சீனாவின் இராணுவ தொழில்நுட்ப மேலாதிக்கம் மற்றும் உலகளாவிய இலட்சியம்

வெண்பா (தமிழில்)

சீனாவின் இராணுவ தொழில்நுட்ப மேலாதிக்கம் மற்றும் உலகளாவிய இலட்சியம்

சீனாவின் இராணுவம் இப்போது முன்னணியில் உள்ளது

கூம்பு வடிவ ஏவுகணைகளைத் தாங்கிய பெரிய வாகனங்கள் ஒரு சதுக்கத்தின் வழியாக அணிவகுத்துச் செல்கின்றன. நேர்த்தியாக ஒழுங்கமைக்கப்பட்ட வரிசைகளில் நிற்கும் சிப்பாய்களின் ஒரு பெரிய கூட்டமும், இராணுவ இசைக்குழுவும் தொலைவில் காணப்படுகின்றன.

மேற்கத்திய நாடுகள் ஒரு காலத்தில் சீனாவின் தொழில்நுட்ப வளர்ச்சியைப் பற்றித் தங்களுக்குள் சொல்லிக்கொண்ட கதை (அது மேற்கத்திய தொழில்நுட்பத்தை வெறுமனே நகலெடுக்கிறது; அது அறிவுசார் சொத்துரிமையைத் திருடுகிறது; அதன் வெற்றிகள் வீணான பொது மானியங்களால் விளைந்தவை) பொய்யானது என்பது இப்போது பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்தக் கதையில் இன்னும் சில உண்மைகள் இருந்தாலும், அது இன்று பொய்யாக்கப்பட்டுள்ளது. இன்று சீனா ரோபோட்டிக்ஸ், மின்சார வாகனங்கள், அணு உலைகள், சூரிய ஆற்றல், ட்ரோன்கள், அதிவேக ரயில் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) ஆகியவற்றில் முன்னோடியாகவும் தொழில்நுட்பத் தலைவராகவும் மாறியுள்ளது.

இதற்கு ஆதாரம்தான், செப்டம்பர் 3 அன்று பெய்ஜிங்கில் நடந்த இராணுவ அணிவகுப்பு. இந்த பட்டியலில் இராணுவத் தொழில்நுட்பத்தையும் நாம் சேர்க்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்துகிறது. சீனாவின் இராணுவமான மக்கள் விடுதலை இராணுவம் (PLA) வெளிநாட்டு இராணுவ உபகரண வடிவமைப்புகளை நகலெடுக்கிறது என்று சொல்வது இனி செல்லாது. சீனா இப்போது புதியனவற்றைப் படைக்கிறது, மேலும் அது முன்னிலை வகிக்கிறது. இந்த செயல்பாட்டில், பல தசாப்தங்களாக அமெரிக்காவிற்கும் அதன் கூட்டாளிகளுக்கும் சாதகமாக இருந்த பிராந்திய இராணுவ சமநிலை, மாற்றமுடியாத வகையில் மாற்றப்பட்டு வருகிறது.

"ஜப்பானிய ஆக்கிரமிப்புக்கு எதிரான சீன மக்களின் நீதிப் போர் மற்றும் உலக பாசிச எதிர்ப்புப் போரின்" 80வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வெற்றி தின அணிவகுப்பு, சீனாவின் சமகால இராணுவ வலிமைக்கான ஒரு காட்சியாகவும், அதன் எதிர்காலத்தைப் பற்றிய ஒரு முன்னோட்டமாகவும் இருந்தது. சீனா தனது சமீபத்திய இராணுவ உபகரணங்களைக் காட்சிப்படுத்த முன்பு தயக்கம் காட்டியது, ஆனால் இந்த நிகழ்விற்காக அந்த மூடுதிரை விலக்கப்பட்டது.

முக்கிய சிறப்பம்சங்களில் ஒன்றாக, சீனாவின் வளர்ந்து வரும் விமானந்தாங்கி கப்பல்களின் தொகுப்பில் பணியாற்றவிருக்கும் விமானங்களின் காட்சியும் அடங்கும். தற்போது மூன்று கப்பல்களைக் கொண்ட இந்தத் தொகுப்பில், வரும் ஆண்டுகளில் அமெரிக்க கடற்படையின் புதிய ஜெரால்ட் ஃபோர்டு வகையைப் போலவே பெரிய -திறன் வாய்ந்த அணுசக்தியால் இயங்கும் விமானந்தாங்கி கப்பலும் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது. நான்கு புதிய வகை 'லாயல் விங்மேன்' ட்ரோன்கள் வெளியிடப்பட்டன. மேலும், இதற்கு முன் பார்த்திராத நான்கு கப்பல் மற்றும் தரைவழித் தாக்கு ஏவுகணை அமைப்புகள், அத்துடன் புதியதொரு ஆளில்லா நீர்மூழ்கிக் கப்பல், புதிய டார்பிடோக்கள்  ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டன.

இந்த அணிவகுப்பு, சீன இராணுவ-தொழில்துறை வளாகத்திலிருந்து கொள்முதல் செய்பவர்களுக்கு உற்சாகத்தை வழங்கியது. 2024 ஆம் ஆண்டு கிறிஸ்துமஸுக்குப் பிறகு, புதிய கண்ணுக்குப் புலப்படாத போர் விமானங்களின் சோதனையோட்டங்களும் மங்கலான காணொளிகளும் புகைப்படங்களும் சமூக ஊடகங்களில் தோன்றத் தொடங்கின. சில வாரங்களுக்குப் பிறகு, 'நேவல் நியூஸ்' (Naval News) இதழ், நீட்டிக்கக்கூடிய சாலைப் பாலங்களைக் கொண்ட ஒரு தனித்துவமான இயந்திர கப்பல்களை சீனா உருவாக்கி வருவதாகத் தெரிவித்தது. வாகனங்களைச் சுமந்து செல்லும் கப்பல்கள், அணுகுசாலைகளே இல்லாத கடற்கரைப் பகுதிகளில் கூட தங்கள் சரக்குகளை இறக்க வழிவக்கும். தைவான் மீதான படையெடுப்பின் போது கனரக கவச வாகனங்களை தரையிறக்க அவை மிகவும் பொருத்தமானவையாக இருக்கும் என்பதை இவை உறுதிப்படுத்துகின்றன.

ஜனவரியின் பிற்பகுதியில், 'பைனான்சியல் டைம்ஸ்' (Financial Times) இதழ் வெளியிட்ட வர்த்தக செயற்கைக்கோள் புகைப்படங்கள், பெய்ஜிங்கிற்கு வெளியே பென்டகனை விட 10 மடங்குக்கும் பெரிய புதிய இராணுவ கட்டளை மையத்தை சீனா நிர்மாணித்து வருவதைக் காட்டின. மே மாதம், பாகிஸ்தானும் இந்தியாவும் சர்ச்சைக்குரிய காஷ்மீர் மீது 125 விமானங்களை உள்ளடக்கிய ஒரு வான்வழிப் போரை நடத்தின; பாகிஸ்தானின் விமானப்படை சீன உபகரணங்களைப் பயன்படுத்தியது, இது வரையறுக்கப்பட்ட சான்றுகளின் அடிப்படையில் சிறப்பாகச் செயல்பட்டது.

சொந்த நாட்டிலேயே உருவாக்கப்பட்ட இராணுவ-தொழில்துறை வளாகத்தை இந்த நூற்றாண்டின் நடுப்பகுதிக்குள் உலகத்தரம் வாய்ந்த ஒன்றாக மாற்ற வேண்டும் என்ற தனது இலட்சியத்தை சீனாவின் தலைமை பகிரங்கமாக அறிவித்துள்ளது. நிச்சயமாக, இதற்கு தொழில்நுட்பம் மட்டும் போதாது. சமீபத்தில் நடந்த மூத்த அதிகாரிகளின் பதவி நீக்கங்கள், மக்கள் விடுதலை இராணுவத்தில் (PLA) கடுமையான ஊழல் மற்றும் செயல்திறன் பிரச்சினைகள் இருப்பதைக் காட்டுகின்றன.

ஆனால், தொழில்நுட்பத் துறையில் அதன் இலட்சியத்திற்கான ஏராளமான சான்றுகள் நீண்ட காலமாக உள்ளன. சீனா தனது நவீனமயமாக்கலை 1990களின் முற்பகுதியில் தொடங்கியது, அன்றிலிருந்து, இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு எந்தவொரு இராணுவப் படையும் காணாத வேகமான தொழில்நுட்ப மாற்றத்தை மக்கள் விடுதலை இராணுவம் (PLA) அடைந்துள்ளது எனலாம். டிசம்பர் 2024 முதல் கிடைத்துள்ள தரவுகள் இந்த போக்கை மேலும் வலுப்படுத்துகின்றன, சீனாவின் இலட்சியங்கள் இன்னும் குறைவாக மதிப்பிடப்படுகின்றனவா என்ற கேள்வியை எழுப்ப வேண்டும்.

இதைவிடப் பெரிய கேள்வி, இவ்வளவு இராணுவ பலத்தை வைத்துக்கொண்டு சீனா என்னதான் செய்ய விரும்புகிறது?

ஒரு சாத்தியம் என்னவென்றால், அது அமெரிக்காவிற்கு நேரடியாக சவால் விடும் வகையில், உலகளாவிய இராணுவ நிலைப்பாட்டைக் கொண்ட ஒரு படையாக தன்னை உருவாக்கி வருகிறது. தொலைதூரத்தில் உள்ள ஆஸ்திரேலியா, சீனாவின் இந்தப் புதிய திறன்களை பிப்ரவரியில் உணர்ந்தது. அப்போது மக்கள் விடுதலை இராணுவத்தின் (PLA) கடற்படை, போர்க்கப்பல்களின் ஒரு சிறிய படையை ஆஸ்திரேலியாவைச் சுற்றி வலம் வர அனுப்பியது. அதை கண்ட ஆஸ்திரேலியா, சீனாவின் இராணுவ சக்தி இப்போது புதியதொரு வீச்சை அடைந்துள்ளதாக செய்தியை அனுப்பியது.

ஆயினும், கடந்த ஒன்பது மாதங்களின் வெளிப்பாடுகளில் இருந்து ஒரு பரந்த முடிவுக்கு வர வேண்டுமானால், சீனா தனது இராணுவ சக்தியை பசிபிக் பெருங்கடல் முழுவதும், ஏன் உலகம் முழுவதும் பரப்புவதில் மட்டுமே முதன்மையாகக் கவனம் செலுத்தவில்லை என்பதுதான். நாம் காணும் பல புதிய உபகரணங்கள் அந்த நோக்கத்திற்காக வெளிப்படையாக வடிவமைக்கப்படவில்லை.

நிச்சயமாக, அத்தகைய உபகரணங்களை பல பயன்பாடுகளுக்கு உட்படுத்தலாம். கடந்த சில தசாப்தங்களில், சீனா நீண்ட தூரங்களுக்கு இராணுவ சக்தியைப் பயன்படுத்தும் தனது திறனை கணிசமாக வளர்த்துள்ளது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அது இராணுவ முக்கியத்துவம் வாய்ந்த பொருட்களைக் கொண்டு செல்லும் பெரிய விமானங்களின் (strategic airlifters) வலிமையானதொரு தொகுப்பை உருவாக்கி வருகிறது, அதன் வீரர்கள் மற்றும் உபகரணங்களை உலகெங்கும் விரைவாகப் பறக்க அனுமதிக்கிறது. மிக சமீபத்தில், தனது வான்வழி எரிபொருள் நிரப்பும் விமானங்களின் தொகுப்பை வளர்க்கத் தொடங்கியுள்ளது; அத்தகையதொரு தொகுதி, உலகளவில் விமான சக்தியைப் பரப்பும் அமெரிக்காவின் திறனின் முக்கிய பண்பாக நீண்ட காலமாக இருந்து வருகிறது. மேலும், சீனா இப்போது டஜன் கணக்கான "ஆழ்கடல்" (blue water) போர்க்கப்பல்களைக் கொண்டுள்ளது, அவை திறந்த கடலில் கூட செயல்படும்படி வடிவமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் விமானந்தாங்கி கப்பல்களும், கடற்படைக்குத் தேவையான பொருட்களை வழங்கும் கப்பல்களும் அடங்கும்.

ஆனால் மறுபுறம், 2017ல் ஜிபூட்டியில் அமைத்த ஒரே ஒரு வெளிநாட்டுத் தளத்தைத் தவிர்த்து சீனா புதிதாக எந்த தளங்களையும் அமைக்கவில்லை என்பதையும் கவனியுங்கள்; கண்டம் விட்டுக் கண்டம் பாயும் குண்டுவீசும் திறன் கொண்ட விமானத்தை களமிறக்க அதற்கு இன்னும் பல ஆண்டுகள் ஆகும்; அமெரிக்காவைப் போன்றதொரு உலகளாவிய கூட்டணியமைப்பு அதனிடம் இல்லை. இந்த ஆண்டு வெளிவந்துள்ள புதிய போர் விமானங்கள், தரையிறங்கும் படகுகள், ட்ரோன்கள், ஏவுகணை அமைப்புகள் ஆகியவையும் உலகளாவிய சக்திப் பரவலில் அதிக கவனம் செலுத்துவதைக் குறிக்கவில்லை. அவை முதன்மையாக சீனாவின் நிலையை அதன் அண்டை பிராந்தியத்தில் வலுப்படுத்தவே உதவும்.

(சாம் ரோகவீன், லோவி நிறுவனத்தின் சர்வதேசப் பாதுகாப்புத் திட்டத்தின் இயக்குநர்)

வெண்பா (தமிழில்)

மூலக்கட்டுரை:https://foreignpolicy.com/2025/09/03/china-military-parade-technology-pla-weapons/

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு