ஐரோப்பிய யூனியனின் தடைகள் மற்றும் அமெரிக்க வரிவிதிப்புகளின் பின்னணி
தமிழில்: வெண்பா

'ஐரோப்பிய யூனியனின் தடைகளும், அமெரிக்காவின் வரிகளும் எண்ணெயைப் பற்றியதல்ல. அவர்கள் சந்தை அணுகலை விரும்புகிறார்கள்' - முன்னணி எரிசக்தி நிபுணர்
ரஷ்ய இறக்குமதிகளை விட இந்தக் கதையில் இன்னும் பல விஷயங்கள் உள்ளன என்று தெரிகிறது என அந்த எரிசக்தி நிபுணர் கூறினார்.
எரிசக்தி நிபுணர் அனஸ் அல்ஹாஜி, இந்தியா மீது சமீபத்தில் விதிக்கப்பட்ட ஐரோப்பிய யூனியன் தடைகளும் அமெரிக்க வரிவிதிப்புகளும், ரஷ்ய எண்ணெய் இறக்குமதி பற்றியதல்ல. மாறாக உலகின் மிகப்பெரிய சந்தையை அணுகுவதைப் பற்றியது என்று கூறினார்.
"சமீப வாரங்களில் நான் வலியுறுத்தியது என்னவென்றால், இந்தியாவின் மீதான ஐரோப்பிய ஒன்றியத் தடைகளும் அமெரிக்க வரிகளும் ரஷ்ய எண்ணெய் இறக்குமதிக்கு தொடர்பில்லாதவை. இப்போது நோக்கங்கள் தெளிவாகத் தெரிகின்றன: ஒன்று, அவர்கள் உலகின் மிகப்பெரிய சந்தையை அணுக முற்படுகிறார்கள். வரலாற்று ரீதியாக, ஐரோப்பிய சக்திகள் மூலப்பொருட்களுக்காகவும், தங்களின் உற்பத்திப் பொருட்களுக்கான சந்தைகளுக்காகவும் நாடுகளை காலனித்துவப்படுத்தின. அதே குறிக்கோள், வேறுபட்ட முறைகள்! ரஷ்யாவுடனான உறவுகள் குறித்த அவை கவலைப்பட்டபோதிலும், ஐரோப்பிய யூனியன் இந்தியாவுடன் ஆழமான உறவை எதிர்பார்க்கிறது" என்று அல்ஹாஜி X தளத்தில் எழுதினார்.
ரஷ்யாவுடனான இந்தியாவின் உறவு குறித்த பதட்டங்கள் இருந்தபோதிலும், வர்த்தகம், பாதுகாப்பு, தொழில்நுட்பம் மற்றும் காலநிலை கொள்கை ஆகியவற்றில் இந்தியாவுடனான ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான திட்டத்தை ஐரோப்பிய ஆணையம் வெளியிட்ட அதே நாளில் அவரது கருத்துக்கள் வெளிவந்தன. ஐரோப்பிய யூனியனும் இந்தியாவும் ஒரு தடையற்ற வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தையின் இறுதிக் கட்டத்தில் உள்ளன; இந்த ஆண்டின் இறுதிக்குள் இந்த ஒப்பந்தம் முடிவடையும் என இரு தரப்பினரும் நம்புவதாக ராய்ட்டர்ஸ் புதன்கிழமை அன்று செய்தி வெளியிட்டது. மேலும் ரஷ்ய எண்ணெய் வாங்குதல்கள் தொடர்பாக இந்திய மற்றும் சீனப் பொருட்கள் மீது 100% வரை வரிகளை விதிக்குமாறு G7 மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகளை 2022-லேயே வலியுறுத்தி வந்தார் டிரம்ப்; மீண்டும் பதவிக்கு வந்தபிறகு அவை வேகம் பெற்றுள்ளன.
ஐரோப்பிய யூனியனின் வெளியுறவுக் கொள்கைத் தலைவர் காஜா கல்லாஸ், ரஷ்யாவுடனான இந்தியாவின் உறவுகள் "தெளிவான கருத்து வேறுபாடுகளை" உருவாக்கியுள்ளன என்பதை ஒப்புக்கொண்டார், ஆனால் இந்தியாவைத் தனிமைப்படுத்த ஐரோப்பா விரும்பவில்லை என்றும் கூறினார். "கேள்வி என்னவென்றால், இந்த வெற்றிடத்தை வேறு யாராவது நிரப்ப நாம் விட்டுவிடுகிறோமா அல்லது நாமே அதை நிரப்ப முயற்சிக்கிறோமா என்பதுதான்," என்று அவர் கூறினார். ஐரோப்பிய ஆணையத்தின் வியூக ஆவணம், இந்தியாவை உலகப் பொருளாதாரத்தின் எதிர்காலத் தூணாக விவரித்துள்ளது, 2030-க்குள் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இந்தியா இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. முதலீட்டுப் பாதுகாப்பு, விமானப் போக்குவரத்தை அதிகரிப்பது, விநியோகச் சங்கிலிகளைப் பாதுகாப்பது, பசுமை ஹைட்ரஜன், கனரகத் தொழில்துறையின் கார்பன் வெளியேற்றத்தைக் குறைத்தல் மற்றும் கூட்டான ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகள் உள்ளிட்ட சாத்தியமான ஒத்துழைப்புக்கான பகுதிகளை அது கோடிட்டுக் காட்டியது.
ஜப்பான், தென் கொரியாவுடன் உள்ள ஏற்பாடுகளைப் போலவே இந்தியாவுடனும் பாதுகாப்பு மற்றும் ராணுவ கூட்டணியை ஏற்படுத்த ஐரோப்பிய யூனியன் பரிசீலித்து வருகிறது, மேலும் ஆப்பிரிக்கா மற்றும் தெற்காசியாவில் கூட்டுத் திட்டங்களைத் திட்டமிடுகிறது.
தள்ளுபடி விலையில் கிடைக்கும் ரஷ்ய கச்சா எண்ணெயிலிருந்து இந்தியா "லாபம் ஈட்டுகிறது" என்ற அமெரிக்காவின் கூற்றுகளை அல்ஹாஜி தொடர்ந்து மறுத்து வருகிறார். இந்த மாத தொடக்கத்தில் CNBC-யிடம் பேசிய அவர், "ரஷ்ய இறக்குமதிகளை விட இந்தக் கதையில் இன்னும் பல விஷயங்கள் உள்ளன என்று தெரிகிறது. ஏனெனில், ஐரோப்பிய ஒன்றியம் ரஷ்யாவிடமிருந்து குறிப்பிடத்தக்க அளவு இயற்கை எரிவாயு மற்றும் LNG-ஐ இறக்குமதி செய்கிறது. அதைப் பற்றி யாரும் எதுவும் கூறவில்லை. துருக்கி ரஷ்யாவிடமிருந்து குறிப்பிடத்தக்க அளவு எண்ணெயை இறக்குமதி செய்கிறது, மேலும் ஐரோப்பாவிற்கு துருக்கியின் பெட்ரோலியப் பொருட்கள் ஏற்றுமதி இந்தியாவை விட அதிகமாக உள்ளது" என்றார்.
ரஷ்ய எண்ணெயிலிருந்து இந்திய சுத்திகரிப்பு நிறுவனங்கள் "ரத்தப் பணம்" சம்பாதிக்கின்றன என்ற அமெரிக்க வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவரோவின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த அல்ஹாஜி, ஏற்றுமதி அளவுகள் குறிப்பிடத்தக்க அளவில் மாறவில்லை என்று கூறினார். "உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பிற்கு முன்பும் இப்போதும் உள்ள இந்திய பெட்ரோலிய ஏற்றுமதியைப் பார்த்தால் — அது கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக இருக்கிறது. எனவே, அவர்கள் ஏற்றுமதி செய்வதற்காக இறக்குமதி செய்கிறார்கள் என்ற கருத்து சரியல்ல," என்று அவர் கூறினார்.
இந்த மாற்றங்களை விநியோகச் சங்கிலிகளின் வழித்தட மாற்றம் என்று அவர் விவரித்தார். "இந்தியா அந்த பெட்ரோலியப் பொருட்களை ஆசியாவிலுள்ள மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து கொண்டிருந்தது. ரஷ்ய பெட்ரோலியப் பொருட்களை இறக்குமதி செய்வதிலிருந்து ஐரோப்பிய யூனியன் தன்னைத் தானே தண்டித்துக் கொண்டதால், அவர்கள் அதை ஆசியாவிற்குத் திருப்பிவிட்டனர். இந்தியா அதை ஈடுசெய்கிறது, அதே நேரத்தில் ஆசிய சந்தைக்கு குவைத், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஓமனில் உள்ள மத்திய கிழக்கின் புதிய சுத்திகரிப்பு ஆலைகள் மூலம் விநியோகம் செய்யப்படுகிறது".
வெண்பா (தமிழில்)
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு