இரண்டாம் சிப் போர்: சீனச் சார்பு நிலை குறைப்பா அல்லது சீனாவுக்கு எதிரான மறைமுகப் போரா

தமிழில்: விஜயன்

இரண்டாம்  சிப் போர்: சீனச் சார்பு நிலை குறைப்பா அல்லது சீனாவுக்கு எதிரான மறைமுகப் போரா

உலகளாவிய குறைக்கடத்தி உற்பத்தித் துறையில் சீனா முதலிடம் பிடிப்பதற்கான வேகத்தைக் குறைக்கும் நோக்குடன், அமெரிக்கா விதித்துள்ள சமீபத்திய, விரிவான தடைகள் சீன குறைக்கடத்தி நிறுவனங்களை நேரடியாகக் குறிவைக்கின்றன. மேம்பட்ட கணினிச் சில்லுகள், அதிநவீன தொழில்நுட்பங்களைச் சீனா அடைவதைத் தடுப்பதே இத்தடைகளின் தலையாய நோக்கம்; இதன்மூலம் இந்த முக்கிய துறையில் அமெரிக்கா தொடர்ந்து கோலோச்ச வேண்டும் என்ற பெருவிருப்பம் வெளிப்படுகிறது. இத்தடைகள் சீனாவின் முன்னேற்றத்தை ஒரு குறிப்பிட்ட காலம் மட்டுப்படுத்தலாம் என்றபோதிலும், இந்தப் பதட்டங்கள், பொருளாதார ரீதியாகவோ அல்லது நேரடி மோதல்களாகவோ விரிவடைந்து பெரும் நெருக்கடிகளை உருவாக்கும் அபாயமும் உள்ளது.

 

1990களில் உலகளாவிய அளவில் போற்றிப் பின்பற்றப்பட்ட உலகமயமாக்கல், தடையற்ற வர்த்தகக் கொள்கைகளிலிருந்து ஒரு தெளிவான விலகல் போக்கு உருவாகியிருப்பதைதயே இம்மாற்றங்கள் குறிக்கின்றன. அமெரிக்கா தற்போது பழைய பனிப்போர் காலத்திய உத்திகளை மீண்டும் கையிலெடுக்கிறது; தனது நட்பு நாடுகளுடன் இணைந்து, தொழில்நுட்பக் கட்டுப்பாடுகளை ஒரு வியூகமாகக் கொண்டு சீனாவின் முன்னேற்றத்தை மட்டுப்படுத்தும் நோக்குடன் செயல்படுகிறது.

 

இத்தகைய நகர்வுகள் சீனாவின் வளர்ச்சிப் பயணத்தைத் தற்காலிகமாகத் தாமதப்படுத்தக்கூடும் என்றபோதிலும், சீனா ஒரு மாபெரும் சந்தையாக விளங்குவதால், இவை அமெரிக்காவின் குறைக்கடத்தித் துறையையும் மோசமாகப் பாதிக்கக்கூடும். உதிரிபாகங்கள் அல்லது உற்பத்திச் சாதனங்களை உருவாக்கும் தைவான், தென் கொரியா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய நாடுகளின் நிறுவனங்களும், இந்த மோதலின் எதிர்பாராத, மறைமுகமான பாதிப்புகளுக்கு உள்ளாகக்கூடும்.

 

இத்தடைகள், சீனாவின் இராணுவத் தொழில்நுட்ப வளர்ச்சியை இலக்காகக் கொண்டவை என்று வெளிப்படையாகக் கூறப்பட்டாலும், யதார்த்தத்தில், இவை சீனாவின் இராணுவம் சாராத குறைக்கடத்தி நிறுவனங்களையும் கணிசமாகப் பாதிக்கின்றன. ஏனெனில், பெரும்பாலான இராணுவக் கருவிகள் பழமையான, அவ்வளவாக மேம்படாத சில்லுகளையே சார்ந்துள்ளதால், இராணுவப் பயன்பாடு என்ற சாக்குப்போக்கு எல்லாம், சர்வதேச வர்த்தக விதிகளின் கீழ் ஒரு சூழ்ச்சியான திரைமறைப்பு நாடகமாகவே கருதப்படுகிறது.

 

சீனா அதிநவீன குறைக்கடத்தித் தொழில்நுட்பங்களை அடைவதைத் தடுக்கும் நோக்கில், அமெரிக்கா மிகக் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது.

 

செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் உயர்செயல்திறன் கணினி (High-Performance Computing) ஆகியவற்றில் பயன்படுத்தப்படும் சில்லுகள் உட்பட, அதிநவீன லாஜிக் சில்லுகள் மீது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

 

16 நானோமீட்டர் லாஜிக் சில்லுகள் மற்றும் FinFET, Gate All Around போன்ற தனித்துவ வடிவமைப்புகளைக் கொண்ட நுண்மையான, உச்சநிலைத் தொழில்நுட்பம் கொண்ட சில்லுகளைத் தயாரிப்பதற்கு அவசியமான உபகரணங்கள் மீது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

 

128 அல்லது அதற்கு மேற்பட்ட அடுக்குகளைக் கொண்ட NAND நினைவகம் மட்டுமல்லாது 18 நானோமீட்டர் அரை பிட்ச் கொண்ட DRAM நினைவகம் உள்ளடங்கலாக, புதிய தலைமுறை நினைவகச் சில்லுகள் மீது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

 

இத்தடைகள், 1990களின் முற்பகுதியில் புழக்கத்தில் இருந்த பழமையான கருவிகளையும் உள்ளடக்கிய உபகரணங்கள் மீதும் தடைகளை விதிக்கின்றன; இதுவே, இக்கட்டுப்பாடுகளின் விரிவான வீச்சை நன்கு வெளிப்படுத்துகிறது.

 

தனது விநியோகச் சங்கிலியில் அமெரிக்கத் தொழில்நுட்பத்தையோ அல்லது அதன் தயாரிப்புகளையோ பயன்படுத்தும் எந்தவொரு நிறுவனமும் இவற்றின் பிடிக்குள் வரும் என்பதே இத்தடைகளின் மிக முக்கிய அம்சமாகும். ஒரு உற்பத்திப் பொருளில் அமெரிக்கத் தயாரிப்புப் பாகங்களோ அல்லது வடிவமைப்பு உள்ளீடுகளோ அடங்கியிருந்தால், அதனைத் தயாரிக்கும் நிறுவனம் அமெரிக்கச் சட்டதிட்டங்களால் கட்டுப்படுத்தப்படலாம் என்பதே இதன் உள்ளார்ந்த பொருளாகும். இது, அமெரிக்காவின் சட்ட அதிகார எல்லையை அதன் புவியியல் எல்லைகளைத் தாண்டியும் விரிவுபடுத்துவதோடு, சீனாவின் குறைக்கடத்தித் தொழில்துறையுடன் நேரடியான அல்லது மறைமுகமான தொடர்புகளைக் கொண்ட எந்தவொரு நிறுவனத்தையும் தண்டிப்பதற்கும் வழிவகை செய்கிறது.

 

அத்துடன், அமெரிக்கா 31 சீன நிறுவனங்களை "சரிபார்க்கப்படாத பட்டியல்" ஒன்றில் இணைத்துள்ளது. இந்நிறுவனங்கள், தங்களது செயல்பாடுகள் குறித்த முழுமையான தகவல்களை அமெரிக்க அதிகாரிகளிடம் இரண்டு மாதங்களுக்குள் சமர்ப்பிக்கக் கடமைப்பட்டுள்ளன; இல்லையேல், தடைக்கு உள்ளாக நேரிடும். அமெரிக்கக் குடிமக்களோ அல்லது அமெரிக்காவில் நிரந்தரமாக வசிப்பவர்களோ இந்நிறுவனங்களில் பணியாற்றத் தடை விதிக்கப்பட்டுள்ளது; உபகரணப் பராமரிப்பு அல்லது பழுதுபார்த்தல் போன்ற சேவைப் பணிகளிலுக்கும் இத்தடை பொருந்தும்.

 

உலகளாவிய குறைக்கடத்தித் துறை மிகப் பரந்து விரிந்தது; இதன் தற்போதைய மதிப்பு அரை டிரில்லியன் டாலருக்கும் அதிகமாகும். 2030 ஆம் ஆண்டிற்குள் இது ஒரு டிரில்லியன் டாலருக்கும் அதிகமாக வளரும் என்று துறைசார் வல்லுநர்கள் கணிக்கின்றனர். குறைக்கடத்தித் தொழில் சங்கம் மற்றும் பாஸ்டன் கன்சல்டிங் குழுமத்தின் அறிக்கைகளின்படி, இந்த வளர்ச்சியில் சுமார் 60% சீனாவின் பங்களிப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் உலகத் தலைமைப் பாத்திரத்தில் அமெரிக்காவை மிஞ்சிவிடும் வாய்ப்புகளும் உள்ளன. இத்துறையில் சீனா தலைமைத்துவத்தை அடைவதைத் தடுக்கும் நோக்கிலேயே அமெரிக்கா இத்தகைய தடைகளை விதித்துள்ளது.

 

இருப்பினும், இத்தடைகள் அமெரிக்காவிற்கும் அதன் நட்பு நாடுகளுக்கும் சில எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தியுள்ளன. தைவான் மற்றும் தென் கொரியா போன்ற நாடுகளுக்கு சீனா ஒரு முக்கிய வர்த்தகப் சந்தையாக விளங்குகிறது. சீனாவிற்கு சில்லுகள், உபகரணங்கள் விற்பதற்குத் தடை விதிப்பது என்பது, உடனடி மாற்றுச் சந்தை இல்லாத நிலையில், ஒரு மாபெரும் சந்தையை இழக்கிறது எனலாம். இது இந்த அண்டை நாடுகளை மட்டுமல்லாது, அதிநவீன சில்லுகள் தயாரிப்புக்கு இன்றியமையாத தீவிர புற ஊதா (EUV) லித்தோகிராபி இயந்திரங்களை வழங்கும் தனிப்பெரும் நிறுவனமான டச்சு நாட்டைச் சேர்ந்த ASML போன்ற நிறுவனங்களையும் பாதிக்கிறது.

 

தைவான் மற்றும் தென் கொரியாவைப் பொறுத்தவரை, குறைக்கடத்திகள் மட்டுமன்றி, வேறு பல பொருட்களுக்கும் சீனா ஒரு மாபெரும் ஏற்றுமதிச் சந்தையாகத் திகழ்கிறது. குறைக்கடத்தி விநியோகச் சங்கிலியில் வலுக்கட்டாயமாக ஒரு பிளவை ஏற்படுத்துவது, மற்ற துறைகளிலும் பிளவுகளுக்கும், அதனால் விரிசல்களுக்கும் வழிவகுக்கக்கூடும்.

 

LAM, Applied Materials மற்றும் KLA Corporation போன்ற சிப் தயாரிக்கும் இயந்திரங்களை உற்பத்தி செய்யும் அமெரிக்க நிறுவனங்களும்; Synopsys மற்றும் Cadence போன்ற மென்பொருள் நிறுவனங்களும்; Qualcomm, Nvidia, AMD போன்ற சிப் வடிவமைப்பு நிறுவனங்களும் கணிசமான வருவாய் இழப்பைச் சந்திக்கும். இந்த நிறுவனங்களுக்கு சீனா, ஒருபுறம் அதிவேகமாக வளர்ந்துவரும் சந்தையாகவும், மறுபுறம் மிகப்பெரிய விற்பனையாளராகவும் விளங்குகிறது.

 

சீனச் சந்தையை அணுகும் வாய்ப்பை இழப்பதால், அமெரிக்க குறைக்கடத்தி நிறுவனங்கள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு (R&D) தேவையான இலாபத்தை இழக்கும் நிலை ஏற்படும். அமெரிக்க அரசாங்கம் 52.7 பில்லியன் டாலர் சிப் உற்பத்தி ஊக்குவிப்புத் திட்டம் போன்ற மானியங்களை வழங்கினாலும் கூட, இந்த இழப்புகளை முழுமையாக ஈடுசெய்ய இயலாது.

 

பரந்துபட்ட துறைகளை குறிவைப்பதற்கு பதிலாக, சீனாவின் பாதுகாப்பு மற்றும் இராணுவத் துறைகளில் கவனம் செலுத்தும் குறிப்பிட்ட இலக்கு நோக்கிய தடைகளே உகந்த அணுகுமுறை என்று தொழில்துறை வல்லுநர்கள் கருதுகின்றனர். ஒட்டுமொத்த தொழில்துறைக்கு  பாதிப்பைக் ஏற்படுத்தும் நோக்கில், “சுத்தியல்” போன்ற பரந்த தாக்குதலுக்குப் பதிலாக, துல்லியமான “அறுவை கத்தியைப்” பயன்படுத்துமாறு அவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

 

சர்வதேச அளவில் பொருளாதாரத் தடைகளை விதித்து, விநியோகச் சங்கிலிகளைப் பிளவுபடுத்தும் இந்த முறைமை, புதியதொன்றுமல்ல. முன்னதாக, பனிப்போர் காலகட்டத்தில், அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் சோவியத் யூனியனுக்கு எதிராக இதேபோன்ற உத்திகளைக் கையாண்டன. இந்த ஏற்பாடு 'வாசநார் ஒப்பந்தம்'(Wassenaar Arrangement)  எனப் பெயரிடப்பட்டது. அமெரிக்காவால் 'எதிரிகளாக'க் கருதப்படும் நாடுகளுக்கு, மேம்பட்ட தொழில்நுட்பங்கள் சென்றடைவதைத் தடுப்பதே இதன் நோக்கமாக இருந்தது. இந்த விதிகளை உருவாக்குவதில் நட்பு நாடுகள் பொதுவாக அமெரிக்காவின் வழிகாட்டுதலைப் பின்பற்றின.

 

வாசநார் ஒப்பந்தம் சில குறிப்பிட்ட முழுவதும் தயாரிக்கப்பட்ட பண்டங்ககளை மட்டும் தடுக்கவில்லை — அந்தப் பொருட்களைத் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் இயந்திரங்கள், கருவிகளின் ஏற்றுமதியையும் முடக்குகிறது. சோசலிச நாடுகள் மட்டுமல்லாமல், இந்தியாவைப் போன்ற நாடுகளுக்கும் மேம்பட்ட தொழில்நுட்பங்கள் மறுக்கப்பட்டன. தடுக்கப்பட்ட பொருட்களில் சூப்பர் கணினிகள், சிறப்பு உலோகங்கள், துல்லியமான இயந்திரங்கள் ஆகியவை அடங்கும். வாசநார் ஒப்பந்தத்தின் கீழ், இந்தியாவின் அணுசக்தி மற்றும் விண்வெளித் திட்டங்களுக்குத் தேவையான மிக முக்கியமான உபகரணங்களைப் பெறுவதற்கும் தடை விதிக்கப்பட்டது. இந்த ஒப்பந்தம் இன்றும் நடைமுறையில் உள்ளது; தற்போது ரஷ்யாவையும் இந்தியாவையும் உள்ளடக்கியுள்ளது. ஆனால், இதன் வீரியம் தற்போது வெகுவாகக் குறைந்துவிட்டது. இன்றைய நிலையில், அமெரிக்காவின் தனிப்பட்ட தடைகளிலிருந்தும், உலக வர்த்தக அமைப்பின் (WTO) விதிகளை உள்ளடக்கிய அனைத்துலகச் சட்டங்களை விடவும் அமெரிக்கச் சட்டங்களே மேலானவை என்ற அதன் நிலைப்பாட்டிலிருந்தும்தான் உண்மையான சவால் எழுகிறது. அந்தக் காலகட்டத்தில், நேட்டோ, சீட்டோ(SEATO), சென்டோ(CENTO) போன்ற ஒப்பந்தங்களில் இணைந்திருந்த அமெரிக்காவும் அதன் கூட்டாளி நாடுகளும் உலகின் முன்னணி உற்பத்தி மையங்களாகத் திகழ்ந்தன. மேலும், மேற்கு ஆசியாவின் எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்களை அமெரிக்கா தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தது; இவை அனைத்து நாடுகளுக்கும் இன்றியமையாத வளங்களாக இருந்தன.

 

ஆனால், இப்போதைய சூழல் முற்றிலும் மாறிவிட்டது. சீனா இன்று உலகின் பிரதான உற்பத்தி நாடாகவும், 70% நாடுகளுக்கு மிகப்பெரிய வர்த்தகக் கூட்டாளியாகவும் விளங்குகிறது. ஓபெக்(OPEC) நாடுகள் அமெரிக்காவின் கட்டளைகளை தற்போது பின்பற்றுவதில்லை; இதனால், உலகளாவிய எரிசக்திச் சந்தைகள் அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இல்லை. வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் குறைவாக இருந்தபோதிலும், சீனாவுடன் சிப் போரை அமெரிக்கா ஏன் தொடங்குகிறது? சீனாவை உச்சபட்ச ராணுவ-பொருளாதார வல்லரசாக வளரும் வேகத்தைத் தாமதப்படுத்துவது மட்டுமே அமெரிக்காவால் அதிகபட்சமாகச் செய்ய முடியும். பல ராணுவ வல்லுநர்கள் இதை “துசிடைட்ஸ் பொறி” (Thucydides Trap) என்ற கருத்தின் மூலம் விளக்குகிறார்கள் — ஒரு புதிய சக்தி தலைதூக்கும்போது, ஏற்கனவே ஆளும் சக்தியுடன் மோதல் ஏற்பட்டு, பெரும்பாலும் போர் மூள்கிறது. பண்டைய காலத்தில், ஏதென்ஸ் வலிமை பெற்றபோது, ஸ்பார்ட்டா தனது மேலாதிக்கத்தைத் தக்கவைக்கத் தாக்கியது; இறுதியில் இரு தரப்புமே பெரும் இழப்புகளைச் சந்தித்தன. சில வல்லுநர்கள் இந்தக் கருத்தை கேள்விக்குள்ளாக்கினாலும், போட்டியானது பொருளாதார அல்லது நேரடிப் போருக்கான அபாயத்தை அதிகரிக்கும் என்பதே இதன் சாராம்சம்.

 

இன்றைய அமெரிக்க-சீன போட்டி ஒரு பொருளாதாரப் போட்டியாக —'சிப் போர்' போல—மட்டுமே அமைந்தால், அது உண்மையில் ஒரு நல்வாய்ப்பே. உலகளாவிய 'சுதந்திர வர்த்தகம்' என்ற பழைய சகாப்தம் முடிவுக்கு வந்துவிட்டது என்ற உண்மை இப்போது தெளிவாகியுள்ளது. இந்தியா போன்ற நாடுகள் இதை விரைவாக உணர வேண்டும். உண்மையான சுயசார்பு என்பது, வெறுமனே உள்ளூரில் பொருட்களை உற்பத்தி செய்வதோ அல்லது போலியான 'மேக் இன் இந்தியா' போன்ற முழக்கங்களை ஏந்தி நிற்பதோ மட்டுமல்ல; மாறாக, தொழில்நுட்பத்தையும், தொழில்நுட்ப அறிவையும் நாட்டிற்குள்ளேயே உருவாக்குவதில்தான் உண்மையான சுயசார்பு அடங்கியுள்ளது.

விஜயன் (தமிழில்)

மூலக்கட்டுரை: https://www.newsclick.in/Chip-War-v2-US-Decoupling-China-Declaring-War-Other-Means

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு