சிந்தூர் நடவடிக்கைக்குப் பிறகு மற்ற நாடுகளுடன் தீவிர இராணுவப் பயிற்சிகளை மேற்கொள்ளும் இந்தியா

தமிழில்: செந்தாரகை

சிந்தூர் நடவடிக்கைக்குப் பிறகு மற்ற நாடுகளுடன் தீவிர இராணுவப் பயிற்சிகளை மேற்கொள்ளும் இந்தியா

கடந்த மாதம் பாகிஸ்தான் மீது தொடுக்கப்பட்ட சிந்தூர் இராணுவ நடவடிக்கைக்குப் பிறகும், மற்ற நாடுகளுடன் தனது இராணுவப் பயிற்சித் திட்டங்களை இந்தியா சற்றும் தளர்த்தாமல், அதே வீரியத்துடன் தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, வடக்கு அரபிக்கடலில் இங்கிலாந்துடன் சேர்ந்து நீர்மூழ்கிக் கப்பல் எதிர்த்தாக்கு ஒத்திகைகளை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ள நிலையில் அமெரிக்கப் படைகளுடன் சிறப்புப் பயிற்சி ஒத்திகைகளிலும் தீவிரமாக ஈடுபட்டது. அடுத்ததாக மங்கோலியாவில் நடைபெறவிருக்கும் முத்தரப்புப் போர் சாகசங்களுக்கும் தன்னை முழுமையாகத் தயார்படுத்தி வருகிறது. 

ஜூன் 9 மற்றும் 10-ம் தேதியில் நடைபெற்ற குறிப்பான போர் ஒத்திகைக்காக, இந்தியக் கடற்படை, பிரிட்டனின் எச்.எம்.எஸ். பிரின்ஸ் ஆஃப் வேல்ஸ் மற்றும் எச்.எம்.எஸ். ரிச்மண்ட் ஆகியவற்றை உள்ளடக்கிய விமானம் தாங்கிக் கப்பல் தாக்குதல் குழுவுடன் இணைந்து, தனது மறைத்தாக்கு போர்க்கப்பலான ஐ.என்.எஸ். தபாரையும், கல்வாரி ரக நீர்மூழ்கிக் கப்பலுடன் நெடுந்தூரக் கடல்சார் ரோந்து விமானமான பி-8ஐ ஆகியவற்றையும் வியூகரீதியாகக் களமிறக்கியது. 

கடந்த மே ஏழாம் நாள், இந்திய விமானப்படையும், தரைப்படையும் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் ஒன்பது பயங்கரவாத முகாம்களின் குவிமையங்கள் மீது துல்லியமான, ஊடுருவும் தாக்குதல்களைத் தொடுத்த வேளையில், அதற்கு முன்னதாகவே இந்தியா, வட அரபிக்கடலில் தனது ஐ.என்.எஸ். விக்ராந்த் விமானம் தாங்கிக் கப்பலின் தலைமையின் கீழ், மிக்-29கே போர் விமானங்களுடன் கூடிய பல முன்னணி போர்க்கப்பல்களையும், நீர்மூழ்கிக் கப்பல்களையும் பகைவரை அச்சுறுத்தித் தடுக்கும் வலிமைவாய்ந்த வியூக நிலையில் முன் நகர்த்தி நிலைநிறுத்தியிருந்தது. இந்தியாவின் இத்தகைய வியூக அடிப்படையிலான அணிவகுப்பின் காரணமாக, பாகிஸ்தான் கடற்படை அதன் சொந்தக் கரையோரங்களிலேயே தற்காப்பு நிலையில் முடங்கிப்போக நேர்ந்தது.

இதையொட்டி, இந்திய விமானப்படையை சேர்ந்த கருட் கமாண்டோக்கள், மே 26 முதல் ஜூன் 10 வரையான காலகட்டத்தில், வட இந்தியாவின் பலவேறு பகுதிகளில் அமெரிக்க விமானப்படை வீரர்களுடன் இணைந்து தீவிரமான போர்ப் பயிற்சிகளை மேற்கொண்டனர்."டைகர் க்ளா" (புலித்தாடை) எனப் பெயரிடப்பட்ட இப்பயிற்சி, வரலாற்றிலேயே சிறப்புப் படைகள் பங்கேற்ற இத்தகையதொரு முதலாவது கூட்டுப் பயிற்சியாகும். "நாடுகளுக்கிடையிலான கூட்டணிகளை விரிவுபடுத்துவது, சிறப்புப் போர் நடவடிக்கைகளில் உள்ள சிறந்த வழிமுறைகளையும் அனுபவங்களையும் பரஸ்பரம் பரிமாறிக்கொள்வது, அத்துடன் இரு விமானப்படைகளுக்கும் இடையே இணைந்து செயல்படும் திறனை வளர்த்தெடுக்கும் வகையில் கூட்டாகப் பயிற்சி மேற்கொள்வதுமே இப்பயிற்சியின் தலையாய நோக்கமாகும்" என்று இராணுவ அதிகாரி தபேலா கூறியுள்ளார்.

இந்திய இராணுவத்தின் குமாவோன் படைப்பிரிவு வீரர்கள் உட்பட, ஒரு பெண் அதிகாரி மற்றும் இரு பெண் வீரர்கள் கொண்ட பல்வேறு படைப் பிரிவுகளைச் சேர்ந்த இராணுவக் குழுவினர், ஜூன் 14 முதல் 28 வரை நடைபெறவுள்ள "கான் குவெஸ்ட்" கூட்டு இராணுவப் பயிற்சியில் அமெரிக்கா மூன்றாவது பங்கேற்பாளராக, புதன்கிழமை மங்கோலியாவின் உலான்பாட்டர் எனும் இடத்திற்கு வந்தடைந்தனர். "பல்வேறு நாடுகளின் சூழலுகேற்ப இந்திய ஆயுதப் படைகளை அமைதி காக்கும் பணிகளுக்குத் திறம்பட தயார்ப்படுத்துவதே இப்பயிற்சியின் தலையாய நோக்கம் ஆகும். மேலும் இப்பயிற்சியின் வாயிலாக, அமைதிக் காலத்தில் இப்படைகளுக்கு இடையேயான ஒருங்கிணைப்புத் திறனையும் (interoperability), இராணுவத் தயார்நிலையையும் (military readiness) மேம்படுத்துவதே இதன் குறிக்கோள்" என்று ஓர் அதிகாரி விளக்கமளித்தார்.

- செந்தாரகை (தமிழில்)

மூலக்கட்டுரை: https://timesofindia.indiatimes.com/india/india-conducts-military-exercises-with-other-countries-after-operation-sindoor/articleshow/121784596.cms

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு