டிரம்ப் காப்பு வரி விதிப்புகள் பற்றி அதிகம் பேசுகிறார், ஆனால் டாலர் ஆதிக்கமே அசல் பிரச்சனை
தமிழில்: விஜயன்

அதிபர் டொனால்ட் டிரம்ப் உள்நாட்டு தொழில்களை ஆதரிக்கும் நோக்கில் இறக்குமதி(காப்பு) வரிகளை மீண்டும் விதிக்கிறார். இருப்பினும், நாணய மாற்று விகிதத்தின் மீதான நியாயமற்ற ஆதிக்கம், அமெரிக்காவுக்கு உள்ள தனித்துவமான நிதி அதிகாரம் போன்ற பெரிய பிரச்சினைகளை அவர் கருத்தில் கொள்ளாமல், இந்த வரிகள் மட்டுமே அமெரிக்க உற்பத்தித் துறை எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு காரணம் என்று கூறுகிறார். பிற நாடுகளிலிருந்து வரும் இறக்குமதிகள் மீது தொடர்ச்சியாக வரிகளை விதிக்கும் இந்த நடவடிக்கையின் மூலம் ("வரிப் பேரலை-tariff tsunami" என்று சிலர் குறிப்பிடுவது) அவர் தற்போதைய நிலவரத்தின் முழுப் பரிமாணத்தையும் உணர மறுக்கிறார்.
பல பத்தாண்டுகளாக, அமெரிக்கா தனது நாணயத்தின் தனித்துவமான ஆதிக்க நிலையினால் சத்தமில்லாமல் பயனடைந்து வந்துள்ளது. உலகளாவிய வணிகத்திற்கான, சேமிப்பிற்கான முக்கிய நாணயமாக அமெரிக்க டாலர் விளங்குகிறது. இதன் விளைவாக, அமெரிக்கா விரும்பும்போதெல்லாம் டாலரின் மதிப்பை உயர்த்த முடிந்துள்ளது, இது உலகளாவிய வணிகத்தில் ஒருதலைப்பட்சமான ஆதிக்கத்தை அமெரிக்காவிற்கு அளிக்கிறது. பிற நாடுகள் அடிக்கடி எதிர்கொள்ளும் நிதி நெருக்கடிகளைத் தவிர்த்து, தனக்குச் சாதகமான வர்த்தக விதிகளை வகுக்குப்பதற்கும் அமெரிக்காவிற்கு உதவுகிறது.
இந்த நடைமுறை உலகளாவிய வணிகத்தை சமமற்றதாக மாற்றியதோடு மட்டுமல்லாமல், மற்ற நாடுகளின் சமமாக போட்டியிடும் திறனையும் குறைத்துள்ளது. மேலும், அமெரிக்கா தனது பொருளாதாரம், அரசியல் மட்டுமல்லாது இராணுவம் போன்ற துறைகளில் வலுவடையவும் இது துணைபுரிந்துள்ளது. தேவைப்படும்போது இந்த அதிகாரத்தைப் பயன்படுத்த அமெரிக்கா ஒருபோதும் தயங்கியதில்லை.
அமெரிக்காவுடன் முழுமையான கட்டற்ற, நியாயமான வர்த்தகம் என்பது நடைமுறைக்குச் சாத்தியமற்ற ஒரு கருத்தாகும், ஏனெனில் அமெரிக்கா தனது நாணயத்தின் மூலமாக ஒரு தனித்துவமான ஆதிக்க நிலையைப் பெற்றுள்ளது. உண்மையான, நியாயமான வர்த்தக அமைப்பில், அனைத்து நாடுகளும் சமமாக நடத்தப்பட வேண்டும். அவற்றின் நாணயங்களின் மதிப்பு அந்தந்த நாடுகளின் பொருளாதார வலிமையின் உண்மை நிலவரத்தைப் பிரதிபலிக்க வேண்டும், மேலும் சரக்குகள் அல்லது சேவைகளை யார் அதிக திறனுடன் உற்பத்தி செய்ய முடியும் என்பதன் அடிப்படையில் வணிகம் நடைபெற வேண்டும். ஆனால் தற்போதைய நிலைமை இதற்கு முற்றிலும் மாறுபட்டதாக உள்ளது. இன்று, அமெரிக்க டாலர் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளின் நாணய மதிப்பு, அவற்றின் பொருளாதாரங்களின் உண்மையான வலிமையை முழுமையாகப் பிரதிபலிப்பதில்லை. இருப்பினும், அமெரிக்காவும் பிற மேற்கத்திய நாடுகளும் தங்களுடைய நாணய அதிகாரத்தைப் பயன்படுத்தி, வர்த்தகத்தைத் தங்களுக்குச் சாதகமாகத் தொடர்ந்து கட்டுப்படுத்தி வருகின்றன.
இந்தச் சூழ்நிலையின் காரணமாக, இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் மீது ஏனைய நாடுகளால் விதிக்கப்படும் வரிகளான சுங்கவரிகள் எப்போதும் நியாயமற்றதாகக் கருதப்பட வேண்டியதில்லை. மாறாக, அமெரிக்காவின் டாலர் ஆதிக்கத்தால் உருவாகியுள்ள இந்த நியாயமற்ற/சமமற்ற நிலையைச் சரிசெய்வதற்கான வழிமுறைகளாக ஏனை நாடுகள் கருதலாம். இந்தச் சுங்கவரிகள் உள்நாட்டுத் தொழில்களைப் பாதுகாப்பது மட்டுமல்லாமல், வர்த்தகத்தை மேலும் சமத்துவப்படுத்துவதற்கான வழிகளாகவும் ஏனைய நாடுகளுக்கு விளங்குகின்றன.
ஆகவே, இறக்குமதிகளின் மீது ஏனைய நாடுகள் சுங்கவரிகளை விதிக்கும்போது, அவை ஒரு சண்டையைத் தொடங்க முயற்சிக்கின்றன என்று அர்த்தப்படுத்திக் கொள்ளத் தேவையில்லை. இது ஒரு தற்காப்பு நடவடிக்கையைப் போன்றது - அமெரிக்காவின் ஒருதலைப்பட்சமான நாணய பலத்தின் காரணமாகப் பல ஆண்டுகளாக நீடித்து வரும் ஏற்றத்தாழ்வைச் சரிசெய்வதற்கான ஒரு வழியாகும். இந்த நடவடிக்கைகள் சர்வதேச வர்த்தகத்தில் நீதியையும், சமமான வாய்ப்புகளையும் நிலைநிறுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.
எதிர்பாராத வரலாற்றுத் திருப்பத்தின் விளைவாக, இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு பிரெட்டன் வூட்ஸ் உடன்படிக்கை அமெரிக்க டாலரை உலக நாடுகளின் முதன்மை இருப்புக் நாணயமாக நிலைநிறுத்தியது. இதன் பொருள், அமெரிக்கா தனது தனிப்பட்ட நலனுக்காக மட்டுமின்றி, அனைத்து நாடுகளின் பொது நலனுக்காகவும் இந்தச் சிறப்பான பங்கினை நேர்மையுடன் நிர்வகிக்க வேண்டிய கடமையைக் கொண்டிருந்தது. ஆனால் அது தனது பொறுப்பைச் சரிவர நிறைவேற்றியதா?
நிக்ஸனின் அதிர்ச்சி அறிவிப்பு (அமெரிக்கா திடீரென தனது டாலர் கொள்கையை மாற்றியது), பிளாசா உடன்படிக்கை (முக்கிய நாடுகள் டாலரின் மதிப்பை குறைப்பதற்கு ஒப்புக்கொண்டது), டாலரை அரசியல் செல்வாக்கிற்கான கருவியாகப் பயன்படுத்துதல், தாராளமாகப் டாலரை அச்சிடுதல், பொருளாதாரத் தடைகளை விதித்தல், உற்பத்தி வீழ்ச்சியை ஈடுசெய்ய கடன் வாங்குதல் மட்டுமல்லாது நீண்டகால வணிகப் பற்றாக்குறையை எதிர்கொண்டு வந்தபோதிலும் டாலரை(வாங்கும் திறனை)வலுவாக வைத்திருத்தல் என இவையனைத்தும் அமெரிக்கா தனது கடமையைச் சரிவரச் செய்யவில்லை என்பதைக் காட்டுகின்றன. மாறாக, அமெரிக்கா பெரும்பாலும் டாலரை வணிகத்திற்கான பரிவர்த்தனை ஊடகமாக மட்டுமின்றி, பிற நாடுகளை தன் விருப்பத்திற்கு சத்தமில்லாமலும், வெளிப்படையான அறிவிப்பு இல்லாமலும் கீழ்ப்படியச் செய்வதற்கான ஒரு தந்திரோபாயமாகவும் பயன்படுத்தியுள்ளது.
பல மேற்கத்திய நாடுகளும் அமெரிக்காவுடனான நெருக்கமான உறவுகளால் பயனடைந்துள்ளன; டாலர் ஆதிக்கத்தின் காரணமாக கூடுதல் நன்மைகளை அனுபவித்து வருகின்றன. இந்த நாடுகள் பல நூற்றாண்டுகால காலனியாதிக்க சுரண்டலிலிருந்து ஏற்கனவே பயனடைந்த பின்னர், கூடுதலாகவே இந்த அனுகூலத்தைப் பெற்றன என்பது கவனிக்கத்தக்கது. இன்று, இந்த நியாயமற்ற நாணய முறையினால் மிகவும் பாதிக்கப்படுவதும், அதிக சுமைகளை ஏற்பதும் வளரும் நாடுகள்தான்.
இந்த நாடுகள் ஏற்றுமதிகளையும், அந்நிய மூலதனத்தையும் பெரிதும் நம்பியுள்ளன; நாணய மதிப்புகளைக் கட்டுப்படுத்தும் வலிமையான நாடுகளின் பொறிவலைக்குள் சிக்கித் தவிக்கின்றன, இதனால் அவற்றின் நாணயங்கள் வலுவிழக்கின்றன; அவற்றின் வணிகங்கள், தொழில்கள் போட்டியிடுவதில் சிரமப்படுகின்றன; திறமையான தொழிலாளர்கள் குறைந்த ஊதியத்திற்கு வேலைக்கு அமர்த்தப்படுகிறார்கள்; அவற்றின் இயற்கை வளங்கள் மலிவாகச் சுரண்டப்படுகின்றன. மேலும் அவற்றின் சொந்த பணவியல் கொள்கைகள் கூட கட்டுப்படுத்தப்படுகின்றன. ஏனெனில் அவை தங்கள் நாணயத்தின் மதிப்பை நிலைநிறுத்த/ஸ்திரப்படுத்த வேண்டியுள்ளது. இத்தகைய சூழலில், காப்பு வரிகள் (இறக்குமதி வரிகள்) உள்நாட்டு தொழில்களைப் பாதுகாப்பது மட்டுமல்ல - அவை உயிர்வாழ்வதற்கான அவசியமான வழியாகவும் மாறிவிடுகின்றன.
ஆனால் அமெரிக்காவுக்கும் மேற்கத்திய நாடுகளுக்கும், உலகின் எந்த மூலையிலிருந்தும் பொருட்களை மலிவாக வாங்கும் வாய்ப்பை கொண்டிருப்பது என்பது இரு முனையிலும் கூர் தீட்டப்பட்ட கத்தி போன்றதுதான். காலப்போக்கில், இது உலகளவில் பொருட்களை உற்பத்தி செய்து விற்கும் அவற்றின் சொந்த திறனை குறைத்துவிடும். அவர்கள் எதிர்கொள்ளும் உண்மையான சிக்கல் இதுவே. அவற்றின் உற்பத்தி சரிவுக்குக் காரணம் காப்பு வரிகளைக் குறை கூறுவது, சீனா அல்லது இந்தியா போன்ற நாடுகளைக் குறை கூறுவது என்பது தோப்பை விடுத்து தனிமரத்தை பார்ப்பது போன்றதுதான்.
உலகம் தங்களை நியாயமின்றி நடத்தியதாகவும், அதற்குப் பதிலடியாகத் காப்பு வரிகள் விதிப்பது சரியே என்றும் அமெரிக்காவில் சிலர் தவறாகக் கருதுகிறார்கள். ஆனால் இந்த எண்ணம் குறுகிய நோக்குடையது மட்டுமல்ல அவர்களின் உள்நாட்டு தொழில்களையும் மீட்க உதவாது. காப்பு வரிகள் ஒரு குறுகிய கால வணிக உத்தி மட்டுமே. ஒரு நாட்டின் பொருட்களை உற்பத்தி செய்து உலகளவில் விற்கும் திறனை உண்மையில் நிர்ணயிப்பது அதன் நாணய வலிமையும், மாற்று விகிதமும்தான் .
ஏனைய நாடுகள் மீது அமெரிக்கா விதிக்கும் காப்பு வரிகளை ஏற்குமாறு தனது அரசியல்-இராணுவ செல்வாக்கைப் பயன்படுத்தி அமெரிக்காவால் நிர்ப்பந்தத்தை ஏற்படுத்த முடியும். எனினும், தனது உற்பத்தித் துறையை மீண்டும் உயிர்ப்பிக்க அமெரிக்க டாலரின் மதிப்பைத் குறைப்பது என்ற உண்மையான அரசியல் துணிச்சல் அவசியமானதாக இருக்கிறது. அவ்வாறு செய்வது பணவீக்கம், அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு போன்ற குறுகிய கால இடர்பாடுகளுக்கு வழிவகுக்கலாம். ஆசியாவிற்கு குறைந்த விலையில் சுற்றுலா பயணங்கள், குறைந்த எரிபொருள் செலவுகள், மலிவான விலையில் கிடைக்கும் மேப்பிள் வெல்லப்பாகுச் சாறு, முட்டைகள் போன்ற எளிதில் கிடைக்கக்கூடிய உணவுப் பொருட்களுக்குப் பழகிவிட்ட சாதாரண அமெரிக்கக் குடிமக்கள் இந்த சிரமங்களை ஏற்றுக் கொள்வார்களா? மேலும், வலுவான டாலரால் பயனடையும் அமெரிக்க கார்ப்பரேட்டுகள் வலிமை குறைந்த நாணயத்தை ஆதரிப்பார்களா?
ஒரு விஷயம் மட்டும் மிகத் தெளிவாக உள்ளது: உலக நாடுகள் இப்போது நாணய மாற்று விகிதங்கள், நியாயமற்ற வணிக நடைமுறைகளில் உள்ள ஏற்றத்தாழ்வுகளைச் சரிசெய்ய வேண்டியது அவசியம். இந்தச் சீரமைப்பு வர்த்தக வரிவிதிப்புக் கொள்கைகள், நாணய முறைகள் ஆகிய இரண்டையும் நேர்மையாகவும் முழுமையாகவும் மறுபரிசீலனை செய்வதற்கு அவசியம். நாணயப் பிரச்சினைகளை புறக்கணித்துவிட்டு, வரிகள் மீது மட்டும் கவனம் செலுத்துவது பயனளிக்காது. அமெரிக்காவும் அதன் மேற்குலக நட்பு நாடுகளும் பொறுப்பேற்று நாணய மாற்று விகிதங்கள் என்பது நாடுகளின் உண்மையான பொருளாதார பலத்தைப் பிரதிபலிப்பதை உறுதிசெய்து, நியாயமான சந்தைப் போட்டியை உருவாக்க வேண்டும்.
நீண்ட கால அடிப்படையில் பார்க்கும் போது இந்தச் சீரமைப்பும்கூட அமெரிக்காவுக்கும் மேற்குலக நாடுகளுக்குமே சாதகமாக அமையும். ஆனால் அதனை எய்துவது எளிதானதாக இராது – தேவையான மாற்றங்களை ஏற்றுக்கொள்வது கடினமாக இருக்கலாம். பழையபடி தங்க நாணய முறைக்கு மாற முடியுமா? நடைமுறை சாத்தியமில்லை. அமெரிக்காவிடம் இருப்பதாகக் கூறப்படும் 8000 டன் தங்கத்தின் மதிப்பையும் (ஒவ்வொரு அவுன்ஸும் சுமார் 3000 டாலர்கள்) கணக்கிட்டால்கூட, உலகின் முதன்மை நாணயமாக டாலர் நீடிப்பதற்கு இது போதுமானதாக இருக்காது. ஒரு பாரபட்சமில்லாத நாணய முறையை உருவாக்குவதற்கு புதிய விதிமுறைகளும், நம்பிக்கை இணையம் போன்ற தொழில்நுட்பமும்(Blockchain) தேவைப்படும். அமெரிக்கா தனது நாணய ஆதிக்க நிலையினை அவ்வளவு எளிதில் விட்டுக்கொடுக்குமா?
காப்பு வரி விதிப்புகள் உண்மையான சிக்கல் அல்ல – அவை ஒரு பெரிய பிரச்சினையின் அறிகுறிகள் மட்டுமே. மிகவும் சமச்சீரான உலகளாவிய வணிக முறையை உருவாக்குவதற்கு, தற்போதைய நாணய மாற்று முறையில் உள்ள நியாயமற்ற ஆதிக்கங்களை நாம் முதலில் சரிசெய்ய வேண்டும். ஆதிக்க நாணய சக்தியாக விளங்குவதால், அமெரிக்காவே இங்கு முக்கிய பொறுப்பை ஏற்க வேண்டியுள்ளது. வெறுமனே வரி விதிப்புகளை விமர்சிப்பது பிரச்சினையின் முழு உண்மையை புரிந்துகொள்ளவிடாமல் செய்துவிடும்.
- விஜயன் (தமிழில்)
மூலக்கட்டுரை: