றிகளுக்கான சான்றுகள் என அவை கூறுபவற்றைப் பகிரிந்து வருகின்றன. திங்கட்கிழமையன்று, இரு தரப்பிலிருந்தும் உயர்நிலை இராணுவ அதிகாரிகள் தொலைபேசி வழியாகத் தொடர்புகொண்டு, போர்நிறுத்தத்தைப் பேணுவதற்கு இசைவு தெரிவித்தனர்.

ஆயினும், இந்த மோதலில் தாங்களே முழுமையாக வெற்றி பெற்றதாக எந்த நாடும் திட்டவட்டமாகக் கூறிக்கொள்ள முடியாது என்று நிபுணர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர். இரு தரப்பும் ஓரளவு முன்னேற்றங்களைச் சாதித்திருந்தாலும், சேதங்களையும் இழப்புகளையும் சந்தித்துள்ளன என்பது வல்லுநர்களின் கருத்தாக இருக்கிறது. 

உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்த காஷ்மீர் பிரச்சனை: பாகிஸ்தானுக்கு கிடைத்த வெற்றி

இதற்கு முன்னர் நடந்த பெரும்பாலான போர்களைப் போலவே, இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே அண்மையில் மூண்ட இந்த மோதலும், காஷ்மீர் குறித்து அவர்களுக்கிடையே காலங்காலமாக நீடிக்கும் எல்லைப் பிரச்சனையின் விளைவாகவே தொடங்கியது.

காஷ்மீரின் வெவ்வேறு பகுதிகளைப் பாகிஸ்தானும் இந்தியாவும் தத்தம் கட்டுப்பாட்டில் வைத்துள்ளன. ஒரு சிறிய நிலப்பரப்பைச் சீனாவும் தன் ஆளுகையின்கீழ் வைத்துள்ளது. முழு நிலப்பரப்பும் தமக்கே உரியது என இந்தியா வலியுறுத்துகிறது; அதேவேளையில் இந்திய கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பகுதியைக் கைக்கொள்ளப் பாகிஸ்தான் விரும்புகிறது. பாகிஸ்தானுக்கு ஆதரவளிக்கும் சீனாவும் சில நிலப்பரப்புகளைத் தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது; ஆயினும், இதற்குப் பாகிஸ்தான் எவ்வித ஆட்சேபணையும் தெரிவிப்பதில்லை. பங்களாதேஷ் உருவாவதற்குக் காரணமாக அமைந்த 1971 போருக்குப் பின்னர், இந்தியாவும் பாகிஸ்தானும் சிம்லா ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டன. இந்த ஒப்பந்தம், இரு நாடுகளும் தங்களுக்கு இடையேயான சிக்கல்களை அமைதியான, நேரடிப் பேச்சுவார்த்தைகள் வாயிலாகவே தீர்த்துக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியது.

காஷ்மீர் பிரச்சனை மட்டுமல்லாது பிற கருத்து வேறுபாடுகளையும், வெளியார் தலையீடின்றி, இரு நாடுகளுக்கு இடையே மட்டுமே தீர்க்கப்பட வேண்டும் என இந்தியா தொடர்ந்து கூறி வருகிறது. இதற்கு மாறாக, ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானங்களை அடிப்படையாகக் கொண்டு, இந்த விவகாரத்தில் உலக நாடுகள் தலையிட வேண்டும் எனப் பாகிஸ்தான் உரைக்கிறது.

கடந்த ஞாயிறன்று, காஷ்மீர் பிரச்சனையில் ஒரு தீர்வை எட்டுவதற்கு துணை நிற்க அமெரிக்கா தயாராக இருப்பதாகத் டிரம்ப் தெரிவித்தார். "காஷ்மீருக்கான ஒரு தீர்வை கண்டறிய உங்கள் இருவருடனும் இணைந்து பணியாற்றுவேன், அதற்கு ஆயிரம் ஆண்டுகள் எடுத்தாலும் பரவாயில்லை," என்று டிரம்ப் தனது சமூக ஊடகத் தளமான 'ட்ரூத் சோஷியல்'ல் குறிப்பிட்டிருந்தார்.

லண்டன் கிங்ஸ் கல்லூரியின் விரிவுரையாளர் வால்டர் லாட்விக் கருத்துத் தெரிவிக்கையில், அண்மைய மோதல்கள் காஷ்மீர் விவகாரத்தை மீண்டும் உலக அரங்கின் கவனத்திற்குக் கொண்டுவரப் பாகிஸ்தானுக்குத் உதவியுள்ளன– இது பாகிஸ்தான் நீண்ட காலமாக எதிர்பார்த்து வந்த ஒரு நிகழ்வாகும். "அமெரிக்கா போன்ற நாடுகளிடமிருந்து வந்த உதவிக்கான சலுகைகளை பாகிஸ்தான் மனமுவந்து வரவேற்றதுடன், அந்நியர்களிடமிருந்து வரும் உதவிகள் அவசியம் தேவை என்பதை வலியுறுத்த இந்த போர்நிறுத்தத்தைப் பயன்படுத்திக் கொண்டது" என்று அவர் மேலும் கூறினார்.

ஆனால் இந்தியாவைப் பொறுத்தமட்டில், சண்டையைத் தனது சொந்த நிபந்தனைகளுக்கு உட்பட்டு முடிவுக்குக் கொண்டுவருவதற்குப் பதிலாக, பிறிதொரு நாட்டின் தலையீட்டாலோ அல்லது செல்வாக்காலோ உருவானதாகக் கருதப்படும் ஒரு போர்நிறுத்தத்தை ஏற்றுக்கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டது. 

'தி டிப்ளோமாட்' சஞ்சிகையின் தெற்காசியப் பிரிவு ஆசிரியர் சுதா ராமச்சந்திரன் சுட்டிக்காட்டியதாவது: பிரதமர் மோடியின் அரசாங்கம் தனது இந்துத்துவ ஆதரவாளர்களுக்கு ராணுவ நடவடிக்கையின் மூலம் மகிழ்ச்சியை வழங்கியிருக்கலாம், ஆனால் இந்த போர்நிறுத்தம் சில தீவிர இந்துத்துவ சக்திகளைச் திருப்தியடையச் செய்யவில்லை. 

"கடுமையான, உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனக் கூறியதை வரவேற்ற அத்தரப்பினர், போர்நிறுத்தம் அறிவித்தபோது அதிருப்தியை வெளிப்படுத்தினர்" என்று சுதா ராமச்சந்திரன் மேலும் தெளிவுபடுத்தினார்.

பயங்கரவாதப் பிரச்சனையை உலக அரங்கில் பூதாகரமாக்கியது: இந்தியாவுக்குக் கிடைத்த வெற்றி

வல்லுநர்களின் கூற்றுப்படி, ஏப்ரல் 22 அன்று நடந்த தாக்குதலும், அதனைத் தொடர்ந்து நடந்த மோதலும் இந்தியாவுக்குச் சாதகமாக அமைந்தன.

 “பாகிஸ்தானில் இயங்கும் ஆயுதக் குழுக்களின் பயங்கரவாத பிரச்சனையை உலக அரங்கில் பூதாகரமாக காட்டுவதில் இந்தியா வெற்றியடைந்துள்ளது. அக்குழுக்களுக்கு எதிராகப் பாகிஸ்தான் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை மேலும் வலுப்பெறச் செய்துள்ளது," என்று வால்டர் லாட்விக் சுட்டிக்காட்டுகிறார். 

இந்தக் குழுக்களுக்கும் பாகிஸ்தானிற்கும் தொடர்புண்டு என மீண்டும் பேசத் தொடங்கியிருப்பது என்பது உலக அரங்கில் பாகிஸ்தானின மதிப்பிற்குப் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. "பாகிஸ்தான் இந்தக் குற்றச்சாட்டை மறுத்து, நடுநிலையான விசாரணைகளுக்கு தயார் என்று அறிவித்தபோதும், பயங்கரவாதத்திற்கு எதிராக உண்மையில் என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்கப்போகிறது என்பதை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் இப்போது பாகிஸ்தானுக்கே உள்ளதாக சர்வதேச சமூகம் கருதுகிறது," என்று லாட்விக் மேலும் கூறுனார்.

காஷ்மீரை இந்தியாவிலிருந்து பிரிக்க விரும்பும் ஆயுதக் குழுக்களுக்குப் பாகிஸ்தான் ஆதரவளித்து வருவதாக இந்தியா நீண்ட காலமாகவே குற்றம்சாட்டி வருகிறது. ஆனால், தாங்கள் காஷ்மீர் மக்களுக்கு ராஜதந்திர ரீதியான, தார்மீக ரீதியான ஆதரவை மட்டுமே வழங்குவதாகப் பாகிஸ்தான் மறுப்பு தெரிவித்து வருகிறது.

இந்திய விமானங்கள் வீழ்த்தப்பட்டிருக்குமானால் அது பாகிஸ்தானுக்குச் சாதகமான அம்சமே

மே 7 அன்று தாம் மேற்கொண்ட ஏவுகணைத் தாக்குதல்களில் நூற்றுக்கும் மேற்பட்ட “பயங்கரவாதிகள்” கொல்லப்பட்டதாக இந்தியா அறிவித்தது. ஆனால், இந்திய ஏவுகணைகள் பள்ளிவாசல்களையும் குடியிருப்புப் பகுதிகளையும் குறிவைத்துத் தாக்கியதாக, குழந்தைகள் உட்பட 40 பொதுமக்களையும் 11 ராணுவ வீரர்களையும் படுகொலை செய்ததாகப் பாகிஸ்தான் தரப்பு கூறியது. இதற்குப் பதிலடியாகத் தனது போர் விமானங்களை அனுப்பியதாகவும், பல இந்திய விமானங்களைச் சுட்டு வீழ்த்தியதாகவும் பாகிஸ்தான் தரப்பு உரிமை கோரியது.

இந்த நிகழ்வு குறித்து இந்தியா உறுதிப்படுத்தவோ, மறுக்கவோ இல்லை. ஆனால், பாகிஸ்தான் இராணுவம் எந்தெந்த விமானங்கள் வீழ்த்தப்பட்டன என்ற விவரங்களை வெளியிட்டது. இந்தியா குறைந்தபட்சம் ஒரு ரஃபேல் விமானம், ஒரு ரஷ்ய தயாரிப்பு ஜெட் விமானத்தை இழந்துள்ளது என்பதை பிரெஞ்சு மற்றும் அமெரிக்க அதிகாரிகளும் உறுதிப்படுத்தினர்.

இந்திய அதிகாரிகளும், இரண்டு விமானங்கள் இந்திய எல்லைக்குள் உள்ள பகுதிகளில் விழுந்திருந்ததை ஒப்புக்கொண்டனர். ஆயினும், அவை எந்த நாட்டைச் சேர்ந்தவை என்பதை அவர்கள் குறிப்பிடவில்லை. இரு தரப்பினரும் தத்தம் விமானங்கள் எல்லையைக் கடக்கவில்லை என்பதை ஏற்றுக்கொண்ட போதிலும், இந்தியக் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் கண்டெடுக்கப்பட்ட சிதைவுகள், அந்த விமானங்கள் இந்தியாவிற்கே உரியவை என்பதையே உணர்த்துவதாக வல்லுநர்கள் கருதுகின்றனர்.

இந்த நிகழ்வுகளுக்குப் பிறகே போர் நிறுத்தம் நடைமுறைக்கு வந்தது. இது பாகிஸ்தானுக்கு கிடைத்த ஒரு வெற்றியாகவே கருதப்படலாம் என்று வாஷிங்டன் டி.சி-யில் உள்ள ஸ்டிம்சன் மையத்தைச் சேர்ந்த அஸ்ஃபாண்டியார் மிர் சுட்டிக்காட்டினார். குறிப்பாக விமானங்கள் சுட்டு வீழ்ழ்த்தப்பட்டது உறுதி செய்யப்பட்ட பிறகு, தன்னுடைய வெற்றியை நிலைநிறுத்திக்கொள்ள, போர் நிறுத்தத்தைத் ஒரு சிறந்த வாய்ப்பாகக் பாகிஸ்தான் கருதக்கூடும்," என்றும் அவர் கூறினார்.

இஸ்லாமாபாத்தில் உள்ள கைத்-இ-ஆசாம் பல்கலைக்கழகத்தின் பாதுகாப்பு நிபுணரும், பேராசிரியருமான முஹம்மத் ஷோயிப், பாகிஸ்தான் வலுவாகப் பதிலடி கொடுக்காது என்று இந்தியா தவறாகக் கணித்துவிட்டதாகக் குறிப்பிட்டார். "அவர்கள் பாகிஸ்தானின் திருப்பித் தாக்கும் திறனைத் தவறாக மதிப்பிட்டுவிட்டனர்," என்று அவர் அழுத்தம் திருத்தமாகக் கூறினார்.

ஆயினும், இந்திய ஜெட் விமானங்கள் வீழ்த்தப்பட்டதன் முக்கியத்துவத்தைப் பெரிதாக மதிப்பிடுவதைத் தவிர்க்குமாறு வால்டர் லாட்விக் எச்சரித்தார். "இவை பெரும்பாலும் தோரணையாகவே விளங்குகின்றன. இவை ஒட்டுமொத்த இராணுவ நிலவரத்தைப் பெரிய அளவில் மாற்றிவிடாது," என்றும் அவர் தெரிவித்தார்.

ஊடுருவித் தாக்கும் திறனை ஆழமாக விரிவுபடுத்தியமை: இந்தியாவுக்கான வெற்றி 

வல்லுநர்களின் கூற்றுப்படி, இந்தியா தன் ஆயுதங்களின் தாக்குதல் வீச்செல்லையை கணிசமாக அதிகரித்துள்ளது. பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீரில் உள்ள கோட்லி, முசாபராபாத் போன்ற இடங்களைத் தாக்கியதுடன், அந்நாட்டின் மிக அதிக மக்கள்தொகை கொண்ட, பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த பகுதியான பஞ்சாப் மாகாணத்தில் இருந்த நான்கு இடங்களையும் இந்தியா குறிவைத்தது. மேலும், லாகூர், கராச்சி போன்ற பாகிஸ்தானின் முக்கிய நகரங்களுக்குள் வெகு தூரம் வரை செல்லக்கூடிய ஆளில்லா விமானங்களையும் இந்தியா வெற்றிகரமாகப் பயன்படுத்தியது. மே 10 அன்று, பாகிஸ்தான் தாக்கிய இந்தியத் தளங்களைக் காட்டிலும், பஞ்சாபின் உட்பகுதிகளில் வெகுதொலைவில் அமைந்திருந்த மூன்று பாகிஸ்தான் விமானத் தளங்களை இந்திய ஏவுகணைகள் துல்லியமாகத் தாக்கியது.

சுருக்கமாகக் கூறினால், இந்தியாவுக்குள் ஊடுருவித் தாக்கும் பாகிஸ்தானின் வல்லமையைக் காட்டிலும், பாகிஸ்தானின் நிலப்பரப்பிற்குள் வெகுதூரம் சென்று தாக்குவதற்கு தன்னால் முடியும் என்பதை இந்தியா நிரூபித்துக் காட்டியுள்ளது. 1971ஆம் ஆண்டுப் போருக்குப் பிறகு, இந்தியப் படைகள் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்திற்குள் நுழைந்து இலக்குகளைத் தாக்குவது இதுவே முதல் முறை. சுதா ராமச்சந்திரன் கருத்துப்படி, எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டிற்கு (காஷ்மீரின் தற்காலிக எல்லைக் கோடு) அப்பால், அதாவது பாகிஸ்தானின் உட்பகுதிகளில் அமைந்துள்ள இலக்குகளைத் தாக்குவதே இந்தியாவின் முக்கிய நோக்கமாக இருந்தது என்றும், இந்தியா அதை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளது என்றும் கூறினார். இதை ஒப்புக்கொண்டு பேசிய லாட்விக், பஞ்சாப் பகுதியில் இந்தியாவின் வெற்றிகரமான தாக்குதல், பாகிஸ்தானின் பாதுகாப்பு ஏற்பாடுகளில் இருந்த ஒரு மோசமான பலவீனத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியது என்று தெரிவித்தார். 

போர்நிறுத்தம் நீடிக்குமா? 

இரு தரப்பு இராணுவ அதிகாரிகளும் திங்கட்கிழமை சந்தித்து, எல்லைகளுக்கு அருகிலுள்ள படையினரின் எண்ணிக்கையைக் குறைக்க ஒப்புக்கொண்டனர். விரைவில் இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தை நடக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அன்றைய தினத்தின் பிற்பகுதியில், பிரதமர் மோடி சண்டை "தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது" என்று மட்டுமே குறிப்பிட்டார். ஆயினும், ஸ்டிம்சன் மையத்தைச் சேர்ந்த மிர் இந்த போர்நிறுத்தம் நீடிக்கும் வாய்ப்புள்ளது என்று கருதுகிறார். "இந்த ஒரு வார கால சண்டைக்குப் பிறகு அமைதியை விரும்புவதற்கு இரு தரப்பிலும் காரணங்கள் உள்ளன," என்று மிர் கூறினார். முக்கியப் பிரச்சினைகளில் இன்னும் உடன்பாடு எட்டப்படாவிட்டாலும், நிலைமை மோசமடைவதைத் தடுக்க இரு நாடுகளும் விரும்புவதை இந்த போர்நிறுத்தம் உணர்த்துவதாக லாட்விக் கருத்து தெரிவித்தார்.

"இந்த வகையான சூழ்நிலைகளைக் கையாளும் விதத்தை இந்தியா மாற்றியுள்ளது. பயங்கரவாதக் குழுக்கள் குறித்த பாகிஸ்தானின் வழக்கமான மறுப்பை அது இனி ஏற்றுக்கொள்வதில்லை," என்று அவர் கூறினார். "இந்தக் குழுக்களை பாகிஸ்தான் அரசாங்கமும் ராணுவமும் எவ்வாறு கையாளுகின்றன என்பதே இனி போர்நிறுத்தம் தொடருமா என்பதை தீர்மானிப்பதில் ஒரு பெரிய பங்கு வகிக்கும் அம்சமாக விளங்குகிறது," என்பது மிர் அவர்களின் பார்வையாக இருந்தது. அமெரிக்காவில் உள்ள ஜார்ஜ் மேசன் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சியாளராகவும் பணியாற்றும் முகமது ஷோயிப், தொடர்ச்சியாகப் கருத்துத் தொடர்பில் இருப்பது முக்கியம் என்றார். இந்தியாவன் காஷ்மீர் மற்றும் பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணம் இரண்டிலும் என்ன நடக்கிறது என்பதைப் பொறுத்தே அமைதி நீடிப்பது அமையும் என்று அவர் எச்சரித்தார்.

காஷ்மீரில் போராளிகளுக்குப் பாகிஸ்தான் உதவுவதாகக் இந்தியா குற்றம் சாட்டுவது போலவே, பலுசிஸ்தானில் போராளிகளுக்கு இந்தியா ஆதரவளிப்பதாகக் பாகிஸ்தான் கூறுகிறது - இதை இந்தியா மறுக்கிறது. "மீண்டும் வன்முறை ஏற்பட்டால், அது இன்னும் மோசமாகவும் பரந்துப்பட்டதாகவும் இருக்கலாம்," என்று ஷோயிப் கூறினார். "இரு நாடுகளுக்கும் அடைவதற்கென்று ஏதும் இருக்காது, மாறிமாறி தங்களது நகரங்கள் நாசமாவதை வேடிக்கை பார்க்கும் நிலையே உருவாகும்," என்கிறார் ஷோயிப்.

- விஜயன் (தமிழில்)

மூலக்கட்டுரை: https://www.aljazeera.com/news/2025/5/14/what-did-india-and-pakistan-gain-and-lose-in-their-military-standoff