திமுக வேறு சேகர்பாபு வேறா?
துரை. சண்முகம்

சபரிமலையில் எங்களுக்கு 5 ஏக்கர் நிலம் தாருங்கள்! என்று இந்து அறநிலையத்துறை சார்பில் தமிழக அரசு கேட்க, பழனியில் எங்களுக்கு 5 ஏக்கர் தருவதாக இருந்தால் நாங்களும் தருகிறோம்! என்று கேரளா அரசு சொல்ல, டீல் ஓகே ஆகி உள்ளது.
உலக ஐயப்பா சேவா மாநாட்டில் கலந்து கொண்டு வந்து இதை தனது நேர்காணலில் பெருமிதமாக கூறினார் அமைச்சர் சேகர்பாபு. நிருபர்களை மகிழ்விக்கும் விதமாக ஜனவரிக்குள் மதுரை மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகத்தையும் முதல்வர் நடத்திவிட செய்துள்ளார் என்று ஆன்மீக அரசின் சாதனையை மகிழ்ந்து ஓதினார். இன்னொருவர் சீரிய சிந்தனையாளர் பி.டி. பழனிவேல் தியாகராஜன்
கேரள அரசுக்கு நன்றி சொல்லி முடிக்கும் போது "சாமியே சரணம் ஐயப்பா! " புல்லரிக்கிறார்.
இவர்களை மக்கள் ஆட்சியில் உட்கார வைத்தது எதற்காக?
இந்து மதத்திற்கான அடியார்க்கு அடியாராக பக்தி மணம் பரப்பவா? அப்படியானால் நாங்கள் பெரியாரின் வாரிசு என்று சொல்லிக் கொள்ளும் இந்த திமுக அரசு நாத்திகக் கொள்கையை பரப்புவதற்கும் ஏதேனும் செயல் திட்ட அடிப்படையில் வேலை செய்கிறதா? என்றால் இல்லை.
ஏற்கனவே இருக்கும் கோயில்களை பராமரிப்பது நிர்வாகம் செய்வது என்ற அளவில் இல்லாமல், நாங்களும் இந்துதான்! என்று போட்டி போட்டு ஓட்டு வாங்குவதற்காக உள்ளடியாக ஆர்எஸ்எஸ் பாஜக கும்பலுடன் கூட்டு வைத்துக் கொண்டு, வெளியே எதிர்ப்பது போல நாடகமாடிக்கொண்டு முத்தமிழ் முருகன் மாநாடு நடந்த போது அர்ஜூன் சம்பத்தை அழைத்து உட்கார வைத்த போதே இவர்களின் முகமூடி கழண்டது.
இது போன்ற இந்துத்துவ சார்பு நடத்தைகளை நானும் வாயைத் திறந்து கண்டிக்க மாட்டேன்! வேறு யார் கண்டித்தாலும் அவர்கள் திராவிடத்தின் எதிரிகள்! என்று உருட்டுவதற்கு மட்டும் தட்டுமுட்டு சாமான்கள் இங்கு ஏராளமாக கிடக்கிறது.
தமிழகத்திற்கு நியாயமான முல்லைப் பெரியாறு அணையை போய் பராமரிக்கவும் மராமத்து வேலைகள் செய்யவும் கூட அனுமதிப்பதில்லை கேரள அரசு. உச்சநீதிமன்ற தீர்ப்புப்படியே ஏதாவது ஒரு வேலை செய்யப் போனால் தமிழக அதிகாரிகளை போலீசை வைத்து திருப்பி அனுப்புகிறது. தீர்ப்பின் படியான நீரை தேக்கவும் மறுக்கிறது. இத்தகைய தமிழக உரிமைகளை எல்லாம் கேரள அரசுடன் பேசி தீர்ப்பதற்கு
எந்த வேலையும் செய்யாமல்,
கண்ணகி கோட்டத்துக்கு பாதை அமைக்கிறேன் கன்னி சாமிக்கு பாதம் கழுவுகிறேன் என்று இறங்கி விட்டது திராவிட மாடல்.
இதையெல்லாம் பார்த்துக்கொண்டு விமர்சிக்காமல் இருக்கும் பக்குவத்திற்கு பெயர்தான் இங்கே சான்றோர்கள். பாசிச எதிர்ப்பு மேல் பூச்சுகள்.
தமிழ்நாட்டு அரசின் சமத்துவ வேடத்தை நம்பி பலபேர் அர்ச்சகர் பயிற்சி பள்ளியில் படித்து விட்டு வேலையில்லாமல் நிற்கிறார்கள். அனைத்து கோயில்களிலும் அவர்களை நியமனம் செய்வதற்கு பதில் வழக்காடு மன்றங்களில் போய் பார்ப்பனர் தரப்புகள் முன்வைக்கும் வாதங்களுக்கு பணிந்து, ஆகம கோயில் எது? ஆகமம் இல்லாத கோயில் எது எனும் ஆராய்ச்சி செய்ய இறங்கி விட்டார்கள். ஆர்ப்பாட்டமாக அறிவித்த அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம்!
திட்டத்தை அமுல்படுத்துவதற்கு எவ்வளவோ வேலைகளை இந்து அறநிலையத்துறை மூலமாக போராடிச் செய்யலாம்.
சட்டமன்றத்தில் புதிய சட்டங்களை இயற்றலாம்.
உச்ச நீதிமன்றத்தில் வலுவாக அரசியல் சட்ட ஜனநாயக முறைப்படி போராடலாம்.
இதற்கெல்லாம் விடாப்பிடியாக போராட இந்த அரசு தயார் இல்லை. விருப்பமும் இல்லை. ஏன்? தமிழில் குடமுழுக்கு நடத்த கூட வக்கில்லை. நீதிமன்றங்களின் தீர்ப்புப்படி 50% தமிழில் குடமுழுக்கு யாகசாலை இருக்க வேண்டும் என்பதை கேட்கப் போகும் தமிழ் வழிபாட்டு இயக்கத்தினரையும் போலீசை வைத்து விரட்டுவது நடக்கிறது.
இந்த லட்சணத்தில் நாங்கள் பெரியார்- திராவிடம் என்பது யாரை ஏய்க்க?
இதை விமர்சிப்பவர்கள் கூட எல்லாம் சேகர்பாபு செய்வதாகவும், அவ்வளவு பலம் பெற்றவராக சித்தரித்து அவர் மட்டும்தான் காரணம் என்பது போல பேசுகிறார்கள்.
உண்மையில் ஸ்டாலினுக்குத் தெரியாமல் இது நடப்பதாக வேறு கதை அளக்கிறார்கள்.
திமுக வேறு சேகர்பாபு வேறு ஸ்டாலின் வேறாம்!
யப்பா! உலக மகா நடிப்புடா சாமி!
உண்மையில் இப்படி கருதுகோளை பரப்புபவர்கள் தான், தன் பங்குக்கு தயாராகும் அடுத்த சேகர்பாபுக்கள்.
திமுக அரசும் ஸ்டாலினுமே இவற்றுக்கெல்லாம் அடிப்படை காரணம், எனும் உண்மையை மக்கள் மத்தியில் பேச தயங்குகிறார்கள்.
இந்த சமரச சந்தர்ப்பவாத அரசியல் கண்ணோட்டம் தான்
இந்துத்துவ பாசிசம் மட்டுமல்ல,
இதன் உடனான திராவிட சமரச வாதமும் சந்தர்ப்பவாதமும் ஊக்கம் பெறுவதற்கு உதவி செய்கிறது.
இதையெல்லாம் பேசினால் ரொம்ப ஓவர் என்கிறார்கள்.
சரி ஓவர்! ஓவர்!
திமுக அரசை ஆதரிக்காவிடில்
பாசிசம் புகுந்துவிடும் என
பத பதைக்கும்,
இருமுடி தாங்கி ஒருமனதாக
திராவிட மாடலை தாங்கும்
திருத் தொண்டர்களாவது
கொஞ்சம் உங்களது சகல சாமர்த்தியங்களையும் பயன்படுத்தியாவது பேசுங்களேன்!
- துரை. சண்முகம்
https://www.facebook.com/100080904177819/posts/821423273897804/?rdid=ILQWeYFWVLdxlmZt
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு