உக்ரைன் போரால் பலமடையும் ரஷ்யா

தமிழில் : மருதன்

உக்ரைன் போரால் பலமடையும் ரஷ்யா

பொய்யாகிப் போன பொருளாதார நிபுணர்களின் கணிப்புகள்

ரஷியா உக்ரைன் மீது ஆக்கிரமைப்பை துவங்கிய நாள் முதல் ரஷியப் பொருளாதாரம் பற்றி தொடர்ச்சியான எதிர்மறை கணிப்புகள் அத்தனையையும் பொய்யாக்கி மிகுந்த பலத்தோடு தன் பொருளாதாரத்தை காப்பாற்றி வருகிறது ரஷியா.

எண்ணெய் வர்த்தக தடை, சர்வதேச பணச் சந்தையில் ரஷிய ரூபிளுக்கு எதிராக விதிக்கப்பட்டத் தடை என நேட்டோ நாடுகளின் பலவகையான பொருளாதார தடைகளையும் மீறி ரஷிய பொருளாதாரம் வெற்றி நடைபோடுகிறது.

தொடரும் பொருளாதார வளர்ச்சி

உக்ரைன் மீது மேற்கொண்ட ஆக்கிரமிப்பினால் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 35% சரிவை ரஷியா சந்திக்கும் என கணித்தது புகழ் பெற்ற ஜெ.பி.மோர்கன் நிறுவனம். சோவியத் ஒன்றியம் உடைந்த 90களில் சந்தித்ததை விட பல மடங்கு பொருளாதார சரிவை சந்திக்கும் என கோல்டுமேன் சாக்ஸ் நிறுவனம் கணித்தது.

ஆனால் ஆக்கிரமிப்பை துவங்கிய மூன்று மாதத்தில் வெறும் 4% சரிவை மட்டுமே உள்நாட்டு உற்பத்தியில் சந்தித்து உலக பொருளாதார வல்லுனர்களின் கணிப்பை பொய்யாக்கியுள்ளது ரஷியா. கடந்த ஆண்டு கொரோனா நெருக்கடியின் போது ரஷியா சந்தித்த 7.4% உள்நாட்டு உற்பத்தி சரிவை விட ஆகிரமிப்பினால் ஏற்பட்ட உற்பத்தி சரிவு மிகவும் குறைவே ஆகும்.

ஆசிய நாடுகளுக்கு எதிர்பார்த்த அளவைவிட அதிகமான ரஷிய எண்ணெய் ஏற்றுமதி, பாராளுமன்றத்தினால் வரையப்பட்ட பொது வேலைவாய்ப்புத் திட்டம் மற்றும் அதன் பயனாய் நாட்டில் ரஷியக் குடிமக்களிடம் நிலவிய பண்டங்களின் ஆரோக்கியமான தேவை அளவு ஆகியவை ரஷியாவின் பொருளாதார கட்டமைப்பை உருக்கொலையாமல் காப்பாற்றி வருவதாக சர்வதேச நிதியம் (IMF) தெரிவித்துள்ளது.

ஆசியாவை மையப்படுத்தி எண்ணெய் ஏற்றுமதி அதிகரித்துள்ளது

ரஷியாப் பொருளாதாரத்தின் பிரதான பங்களிப்பு தனது நாட்டின் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு ஏற்றுமதியை சார்ந்தே அமைந்துள்ளது. தனது நடப்பாண்டு நிதியறிக்கையில் 45% வருவாயை ரஷியா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு ஏற்றுமதி மூலமே பெறுகிறது.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் பொருளாதார தடையானது அந்நாடுகளின் ரஷிய எண்ணெய் பரிவர்த்தனைகளில் 75 விழுக்காட்டை பாதித்தது. அதன் அடிப்படையிலேயே அமெரிக்க பொருளாதார வல்லுனர்கள் ரஷிய பொருளாதாரம் பற்றிய தங்களின் எதிர்மறை கணிப்பை மேற்கொண்டனர்.

சர்வதேச வர்த்தகதின் பணப் பரிவர்த்தனைகளுக்கு பயன்படும் SWIFT வங்கி அமைப்பிலிருந்தும் ரஷியாவின் மத்திய வங்கி வெளியேற்றப்பட்ட நிலையில் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு இணையாக ஒரு மாற்று சந்தையை ரஷியாவினால் கண்டுபிடிக்க முடியாது எனும் அடிப்படையில் கோல்டுமேன் சாக்ஸ் நிறுவனம் தன் கணிப்பை மேற்கொண்டது.

சீனாவும் தன் பங்கிற்கு ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதியை அதிகப்படுத்தாத நிலையில் இப்போதும் ரஷியா தினசரி 74 லட்சம் பீப்பாய்கள் ஏற்றுமதி செய்துவருகிறது.

இதற்கு முக்கியக் காரணம் இந்தியா தன் தினசரி ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதியை 900% அதிகப்படுத்தியதும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளாலும் ரஷிய கச்சா எண்ணெயிலிருந்து முற்றிலும் விடுபடமுடியாத நிலை இருப்பதாலும் தான். இன்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் தினசரி 28 லட்சம் பீப்பாய்கள் இறக்குமதி செய்துகொண்டுதான் இருக்கின்றன.

புத்துயிர் பெறும் தொழில் மற்றும் சேவைத்துறை

உக்ரைன் ஆக்கிரமிப்பை ரஷிய தொடங்கிய சில நாட்களில் உள்நாட்டு தொழிற்சாலை உற்பத்தியை அளவிடும் PMI (Purchasing Managers Index) எனப்படும் புள்ளி 50.8 என்னும் அளவிலிருந்து 37 என்னும் அளவிற்கு குறைந்தது. இது வெறும் ஆரம்பம்தான் எனவும் அதிகப்படியான ஏற்றுமதித் தடைகளினால் ரஷியாவின் உள்நாட்டு தொழிற்சாலை உற்பத்தி மேலும் பலமடங்கு சரிய அதிக வாய்ப்புள்ளதாகவும் கோல்டுமேன் சாக்ஸ் நிறுவனம் கணித்தது.

ஆனால் அதற்கு நேர்மாறாக கடந்த ஏப்ரல் மாதம் PMI 52.2 புள்ளிகள் என்னும் அளவை மீண்டும் எட்டியுள்ளது பல மேற்கத்திய பொருளாதார  “அறிஞர்களை” அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

- மருதன் (தமிழில்)

மூலக்கட்டுரை : Markets Insider