உலகின் எல்லா கண்களும் ரஃபாவை நோக்கி
செந்தளம் செய்திப்பிரிவு
அக்டோபர் 7 முதல் பாலஸ்தீனத்தின் காசா பகுதி மீது பாசிச இஸ்ரேல் அரசு இனஅழிப்புப் போரைத் தொடர்ச்சியாக நடத்தி வருகிறது.
தினந்தோறும் நூற்றுக்கணக்கான மக்களை கொன்று குவித்து வருகிறது. இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை (மே-26) ரஃபா நகரின் தல்-அஸ்-சுல்தான் பகுதியில் உள்ள பாதுகாப்பு முகாமில் இஸ்ரேல் தாக்குதல் தொடுத்தது இன்று பேசுப் பொருளாகி உள்ளது.
ரஃபா பகுதியில் இஸ்ரேல் தாக்குதல் தொடுக்க கூடாது என தென்னாப்பிரிக்கா, இஸ்ரேலுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் ஏற்கெனவே வழக்கு தொடுத்திருந்தது. மே 24 அன்று அவ்வழக்கின் மீது விசாரணை செய்து ரஃபா மீது இஸ்ரேல் தாக்குதல் தொடக்கக் கூடாது என சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பு வந்த அடுத்த கணமே அதை அலட்சியம் செய்யும்விதமாக ரஃபா மீது யுத்த வெறிக்கொண்டு தாக்குதல் தொடுத்தது இஸ்ரேல் அரசு.
ஹமாசுக்கும் இஸ்ரேல் இராணுவத்திற்கு யுத்தம் நடந்து வருவதால், காசா வாழ் குடிமக்களை ரஃபாவில் உள்ள பாதுகாப்பு முகாமில் குடியேற்றியது ஐ.நா. இந்த பாதுகாப்பு முகாமில்தான் இரத்த வேட்டை நடத்தியுள்ளது இஸ்ரேல் அரசு.
ஞாயிற்றுக்கிழமை இரவு, குழந்தைகள், பெண்கள் அனைவரும் முகாமில் நாம் பாதுகாப்பாக இருக்கிறோம் என நம்பி தூங்குவதற்கு தயாராகி கொண்டிருந்தனர். அப்போது 2000 பவுண்டு எடையுள்ள இரண்டு குண்டுகளை அந்த குடிமக்கள் வாழ் முகாமிற்குள் வீசியுள்ளது இஸ்ரேல் இராணுவம்.
முகாம் தீக்கிரையாக்கப்பட்டது. குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் உள்ளிட்ட சுமார் 60 பேர் கொல்லப்பட்டனர். 350க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
விடியும் வரை அணையாத நெருப்பு; எங்கும் புகை மண்டலம்; எங்கும் மரண ஓலம்; தாய் தந்தையரை இழந்து கதறி அழும் குழந்தைகள்; தீக்கிரையாகி சிதறிக்கிடக்கும் குழந்தையின் சடலங்கள் என அப்பகுதியின் காட்சிகள் காண சகிக்காதவை. அதைவிட கொடூரம் - ஒரு தந்தை தலை துண்டிக்கப்பட்ட தனது பச்சிளம் குழந்தையின் உடலை கையில் ஏந்தி கதறி ஓடும் காட்சி - ஈரக்குலையை நடுங்க வைக்கிறது.
காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சைகூட பெற முடியாத அளவிற்கு திட்டமிட்டு ரஃபா நகரிலுள்ள இரண்டு முக்கியமான மருத்துவமனைகளையும் தாக்குதல் தொடுத்து சிதைத்துள்ளது இஸ்ரேல் அரசு. இதனால் பலி எண்ணிக்கை மேலும் உயர்ந்தே வருகிறது.
ஐ.நா. உத்தரவின் பேரில் அமைக்கப்பட்ட முகாமிலேயே இவ்வாறு இனவெறி பாசிசத் தாக்குதல் தொடுத்து விட்டு, தவறு நடந்துவிட்டதாக ஏமாற்று அறிக்கை கொடுக்கிறான் நெதன்யாகு. இந்த பகுதியில் ஹமாசின் முக்கியமான தளபதிகள் இருவர் இருப்பதாக கூறி உளவுத்துறை தந்த தகவலின் அடிப்படையில்தான் தாக்குதல் தொடுத்தோமே தவிர முகாம் வாழ் மக்களை கொல்வது நோக்கமல்ல என பகல்வேஷம் போடுகிறது இஸ்ரேல் அரசு.
இந்த ஆண்டில் மட்டும் இஸ்ரேலுக்கு 3.7பில்லியன் டாலர் மதிப்பிலான இராணுவ ஆயுத தளவாடங்கள் ஏற்றுமதி செய்து உள்ளது அமெரிக்கா. பாலஸ்தீனத்தின் மீதான இஸ்ரேலின் இனஅழிப்பு போர் சீன – ரஷ்ய - அமெரிக்க ஏகாதிபத்திய நலன்களிலிருந்தே மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறிருக்கையில் ரஃபா முகாம் தாக்குதலுக்கு நீலிக்கண்ணீர் வடிக்கிறார் ஜோ-பைடன். அக்டோபர் -7ல் இருந்து இது வரை சுமார் 12500 குழந்தைகள் உட்பட 36500 பாலஸ்தீனர்களை படுகொலை செய்துள்ளது; சுமார் 85000 பேர் படுகாயமடைந்துள்ளனர். 14 லட்சத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீன மக்களை அகதிகளாக்கியுள்ளது இந்த அமெரிக்க - இஸ்ரேல் பாசிச அரசுகள். சீன-ரஷ்ய ஏகாதிபத்தியங்கள் இந்த இனவழிப்பு யுத்தத்திற்கு மறைமுக ஆதரவளித்து வருகின்றன.
ஒரு கையில் துப்பாக்கி, மற்றொரு கையில் இரத்த வாடை அடிக்கும் ரொட்டித் துண்டு. இதுதான் ஏகாதிபத்தியங்களின் உலகளாவிய இராணுவ செயல்தந்திரம்.
உலகின் பல்வேறு நாடுகள் ரஃபா தாக்குதலுக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றனர். அதில் குறிப்பாக ஸ்பெயின், அயர்லாந்து, நார்வே ஆகிய 3 நாடுகளும் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்து தீர்மானம் போட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அமெரிக்க - ஐரோப்பிய மாணவர்கள் கூட தங்களது பாலஸ்தீன ஆதரவை பல்வேறு வகைகளில் வெளிப்படுத்தி வருகின்றனர்.
பாலஸ்தீனத்தின் மீதான இஸ்ரேலின் இனவழிப்பு யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் எனவும், அதற்கு ஹமாஸ் சமாதான பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும் எனவும் கோரிக்கைகளை உலக நாடுகள் எழுப்பி வருகினறன.
உலகின் கண்கள் ரஃபாவை நோக்கி என்ற - AI மூலம் உருவாக்கப்பட்ட - புகைப்படம் கடந்த வாரத்தில் உலக அளவில் டிரெண்ட் ஆகியது. உலகின் கண்கள் ரஃபாவை வெறும் கருணை உள்ளத்தோடு வேடிக்கை பார்த்துக் கொண்டு மட்டுமே இருக்கின்றன.
பாலஸ்தீன மக்கள் கோருவது - நீங்கள் பேச வேண்டியதெல்லாம் எங்கள் அழுகுரலைப் பற்றி அல்ல. உங்களுக்கு கேட்க வேண்டியது எங்களின் விடுதலை குரல் ஒன்றே என்பதுதான்.
ஆம்! கருணை உள்ளத்தோடு வெறுமனே வேடிக்கைப் பார்ப்பதை விடுத்து - உலகத் தொழிலாளர்களும் ஒடுக்கப்பட்டத் தேசங்களும் பாலஸ்தீன விடுதலைக்கு ஆதரவாக கிளர்ந்தெழ வேண்டும். இந்த பாசிச இஸ்ரேல் அரசை மத்தியத் தரைக்கடலில் வீசியெறியவேண்டும்!
ஏகாதிபத்திய எதிர்ப்பில்லாமல் பாலஸ்தீன விடுதலை சாத்தியமில்லை; ஏகாதிபத்தியங்களும் போரும் இல்லாத உலகை சமைக்க ஓரணியில் திரள வேண்டும்!!
-செந்தளம் செய்திப்பிரிவு