இஸ்ரேலியக் குடியேற்ற நடவடிக்கைகளுக்குச் சீனா எவ்வாறு சத்தமில்லாமல் உதவி செய்து வருகிறது?
தமிழில்: விஜயன்

என் நண்பன் அஹ்மத் ஒருநாள் என்னிடம், ‘ரஸான், நீ சீனாவைத் தேடிப் போகத் தேவையில்லை – ஹூவாராவுக்கு வா. சீனா ஏற்கெனவே இங்கேதான் இருக்கிறது,’ என்று கூறினான். அவன் இதைச் சிரித்துக்கொண்டே சொன்னாலும், அவனது வார்த்தைகளில் ஆழமான உண்மை ஒளிந்திருப்பதை புரிந்து கொள்ள முடிந்தது.
நாப்ளஸ் நகருக்கு வெகு அருகில் அமைந்துள்ள ஒரு சிறிய பாலஸ்தீனியக் கிராமம்தான் ஹூவாரா. இட்ஸ்ஹார் போன்ற, மிக மோசமான வன்முறையும் தீவிரமும் கொண்ட ஜியோனிச வெறியூட்டப்பட்ட குடியிருப்பு பகுதிகளால் ஹூவாரா சூழப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
அவனது கூற்றின் முழுப் பொருளும் என்னவென நான் வினவியபோது, ‘அருகிலுள்ள குடியேற்றப் பகுதிகளில் சீனத் தொழிலாளர்கள் வசிக்கிறார்கள்; அங்கேதான் வேலை செய்கிறார்கள். அவர்களை நான் எங்கள் கிராமத்தின் வீதிகளில் நடமாடுவதையும், பாலஸ்தீனியக் கடைகளில் பொருட்கள் வாங்குவதையும் அடிக்கடி காண்கிறேன்,’ என்று அவன் விளக்கினான்.
சில மாதங்களுக்கு முன் அஹ்மத் உதிர்த்த அந்தச் சாதாரணக் கூற்று, இதுகுறித்து மேலும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற வேட்கையை எனக்குள் தூண்டியது. உடனடியாக, ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையின் பிற பாலஸ்தீனியர்களிடம் விசாரித்து, அவர்களது சொந்த அனுபவங்களைச் சேகரிக்கத் தொடங்கினேன். பீட் எல்(Beit El) குடியேற்ற பகுதிக்கு அருகில் ரமல்லாவில் வசிக்கும் அலி, ‘பீட் எல் குடியேற்றப் பகுதியில் ஏராளமான சீனத் தொழிலாளர்கள் வீடுகளையும் பிற கட்டுமானங்களையும் கட்டியெழுப்புவதை நான் கண்கூடாகப் பார்த்திருக்கிறேன்,’ என்று அவர் கண்டறிந்ததை என்னிடம் விவரித்தார்.
ஹெப்ரோனில் வசிக்கும் சயீத், ‘கோவிட்-19 பெருந்தொற்று பரவிய காலத்தில், ஜியோனிச குடியிருப்பு பகுதியிலிருந்தவர்கள் சீனத் தொழிலாளர்களை மற்றவர்களிடமிருந்து பிரித்து, தனிமைப்படுத்துவதற்காக ஒரு தனிப் பகுதியிலேயே அடைத்து வைத்திருந்தனர்,’ என்ற ஓர் அதிர்ச்சித் தகவலைப் பகிர்ந்துகொண்டார்.
பாலஸ்தீனியர்கள் உரிமைகொண்டாடும் ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களில், இஸ்ரேலிய குடியிருப்பு பகுதிகளை கட்டி எழுப்பும் பணியில் சீனத் தொழிலாளர்கள் நேரடியாகப் பங்கேற்கிறார்கள் என்ற மனதை உலுக்கும் ஒரு கசப்பான உண்மையை பாலஸ்தீனியர்களின் கூற்றுகள் அம்பலப்படுத்துகின்றன.
இத்தகைய நிலை, சீன அரசாங்கம் இதற்கு முன்னர் அறிவித்த நிலைப்பாட்டிற்கு நேர்முரணாக அமைந்திருக்கிறது. சுமார் பத்தாண்டுகளுக்கு முன்னதாக, இஸ்ரேலிய குடியேற்றப் பகுதிகளுக்குள் எவ்வித கட்டுமானப் பணிகளிலும் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு சீனா தனது நிறுவனங்களுக்கு அதிகாரப்பூர்வமாக அறிவுறுத்தியிருந்தது.
2015-ஆம் ஆண்டில், சீனாவும் இஸ்ரேலும் ஓர் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டன. இந்த ஒப்பந்தம், இஸ்ரேலிலுக்கு பணிப்புரிய வரும் சீனத் தொழிலாளர்கள் சம்பந்தப்பட்டதாக இருந்தது. அந்த ஒப்பந்தத்தில், ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் அமைந்துள்ள குடியேற்றப் பகுதிகளுக்கு இத்தொழிலாளர்கள் அனுப்பப்படக் கூடாது என்பது முக்கிய நிபந்தனையாகச் சேர்க்கப்பட்டிருந்தது. இந்த விதிமுறை, தொழிலாளர்களின் பாதுகாப்பு கருதியே உள்ளடக்கப்பட்டது அன்றி, சட்டவிரோத குடியேற்றங்கள் மீதான எவ்வித அரசியல்/தார்மீக ரீதியிலான எதிர்ப்பையும் அடிப்படையாகக் கொண்டிருக்கவில்லை என்று கூறப்பட்டது. ஆனால், 2016-ல் சூழ்நிலை மாற்றம் பெறத் துவங்கியது. அந்த ஆண்டில், ஓர் சீன நிறுவனம், மிட்ச்பே ஷாலேம் எனப்படும் குடியேற்றப் பகுதியில் அமைந்திருந்த அஹாவா எனும் வணிக நிறுவனத்தை வாங்கியது. அதன் பிறகு, சீனத் தொழிலாளர்களின் பாதுகாப்புக் குறித்த சீனாவின் அக்கறைகள் எல்லாம் இரண்டாம் பட்சமாகிவிட்டனவா என்பதுபோலத் தோன்றின.
2017-ஆம் ஆண்டில், சீனாவும் இஸ்ரேலும் மற்றொரு ஒப்பந்தத்தை மேற்கொண்டன. இந்த புதிய ஒப்பந்தம் 6,000 சீன கட்டுமானத் தொழிலாளர்களை இஸ்ரேலுக்கு வர அனுமதித்தது. இந்த ஒப்பந்தத்திலும், தொழிலாளர்கள் குடியேற்றப் பகுதிகளுக்கு அனுப்பப்படக் கூடாது எனும் அதே நிபந்தனை மீண்டும் உறுதிசெய்யப்பட்டது. இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் இம்மானுவேல் நஹ்ஷான், இந்த விதிமுறை தொழிலாளர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டே உருவாக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார். ஆனால், சீன அதிகாரிகளோ வேறொரு விளக்கத்தை முன்வைத்தனர். இந்த நிபந்தனைக்குப் பின்னணியில் இருந்த உண்மையான காரணம் தொழிலாளர்கள் பாதுகாப்புக் குறித்த அக்கறைகள் அல்ல; மாறாக, இஸ்ரேலிய குடியேற்றப் பகுதிகளுக்குள் நடைபெறும் கட்டுமானப் பணிகளை சீனா ஒருபோதும் ஆதரிப்பதில்லை என்பதே இந்த நிபந்தனைக்கு காரணம் என்று அவர்கள் வேறொரு விளக்கத்தை அளித்தனர்.
மாறுபட்ட வகையில் இவர்கள் கூறுவது ஒருபுறம் இருப்பினும், நாப்லஸ், ரமல்லா, ஹெப்ரான் ஆகிய பகுதிகளில் நான் உரையாடிய உள்ளூர் மக்கள், குடியேற்றப் பகுதிகளில் சீனத் தொழிலாளர்கள் தொடர்ந்து காணப்படுவதையும், அவர்கள் இந்தக் குடியேற்றங்களை மேலும் விரிவாக்குவதற்காக வேலை செய்து வருகிறார்கள் என்பதையும் எனக்குத் தெரிவித்தனர்.
குடியேற்றக் கட்டுமானத்திற்குத் தாம் எதிரானவர்கள் என்று சீனா அறிவித்தும்கூட, சீனத் தொழிலாளர்கள் இன்றும் ஏன் அவற்றைக் கட்டி எழுப்பும் பணியில் ஈடுபட்டுள்ளனர்? என்ற ஒரு முக்கியமான கேள்வி இங்கு எழுகிறது.
‘நம் காலத்தின் முன்னோடிகள்’
காசாவின் மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடரும் நிலையில், ஆக்கிரமிப்புக்கு உட்படுத்தப்பட்ட மேற்குக் கரையில் ஜியோனிச குடியேறிகளின் வன்முறை தீவிரமடைவது குறித்துத் தாங்கள் கவலைப்படுவதாகச் சீன அதிகாரிகள் வெளிப்படையாகத் தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு செப்டம்பரில், சீனாவின் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர், லின் ஜியான், மேற்குக் கரையில் இஸ்ரேல் சட்டவிரோதக் குடியேற்றங்கள் அமைப்பதை நிறுத்துமாறு கூறினார். ஒருபுறம், ஆக்கிரப்பு விரிவாக்கத்தை தவிர்ப்பது குறித்து சீனா வலியுறுத்திப் பேசி வருகிறது, மறுபுறம், சில சீன நிறுவனங்கள் பாலஸ்தீனத்தில் ஆக்கிரமிப்பையும், குடியேற்ற விரிவாக்கத்தையும் முனைப்புடன் ஆதரித்து செயல்பட்டு வருகின்றன.
அடமா அக்ரிகல்சுரல் சொல்யூசன்ஸ் (Adama Agricultural Solutions) எனும் நிறுவனத்தை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். அது ஒரு காலத்தில் இஸ்ரேலிய நிறுவனமாக இருந்தது; ஆனால், தற்போது சீன அரசாங்கத்தால் இயக்கப்படும் செம்சீனா (ChemChina) எனும் நிறுவனத்திற்கு முழுமையாகச் சொந்தமானது. காசாப் போர் நடைபெற்ற சமயத்தில், தொழிலாளர் பற்றாக்குறையை எதிர்கொண்ட இஸ்ரேலிய விவசாயிகளுக்கு உதவுவதற்காக அடமா நிறுவனம் தனது ஊழியர்களை அனுப்பியிருந்தது. ஜெருசலேம் போஸ்ட் (Jerusalem Post) பத்திரிகையில் வந்த செய்தியின்படி, இந்நிறுவனம் இஸ்ரேலின் தென்பகுதியில் உள்ள விவசாயிகளுக்கும், குறிப்பாகக் காசா எல்லைக்கு அருகாமையில் வசிப்பவர்களுக்கும், அத்துடன் வடக்கில் உள்ள குடியேற்றப் பகுதிகளிலுள்ள விவசாயிகளுக்கும் ஊழியர்களை அனுப்பி வைத்து உதவியது. குடியேற்றப் பகுதிகளின் கட்டுமானத்தை எதிர்ப்பதாக சீனா கூறினாலும், இஸ்ரேலுடனான அதன் பொருளாதார உறவுகள், சட்டவிரோத குடியேற்ற விரிவாக்கத்தையும், பாலஸ்தீன நிலத்தின் மீதான சியோனிச ஆதிக்கத்தையும் ஆதரிக்கும் கட்டமைப்பை வலுப்படுத்தவே துணைபுரிகின்றன என்ற முரண்பாட்டையே இந்நிகழ்வு எடுத்துக் காட்டுகிறது.
“இந்நாட்டின் விவசாயிகள் — அதிலும் குறிப்பாகக் காசாவுக்கு அருகாமையில் உள்ள குடியேற்றப் பகுதிகளில் வசிக்கும் விவசாயிகள் — நவீன காலத்தின் முன்னோடிகள் ஆவர். நாட்டைப் பாதுகாப்பதற்கும், அதன் நிலைத்தன்மைக்கும் அவர்களின் பணி அத்தியாவசியமானது,” என்று அதே செய்தியறிக்கையில், அடமாவின் செய்தித் தொடர்பாளர் கூறியிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
போர்க் காலத்தில், விவசாயிகள் மிகுந்த இன்னல்களைச் சந்தித்த போதிலும், போதிய தொழிலாளர்கள் இன்றித் தவித்த போதிலும், அவர்கள் தங்கள் நிலங்களுக்கே திரும்பி வந்து வேலை செய்கின்றனர். "அடாமாவைப் பொறுத்தமட்டில், இயல்பான தருணங்களில் மட்டுமல்லாமல், போர்க் காலங்களிலும் அவர்களுக்கு உதவுவது எங்கள் கடமை என நாங்கள் நம்புகிறோம்," என்று அடமா நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்திருக்கிறார்.
2024 ஜனவரியில், அடாமா நிறுவனம் மேலும் ஒரு முக்கிய முன்னெடுப்பை மேற்கொண்டது. இந்நிறுவனம், காசா எல்லைப் பகுதியிலும் வடக்கிலுள்ள குடியிருப்புகளிலும் வசிக்கும் மக்களுக்கான பல்கலைக்கழக அளவிலான விவசாயப் படிப்புகளுக்கு ஆதரவளிக்கும் வகையில், சுமார் ஒரு மில்லியன் ஷெகல்கள் (தோராயமாக $2,75,000 அமெரிக்க டாலர்கள்) மதிப்பிலான ஒரு கல்வி உதவித்தொகை திட்டத்தையும் அறிமுகப்படுத்தியது.
இஸ்ரேலிய குடியிருப்புகளுடன் தொடர்புடைய அமைப்புகளுடன் நீண்டகாலமாகப் பணியாற்றிய நெடிய வரலாற்றை அடாமா நிறுவனம் கொண்டுள்ளது. அதன் விவசாயப் பொருட்கள் ஜோர்டான் பள்ளத்தாக்கில் அமைந்துள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள் விவசாயப் பரிசோதனைகளின்போது பயன்படுத்தப்பட்டுள்ளன. இதைவிடக் கவலைக்குரிய விடயம் யாதெனில், அடாமா நிறுவனம் தயாரித்து வரும் களைக்கொல்லிகளில் ஒன்றை, இஸ்ரேலிய ராணுவத்தின் ஒப்பந்தம் பெற்ற தனியார் நிறுவனங்களால் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த வேதிப்பொருள், காசா எல்லைப் பகுதியில் உள்ள தாவரங்களையும் பயிர்களையும் அழிக்கும் நோக்கில், விமானங்கள் மூலம் தெளிக்கப்பட்டிருக்கிறது.
சீன அரசு, இஸ்ரேல்-பாலஸ்தீனிய மோதலில் தன்னை நடுநிலையானதாகவோ அல்லது அமைதிக்கு ஆதரவானதாகவோ முன்னிறுத்த முற்பட்டாலும், அடாமா நிறுவனத்தின் உரிமையாளர் என்ற நிலையில், பாலஸ்தீனிய விவசாயத்திற்குத் தீங்கு விளைவிப்பதோடு, பாலஸ்தீனியர்களின் வாழ்வாதாரங்களை அழிக்கும் செயல்களுடன் நேரடியாகத் சம்பந்தப்பட்டுள்ளது என்பதும் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.
ஜியோனிச குடியேற்ற விரிவாக்கத்திற்கு துணைபோகும் சீனா
இது ஒரு தனிப்பட்ட உதாரணம் மட்டுமல்ல. கடந்த சில ஆண்டுகளாக, அரசாங்கத்திற்குச் சொந்தமான பல சீன நிறுவனங்களும், சில தனியார் சீன வணிகக் கம்பனிகளும் இஸ்ரேலிய குடியேற்றங்களிலோ அல்லது அந்தக் குடியேற்றப் பகுதிகளுக்குள் செயல்படும் நிறுவனங்களிலோ நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ முதலீடு செய்துள்ளன.
பெரிய இஸ்ரேலிய உணவு நிறுவனமான ட்னுவா’வை (Tnuva) இதற்கு ஒரு உதாரணமாகக் குறிப்பிடலாம். இது சர்வதேச சட்டத்தின் கீழ் சட்டவிரோதமாகக் கருதப்படும் குடியேற்றப் பகுதிகளிலும் தனது செயல்பாடுகளைக் விரிவுபடுத்தியுள்ளது. ட்னுவா நிறுவனத்திடமிருந்து பொருட்களை வாங்குவதைத் தடுக்குமாறு சர்வதேச பிரச்சாரங்கள் நடைபெற்றபோதிலும், ப்ரைட் ஃபுட் (Bright Food) எனும் சீன அரசுக்குச் சொந்தமான நிறுவனம் 2014 ஆம் ஆண்டில் ட்னுவா நிறுவனத்தின் 56 சதவீதப் பங்குகளைக் வாங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
2021 ஆம் ஆண்டில், 22 பொதுப் பேருந்து வழித்தடங்களை இயக்கும் ஒப்பந்தத்தை ட்னுவா நிறுகவனம் பெற்றது. இந்தப் பேருந்துகள் மாதே யெஹுடா (Mateh Yehuda) பகுதியில் அமைந்துள்ள 16 இஸ்ரேலிய குடியேற்றப் பகுதிகளுக்குப் பேருந்துச் சேவையை வழங்கி வருகின்றன. இந்தக் குடியேற்றங்கள் அனைத்தும் கிழக்கு ஜெருசலேம் மற்றும் மேற்குக் கரையில் ஆக்கிரமிக்கப்பட்ட நிலப்பரப்பில் கட்டப்பட்டுள்ளன. இவை வெறும் சாதாரணப் பேருந்துகள் மட்டுமல்ல—இவை ஜியோனிச குடியேறிகள் வாழ்க்கையை மேன்மேலும் வசதிப்படுத்துவதற்கும், ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தில் அவர்களின் இருப்பை மேலும் நிலைநிறுத்துவதற்கும் உதவும் உள்கட்டமைப்பு வசதிகளின் ஒரு அங்கமாகும்.
மற்றொரு எடுத்துக்காட்டு: 2016 ஆம் ஆண்டில், சீன நிறுவனமான ஃபோசூன் குழுமம் (Fosun Group), அஹாவா (Ahava) எனும் அழகுசாதனப் பொருட்கள் தயாரிப்பு நிறுவனத்தைக் கையகப்படுத்தியது. அஹாவாவின் தொழிற்சாலை மிட்ஸ்பே ஷலேம் (Mitzpe Shalem) குடியேற்றப் பகுதிக்குள் அமைந்துள்ளது. இந்நிறுவனத்திற்கு எதிராக உலகளவில் புறக்கணிப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. சட்டவிரோதக் குடியேற்றத்திற்கு துணைபோகும் அமைப்புகளின் பட்டியலில்தான் ஐ.நா சபையும் இதைச் சேர்த்துள்ளது.
அதே சமயம், சீன இராஜதந்திரிகள், இஸ்ரேல் தனது ஆக்கிரமிப்பு குடியேற்றங்களை விரிவாக்குவதை நிறுத்தும்படி கோரி, தொடர்ந்து பகிரங்க அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றனர். "மேற்குக் கரையில் குடியேறியவர்களால் அதிகரித்து வரும் வன்முறையை இஸ்ரேல் கட்டுப்படுத்த வேண்டும் என நாங்கள் வலியுறுத்துகிறோம்; இதன் வாயிலாக, ஒரு புதிய நெருக்கடியைத் தவிர்ப்பதுடன், மோதல் விரிவடைவதையும் தடுக்க முடியும்," என்று 2023 ஆம் ஆண்டின் பிற்பகுதியில், ஐ.நா. சபையின் முன்னாள் சீனத் தூதுவர் ஜாங் ஜுன், ஐ.நா. பாதுகாப்புச் சபை கூட்டத்தில் தெரிவித்திருந்தார்.
அவருக்குப் பின்பதவிக்கு வந்த ஃபு காங், இதே போன்ற கருத்தையே மீண்டும் வலியுறுத்தி பேசினார். மேற்குக் கரையில் தனது சட்டவிரோத குடியேற்ற நடவடிக்கைகளை நிறுத்தும்படியும் அவர் இஸ்ரேலைக் கேட்டுக்கொண்டார்.
ஆனால், இத்தகைய நடவடிக்கைகளில் சீனாவின் தனிப்பட்ட பங்கு என்ன? ஐ.நா. சபையின் மனித உரிமைகள் ஆணையம், குடியேற்றங்கள் தொடர்பான வணிக நடவடிக்கைகளில் ஈடுபடும் நிறுவனங்கள் குறித்த அறிக்கைகளைத் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. இத்தகைய அறிக்கைகள் வெளிவந்த பின்னரும் கூட, சீன நிறுவனங்கள் இந்த நடவடிக்கைகளில் தொடர்ந்து பங்கேற்று வருகின்றன.
ஐ.நா. சபையால் நிறைவேற்றப்பட்ட பல தீர்மானங்களின்படி, இஸ்ரேலால் கட்டப்பட்ட குடியேற்றங்கள் சர்வதேச சட்டத்திற்கு விரோதமானவையாகும். இந்தக் குடியேற்றங்களில் சீனாவின் ஈடுபாடு என்பது, தான் ஏற்பதாகக் கூறும் சட்டத் திட்டங்களுக்கும் சர்வதேச விதிகளுக்கும் நேர் முரணாக உள்ளது.
சீன அரசு குடியேற்றங்கள் விரிவுபடுத்துவதை ஆதரிப்பதில்லை என்று வாதிட்டாலும், இஸ்ரேலுடனான அதன் வணிகக் கூட்டணிகள், உண்மையில் அதே குடியேற்ற அமைப்பு வலுப்பெறுவதற்கே உதவுகின்றன. இந்த பொருளாதாரத் தொடர்புகள், இஸ்ரேலிய ஆக்கிரமிப்பிற்கு ஆதரவான ஜியோனிச அரசியலுக்கு மேலும் வலு சேர்ப்பதுடன், பாலஸ்தீனியர்களின் உரிமைகளுக்கும் தீங்கு விளைவிக்கின்றன.
இதை மேலும் கவலைக்குரியதாக்குவது என்னவென்றால், இந்த முதலீடுகள் பெரும்பாலானோரின் கவனத்தைப் பெறாமல், சத்தமில்லாமல் தொடர்கின்றன. இந்த வணிக நடவடிக்கைகள், பாலஸ்தீனியர்களுக்கு எதிராக நடத்தப்படும் இனவெறி அரசிற்கு துணைபோகின்ற அதே சமயத்தில்தான், ஒரு சுதந்திரமான பாலஸ்தீன அரசு உருவாகுவதற்கு தாங்கள் ஆதரவுக்கரம் நீட்டுவதாக சீனா கூறி வருகிறது.
- விஜயன் (தமிழில்)