இந்தியா-அமெரிக்கா ஒப்பந்தம் மூலம் எண்ணெய் விஷயத்தில் பெரும் பேரம்: நியூ ஜெர்சி ஆளுநர்
வெண்பா (தமிழில்)

கூட்டணி நாடுகள் மீது அதிக வரிகளை விதிக்கும் டிரம்பின் நடவடிக்கையுடன் உடன்படாத, நியூ ஜெர்சி ஆளுநரும், எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியின் முக்கியத் தலைவருமான ஃபில் மர்ஃபி, புதன்கிழமை இங்கு பேசுகையில், இந்தியா-அமெரிக்கா இடையேயான இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தைப் பொறுத்தவரை, 50% வரிகள் விஷயத்தில் ஒரு "இணக்கமான முடிவு" எட்டப்படும் என்றும், ஆனால் எண்ணெய் உட்பட "பெரும் பேரம்" நடக்க வாய்ப்புள்ளது என்றும் கூறினார். ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் இறக்குமதி செய்ததற்காக, கடந்த மாதம் இந்தியா மீது 25% தண்டனை வரிகள் விதிக்கப்பட்டது.
சமீபத்தில் வர்த்தகப் பேச்சுவார்த்தைக்காக அமெரிக்கா சென்றிருந்த மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் கூறுகையில், இந்தியாவின் எரிசக்திப் பாதுகாப்பு இலக்குகளில், வரும் ஆண்டுகளில் அமெரிக்காவின் பங்களிப்பு "முக்கிய அம்சமாக" இருக்கும் என்றார். கடந்த சில ஆண்டுகளாக, இந்தியாவிற்கு கச்சா எண்ணெய் வழங்கும் நாடுகளில் அமெரிக்கா ஐந்தாவது இடத்திலும், திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (LNG) வழங்கும் நாடுகளில் இரண்டாவது இடத்திலும் உள்ளது. நடந்துகொண்டிருக்கும் வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் குறித்து கேட்டபோது, மர்ஃபி 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளிதழுக்கு அளித்த பிரத்யேகப் பேட்டியில், "சூழ்நிலைகளைப் பார்க்கும்போது, விரைவில் ஒரு இணக்கமான முடிவு எட்டப்படும் என்று தெரிகிறது... இங்கு ஒரு ஒப்பந்தம் ஏற்படப் போகிறது என்பதையே சூழல் உணர்த்துகிறது, அதாவது அது தற்போதைய நிலையை விட குறைந்த வரியுடன் இருக்கும். எண்ணெய் வர்த்தகம் பெரும் பேரமாக இருக்க வாய்ப்புள்ளது" என்றார்.
மர்ஃபி தனது மனைவி டாமி மர்ஃபியுடன், நான்கு நகரங்களை உள்ளடக்கிய ஆறு நாள் "பொருளாதாரப் பயணத்தின்" பகுதியாக மும்பை வந்திருந்தார். இந்தப் பயணத்தில் புது டெல்லி, கொச்சி, பெங்களூரு, மும்பை ஆகிய நகரங்களுக்குச் சென்றார். ஜெர்மனிக்கான முன்னாள் அமெரிக்கத் தூதராக (2009-13) பணியாற்றிய மர்ஃபி, கோல்ட்மேன் சாக்ஸ் நிறுவனத்தில் அதன் ஆசியப் பிரிவின் தலைவராகப் பணியாற்றியுள்ளார். ரஷ்யா தொடர்பான டிரம்பின் நடவடிக்கைகளை ஆதரித்த அவர், அமெரிக்காவின் நட்பு நாடுகள் மீது அதிக வரிகளை விதிப்பது "அதைச் செய்வதற்கான சரியான வழி அல்ல" என்று எச்சரித்தார். சீனாவும் ரஷ்ய எண்ணெயை இறக்குமதி செய்யும் நிலையில், இந்தியா மட்டும் குறிவைக்கப்படுகிறதா என்று கேட்டதற்கு, அவர், "சீனா கண்டிக்கப்பட வேண்டும்... சீனா இதிலிருந்து தப்பித்துவிட முடியாது, அவர்கள் செய்வதிலிருந்து அவர்கள் தப்பிக்க முடியாது" என்றார்.
ரஷ்யா விஷயத்தில், பொறுப்புடைமையை உறுதி செய்யும் டிரம்பின் நோக்கத்தை அவரும் எதிரொலித்தார். "ரஷ்யா கண்டிக்கப்பட வேண்டியது அவசியம், மேலும் அவர்கள் தொடர்ந்து கண்டிக்கப்பட வேண்டும். ஆனால் நட்பு நாடுகள் மீது பெரிய வரிகளை விதிப்பதுதான் அதைச் செய்வதற்கான வழி என்று நான் கருதவில்லை" என்று மர்ஃபி கூறினார். H-1B விசாக்கள் மீதான "கொள்கையுடன் நான் உடன்படவில்லை" என்பதையும் மர்ஃபி தெளிவுபடுத்தினார். இது மாணவர்கள் மற்றும் குடியேறிய சமூகங்கள் மீது ஏற்படுத்தும் தாக்கம் குறித்த சிக்கல்களையும் அவர் பேசினார். இந்திய புலம்பெயர்ந்தோர் கணிசமான அளவில் இருக்கும் நியூ ஜெர்சி மாகாணத்தின் ஆளுநராக அவர் எட்டு ஆண்டுகளாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
H-1B விசா பிரச்சினை குறித்துப் பேசும்போது, மர்ஃபி நம்பிக்கையான தொனியில் பேசினார். "அது (H-1B விசா பிரச்சினை) முதலில், ஆண்டிற்கு 100,000 டாலர் என மிக அதிகமாகத் தொடங்கியது. இப்போது அது ஆண்டிற்கு 16,667 டாலராகக் குறைந்துள்ளது. இது இதைவிட மோசமாகாது என்று சிலர் கூறுகிறார்கள். இது இன்னும் மேம்படலாம்," என்று ஆளுநர் கூறினார். "ஒவ்வொரு அமெரிக்கக் குழந்தைக்கும் நிறைவேற்றப்படக்கூடிய அனைத்து வாய்ப்புகளையும் வழங்கும் கொள்கையை நான் ஏற்கிறேன், ஆனால் இது அதைச் செய்வதற்கான வழி அல்ல," என்றார்.
வர்த்தகம் மற்றும் விசாக்கள் தொடர்பான இந்தியா-அமெரிக்கா இடையேயான தற்போதைய சுணக்கம், நீண்டகால இருதரப்பு உறவின் பாதையில் ஒரு தற்காலிகத் தடையா அல்லது உறவில் மாற்றமா என்று கேட்டதற்கு, மர்ஃபி கூறினார்: "இது ஒரு குறுகிய கால நடைமுறையாக இருக்கும் என்று நம்புகிறேன். இரு தரப்பிலும் நம்பிக்கையை மீண்டும் பெறுவது எளிதல்ல.... ரஷ்யாவைக் கண்டிக்க வேண்டும் என்ற அதிபர் டிரம்பின் நோக்கத்தை நான் ஏற்கிறேன். அது பிரச்சினை அல்ல. பிரச்சினை என்னவென்றால், அதை நீங்கள் எப்படிச் செய்கிறீர்கள் என்பதுதான்... டிரம்பின் நிர்வாகக் கொள்கைகளில் பலவற்றில் இதுதான் நிலை. இது கொள்கையைப் பற்றி வாதிடுவதை விட, அதைச் செயல்படுத்தும் விதம் பற்றிய வாதமாகவே உள்ளது. ஆனால் இது குறுகிய காலத்திற்குதான் இருக்கும் என்று நான் நம்புகிறேன்".
இயல்பிலேயே தான் நேர்மறையாளன் எனக் கூறிய அவர், “இங்கு ஏராளமான விஷயங்கள் பணயத்தில் இருப்பதாக நான் நினைக்கிறேன். நாம் ஒருவருக்கொருவர் மிகவும் பின்னிப் பிணைந்துள்ளோம். அதாவது, தற்போதைய நிலையில் ஆழமான தொடர்புகளைக் கொண்ட பல நிறுவனங்களையும் பல்கலைக்கழகங்களையும் கொண்டுள்ளோம். எனவே, இதனை ஒரு கட்டுக்குள் வைத்திருக்க முடியும் என நான் நம்புகிறேன்” என்றார்.
H-1B விசா பிரச்சினைகள், இந்தியப் பணியாளர்கள் மற்றும் மாணவர்களை எவ்வாறு பாதிக்கக்கூடும் என்பது குறித்து அவர் கூறுகையில், "உங்கள் நாட்டிலிருந்து கெட்டவர்களை வெளியேற்ற விரும்புகிறீர்களா? நான் அதற்கு முழு ஆதரவு தருகிறேன், ஆனால் மாணவர் விசா செயல்முறை எப்போதும் ஒரு நல்லதாகவே நான் கருதுகிறேன்..... H-1 விசாவிலும் கூட, நான் அந்தத் திட்டத்தை விரிவுபடுத்துவேன். எல்லைகளைப் பாதுகாத்து, பின்னர் நமக்குத் தேவையான திறமைகளைப் பெற அந்தத் திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும்," என்றார்.
H-1B விசா பிரச்சினைகளால் அமெரிக்காவிற்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை குறையுமா என்று கேட்டதற்கு, அவர், "துரதிர்ஷ்டவசமாக, குறையும் என்றே நான் நினைக்கிறேன்... அவர்கள் வேறு எங்காவது செல்வார்கள் அல்லது இங்கேயே தங்கிவிடுவார்கள். அதிகமான அமெரிக்கப் பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் இருப்பைக் கொண்டிருந்தால் நான் ஆச்சரியப்படமாட்டேன். நீங்கள் ஒன்று பிளஸ் மூன்று, இரண்டு பிளஸ் இரண்டு, மூன்று பிளஸ் ஒன்று போன்ற திட்டங்களைக் காணலாம்" என்றார். "ஒரு மாதத்திற்கு முன்பு தொடங்கிய செமஸ்டருக்காக 2,000-க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் தங்கள் விசாக்களுக்காகக் காத்திருக்கிறார்கள். வெளியுறவுத் துறையுடன் நாங்கள் பணியாற்றி வருவதால், ஒரு தீர்வு கிடைக்கும் என்று நினைக்கிறேன். ஆனால் அது ஒரு சவால், அதை நாம் கடந்து வர வேண்டும், அது ஒரே இரவில் நடக்காது".
எடுக்கப்பட்ட சில முடிவுகளைத் திரும்பப் பெற முடியுமா என்று கேட்டதற்கு, ஆளுநர் கூறினார்: "நான் டிரம்பின் நிர்வாகம் அல்லது எந்த நிர்வாகத்திற்காகவும் பேச முடியாது. H-1B விசா வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டு 24 மணி நேரத்திற்குள் மாற்றப்பட்டதை நீங்கள் ஏற்கனவே பார்த்திருக்கிறீர்கள். ஆம், இன்றைய நிலையை விட அது மோசமாகாது. இது மேம்பட முடியுமா? ஆம். சட்ட நடவடிக்கை இருக்கும் என்பது என் யூகம், எங்களையும் சேர்த்து நிறைய பேர் அதைக் கவனித்து வருகிறார்கள். எனவே திரும்பப் பெறுவது பற்றி எனக்குத் தெரியவில்லை... அது முன்பு இருந்த நிலைக்குத் திரும்புமா? எனக்குத் தெரியாது, ஆனால் அவர்கள் விலையைக் குறைத்து அதை ஏப்ரல் வரை தாமதப்படுத்தியுள்ளனர்".
மாணவர் விசாக்கள் மேம்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார். முன்பு விசாக்களைப் பெறுவது மூன்று மாதப் பந்தயமாக இருந்தது என்று கூறிய அவர், "இப்போது இது நீண்டகால செயல்முறையாக, அநேகமாக ஆண்டு முழுவதும் நடக்கும் செயல்முறையாக மாறும். இவை அனைத்தும் வெளிப்படையாக, யார் ஜனாதிபதியாக இருக்கிறார் என்பதைப் பொறுத்தது" என்றார்.
வெண்பா (தமிழில்)
மூலக்கட்டுரை: https://indianexpress.com/article/business/india-us-deal-could-involve-a-grand-bargain-on-oil-new-jersey-governor-10273885/
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு