சீனாவின் எல்லைகளுக்கு அருகே ராணுவத்தின் இருப்பை அதிகரிக்க அமெரிக்கா திட்டம்
விஜயன்
ஆசியா-பசிபிக் பிராந்தியத்தில், குறிப்பாக சீனாவுக்கு அருகில் தனது இராணுவ இருப்பை விரிவுபடுத்தும் நோக்கில் பல திட்டங்களை அமெரிக்கா அறிவித்துள்ளது. சீனாவின் வளர்ந்து வரும் அதிகாரத்தையும், செல்வாக்கையும் சுற்றி வளைத்து மட்டுப்படுத்த வேண்டும் என அமெரிக்கா முயற்சிக்கிறது என்பதை இந்தத் திட்டங்கள் காட்டுகின்றன.
பசிபிக் பகுதியில் அதிக விமான தளங்களை உருவாக்குதல்:
அமெரிக்க விமானப்படை "அஜில் காம்பாட் எம்ப்ளாய்மென்ட்" (ACE) என்ற புதிய இராணுவ உத்தியைக் அறிமுகப்படுத்தியுள்ளது. பசிபிக் பிராந்தியத்தில் அமெரிக்காவின் விமானத் தளங்களைக் அதிகப்படுத்துவதென்பது இந்த உத்தியின் முக்கியமான அம்சமாகும். இதுமட்டுமல்லாது போர் விமானங்கள், போர் ஆயுதங்கள் மற்றும் போர் வீரர்களை வெவ்வேறு இடங்களுக்கு நகர்த்துவதன் மூலம் நினைத்த மாத்திரத்தில் நினைத்த இடங்களிலிருந்து தாக்கும் உத்தி என்றும் விளக்கப்படுகிறது. சீனாவின் ஏவுகணை தாக்குதல்களிலிருந்து அமெரிக்கா தற்காத்துக் கொள்வது இந்த உத்தியின் மூலம் எளிதாக்கப்படுகிறது. அந்நிய நாடுகளின் வலிமையான இராணுவத் தளங்கள் இருக்கிறதென்றால் இந்த உத்தியின் செயல்பாடு குறைவாகவும், அதே நேரத்தில் வலிமை குறைந்த, இங்கொன்றும் அங்கொன்றுமாக அமைக்கப்பட்டிருக்கும் இராணுவத் தளங்கள் இருக்கும் இடங்களில் இந்த உத்தியின் செயல்பாடு மிகத் தீவிரமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
தைவான் அருகே சிவிலியன் துறைமுகத்தை உருவாக்குதல்:
தைவானுக்கு மிக அருகில் உள்ள படானஸ் தீவுகளில் சிவிலியன் துறைமுகத்தை உருவாக்குவது குறித்து பிலிப்பைன் நாட்டுடன் அமெரிக்கா பேசி வருகிறது. இது சீனாவை வம்புக்கு இழுப்பதாகவே கருதப்படுகிறது, ஏனெனில் தைவான் சீனாவிற்கு முக்கியமான பிரச்சினையாக இருந்து வருகிறது. கடல்வழி ஆதிக்கத்தை நிலைநிறுத்துவதற்கும், கப்பல் போக்குவரத்திற்கும் அரணாக கருதப்படும் தைவானுக்கு அருகிலுள்ள தீவு நாடுகளை தன் பக்கம் ஈர்ப்பதற்கு அமெரிக்கா முயற்சித்து வருகிறது. அமெரிக்காவின் நட்பு நாடாகவும், தென் சீனக் கடலில் சீனாவின் போட்டியாளராகவும் இருக்கும் பிலிப்பைன்ஸுடனான தொடர்பை வலுப்படுத்துவதற்கும் அமெரிக்கா விரும்புகிறது.
சீனாவை எதிர்கொள்ள ட்ரோன் படையை உருவாக்குதல்:
சீனாவை எதிர்த்தப் போரில் அமெரிக்க பாதுகாப்புத் துறை பல ட்ரோன் படைகளைப் பயன்படுத்த எண்ணி வருகிறது. ட்ரோன்கள் ஆளில்லாமல் பறக்கக்கூடிய சிறிய விமானங்கள் ஆகும். இவற்றை தனித்து தாக்குவதற்கும், படையாக தாக்குதல் தொடுப்பதற்கும் பயன்படுத்தலாம். கப்பல் படை, ஏவுகணைகளைக் கொண்டு தாக்கும்திறன் மற்றும் அதிக எண்ணிக்கையிலான போர் வீரர்கள் ஆகியவற்றில் சீனாவின் கையே ஓங்கியுள்ளது. ட்ரோன் படைகள் நிச்சயமாக இவற்றை சமாளிக்கும் திறம் வாய்ந்த ஒன்றுதான் என அமெரிக்கா நம்புகிறது. ஆனால் பல ட்ரோன் படைகளை விரைவாக தயாரிப்பது அவ்வளவு எளிதான விசமயல்ல. மேலும் சீனாவும் ட்ரோன் படைகளை குறைந்த விலையில் தயாரிக்கும் திறன் பெற்றிருக்கிறது என்பதையும் நாம் மறந்துவிடக்கூடாது.
அமைதியை நிலைநாட்டவும், தென் சீனக் கடலில் கப்பல்கள் சுதந்திரமாக நடமாடவும் இந்த திட்டங்களை வகுத்து வருவதாக அமெரிக்கா கூறி வருகிறது. ஆனால் தென் சீனக் கடலில் நடக்கும் கடல்வழிப் போக்குவரத்தைப் பொறுத்தமட்டில் பெரும்பாலான கப்பல்கள் சீனாவுடன் வணிகம் செய்து வருகின்றன, அப்பிராந்தியத்தில் பல நாடுகளுக்கு மிகப்பெரிய வர்த்தக பங்காளியாக சீனாவே இருந்து வருகிறது. தென் சீனக் கடலுக்கு அருகில் அமெரிக்க இராணுவத்தின் இருப்பை அதிகப்படுத்துவது இந்த வர்த்தகத்தை அச்சுறுத்துவதோடு அவர்கள் சொல்வது போல அமைதியை நிலைநாட்டவோ சுதந்திரமான கப்பல் போக்குவரத்தை உத்திரவாதப்படுத்தவோ உதவாது.
அமெரிக்காவை விட அதிகமான தொழிற்சாலைகளைக் கொண்டிருப்பதால், அதிக கப்பல்களையும், ஏவுகணைகளையும் சீனாவால் உருவாக்க முடியும். இதுமட்டுமல்லாது, Anti-access, area denial" (A2/AD) என்ற சீனாவின் உத்தியை காப்பியடிக்கும் வகையில்தான் ACE உத்தியை அமெரிக்கா உருவாக்கியுள்ளது. எனினும், இதற்கு ஈடுகொடுத்து சீனாவும் வேகமாக தன்னை தயார்படுத்திக் கொள்ள முடிவதோடு, அதிக ட்ரோன் படைகளையும்கூட பயன்படுத்த முடியும் என்பதே தெரிகிறது.
அமெரிக்கா தனது இராணுவ மற்றும் சிவிலியன் திட்டங்களின் மூலம் சீனாவின் நீர் எல்லையை மட்டுமல்லாது நிலப் பகுதியையும் நெருங்கி வருகிறது. இதன் காரணமாக போர் ஏற்பட்டால் சீனாவின் வர்த்தகம் பாதிக்கப்படுவது உண்மைதான் என்றாலும், மற்ற நாடுகளுடனான வர்த்தகத்தைத் தொடர "இணைப்பு மற்றும் சாலை திட்டம்" (BRI) சீனாவிற்கு கைகொடுக்கும் என்கிறார்கள்.
தொகுத்துச் சொல்வதெனில், அமெரிக்கா சீனாவுடன் போருக்குத் தயாராகி வருவதாகத் தெரிகிறது. 2025க்குள் சீனாதான் போரைத் தொடங்க முயற்சிக்கிறது என அமெரிக்கா ஒருபக்கம் கூறி வந்தாலும் அமெரிக்காவும் அவசரம் காட்டுவதாகத் தெரிகிறது. தொழிற்சாலைகளிலும் ராணுவ பலத்திலும் சீனா நாளுக்கு நாள் வலுவடைந்து வருகிறது. கண்கெட்டப் பிறகு சூரிய நமஸ்காரம் என்ற நிலை வரும் முன் அமெரிக்கா இப்போதே செயல்பட விரும்புகிறது. எப்படியிருந்தபோதிலும் அமெரிக்காவின் திட்டங்களைப் பார்க்கும்போது அதிகம் பலன் கிடைக்காது என்றே கருதப்படுகிறது.
- விஜயன்
based on: https://journal-neo.su/2023/09/05/washingtons-expanding-military-footprint-on-chinas-doorsteps/