எதேச்சதிகார நாடுகளின் கூட்டணிக்குள் விரிசல்கள்

தமிழில்: விஜயன்

எதேச்சதிகார நாடுகளின் கூட்டணிக்குள் விரிசல்கள்

ரஷ்யா, சீனா, ஈரான், வட கொரியா ஆகிய நாடுகள் அனைத்தும் அமெரிக்காவிற்கு எதிரானவை. ஆனால், அவை ஒன்றுக்கொன்று துணையாக நின்று, நேரடியாகப் போர் களத்தில் இறங்கத் தயாராக இருக்கின்றன என்று பொருள் கொள்ள முடியாது – குறைந்தபட்சம் இப்போதைக்கு தயாராக இல்லை எனலாம்.

கடந்த மாதம் இஸ்ரேலிய படைகளும், அமெரிக்கப் படைகளும் ஈரானைத் தாக்கிய பொழுதில், பெரும்பாலும் "மேற்கத்திய ஜனநாயகத்தை எதிர்க்கும் எதேச்சதிகார அச்சு நாடுகள்" என்று சுட்டப்படும் இந்த அணியில், அணுவாயுதமற்ற ஒரே நாடான ஈரானுக்கு, பெருமளவு ஆதரவு நல்கவில்லை. இவ்விளைவு சற்றும் வியப்பிற்குரியதல்ல. சீனா, ரஷ்யா, ஈரான், வட கொரியா ஆகிய இந்நான்கு நாடுகளும், இராஜதந்திர வட்டாரங்களில் சிலசமயம் “CRINKs” என அழைக்கப்படுகின்றன. ஐரோப்பாவிலும் ஆசியாவிலும் அமெரிக்கா தன் கூட்டாளி நாடுகளுடன் செய்துகொண்டுள்ளதைப் போன்று, இவற்றிடையே எவ்வித அதிகாரப்பூர்வமான பாதுகாப்பு ஒப்பந்தங்களும் இல்லை. ஆனால், அமெரிக்காவோ பாதுகாப்பு ஒப்பந்தங்களின் வழியே, தன் நேச நாடுகளின் பாதுகாப்பிற்கு உறுதிபூண்டுள்ளது.

இருப்பினும், இந்த நான்கு அரசுகளும் முதன்மையாக ஒரு பொதுவான அம்சத்தில் இன்றும் ஒன்றுபட்டுள்ளன: இவை யாவும் அமெரிக்காவை கடுமையாக எதிர்த்து நிற்கின்றன. மத்திய கிழக்கில் சமீபத்தில் நடந்தேறிய 12 நாள் வான்வழித் தாக்குதல்களின்போது இக்கூட்டணி எதிர்வினை புரியவில்லை என்பதற்காக, அதை வலிமையற்றது எனப் பிழையாக மதிப்பிடலாகாது எனப் பல மேற்கத்திய அரசு அதிகாரிகள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.

பல்லாண்டுகளாகவே, இந்நான்கு நாடுகளும் இராணுவச் செயல்பாடுகள், தொழில்நுட்பப் பரிமாற்றம் மட்டுமல்லாது உளவுத்தகவல் சேகரிப்பு உள்ளிட்ட துறைகளில் தங்கள் ஒத்துழைப்பைச் சீராக மேம்படுத்தி வந்துள்ளன. ஒவ்வொரு நாடும் பலம் குறைந்திருக்கும் தளங்களில், மற்றவை கைகொடுத்து உதவுகின்றன. இச்செயல்முறை இன்றும் தடையின்றித் தொடர்ந்த வண்ணமே உள்ளது. தற்போது, ஈரானிய அரசு அடுத்தகட்ட நடவடிக்கையாக எதனை மேற்கொள்வது என்பதைத் திட்டமிட்டு வருகிறது — மேலும், இதில் அணு ஆயுத தயாரிப்புச் செயல்முறையைத் துவக்கும் திட்டமும் அடங்கக்கூடும்.

"CRINK நாடுகள் தமக்கிடையே உள்ள பொதுவான நலன்களை அடிப்படையாகக் கொண்டு ஒன்றிணைந்து செயல்படுகின்றன," என்று நேட்டோவின் முன்னாள் துணைப் பொதுச்செயலாளராகப் பணிபுரிந்து, தற்போது ஐரோப்பிய வெளியுறவு கவுன்சிலின் மூத்த கொள்கை நிபுணராகத் திகழும் கேமில் கிராண்ட் வலியுறுத்திப் பேசியிருந்தார். "அமெரிக்கா தனது உலகளாவிய ஆதிக்கத்தை இழந்து, பற்பல உலக நிகழ்வுகளில் சிக்கிக்கொள்வதோடு, எந்தவொரு சிக்கலிலும் முழுமையான கவனத்தைச் செலுத்த இயலாத ஒரு நிலையை ஏற்படுத்துவதே CRINK நாடுகளின் தலையாய பொது நலனாகும்," என்றும் அவர் விரிவாக விளக்கினார்.

சீனா, ரஷ்யா, ஈரான், வட கொரியா ஆகிய நான்கு நாடுகளிலும், சீனாவே மிக்க வல்லமைமிக்க நாடாகும். மற்ற மூன்று நாடுகளின் ஒருங்கிணைந்த பொருளாதார பலத்தை விட, சீனாவின் பொருளாதாரம் ஆறு மடங்கு பெரியது. ரஷ்யா, ஈரான், வட கொரியா ஆகிய நாடுகள் அனைத்தும் மேற்கத்திய நாடுகளின் கடும் பொருளாதாரத் தடைகளுக்கு ஆளாகியுள்ளன. முதலீடுகளுக்கும் நவீன தொழில்நுட்பங்களைப் பெறுவதற்கும் அவை சீனாவையே பெருமளவில் சார்ந்துள்ளன. உலகப் பொருளாதாரத்துடன் சீனா தொடர்ந்து தன்னை இணைத்துக் கொண்டு வருகிற வேளையில், மற்ற மூன்று நாடுகளோ பெருமளவு தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. தற்போது, சீனா போர் தொடுப்பதில் ஆர்வமற்று இருப்பதாகவே தெரிகிறது. ஆயினும், அது தனது இராணுவப் படைகளின் வலிமையையும், ஆயுத பலத்தையும் தொடர்ந்து பெருக்கி வருகிறது.

அமெரிக்காவும், அதன் நட்பு நாடுகளின் இராணுவத் தலைவர்களும், உயர் அதிகாரிகளும் தொடர்ச்சியாக ஒரு கவலையை வெளிப்படுத்தி வருகின்றனர். எதிர்காலத்தில் தைவானைத் தன் ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவர சீனா இராணுவ பலத்தைப் பயன்படுத்த முடிவெடுத்தால், யூரேசியாவின் பல பாகங்களிலும் ஏககாலத்தில் தாக்குதல்களைத் தொடுக்குமாறு மற்ற CRINK நாடுகளை சீனா கோரக்கூடும் என்று அவர்கள் அஞ்சுகின்றனர். கொரியத் தீபகற்பம், கிழக்கு ஐரோப்பா மட்டுமல்லாது மத்திய கிழக்கு உள்ளிட்ட பகுதிகளில் ஒரே சமயத்தில் போர் மூண்டால், அமெரிக்காவாலும், அதன் நட்பு நாடுகளாலும் அவற்றைச் சமாளிப்பது மிகவும் அசாத்தியமான பெரும் சவாலாக உருவெடுக்கும். அவற்றின் இராணுவப் படைகளும், வளங்களும் ஒரே நேரத்தில் பல முனைகளில் நடைபெறும் போர்களைச் சமாளிக்கப் போதுமானதாக அமையாமல் போகலாம்.

"இந்தோ-பசிபிக் பிராந்தியமும் ஐரோப்பிய பிராந்தியமும் ஒன்றுக்கொன்று பிரிக்க முடியாதவாறு பின்னிப்பிணைந்துள்ளன என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்," என்று தைவானின் துணை வெளியுறவு அமைச்சர் சென் மிங்-சி வலியுறுத்தி பேசியிருந்தார். இக்கருத்தை மெய்ப்பிக்கும் விதமாக, அவர் சில உதாரணங்களை எடுத்துரைத்தார். அவை யாதெனில்:

ரஷ்ய மற்றும் சீனக் கடற்படைகள், ஜப்பான் மற்றும் தென் கொரியாவுக்கு அருகாமையில், வழக்கத்திற்கு மாறாக அதிகரித்த அளவில் கூட்டு ரோந்துப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.

உக்ரைன் போரில் ரஷ்யாவிற்கு ஆதரவாகப் போரிட வட கொரியப் படைகள் அனுப்பப்பட்டுள்ளன.

சீனா, ரஷ்யா, ஈரான், வட கொரியா ஆகிய CRINK நாடுகள், உலகின் பல்வேறு பகுதிகளில் இணையவழித் தாக்குதல்களை மேற்கொள்ள ஒருங்கிணைந்து செயல்படுகின்றன போன்ற உதாரணங்களை சுட்டிக்காட்டினார்

கடந்த மாதம், நேட்டோ பொதுச் செயலாளர் மார்க் ரூட்டே, ‘நியூயார்க் டைம்ஸ்’ பத்திரிகைக்கு அளித்த ஒரு சிறப்பு நேர்காணலில், சீன அதிபர் ஜி ஜின்பிங் தைவானின் மீது படையெடுக்கத் துணிந்தால், அவர் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை துணைக்கு அழைக்கக்கூடும் என்று தெரிவித்தார். "சீனாவின் மிக இளைய கூட்டாளி" என ரஷ்யாவை வர்ணித்த மார்க் ரூட்டே, அமெரிக்காவின் கவனத்தை திசைதிருப்பும் நோக்கில், ஐரோப்பாவிலுள்ள நேட்டோ உறுப்பு நாடுகளின் மீது தாக்குதல் நடத்துவதற்கு ஜி ஜின்பிங், புதினைத் துணைக்கு அழைப்பதற்கும் வாய்ப்புள்ளது என்று மார்க் ரூட்டே எச்சரித்தார். "பெரும்பாலும் இவ்வாறே இச்சூழல் முன்னேறும்" எனவும் மார்க் ரூட்டே அழுத்தம் திருத்தமாகக் குறிப்பிட்டார். இதனைத் தொடர்ந்து, ரஷ்யாவின் முன்னாள் அதிபர் டிமிட்ரி மெட்வெடேவ், ‘எக்ஸ்’ (X) சமூக வலைத்தளத்தில் தனது கடுமையான எதிர்வினையை வெளிப்படுத்தியிருந்தார். தற்போதைய அதிபர் புதினின் அரசியல் கட்சியின் தலைமைப் பொறுப்பிலிருக்கும் மெட்வெடேவ், மார்க் ரூட்டே ரஷ்ய மொழி கற்கத் தொடங்க வேண்டும் என்றும், "அது சைபீரியாவில் உள்ள ஒரு சிறை முகாமில் அவருக்குப் பயன்படக்கூடும்" என்றும் கிண்டலாகப் பதிவிட்டிருந்தார்.

ரஷ்ய விவகாரங்கள் குறித்து ஆய்வு செய்யும் பல நிபுணர்கள், சீனாவுக்கோ அல்லது ரஷ்யாவுடன் கைகோர்க்கும் வேறு எந்த நாட்டிற்கோ ஆதரவு நல்கும் பொருட்டு, இத்தகைய பெரும் அபாயகரமான நடவடிக்கைகளை புதின் மேற்கொள்ள மாட்டார் என்றே உறுதியாக கூறுகின்றனர். ரஷ்யாவில் ஒரு பழம்பெரும் கூற்று அடிக்கடி சொல்லப்படுவதுண்டு; அது பெரும்பாலும் முன்னாள் பேரரசர் மூன்றாம் அலெக்சாண்டருடன் தொடர்புடையது. "ரஷ்யாவிற்கு இரண்டு மட்டுமே அதாவது அதன் தரைப்படையும், அதன் கடற்படை மட்டுமே உண்மையான கூட்டாளிகள்," என்பதே அந்தக் கூற்று. ரஷ்யாவை மையப்படுத்தி ஆய்வு மேற்கொண்டு வரும் நிறுவனமான ‘மாயாக் இன்டலிஜென்ஸ்’-இன் இயக்குநர் மார்க் காலியோட்டி, இந்தச் சிந்தனை இன்றும் மாறாமல் நீடிப்பதாகக் குறிப்பிட்டார். கடந்த மாதம் ஈரானில் நிகழ்ந்த போரின்போது ரஷ்யாவின் அணுகுமுறையை அவர் சுட்டிக்காட்டினார். "உண்மையைக் கூற வேண்டுமானால், தங்களோடு இணைந்து செயல்படும் பிற நாடுகள் ரஷ்யாவுடன் உணர்வுப்பூர்வமாக நெருக்கமானவை அல்லது விசுவாசமானவை என்று ரஷ்யத் தலைவர்கள் ஒருபோதும் நம்புவதில்லை. சர்வதேசக் கூட்டணிகள் உணர்வுகளின் அடிப்படையில் அமைந்தவை அல்ல என்றே ரஷ்யத் தலைவர்கள் கருதுகிறார்கள்," என்று மார்க் காலியோட்டி மேலும் தெளிவுபடுத்தியிருந்தார்.

2025 ஜூலை 3ஆம் நாளன்று, ஹாங்காங்கிற்கு அருகில் ஒரு சீன விமானம் தாங்கிக் கப்பல் நிலைநிறுத்தப்பட்டிருந்தது. சீனா தனது கடற்படையின் ஆற்றலையும், பன்மையையும் கற்பனைக்கப்பால், மின்னல் வேகத்தில் பெருக்கி வருகிறது. இத்தகைய பிரம்மாண்டமான கடற்படை விரிவாக்கம் சுற்றியுள்ள நாடுகள் மத்தியில் வலுவான கவலைகளையும், பெரும் கலக்கத்தையும் தோற்றுவித்துள்ளது கவனிக்கத்தக்கது.

கடந்த வாரம், சீனாவின் வெளியுறவு அமைச்சர் வாங் யி, ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுக் கொள்கைத் தலைவரான கஜா கல்லாஸுடன் வெளிப்படையான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தார். அந்த உரையாடல் வழமைக்கு மாறாகத் துணிச்சலானதாகவும், உள்ளங்கை நெல்லிக்கனியெனத் தெளிவானதாகவும் அமைந்திருந்தது. உக்ரைன் போரில் ரஷ்யா தோல்வியுறுவதை சீனா துளியும் விரும்பவில்லை என வாங் யி திட்டவட்டமாகத் தெளிவுபடுத்தினார். ரஷ்யா சறுக்குமானால், அமெரிக்காவும் அதன் நேச நாடுகளும் சீனாவின் மீது முழுமையான கவனத்தைச் செலுத்த எவ்விதத் தடையும் இன்றிச் செயல்படத் தொடங்கும் என அவர் தெளிவுறப் புலப்படுத்தினார். இந்த உரையாடல் பற்றிய செய்தி சவுத் சீனா மார்னிங் போஸ்ட் நாளிதழில்தான் முதலில் வெளிவந்தது.

தற்போதும்கூட, உக்ரைன் போருக்காக ரஷ்யாவிற்கு எந்தவிதமான கொடிய ஆயுதங்களையும் சீனா அளிக்கவில்லை. ஆயினும், அமெரிக்க இராணுவ அதிகாரிகள், "இரட்டைப் பயன்பாடு" (dual-use) கொண்ட பொருட்களின் மிகப்பெரிய விநியோக மையமாகச் சீனா திகழ்கிறது என்பதையும் உறுதிபடுத்தியுள்ளனர். இவை இராணுவப் பயன்பாட்டுக்கும், பொதுமக்கள் பயன்பாட்டுக்கும் ஏற்ற பொருட்கள் ஆகும். ரஷ்யாவின் இராணுவ தொழிற்சாலைகள் இத்தகைய பொருட்களைச் சீனாவிலிருந்து இறக்குமதி செய்கின்றன.

அமெரிக்கா-சீனா உறவுகளின் எதிர்காலம் குறித்து ஆய்வு மேற்கொள்ளும் பென் திட்டத்தின் (Penn Project) இயக்குநரான நெய்சன் மஹ்பூபி, "சீனாவின் தலையாய அக்கறை அதன் சொந்த தேச நலன்களில்தான்" உள்ளது எனக் குறிப்பிட்டார். உலக அரசியல் களத்தில் அமெரிக்காவுடன் சீனா நேரடியாகப் போட்டியிடுகிறது என்பதை சீனா நன்கு உணர்ந்திருக்கிறது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். ஆகையால், மற்ற நாடுகளுடனான சீனாவின் நடவடிக்கைகள்/தொடர்புகள், அமெரிக்காவிற்கு எதிரான சீனாவின் நிலைப்பாட்டை அதாவது அமெரிக்க-சீன அதிகாரச் சமநிலையை எவ்விதம் பாதிக்கின்றன என்பதைப் பகுப்பாய்வு செய்வதன் மூலமே சீனாவின் புவிசார் அரசியலை முழுமையாகப் புரிந்துகொள்ள இயலும். "ஏனைய அனைத்தும் ஒரு பொருட்டே அல்ல" என்றும் நெய்சன் மஹ்பூபி திட்டவட்டமாகத் தமது கருத்தை பதிவு செய்திருந்தார். அவர் மேலும் கூறுகையில், "சீனா தங்கள் பின்னே உறுதியாய் நிற்கிறது" என்று நம்பும் நாடுகளில் ஒருவராக நான் இருந்தால், நான் துளியும் பாதுகாப்பாய் இருப்பதாக உணர்ந்திட மாட்டேன். ஏனெனில் அந்த ஆதரவு உண்மையானதாகவோ அல்லது நிலைத்திருக்கக்கூடியதாகவோ இருப்பதற்கு சாத்தியக்கூறே இல்லை" என்று நெய்சன் மஹ்பூபி கடுமையாக எச்சரித்தார்.

சீனத் தயாரிப்பு ஆயுதங்களைப் பாகிஸ்தான் போர்க்களத்தில் பயன்படுத்தியபோது, அவற்றின் வீரியம் குறித்த சீன அதிகாரிகளின் மனநிறைவு, எல்லையற்ற மகிழ்ச்சியாய் வெளிப்பட்டது. மே மாதம், இந்தியாவுடனான குறுகியகாலப் போரில், மேற்கத்திய நாடுகளின் படைக்கலன்களுக்கு எதிராக பாகிஸ்தான் சீன ஆயுதங்களை பயன்படுத்தியது. அப்போரில், பிரான்ஸ் தயாரித்து இந்திய இராணுவத்தால் இயக்கப்படும் ஒரு ரஃபேல் போர் விமானத்தையாவது பாகிஸ்தானின் இராணுவப் படைகள்  சுட்டு வீழ்த்தியிருக்கும் எனப் பரவலாக கருதப்பட்டது. ஆனால், ஈரான் விவகாரத்தில் நிலைமை முற்றிலும் தலைகீழாய் இருந்தது. ரஷ்யத் தயாரிப்பு வான்காப்பு அரண்களை ஈரான் பயன்படுத்தியபோதும், இஸ்ரேலிய மற்றும் அமெரிக்க வான்வழித் தாக்குதல்களைத் தடுக்க முடியவில்லை.

சீன மற்றும் ரஷ்ய ஆயுதங்களின் செயல்பாட்டில் நிலவிய இந்த வேறுபாட்டை ஈரான் கூர்மையாக உற்றுநோக்கியது. ஐரோப்பாவுடனான தன் நெருங்கிய பிணைப்பை முறித்துக்கொண்ட போதிலும், ஈரான் ரஷ்யாவிற்கு தொடர்ந்து ஆயுத உதவிகளை வழங்கி வந்தது. உக்ரைன் போரில் ரஷ்யாவிற்கு ஆதரவாக, ஷாஹெட் ஆளில்லா விமானங்கள் மற்றும் பிற படைக்கலன்களை ஈரான் வழங்கியது. ஆயினும், ஈரானுக்குப் பிரதிபலனாக, நவீன அல்லது மேம்பட்ட இராணுவ உபகரணங்கள் எவையும் ரஷ்யாவிடமிருந்து கிடைக்கப்பெறவில்லை.

“ரஷ்யா மீது ஈரானில் ஆழ்ந்த அதிருப்தி தலைத்தூக்கியுள்ளது,” என்று சர்வதேச நெருக்கடிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளும் ICG குழுவின் (International Crisis Group) ஈரான் ஆய்வுத் திட்டத்தின் (Iran Project) இயக்குநர் அலி வைஸ் குறிப்பிடுகிறார். இப்போரானது ஈரானின் அரசியல் தலைவர்களுக்கும், சாதாரண குடிமக்களுக்கும், தங்கள் தேசம் உண்மையில் எந்தளவிற்கு தனித்து விடப்பட்டுள்ளது என்பதை மீண்டும் ஒருமுறை உணர்த்தியுள்ளது என்று விளக்கியிருந்தார். மேலும், “தற்போதைய சூழலில், வேறு சிறந்த மாற்று வழிகள் இல்லாத காரணத்தால், ஈரான் முற்றிலும் சீனாவைச் சார்ந்து இயங்க வேண்டும் என்று சில ஈரானியர்கள் வற்புறுத்தி வருகின்றனர்” என்றும் அவர் எடுத்துரைத்தார்.

CRINK நாடுகள் நான்கில், ரஷ்யாவும் வட கொரியாவும் மட்டுமே பரஸ்பர பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட இராணுவ ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. ரஷ்யாவுக்கும் வட கொரியாவுக்கும் இடையிலான இந்த உடன்படிக்கை, கடந்த ஆண்டு சட்டப்பூர்வமாக நிறைவேற்றப்பட்டது. ஜெர்மனியில், டியூஸ்பர்க்-எஸ்ஸன் பல்கலைக்கழகத்தின் கிழக்காசிய ஆய்வு நிறுவனத்தைச் சேர்ந்த ஆய்வாளர் ஹீ கியூங் சாங் கூறுவது யாதெனில், "வட கொரியாவைப் பொறுத்தவரை, ரஷ்யாவுடனான உறவே தற்போது மிக முக்கியத்துவம் வாய்ந்தது". மேலும், "வட கொரியா எந்தவொரு காரியத்திலும் முதற்கண் ரஷ்யாவுடன் ஒத்துழைக்க முனைவதன் பின்னணியும் இதுவே" என்று அவர் சுட்டிக்காட்டினார். அத்துடன், அவர் மேலும் குறிப்பிடுகையில், “இராணுவ விவகாரங்களைப் பொறுத்தவரை, ரஷ்யாவைப் போல சீனா நம்பிக்கைக்குரிய நாடல்ல என்பது வட கொரியாவின் கருத்து” என்கிறார் ஆய்வாளர் ஹீ கியூங் சாங்.

தற்போது வட கொரியாவின் அணு ஆயுதங்களை, மேற்கத்திய நாடுகளுக்கு எதிரான தனது மோதலில் ஒரு பயனுள்ள ஆயுதமாகவே ரஷ்யா கருதுகிறது. உக்ரைன் போரில் ரஷ்யாவிற்கு ஆதரவாக வட கொரியா தனது துருப்புக்களைக் களமிறக்கியுள்ளது. ரஷ்யாவுடன் முறைப்படியான கூட்டணிகளைக் கொண்டுள்ள பெலாரஸ் போன்ற பிற நாடுகள், படைகளை அனுப்பவில்லை. தமது துருப்புக்களை அனுப்புவதன் மூலம், வட கொரியா பொருளாதார அளவிலும், இராஜதந்திர அளவிலும் தனிமைப்படுத்தலை எதிர்கொண்டு வரும் சூழலைத் தணித்துக் கொள்ள முடிந்திருக்கிறது.

ஆனால், கார்நீகி ரஷ்யா யூரேசியா மையத்தின் ஆராய்ச்சியாளர் அலெக்சாண்டர் பவுனோவ் கூறுகையில், வட கொரியாவுக்கும் தென் கொரியாவுக்கும் இடையே போர் மூண்டால் ரஷ்யா வட கொரியாவிற்கு உதவும் என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை. “வட கொரியாவிடம் அணு ஆயுதங்கள் ஏற்கனவே உள்ளதால், அதனை யாரும் தாக்க மாட்டார்கள் என்று புதின் தெளிவாக உணர்ந்த பின்னரே, வட கொரியாவுடன் இராணுவ ஒப்பந்தத்தில் கையொப்பமிட ஒப்புக்கொண்டார்” என்கிறார் அலெக்சாண்டர் பவுனோவ். “வட கொரியாவிடம் உதவி தேடியே புதின் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்” என்றும் குறிப்பிட்டார். அவர் கூடுதலாக, “இதற்கு ஈடாக புதின் வட கொரியாவிற்கு உதவுவார் என்பதை என்னால் எண்ணிப் பார்ப்பதுகூட அரிது” என்றும் தெரிவித்தார்.

டிரம்ப் நிர்வாகத்திடமிருந்து இனிமேலும் இராணுவ உதவிகள் கிடைக்கும் என்பதில், அமெரிக்காவின் நட்பு நாடுகளுக்கு இருந்து வந்த நம்பிக்கையும் இப்போது ஆட்டம் கண்டிருக்கிறது. ஐரோப்பாவிலும் ஆசியாவிலும் உள்ள தமது நட்பு நாடுகளுக்கு எதிராகவே டிரம்ப் நிர்வாகம் வர்த்தகப் போரைத் தொடங்கியுள்ளது என்பதே இதற்கு முதன்மைக் காரணமாகும். அதேவேளையில், புதின் தலைமையிலான ரஷ்யாவுடன் நல்லுறவைப் பேணவும் டிரம்ப் நிர்வாகம் முயன்று வருகிறது.  “ஐரோப்பாவும் அமெரிக்காவும் இப்போதும் ஒரே தரப்பாக நிற்கும்போது மட்டுமே ‘மேற்கத்திய ஜனநாயகத்திற்கு எதிரான அச்சு நாடுகள்’ என்னும் கருத்தாக்கம் குறித்துப் பேசுவது அர்த்தமுள்ளதாக இருக்கும்”. அவர் தொடர்ந்து கூறியதாவது: "அதாவது, ஐரோப்பாவும் அமெரிக்காவும் தாராளவாத ஜனநாயகத்தை தொடர்ந்து ஆதரித்து, அதனுள் நம்பிக்கை கொண்டிருக்க வேண்டும். அத்தகைய நம்பிக்கை இக்காலத்தில் பெரும் கேள்விக்குரியதாகிவிட்டது,” என்று இத்தாலிய சர்வதேச விவகார நிறுவனத்தின் இயக்குநர் நத்தாலி டோச்சி தெளிவுபடுத்தினார்.

ஐரோப்பாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான இந்தப் பிளவும், அண்மையில் ஜப்பான் மற்றும் தென் கொரியாவுடனான அமெரிக்க உறவுகளில் ஏற்பட்ட தளர்வும்கூட, சீனாவின் வெளியுறவுக் கொள்கைத் திட்டமிடலில் மிகுந்த கவனத்துடன் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இத்தகைய மாற்றங்கள் சீனாவுக்கு மேலும் தன்னம்பிக்கையூட்டி, அதன் எதிர்கால இலக்குகளை எய்துவதற்கான உத்வேகத்தையும் அளிக்கக்கூடும். சீன இராணுவத்தின் ஓய்வுபெற்ற மூத்த கர்னல் ஜோ போ என்பவர் சீனப் பாதுகாப்பு அமைச்சகத்தின் இராணுவ ஒத்துழைப்பு மையத்தின் முன்னாள் இயக்குநராகவும் பொறுப்பு வகித்துள்ளார். தற்போது, அவர் சிங்குவா பல்கலைக்கழகத்தில் மூத்த ஆராய்ச்சியாளராகப் பணிபுரிந்து வருகிறார். “மேற்கத்தியக் கூட்டணி என்பது பெரும்பாலும் அரசியல் நோக்கங்களுக்காகவே பயன்படுத்தப்படும் ஒரு இராணுவக் கட்டமைப்பாகும்”. “ஆனால், மேற்கத்திய தாராளவாத ஜனநாயகக் கட்டமைப்பு வலுவிழக்கத் தொடங்கினால், இந்த இராணுவக் கூட்டணியும் தொடர்ந்து வலிமை பெறாது,” என்கிறார் ஜோ போ.

- விஜயன் (தமிழில்)

மூலக்கட்டுரை: https://www.wsj.com/world/the-fault-lines-in-the-autocratic-axis-6b0af76e?mod=WhatsApp