அமெரிக்காவின் பணவீக்க குறைப்புச் சட்டத்தால் கூர்மையடையும் ஐரோப்பிய யூனியன் - அமெரிக்க முரண்பாடுகள்
சாராம்சத்தில், IRA ஐரோப்பிய பொருளாதாரத்தை புதைகுழிக்குள் தள்ளும் – இது "மேற்குலகை பிளவுபடுத்தக் கூடும்"
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆகஸ்ட் மாதம் பணவீக்க குறைப்புச் சட்டத்தில் (IRA - Inflation Reduction Act) கையெழுத்திட்டார், ஜனவரியில் அமலுக்கு வருவிருக்கும் அச்சட்டம் ஐரோப்பாவில் கடும் அதிருப்தியை கிளப்பியுள்ளதோடு அமெரிக்க-ஐரோப்பிய கூட்டணிக்கு கடுமையான சவாலாக உள்ளது.
IRA பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டிருந்தாலும், நடைமுறையில் அது வர்த்தகப் பாதுகாப்புவாதத்திற்கு இட்டுச் செல்வதோடு அமெரிக்காவின் உயர் பணவீக்கத்தையும் பொருளாதார நெருக்கடிகளையும் சிறிதும் தணிக்காது.
இந்த சட்டம் மின்சார வாகனங்கள், முக்கிய தாதுக்கள், பசுமை ஆற்றல் மற்றும் மின் உற்பத்தி ஆகியவற்றில் உற்பத்தி மற்றும் முதலீடுகளுக்கு அதிக மானியங்களை வழங்குகிறது. இச்சட்டம் WTO விதிகளை மீறுவதோடு ஐரோப்பாவிற்கு எதிராகவும் மாறுகிறது.
இந்த மசோதா ஐரோப்பிய உயர் தொழில்நுட்ப தயாரிப்புகளுக்கு தடைகளை விதிப்பதோடு ஐரோப்பிய நாடுகளை ஏற்றுமதிக்கான போட்டியிலிருந்து விலக்குகிறது. இதனால் ஐரோப்பிய நிறுவனங்களின் நலன்கள் பாதிக்கப்படும். கூடுதலாக, மானியங்கள் மற்றும் மலிவான உற்பத்தி சக்திகளின் கூட்டு விளைவால் ஐரோப்பிலுள்ள அதிக நிறுவனங்கள் அமெரிக்காவிற்குச் செல்ல நேரிடும். அதன் விளைவாக ஐரோப்பிய தொழில் துறை பாதிக்கப்படும். சாராம்சத்தில், IRA ஐரோப்பிய பொருளாதாரத்தை புதைகுழிக்குள் தள்ளும் – இது "மேற்குலகை பிளவுபடுத்தக் கூடும்" என்று பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் எச்சரித்துள்ளார்.
"உலகத் தலைவர்" என்று சுயமாக நியமித்த நிலைக்கு ஏற்ப, "கூட்டணி அமைப்பு" அதன் உலகளாவிய மேலாதிக்கத்தின் மிக முக்கியமான தூண் என்று அமெரிக்கா மீண்டும் மீண்டும் அறிவித்தது, அதே நேரத்தில் அதன் கூட்டாளிகளை கண்கட்டி வித்தைக்காட்டி ஏமாற்றுகிறது. அமெரிக்க கொள்கைகளின்படி, அது அதன் சொந்த தேசிய நலன்களைப் பாதுகாப்பதற்காக கூட்டாளிகளின் நலன்களை நசுக்குகிறது. கூட்டணி அமைப்பு என்று அழைக்கப்படுவது அமெரிக்க நலன்களுக்கு சேவை செய்வதற்கான ஒரு கருவியாகும், அவை சிலசமயங்களில் வளைந்து கொடுக்கலாம் அல்லது எதிர்நிலையும் எடுக்கலாம். உதாரணங்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.
டொனால்ட் டிரம்பின் ஆட்சியில் கடுமையாக உடைந்திருந்த இந்த அட்லாண்டிக் கடல்கடந்த கூட்டணியை சரிசெய்வதில் தான் பதவியேற்ற பிறகு பைடன் நிர்வாகம் மெனக்கட்டது. இருப்பினும், அமெரிக்காவின் நலன்கள் ஆபத்தில் இருக்கும்போது, அதன் கூட்டாளிகளின் நலன்களைப் பொருட்படுத்தாமல் "நடவடிக்கை எடுக்கிறது". உதாரணமாக, ஆப்கானிஸ்தானிலிருந்து துருப்புக்களை திரும்பப் பெற்றபோது அமெரிக்கா தனது நட்பு நாடுகளை விட்டு வெளியேறியது. ஆஸ்திரேலியாவிற்கு ஒரு நீர்மூழ்கிக் கப்பலை உருவாக்கும் ஒரு பெரிய ஆர்டரை பிரான்ஸிடமிருந்து தட்டி பறித்தது. பதிலுக்கு ஆஸ்திரேலியா ஆக்கஸ் கூட்டணிக்கு அணுசக்தியால் இயங்கும் கப்பலை உருவாக்கும் பணியில் ஈடுபட்டது. அமெரிக்கா உக்ரைன் போரால் பெரும் செல்வத்தை ஈட்டியது. அதே நேரத்தில் ஐரோப்பியர்கள் இயற்கை எரிவாயுவை வாங்குவதற்கு கிட்டத்தட்ட "மூன்று முதல் நான்கு மடங்கு விலை" கொடுத்தனர். இவை அனைத்தும் அமெரிக்க அகராதியில், நண்பர்கள் என்போர் சுயநலத்திற்கு அடிபணிந்தவர்கள் என்பதைக் குறிக்கிறது.
"முதல் நிலை அமெரிக்கா" என்பதன் இந்த எடுத்துக்காட்டுகள் சில் நாடுகள் அல்லது குறிப்பிட்ட பகுதிகளுக்கு மட்டுமே பொருந்தும், ஆனால் IRA என்பது " முதல் நிலை அமெரிக்கா " என்பதன் மேம்படுத்தப்பட்ட பதிப்பாகும், மேலும் அது ஐரோப்பாவிற்கு விளைவிக்கும் தீங்கு உலகளாவியது. இதனால்தான் அனைத்து மட்டங்களிலும் உள்ள ஐரோப்பிய அதிகாரிகள் இந்த செயலை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். ஐரோப்பிய ஒன்றியம், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி தலைவர்கள் பதிலடி கொடுக்க முடிவெடுத்துள்ளனர். ஐரோப்பிய ஒன்றிய வர்த்தக அமைச்சர்கள் பைடன் நிர்வாகத்திடம் மானியங்கள் பற்றியும், ஐரோப்பிய நிறுவனங்களுக்கு எதிரான பாகுபாடுகளை தவிர்க்கவும் வேண்டுகோள் விடுத்தனர். மக்ரோன் ஐரோப்பாவிலுள்ள பல வணிக நிர்வாகிகளை சந்தித்து, ஐரோப்பாவில் தங்கள் பரிவர்த்ததனைகளை தொடரும்படி வேண்டியுள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியம் IRA க்கு எதிர்ப்பு தெரிவித்தாலும், நிலைமைகள் சாதகமாக இல்லை. மானியங்களைக் கணிசமாகக் குறைக்கச் சட்டத்தில் திருத்தம் செய்யுமாறு ஐரோப்பிய ஒன்றியம் அமெரிக்காவிடம் கேட்டுள்ளது, ஆனால் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு விட்டதால் அமெரிக்கா அதை திருத்துவதற்கான சாத்தியமில்லை. அமெரிக்க தடையின் காரணமாக WTO மேல்முறையீட்டு தீர்ப்பாயமும் பல ஆண்டுகளாக இடைநிறுத்தப்பட்டுள்ளது, இதனால் ஐரோப்பா ஒரு மனுவை சமர்ப்பித்தாலும், அது கல்லெறிவதற்கு சமமே.
மின்சார கார்கள் மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் தயாரிப்புகளுக்கான அமெரிக்க சந்தைக்கான அணுகல் பிரச்சினையில், கனடா மற்றும் மெக்சிகோவிற்கான தீர்வையே ஐரோப்பா கோருகிறது, அது நிறைவேற்றப்பட்டால், கொரியா, ஜப்பான் போன்ற பிற அமெரிக்க நட்பு நாடுகளுக்கு அவை பொருந்தும். ஐரோப்பாவிலிருந்து வாங்குதல் மற்றும் ஐரோப்பிய மானியங்கள் அமெரிக்க மானியங்களுடன் போட்டியிடுவது மட்டுமே மீதமுள்ள வழிகள், இது இரு தரப்புக்கும் இடையே மானியப் போட்டியை ஏற்படுத்தும்.
இந்த இரண்டு முன்மொழிவுகளிலும் ஐரோப்பாவிற்குள் வெவ்வேறு கருத்துக்கள் உள்ளன. சுருக்கமாக, ஐரோப்பா IRA பற்றி மிகவும் தெளிவாக உள்ளது, ஆனால் அதன் பதில்கள் தெளிவாக இல்லை. ஆயினும்கூட, ஐரோப்பா துடிக்கிறது. இப்பிரச்சினைக்குத் தீர்வு காண நவம்பரில் அமெரிக்க-ஐரோப்பிய கூட்டு பணிக்குழு அமைக்கப்பட்டது. பலமுறை கூட்டியும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதற்காக பைடனை சந்திக்க மக்ரோன் அமெரிக்கா சென்றார், IRA வில் அமெரிக்கா சில மாற்றங்களைச் செய்யும் என்றும் பைடன் கூறினார். ஆனால் அமெரிக்க செய்தித் தொடர்பாளர் IRAவில் திருத்தங்கள் கொண்டுவரும் திட்டமேதுமில்லை என்பதை உறுதிப்படுத்தினார். அமெரிக்கா பின்வாங்காமல் அதன் சொந்த நலன்களை நிலைநிறுத்தும் என்பது தெளிவாகிறது. இதன் பிறகு, ஐரோப்பாதான் தெளிவான நிலையெடுக்க வேண்டும்.
IRA அமெரிக்க - ஐரோப்பா கூட்டணிக்கிடையே முரண்பாடுகளை முடுக்கிவிட்டுள்ளது.
முதலாவதாக, இன்று உலகம் ஆழமான நீண்டகால மாற்றங்களுக்கு உட்பட்டுள்ளது. இரு தரப்பினரும் கூட்டாளிகள், ஆனால் அமெரிக்க நலன்கள் எப்போதும் முதன்மையானவை. கூட்டணியின் போக்கை வரையறுப்பதில் போட்டி நலன்கள் ஒரு முக்கிய காரணியாக மாறலாம். புவிசார் அரசியல் சுதந்திரம் மற்றும் நடவடிக்கை சுதந்திரத்தை உறுதி செய்வதற்கான ஒரே வழி ஐரோப்பிய நட்பு நாடுகளுக்கு ஒரு சுதந்திரமான வெளியுறவுக் கொள்கையை பேணுவதுதான்.
இரண்டாவதாக, ரஷ்யா-உக்ரைன் மோதல் வெடித்ததில் இருந்து, ஐரோப்பிய கூட்டாளிகள் ரஷ்யாவைச் சார்ந்து எரிசக்தியில் இருந்து விலகி அமெரிக்க இயற்கை எரிவாயு அல்லது LNGக்கு மாற முயற்சிக்கின்றனர். அமெரிக்க பொருளாதாரத் தடைகள் ரஷ்ய எரிவாயுவின் மீதான ஐரோப்பாவின் சார்பைக் குறைத்துவிட்டன, ஆனால் ஐரோப்பாவை திணறடித்து ரஷ்யாவை பலவீனப்படுத்த அமெரிக்கா முயற்சிக்கிறது, இது போரினால் ஏற்பட்ட மிகப்பெரிய இணை சேதமாகும்.
மூன்றாவதாக, அட்லாண்டிக் கூட்டமைப்பு ஒற்றுமை என்று அழைக்கப்படுவது தவறானது. நீண்ட காலமாக, ஐரோப்பிய கூட்டாளிகள் ஒரு சுதந்திரமான வெளியுறவுக் கொள்கை இல்லாத நிலையில் அமெரிக்காவை கண்மூடித்தனமாக பின்பற்றி வருகின்றனர், இது தற்போதைய இக்கட்டான நிலைக்கு முக்கிய காரணமாகும். ஐரோப்பா மாற்றங்களைச் செய்யவில்லை என்றால், நீண்ட கால மந்தநிலை மற்றும் தொழில்துறை வீழ்ச்சி போன்றவையால் முரண்பாடு புது அவதாரமெடுக்கும்.
நான்காவதாக, அமெரிக்கா தனது விருப்பத்தை அதன் ஐரோப்பிய கூட்டாளிகள் மீது திணிப்பது எந்த வகையிலும் எளிதானது அல்ல. உதராணத்திற்கு நெதர்லாந்து அமெரிக்க அணுகுமுறையை எதிர்ப்பதோடு ஏற்றுமதி கட்டுப்பாடுகளுக்கு மறுத்துவிட்டது. சீனச் சந்தையில் நெதர்லாந்து தனது நிலையைத் தக்கவைத்துக் கொள்ள விரும்பும் அதே வேளையில், அதிக திறன் கொண்ட சிப் உற்பத்தி இயந்திரங்களை சீனாவுக்கு ஏற்றுமதி செய்வதற்கான உரிமை உட்பட, சீன சில்லுத் தொழிலை அமெரிக்கா முடக்க எத்தனிக்கிறது. சீனா மீது ஏற்றுமதிக் கட்டுப்பாடுகளை விதிக்கும் அமெரிக்க பாதையை பின்பற்ற மாட்டோம் என்று நெதர்லாந்து தெளிவுபடுத்தியுள்ளது.
இறுதியாக, அமெரிக்காவும் ஐரோப்பாவும் அவர்கள் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்களால் பிளவுபட்டுள்ளன. போர்த்தந்திர ரீதியாக அமெரிக்கா சீனாவை அதன் முதன்மை போட்டியாளராக பார்க்கிறது, அடுத்ததாக ரஷ்யா வருகிறது. எரிசக்தி விநியோகம் மற்றும் பாதுகாப்பின் அடிப்படையில் ரஷ்யாவை அச்சுறுத்தலாக ஐரோப்பா பார்க்கிறது. இது அமெரிக்க-ஐரோப்பிய தொடர்புகளின் பரந்த போர்த்தந்திர சூழலாகும். அமெரிக்காவின் அண்டை நாடுகளை வறியோராக்கும் அணுகுமுறை - குறிப்பாக IRAவை நிறைவேற்றுவதில் - அதன் ஐரோப்பிய நட்பு நாடுகளின் நலன்களை புதைகுழிக்குள் தள்ளியுள்ளது, சீனாவை பற்றிய அவர்களின் கொள்கைகளை மறுபரிசீலனை செய்யத் தூண்டுகிறது. அமெரிக்கக் கொள்கையைப் பின்பற்றுவதற்கும், சீனாவுடன் போட்டியிடுவதற்கும் பதிலாக, ஐரோப்பியர்கள் சீனாவுடனான தங்கள் உறவை வலுப்படுத்தவும் மறுசீரமைக்கவும் முயல்கிறார்கள்.
சில ஐரோப்பிய நாடுகளும் அதன் அரசியல்வாதிகளும் சீனாவிலிருந்து துண்டிக்கப்பட வேண்டும் அல்லது குறைந்தபட்சம் அவர்கள் சார்ந்திருப்பதைக் குறைக்க வேண்டும் என்று வாதிட்டாலும், சீனாவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையிலான வலுவான பொருளாதார கூட்டுறவை தன்னிச்சையாகவோ அல்லது தடையின் மூலமாகவோ துண்டிக்க முடியாது. மறுபுறம், சித்தாந்தம் மற்றும் மதிப்புகளின் அடிப்படையில் சீனாவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையே குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் உள்ளன, மேலும் இரு தரப்பும் தங்கள் வேறுபாடுகளை களைய தொடர்பு மற்றும் ஆலோசனைக்கான ஆக்கபூர்வமான அணுகுமுறையை பராமரிக்க வேண்டும்.
- வெண்பா
(தமிழில்)
மூலக்கட்டுரை : வு செங்லாங்
https://www.chinausfocus.com/foreign-policy/headwinds-for-transatlantic-alliance?utm_source=social&utm_medium=Social%2C+focus&utm_campaign=HeadwindsTransAtlantic