அமெரிக்க விளைநிலங்களை சீனா வாங்கிக் குவிப்பதாக சொல்வது எந்தளவிற்கு உண்மை?

எமது ஆய்வில் கண்ட முடிவுகளென்ன - கட்டுரையாளர்: லாரா ஸ்ட்ரிக்லர் மற்றும் நிக்கோல் மோடர்

அமெரிக்க விளைநிலங்களை சீனா வாங்கிக் குவிப்பதாக சொல்வது எந்தளவிற்கு உண்மை?

கடந்த 2022, ஜனவரி 1 முதல் சீன நிறுவனங்கள் எவ்வளவு விளைநிலங்களை வாங்கிக் குவித்துள்ளன என்பது குறித்து அமெரிக்க வேளாண் துறை வசமிருந்த ஏராளமான ஆவனங்களை NBC செய்தி நிறுவனம் அலசி ஆராய்ந்தது.

அமெரிக்காவிலுள்ள விளைநிலங்களை,(இவற்றில் சில இராணுவக் கட்டுப்பாடுகள் நிறைந்த பகுதிகளுக்கு அருகில் உள்ளன)  சீன முதலீட்டு நிறுவனங்கள் பெருமளவில் வாங்கிக் குவித்து வருவதாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து அங்குள்ள மாநில மற்றும் ஒன்றிய அரசியல்வாதிகள் நில வணிகத்தில் அந்நிய நிறுவனங்களுக்கு கடிவாளமிட வேண்டும் என்று அழுத்தம் கொடுக்கத் துவங்கியுள்ளனர்.

பொதுவாக, அமெரிக்காவில் விளைநிலங்கள் வாங்குவோரின் தகவல்கள் அந்நாட்டின் வேளாண் துறையிடம் பதிவறிக்கைகளாக பராமரிக்கப்படும். அவ்வகையில், அந்நிய நிறுவனங்கள் வாங்கிக் குவித்த விளைநிலங்கள் தொடர்பான ஏராளமான ஆவனங்களை NBC செய்தி நிறுவனம் ஆராய்ந்தபோது, கடந்த ஒன்றரை ஆண்டுகளாக சீன முதலீட்டாளர்கள் மிகக் குறைந்த அளவிலான நிலங்களையே அதாவது நாட்டிலுள்ள 1.3 பில்லியன் ஏக்கர் நிலத்தில் 1,400 ஏக்கர் நிலங்களை மட்டுமே வாங்கியுள்ளதாக பதிவறிக்கைகள் தெரிவிக்கின்றன. அவ்வகையில், மொத்தமுள்ள அமெரிக்க விளைநிலங்களில் சீன நிறுவனங்களின் பிடியில் வெறுமனே 0.03 சதவீத நிலங்கள் மட்டுமே இருப்பதாக தெரிய வந்துள்ளது.

அந்நிய நிறுவனங்கள் வாங்கிக் குவிக்கும் நிலங்களின் பதிவறிக்கைகள் முறையாகப் பதிவு செய்யப்படுவதுமில்லை என்பதோடு, இது தொடர்பான சட்ட நடவடிக்கைகளும் முறையாக செயல்படுத்தப்படுவதுமில்லை என்பதும் எங்களது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. 

அமெரிக்க ஒன்றிய அரசின் சட்டப்படி, அமெரிக்காவிலுள்ள விளைநிலங்களை வாங்கும் அல்லது குத்தகைக்கு எடுக்கும் எந்தவொரு நபரும் அல்லது எந்தவொரு நிறுவனமும் 90 நாட்களுக்குள் அனைத்து விவரங்களையும் அமெரிக்க வேளாண் துறையிடம் தெரிவிக்க வேண்டுமென கூறுகிறது, இருந்தும், சில நிறுவனங்கள் பல ஆண்டுகளாக - அதிலும் ஒரு நிறுவனம் 20 ஆண்டுகளுக்கு மேலாக- பதிவறிக்கைகள் தாக்கல் செய்யாமல் இருக்கின்றன. இதே காலக்கட்டத்தில் பதிவறிக்கைகள் சமர்ப்பிக்கத் தவறிய நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்ட தண்டத் தொகையும்கூட 1,21,000 டாலர்களுக்கு மேலாகச் செல்லவில்லை.

கடந்த 2022, ஜனவரி 1 முதல் 35 அமெரிக்க மாகாணங்களில் அந்நிய நிறுவனங்களால் வாங்கப்பட்ட அல்லது குத்தகைக்கு எடுக்கப்பட்ட விளைநிலங்கள் மற்றும் வன நிலங்களில் பதிவறிக்கைகளை ஆராயும் வாய்ப்பு NBC செய்தி நிறுவனத்திற்கு கிடைத்தது. அமெரிக்க விவசாயிகளிடமிருந்து வாங்கப்பட்ட பெரும்பாலான விளைநிலங்கள் காற்றாலை அமைப்பதற்காக ஐரோப்பிய காற்றாலை கம்பெனிகளால் வாங்கப்பட்டிருப்பது தெரிகிறது. இலினொய் மாகாணத்தில் உள்ள ஊரகப் பகுதிகள் நிறைந்த மாவட்டம் ஒன்றில் ஒரு இத்தாலிய காற்றாலை கம்பெனி 40 புதிய விளைநிலங்களை குத்தகைக்கு எடுத்திருப்பதாக பதிவறிக்கையில் சமர்ப்பித்துள்ளது. குறைந்தது நான்கு மாகானங்களிலாவது இதே இத்தாலிய நிறுவனம் நிலங்களை குத்தகை எடுத்திருப்பதாகவும் வெளிப்படுத்தியுள்ளது.

நாங்கள் ஆய்வு செய்த 35 மாநிலங்களில், ஜனவரி 1, 2022 முதல் ஜீன் 30, 2023 வரையில் சீன நிறுவனங்கள் பதினொரு விளைநிலங்களை வாங்கியிருப்பதாக அமெரிக்க வேளாண் துறைக்கு சமர்ப்பித்த பதிவறிக்கையில் கூறியிருப்பதைக் கண்டறிய முடிந்தது.

சீன நிறுவனங்கள் சமர்ப்பித்த பதிவறிக்கைளில் எதுவுமே சமீபத்தில் வாங்கப்பட்டதாக தெரிவிக்கப்படவில்லை, அவற்றில் குறைந்தது ஒரு பதிவறிக்கையாவது ஏற்கனவே சமர்ப்பித்த தகவலையே போலியாக மீண்டும் கணக்காட்டியிருப்பதற்கு வாய்ப்பிருக்கிறது. மற்றொரு நிறுவனம் வாங்கியத் தகவல்கூட ஊடகங்களில் வெளிவராத வரைக்கும் அரசாங்கத்திற்கு தெரிவிக்கபடாமலே இருந்துள்ளது.

மிசோவ்ரியிலும்(2022ல்) வடக்கு கரோலினா மாகாணத்திலும்(2023ல்),  ஸ்மித்ஃபீல்ட் புட்ஸ் என்ற நிறுவனம் 186 ஏக்கர் நிலங்களை வாங்கியிருப்பதாக பதிவறிக்கையில் கூறியுள்ளது. மேலும், 1,28,000 ஏக்கர் நிலங்கள் தங்கள் வசமிருப்பதாக அந்நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறியிருப்பதும் கவனிக்கத்தக்கது. முன்பு அமெரிக்க முதலாளிகளின் கையிலிருந்த இந்நிறுவனத்தை 2013-ல் சீன முதலாளிகள் கைபற்றியுள்ளனர்.

“அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையில் நீடிக்கும் முக்கிய பிரச்சனைகளுக்கு முடிவு காண வேண்டும் என்பது உண்மைதான். ஆனால், அமெரிக்க விளைநிலங்கள் சீன நிறுவனங்களின் உடைமையாக மாறுவது என்ற பிரச்சினை நிச்சயமாக அவற்றில் ஒன்றாக இருக்காது” என்று கார்ப்பரேட் விவகாரத்திற்கான ஸ்மித்ஃபீல்ட் நிறுவனத்தின் துணைத் தலைவர் கூறியுள்ளார்.

 

2017ல், சின்ஜன்ட்டா என்ற நிறுவனம் இலினொஸ் மாகாணம் டெகாடுர் எனுமிடத்தில் நடத்திய ஃபார்ம் ப்ராக்ரஸ் கண்காட்சியின் கொட்டகை படத்தில் காட்டப்படுகிறது.

முன்பு சின்ஜன்ட்டா(Syngenta) ஒரு ஸ்விட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த வேளாண் கார்ப்பரேட் கம்பெனியாக இருந்தது. இந்நிறுவனத்தை 2017ல் ஒரு சீன கம்பெனி விலைக்கு வாங்கிவிட்டது. இதுவரை இந்நிறுவனம் சமர்ப்பித்த பதிவறிக்கைளில் மொத்தமாக 772 ஏக்கர் விளைநிலங்களை வாங்கியிருப்பதாக தெரிவிக்கிறது. அயோவா, பிளோரிடா, கலிபோர்னியா மாகாணங்களில் இந்நிறுவனம் வாங்கியதாக கூறப்படும் அனைத்து நிலங்களுமே பழைய உரிமையாளர் பெயரிலேயே வாங்கியிருப்பதாக பதிவறிக்கைகள் தெரிவிக்கின்றன.

அமெரிக்காவில் மொத்தமாக 6,000 ஏக்கர் விளைநிலங்களை தங்களது நிறுவனம் விலைக்கு வாங்கியிருப்பதாக அல்லது குத்தகைக்கு எடுத்திருப்பதாக NBC செய்தி நிறுவனத்திற்கு சின்ஜன்ட்டா செய்தித் தொடர்பாளர் சஸ்வதோ தாஸ் தெரிவித்திருந்தார்.

அமெரிக்க வேளாண் துறை அல்லது சுற்றுச்சூழல் பாதுகாப்பு முகமையின் சட்ட விதிகள் கோருகின்ற நிபந்தனைகளை பூர்த்தி செய்யும் வகையில் தங்களது நிறுவனம் உற்பத்தி செய்யும் பொருட்களை ஆராய்ச்சி பணிக்காகவே, அமெரிக்காவில் தங்களிடமுள்ள “கணிசமான” விளை நிலங்கள் பயன்படுத்தப்படுகிறது என்று தாஸ் தெரிவித்தார். வேளாண் கார்ப்பரேட் கம்பனிகள் விற்கும் விதைகள், மற்றும் ரசாயணங்கள் உரிய தரப்பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டுமென அந்தந்த அரசு நிறுவனங்களின் விதிகள் கூறுகின்றன. “இவை தொடர்பான அனைத்து செயல்பாடுகளுமே, அமெரிக்க விவசாயிகளுக்கு பலன் கிடைக்கும் வகையில், அமெரிக்க விளைநிலங்களிலும், அமெரிக்க மண்ணிலும் நிகழ்த்தப்படுகின்றன” என்று தாஸ் கூறினார்.

ஹாங்காங்கை சேர்ந்தவொரு கம்பனி 365 ஏக்கர் நிலங்களை வடக்கு டகோட்டா பகுதியில் வாங்கியிருந்தது. கிராண்ட் போர்க்ஸ் என்ற வான்வெளி இராணுவத் தளத்திற்கு அருகாமையில் இந்நிலம் அமைந்திருப்பது தேசப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக விளங்கக்கூடும் என்ற செய்தியை CNBC நாளிதழ் வெளியிட்ட பிறகுதான் இந்நிறுவனம் நிலம் வாங்கியதாக வேளாண் துறையிடம் பதிவறிக்கையை சமர்ப்பித்துள்ளது.

வடக்கு டகோட்டாவின், கிராண்ட் போர்க்ஸ் எனுமிடத்தில் அமைந்துள்ள பூபெங் குழுமத்தின் மக்காச் சோள ஆலை அமையவிருந்த தலத்தின் புகைப்படம் காட்டப்படுகிறது.

CNBC நாளிதழில் பூபெங் நிறுவனம் வாங்கியிருக்கும் நிலம் குறித்தான செய்தி வந்த பிறகு அமெரிக்க தலைநகரான வாஷிங்டனில் பெரும் சர்ச்சை கிளம்பியது. அதன் பிறகே, கிராண்ட் போர்க்ஸ் பகுதியிலிருந்த வேளாண் துறை அதிகாரி அந்நிறுவனத்திற்கு அந்நிய நிறுவனங்களின் உரிமையாளர்கள் தொடர்பான விவரங்களை வெளிப்படுத்தக் கோரி நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார் என்ற விவரமும் NBC செய்தி நிறுவனம் நடத்திய பரிசீலனையில் தெரிய வந்துள்ளது.

இரண்டு வாரம் கழித்து, விதிகளுக்கு உடன்பட்டு பதிவறிக்கைகளை தாக்கல் செய்ய முன்வந்தது. “முழுவதும் நீரைப் பயன்படுத்தி சோளத்தை அரைத்து உயிரி நொதித்தல் முறையில் தேவையான பொருட்களை உற்பத்தி செய்யும் அரவை ஆலையை” அமைப்பதற்காக 9.5 மில்லியன் டாலர்கள் மதிப்பில் மூன்று முறை நிலங்கள் வாங்கப்பட்டிருப்பதாக பதிவறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க வான்படைத் தளத்தை வேவு பார்க்க ஆலையை பயன்படுத்த முடியும் என்று எழுப்பப்பட்ட சர்ச்சைகளை பூபெங் நிறுவனத்தின், அமெரிக்காவிற்கான தலைமைச் செயல்பாட்டு அதிகாரி எரிக் சுதோரஷ் மறுத்துள்ளார்.

“நாங்கள் மட்டுமல்ல எங்கள் ஆலையில் பணிபுரியும் எவரேனும் ஒருவர்கூட உளவு பார்க்க முடியும் என்று கூறுவதை என்னால் கற்பனையில்கூட நினைத்துப் பார்க்க முடியவில்லை” என்று சுதோரஷ் கூறினார். இந்த ஆலை ஒருபோதும் உளவு வேலைக்காக பயன்படுத்தப்படாது என்பதை உங்களால் உறுதிபடக்கூற முடியுமா என்று அவரிடம் கேள்வியெழுப்பிய போது, “நிச்சயமாக உறுதிகூற முடியும்” என்று தெரிவித்திருந்தார்.

இருந்தபோதிலும், உள்ளுர் அளவிலும், மாகாண மற்றும் தேசிய அளவிலும் வந்த எதிர்ப்புகள் காரணமாக இந்த பூபெங் ஆலை நிறுவுவது நிறுத்தப்பட்டது. கிராண்ட் போர்க்ஸ் மாவட்டத்தின் பத்திரப் பதிவு அலுவலகத்தின் தகவல்படி, பூபெங் நிறுவனத்திடம் 300 ஏக்கருக்கும் அதிகமான நிலம் உடைமையாகவுள்ளது. அதாவது, வடக்கு டேகோட்டாவில் சராசரியாக ஒரு குடும்பத்திடம் இருக்கும் நிலவுடைமையில் கால்பங்கைவிட குறைவான நிலமே இந்நிறுவனத்திடம் இருக்கிறது.

சட்ட அமலாக்கத்தில் காணப்படும் ஓட்டைகள் 

காலங்காலமாக, ஒட்டுமொத்த நாட்டிலுள்ள 1.3 பில்லியன் விளை நிலங்களில் வெறுமனே 3.1 சதவீதம் அல்லது 40 மில்லியன் ஏக்கர் நிலங்கள் மட்டுமே அந்நிய முதலீட்டாளர்களின் உடைமையாக இருந்து வந்துள்ளது. இவற்றில் ஏறக்குறைய பாதி நிலங்கள் வன நிலங்களாக உள்ளன. மேலும், அந்நிய முதலீட்டாளர்களால் வாங்கப்பட்டுள்ள 40 மில்லியன் நிலங்களில் மூன்றில் ஒரு பங்கு நிலத்தை கனடாவைச் சேர்ந்த நிறுவனங்களே வாங்கியுள்ள நிலையில், 4,00,000 ஏக்கருக்கும் குறைவான நிலங்கள் மட்டுமே சீன நிறுவனங்களால் வாங்கப்பட்டுள்ளன.

எனினும், காலங்காலமாக இருந்துவரும் விகிதத்தை விஞ்சும் வகையில் அந்நிய நிறுவனங்கள் அதிக விளைநிலங்களை வாங்கிக் குவிப்பது மட்டுமல்லாது அதன் வேகமும் அதிகரித்து வருவதாக அமெரிக்க வேளாண் துறையின்கீழ் செயல்படும் வேளான் சேவக முகமை கூறியுள்ளது. 2011 முதல் 2015 வரையில் பார்த்தோமானால் ஆண்டொன்றிற்கு 8,00,000 ஏக்கர் நிலங்கள் சராசரியாக வாங்கப்பட்டு வந்த நிலையில், 2015 முதல் 2021 வரையில் ஆண்டொன்றிற்கு 22 லட்ச ஏக்கர் நிலங்கள் வாங்கிக் குவிக்கப்படுமளவிற்கு வேகமெடுத்துள்ளது.

அந்நிய நிறுவனங்கள் வாங்கிக் குவிக்கும் நிலங்கள் தொடர்பான விவகாரங்களை ஒழுங்குபடுத்துவதற்கு விதிகளை மேலும் கடுமையாக்க வேண்டுமென அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் தேசப் பாதுகாப்பென்ற பெயரில் போர்க்கொடி தூக்கியுள்ளனர். காவல்துறையினர் இதுபோன்ற விவகாரங்களில் எவ்வாறு கண்காணித்து, சட்ட விதிகளை முறையாக உறுதிபடுத்துவார்களோ அதுபோல அமெரிக்க வேளாண் துறையில் தற்போது நிலவும் பதிவறிக்கைகள் பராமரிக்கும் நடைமுறை இருக்கவில்லை என்று அவர்கள் விமர்சித்தனர்.

அமெரிக்க வேளாண் துறையின் தகவல்படி, கடந்த பத்தாண்டுகளில் மொத்தமாகவே ஆறு நிறுவனங்கள் மட்டுமே முறையாக பதிவறிக்கைகள் சமர்ப்பிக்காததற்கோ அல்லது தாமதமாக சமர்ப்பித்ததற்கோ தண்டத் தொகை கட்டியுள்ளனர்.

2013ல், கனடாவைச் சேர்ந்த இரண்டு நிறுவனங்கள் தாமதமாக பதிவறிக்கைகள் சமர்ப்பித்ததற்காக தண்டிக்கப்பட்டுள்ளனர். ஒராண்டு கழித்து ஒரு சுவிட்சர்லாந்து நாட்டு கம்பனி இதே போல் தண்டத் தொகை கட்டியுள்ளது. அதன்பிறகு, கடைசியாக 2019-ஆம் ஆண்டில் ஒரு ஜப்பானிய நிறுவனம் தண்டத்தொகை கட்டியுள்ளது.

20 ஆண்டுகளுக்கு முன்பு, டெக்சாஸ் மாகாணத்தில், அமெரிக்காவின் தெற்கெல்லையை ஒட்டி 1,30,000 எக்கருக்கும் அதிகமான விளைநிலங்கள் வாங்கியதை கணக்கு காட்டத் தவறியதைக் காரணம் காட்டி கடந்த 2021 ஆம் ஆண்டில் இரண்டு சீன நிறுவனங்கள் மீது 1,35,000 டாலர்களுக்கு அதிகமான தண்டத் தொகை விதிக்கப்பட்டது.

இரண்டு சீன நிறுவனங்களில் ஒன்றான, பிரேசாஸ் ஹைலேண்ட் பிராபர்டீஸ் என்ற நிறுவனத்திற்கு அனுப்பப்பட்ட நோட்டிஸில், 8,017 நாட்களாக பதிவறிக்கை சமர்ப்பிக்க தவறியதை சுட்டிக்காட்டி தண்டத்தொகை விதிக்கப்பட்டிருந்தது. உண்மையில், இவ்வளவு நீண்ட காலம் கணக்கு காட்டப்படாமல் இருந்த காரணத்திற்கு 21 மில்லியன் டாலர்களே தண்டத்தொகை விதிக்கப்பட இருந்ததாக அரசு தரப்பில் முன்மொழியப்பட்ட நிலையில், வேளாண் துறை அதிகாரிகள் 1,20,216.38 டாலர்கள் என்றளவிற்கு குறைத்து கட்ட சொல்லியுள்ளனர். மிகப் பெருமளவில் குறைக்கப்பட்ட இந்த தண்டத்தொகையே கடந்த 20 ஆண்டுகளில் விதிக்கப்பட்ட மிக அதிகளவிலான தண்டத்தொகையாக கருதப்படுகிறது.

வேளாண் துறையின் ஆவணங்கள் கூறுவதுபோல், அந்த இரண்டு சீன நிறுவனங்களும் – ஹார்வெஸ்ட் டெக்சாஸ் மற்றும் பிரேசாஸ் ஹைலேண்ட் – மூன்று மாதங்கள் கழித்து குறைக்கப்பட்ட தண்டத்தொகையை கட்டியுள்ளனர். அதன்பிற்பாடு உள்ளூர் அளவில் எழுந்த கணிசமான எதிர்ப்புகள் காரணமாக அந்நிறுவனங்கள் அமைக்கவிருந்த காற்றாலைகள் திட்டத்தை கைவிட்டது.

விதிகளை அமல்படுத்துவதில் இத்தனை ஓட்டைகளை வைத்துக் கொண்டு உண்மையில் எந்தளவிற்கு அந்நிய நிறுவனங்கள் விளைநிலங்களை வாங்கிக் குவித்துள்ளனர் என்பதை அளவிட்டுச் சொல்வது மிகக் கடினமாக இருக்கும் என்று விதிகளை கடுமையாக்க வேண்டுமெனக் கோரும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூறி வருகின்றனர்.

2023 ஜீலையில், அமெரிக்காவில் விளைநிலங்களை வாங்குவதற்கு சீனா, ரஷ்யா, வட கொரியா மற்றும் ஈரான் உள்ளிட்ட நாடுகளுக்கு அமெரிக்காவின் மாநிலங்களவையில் சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டது. இராணுவத்திற்கான செலவினம் தொடர்பாக கொண்டுவரப்படும் மசோதாவில் இந்த சட்டத்திருத்தம் சேர்க்கப்படுமா இல்லையா என்பது அமெரிக்க நாடாளுமன்றத்தின் இலையுதிர்காலக் கூட்டத்தொடரின் இறுதி வாக்கெடுப்பின்போதே தெரிய வரும்.

இந்த சட்டத் திருத்தத்தை ஆதரித்து வாக்களித்த அயோவா மாகாணத்தைச் சேர்ந்த குடியரசுக் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினரான ஜோனி எர்னஸ்ட் மேலும் சில திருத்தங்களை முன்மொழிந்தார். அமெரிக்காவில் உணவுப்பொருள்கள், மருந்துப்பொருள்களுக்கான ஆணையத்தின் செயலாளரும், வேளாண் துறையின் செயலாளரும் சேர்ந்து அந்நிய நிறுவனங்களால் வாங்கிக் குவிக்கப்படும் ஒவ்வொரு நிலப் பரிவர்த்தனைகளும், உரிய முறையில் சரியாகவும், கால தாமதிமில்லாமலும் கணக்கு காட்டப்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும்; தொடர் கண்காணிப்பை உறுதிப்படுத்தும் வகையில் வேளாண் துறைப் பணியாளர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்க வேண்டும்; இது மட்டுமல்லாது எந்தெந்த அந்நிய நிறுவனங்களெல்லாம் 320 ஏக்கர் அல்லது 5 மில்லியன் டாலர்களுக்கு அதிக மதிப்பிலான நிலங்களை வாங்கின்றனவோ, அவற்றின் பரிவர்த்தனைகளை தனியாக பரிசீலிக்க வேண்டும் என்பன போன்ற ஆலோசனைகளை முன்மொழிந்தார்.

எர்னஸ்ட் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது, “அமெரிக்காவிற்கு எதிராக சீனக் கம்யூனிஸ்ட் கட்சியால் பயன்படுத்தப்படும் எந்தவொரு நிலமும் அதீத எச்சரிகையுடன் பரிசீலிக்கப்பட வேண்டியதாகும். நமது இராணுவத் தலங்கள் அமைந்துள்ள இடங்களை ஒட்டி அமைந்துள்ள முக்கியமான நிலங்களை பின்வாயில் வழியாக சீனா வாங்கியதைத் தொடர்ந்து நாம் மோசமான அச்சுறுத்தல்களை ஏற்கனவே அனுபவித்து வருகிறோம். நாம் சட்டங்களை கடுமையாக்க வேண்டியது அவசியமாக உள்ளது, ஏனெனில், இப்போதுவரை அந்நிய முதலீடுகள் தொடர்பான சட்டங்களை முழுமையாக அல்லது போலீஸ் பாணியில் நடைமுறைப்படுத்த முடியாமல் வேளாண் துறை திணறி வருகிறது.”

“ஜனநாயகக் கட்சியினருடன் சேர்ந்து நமது நாட்டின் வேளாண் துறையை பாதுகாப்பதற்காகவே நான் போராடி வருகிறேன். இதற்கு அமெரிக்காவின் அந்நிய முதலீட்டு கமிட்டியின் ஆதரவும் தேவைப்படுகிறது. நமது எதிரிகளிடமிருந்து நமது நாட்டின் நிலங்களை பாதுகாப்பதற்கு வேளாண் துறையின் நடைமுறைகளை நவீனப்படுத்த வேண்டியுள்ளது; மேலும், நமது நாட்டின் சட்ட அமலாக்க முறையில் காணப்படும் எந்தவொரு ஒட்டையையும் நமக்கு எதிராகவே சீனா பயன்படுத்திவிடாமல் பார்த்துகொள்ள வேண்டும்” என்று எர்னஸ்ட் கூறினார்.

- விஜயன் (தமிழில்)

மூலக்கட்டுரை : https://www.nbcnews.com/news/investigations/how-much-us-farmland-china-own-rcna99274