சீனா ஏன் 50% அமெரிக்க சுங்கவரிகளை எதிர்கொள்ளவில்லை, ஆனால் இந்தியா குறிவைக்கப்பட்டுவது ஏன்?
தமிழில்: விஜயன்

அமெரிக்க சுங்கவரிக் கொள்கையில் தற்போது மிகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்று. புதன்கிழமை (ஆகஸ்ட் 27) அன்று, அமெரிக்காவிற்கான இந்திய ஏற்றுமதிகள் மீது 50% சுங்கவரி நடைமுறைக்கு வந்தது. இந்த மாத தொடக்கத்தில், டிரம்ப் ஏற்கனவே இந்தியா மீதான சுங்கவரிகளை 10% இல் இருந்து 25% ஆக உயர்த்தியிருந்தார். "ரஷ்யாவால் அமெரிக்காவிற்கு ஏற்படும் அச்சுறுத்தல்களை சரிகட்டுதல்" என்ற தலைப்பிலான ஒரு அவசரகால நிர்வாக உத்தரவில், இந்தியா இன்னமும் ரஷ்ய எண்ணெயை நேரடியாகவும் மறைமுகமாகவும் இறக்குமதி செய்கிறது என்று கூறி, டிரம்ப் அந்த விகிதத்தை இரட்டிப்பாக்கி 50% ஆக உயர்த்தினார். ரஷ்யாவுடனான வர்த்தகம் அமெரிக்காவின் தேசப் பாதுகாப்பிற்கும், வெளியுறவுக் கொள்கைக்கும் "அசாதாரணமான, அவசரகால அச்சுறுத்தல்" என்று அந்த உத்தரவு விவரித்தது.
ஆனால் கேள்வி இங்குதான் எழுகிறது: ரஷ்ய எண்ணெயின் உலகின் மிகப்பெரிய இறக்குமதியாளராகவும், ரஷ்யாவின் முக்கிய பொருளாதாரப் பங்காளியாகவும் இருக்கும் சீனா இந்தியாபோல நடத்தப்படவில்லை. சீனா கடந்த ஆண்டு 109 மில்லியன் டன் ரஷ்ய எண்ணெயைக் கொள்முதல் செய்தது, அதேசமயம் இந்தியா 88 மில்லியன் டன் இறக்குமதி செய்தது. இருந்தபோதிலும், அமெரிக்கா இன்னும் சீனா மீது இத்தகைய தீவிரமான சுங்கவரிகளை விதிக்கவில்லை.
இந்த வேறுபாட்டைப் பற்றிக் கேட்டபோது, சீனாவுக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்கத் தான் தயாராக இல்லை என்று டிரம்ப் ஆகஸ்ட் 15 அன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார். "இரண்டு அல்லது மூன்று வாரங்களில்" ஒரு முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் கூறினார்.
ரஷ்ய எண்ணெயை வாங்கும் பெரிய நாடாக இருந்தபோதிலும், சீனா ஏன் இப்போதைக்குத் தப்பியுள்ளது? மூன்று முக்கிய காரணங்கள் உள்ளன.
அருமண் (உலோகங்களில்) சீனாவிற்கான பலம்
சீனாவின் வலிமையான பேரம் பேசும் சக்தி அருமண் உலோகங்களில் (rare earth metals) உள்ளது. இந்த கனிமங்கள் ஸ்மார்ட்போன்கள், டிவி திரைகள் முதல் மேம்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள், தூய்மையான எரிசக்தி தொழில்நுட்பங்கள் வரை பல உயர் மதிப்புள்ள பொருட்களை உற்பத்தி செய்வதற்கு அத்தியாவசியமானவை.
அருமண் (உலோகங்கள்) என்பவை உலோகமாகவும் வெள்ளி நிறமாகவும் தோற்றமளிக்கும் 17 வேதியியல் தனிமங்களின் தொகுப்பாகும். அவை உண்மையாகவே அரிதானவை அல்ல, ஆனால் வணிக ரீதியாகப் பயன்படுத்தக்கூடிய செறிவூட்டப்பட்ட படிவுகளைக் கண்டுபிடிப்பது கடினம். மற்ற நாடுகளைப் போலன்றி, சீனா 1990களில் இருந்து இந்தத் தனிமங்களைச் சுரங்கத்திலிருந்து வெட்டியெடுத்தல், சுத்திகரித்தல் ஆகிய இரண்டிலும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இன்று, உலகளாவிய தேவையில் சுமார் 85-95% ஐ சீனாவே வழங்குகிறது, மேலும், சுத்திகரிப்பு தொழில்நுட்பத்தில் ஈடுஇணையற்ற நிபுணத்துவத்தையும் பெற்றுள்ளது.
இந்த பலம் 2024 இன் தொடக்கத்தில் தெளிவாக வெளிப்பட்டது. டிரம்ப் தனது பரஸ்பர சுங்கவரிப் பட்டியலை வெளியிட்டு இதுவே அமெரிக்காவின் “விடுதலை நாள்” என்று அறிவித்த இரண்டு நாட்களுக்குப் பிறகு, சீனா ஏழு அருமண் பொருட்களின் ஏற்றுமதி மீது கட்டுப்பாடுகளை அறிவித்தது. இந்த நடவடிக்கை உலகளாவிய ஆட்டோமொபைல் மற்றும் உதிரிபாகங்கள் தொழில்துறையைச் ஆட்டங்காணச் செய்தது. அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையே ஜூன் மாதம் ஒரு சமாதான ஒப்பந்தம் எட்டப்படும் வரை, உலகெங்கிலும் உள்ள பல தொழிற்சாலைகள் தற்காலிகமாக உற்பத்தியை நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
அருமண் தனிமங்களின் ஏற்றுமதிகளை மீண்டும் தொடங்குவதில் சீனா மெதுவாகச் செயல்பட்டதாக அமெரிக்கா புகார் தெரிவித்த போதிலும், வர்த்தகம் அதன் பின்னர் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளது கவனிக்கத்தக்கது. சமீபத்தில், சீனாவிடமிருந்து அமெரிக்காவிற்கு அருமண் காந்தங்களின் விற்பனை ஒரே மாதத்தில் 660% உயர்ந்ததாக CNBC நிறுவனம்0 செய்தி வெளியிட்டிருந்தது.
சீனா பேச்சுவார்த்தை மூலம் அல்ல, உடனடி நடவடிக்கையின் மூலமே பதிலளிக்கிறது
இந்தியாவைப் போலன்றி, அமெரிக்க சுங்கவரிகளை எதிர்கொள்ளும்போது சீனா நீண்ட பேச்சுவார்த்தைகளுக்காகக் காத்திருக்கவில்லை. உதாரணமாக, சீனா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகியவை அமெரிக்காவிற்கு ஃபென்டானிலை அனுப்புவதாகக் பிப்ரவரியில் டிரம்ப் குற்றம் சாட்டியபோது, அந்நாடுகள் மீது அவர் 10% சுங்கவரியை விதித்தார், பின்னர் மார்ச் மாதம் அதை 20% ஆக உயர்த்தினார். சீனா உடனடியாகப் பதிலடி நடவடிக்கைகளை அறிவித்தது. திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு, நிலக்கரி மற்றும் விவசாய இயந்திரங்கள் போன்ற அமெரிக்க ஏற்றுமதிகளை இவை குறிவைத்தன.
டிரம்ப் மீண்டும் புதிய சுங்கவரிகள் மூலம் சீனாவை நேரடியாகச் சவால் செய்தால், இந்த ஆண்டு ஏப்ரல் முதல் ஜூன் வரை காணப்பட்டதைப் போன்ற ஒரு முழு அளவிலான வர்த்தகப் போரின் மற்றொரு சுற்று துவங்கக்கூடும். அந்த நேரத்தில், அமெரிக்கா சீனப் பொருட்கள் மீது 145% வரை பரஸ்பர சுங்கவரிகளை விதித்தது, மேலும் அமெரிக்கப் பொருட்கள் மீது 125% வரை சுங்கவரிகளுடன் சீனா பதிலடி கொடுத்தது.
இத்தகைய மோதலைத் தவிர்ப்பதற்காக, அமெரிக்கா சீனாவுடன் சுங்கவரி சமாதான ஒப்பந்தங்கள் செய்துகொள்ளலாம் எனக் கோரியுள்ளது. மே 11 அன்று, இரு தரப்பினரும் ஒரு இடைக்கால வரிவிலக்கை அறிவித்தனர். ஆகஸ்ட் 11 அன்று, அவர்கள் சமாதான ஒப்பந்தத்தை மீண்டும் 90 நாட்களுக்கு நீட்டித்தனர். அருமண் தனிமங்களை தடையற்ற முறையில் பெறுவதற்கான வழியைப் பாதுகாக்க விரும்புவதால், அமெரிக்கா குறிப்பாக அதிக விழிப்புடனும் கவனத்துடனும் செயல்படுகிறது.
ரஷ்ய எண்ணெய் இறக்குமதியில் சீனாவை vs இந்தியாவை அமெரிக்கா பார்க்கும் விதம்
அமெரிக்க கருவூலச் செயலாளர் ஸ்காட் பெசென்ட் ஆகஸ்ட் 19 அன்று CNBC நேர்காணலில் இந்த வேறுபாட்டை விளக்கினார். உக்ரைன் போர் தொடங்கிய பிறகு மலிவான ரஷ்ய எண்ணெயை வாங்கி, உலக சந்தைகளில் அதிக லாப வரம்புகளுக்கு அதை மறுவிற்பனை செய்ததன் மூலம், முன்னணி இந்தியப் பணக்காரக் குடும்பங்கள் சுமார் $16 பில்லியன் அளவிற்கு "அதிகப்படியான லாபம்" ஈட்டியுள்ளன என்று அவர் கூறினார். இந்த நடைமுறையை அவர் "விலை வேற்றுமைசார் இந்தியத் தரகு வர்த்தகம்" (Indian arbitrage) என்று விவரித்தார்.
இதற்கு நேர்மாறாக, உக்ரைன் போருக்கு மிக நீண்ட காலத்திற்கு முன்பே இத்தகைய எரிசக்தி உறவுகள் ரஷ்யா-சீனாவிற்கு இடையே இருந்ததால், ரஷ்யாவுடனான சீனாவின் எண்ணெய் வர்த்தகம் குறைந்த கவலையளிப்பதாகவே உள்ளது என்று பெசென்ட் தெரிவித்திருந்தார். அவர் பார்வையில், சீனா ரஷ்ய எண்ணெயைத் தனது நீண்ட கால எரிசக்தி உத்தியின் ஒரு பகுதியாக வாங்குகிறது, அதேசமயம் இந்தியா அதை சுத்திகரிக்கப்பட்ட பொருட்களை மறுவிற்பனை செய்வதன் மூலம் முக்கியமாகக் குறுகிய கால இலாபத்திற்காகப் பயன்படுத்துகிறது என்று விவரித்தார்.
விஜயன் (தமிழில்)
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு